Tuesday, August 31, 2004

ரிப்பளிக்கன் கன்வென்ஷன்

நியூயார்க்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெயினும், முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானியும் முதல் நாளின் முக்கியப் பேச்சாளர்கள். ஜான் மெக்கெயினும்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும் நல்ல நண்பர்கள். கெர்ரியின் வியட்நாம் போரில் பெற்ற மெடல்களைக் பற்றிய கீழ்த்தரமான தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டித்து புஷ்ஷிடம் பேசியவர் மெக்கெயின். மேலும் ரிப்பளிக்கன் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு புஷ்ஷோடு உரசியவர் மெக்கெயின். கெர்ரியைப் போலவே வியட்நாம் யுத்ததில் பங்கு கொண்டு பிணைக்கைதியாய் பலநாட்கள் சித்திரவதை அனுபவித்தவர். அவரது கருத்துகளை மதிக்கும் அமெரிக்கர்கள் பலர்.

உன்னைப் பிடி என்னைப்பிடி'யென்று இருக்கும் தேர்தல் கணக்குகளைக் கண்டு புஷ் பதற ஆரம்பித்துவிட்டார். எப்பாடுபட்டாவது நடுத்தர மிதவாத மற்றும் முடிவு எடுக்காத மக்களின் ஓட்டைப் பெற மெக்கெயின் மற்றும் ஜூலியானியைப் பயன்படுத்த முடிவு செய்து களம் காணவும் வைத்து விட்டனர்.

முதலில் பேசிய மெக்கெயின் புஷ் புகழ் பாடினாலும் அடக்கியே வாசித்தார். எதிரி டெமாக்ரட்டுகளில்லை, தீவிரவாதிகளென்றார். புஷ்தான் நம்மை வழி நடத்தக்கூடியவரென்றார்.

ஆனால் ஜூலியானியோ சும்மா 'குளிர/உறைய' வைத்துவிட்டார் புஷ் புகழ் மழையில். இத் தேர்தலில் புஷ் ஜெயித்தால் 2008'ல் போட்டியிடமுடியாது. அப்போது ஜூலியானிதான் ரிப்பளிக்கன் தேர்வாக
அமையலாம். புஷ் தோற்றுவிட்டால் டெக்ஸாஸ் என்ணைக் கிணறுகளைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விடலாம். அப்புறமென்ன ஜூலியானி காட்டில் மழைதான்.

அதே போன்று கெர்ரியை, பில் கிளிண்டன் பின்புலத்தில் குழிபறிப்பாரென ஆருடம் சொல்கிறார்கள். கெர்ரி ஜெயித்தால் 2008'ல் மீண்டும் போட்டியிடுவார். தனது மனைவியை (ஹில்லாரியை) அப்போது
போட்டியிட வைக்கலாமென்று கிளிண்டனது அபிப்பிராயம். தலை சுற்றுகிறதா?

NBC சேனலுக்களித்த பேட்டியில் 'தீவிரவாதிகளுக்கெதிரான போரில் வெற்றி கிட்டுமா?" என்ற கேள்விக்கு 'கிட்டாது' என்று புஷ் உளற பற்றிக் கொண்டது. இன்று அதைத் திருத்திக் கொண்டார். அதே
போல் மற்றொரு பேட்டியில் 'ஈராக்கில் யுத்ததை தவறாக கணித்து விட்டோம்' என்றார்.

கெர்ரியும் சோடை போகவில்லை. அவரது ஈராக் யுத்தம் பற்றிய கொள்கை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுகிறது.

ஆக இத்தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், திணரும் வர்த்தகம், திரியும் மனித உறவுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது தீவிரவாத ஒழிப்பு முத்திரையுடன் நடக்கும்
'ஈராக் யுத்தம்' என்ற கூத்து மட்டும்தான்.

Monday, August 30, 2004

கோபம்

உணர்வுகளின் ராட்சதன்தான்

உதட்டிலே அமிழ்தும்
உள்ளத்தில் வஞ்சமும்
உலகின் நியதியாகி
பிழைத்துக் கிடப்பதே
பிரதானமாகிப் போக

கெட்ட வார்த்தையென்றாலும்
பட்டவர்த்தனமான கோபம்
பிடிக்கின்றது

தெரியாத தேவதையைவிட
தெரிந்த சாத்தான் மேலல்லவோ?

Thursday, August 26, 2004

ஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி!!!)

ஊர்க்குருவியார் ஒரு வாரமாய் தமிழகம் பறந்து, கையில் குடத்துடன் வந்து சேர்ந்தார். 'உஸ் அப்பாடா', என்றவுடன் தயாராயிருந்த கரும்பு ஜீஸை நீட்டினோம். ஒரே மடக்கில் காலி செய்து "எழுதிக்கொள்ளும்" என்றார்.

"என்ன கையில் குடம்? சிங்காரச் சென்னையில் நீர் பஞ்சமானதால் சைத்தான் குளத்திலிருந்து தேவாமிர்த நீரா?" வெனக் கிண்டினோம். ஊர்க்குருவியார் முறைத்தவுடன் அமைதியானோம். செய்தி முக்கியமல்லவா?

உலகத் தமிழரில் சிறந்தவர் யார் தெரியுமா? குருவியார் சவாலுக்கு அம்மா முன் கைமெய் பொத்திய தமிழக மந்திரிகளானோம்.

"வைகோ. இணைய சர்வே இது."

"அப்படியானால் குரு/அண்ணன் கலைஞர்?"

"தமிழகத் தமிழரே ஐந்தாம் இடத்தில் தள்ளி 'குலுக்கல்பட்டர்' ஆக்கிவிட்டனர்"

"குரு எட்டடியென்றால் சிஷ்யன்...?" ஐஸ் வைத்தோம். குருவியார் சிறிதே ஆசுவாசமடைந்தார்.

"பொடாவை போடா சொல்லிவிட்டதே தமிழக அரசு?" நாம் கிண்டினோம்.

"என்ன ஓய்? நக்ஸலைட் கத்தார் சொல்லவில்லையா? வாஞ்சிநாதன், பகத்சிங் போன்றோர் நேற்று தீவிரவாதிகள். இன்று தியாகிகள். உமது பப்ளிகேஷனை நீரே படிப்பதில்லையா?"

சிறிதே வெட்கமானோம். குருவியாரை சிறிதே கார்னர் செய்ய வினவினோம்,"ஆமாம் வைகோ ராஜபாளையம் சீருடை கட்வுட் பற்றிய உமது கருத்தென்ன?"

தனது முயற்சியில் சற்றும் அயராத பதில்,"சனநாயகத்தில் சகஜமப்பா! உமது சனநாயகத்தில் லல்லூ போனால் ராப்ரி. அம்மா போனால் ஓ.பன்னீர்செல்வம்."

"குருவியாரே அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன முடிச்சு?"

"அது சரி. வெங்கடேச பண்ணையார் தியாகியா?"

"குருவியாரே என்ன சொல்கிறீர்?"

"சும்மா பம்மாதேயும். பண்ணையார் என்கௌண்டர்ல பலன் என்ன? ராதிகா செல்வி திருச்செந்தூர் திமுக எம்.பி. முரட்டு பக்தரெல்லாம் சேவகம் செய்றாங்க."

"குழப்புகின்றீரே குருவியாரே?"

"புரியரவங்களுக்குப் புரியும். தடா பொடா'ன்னு பொருமுறீங்களே முதல்ல தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் எது தெரியுமா?"

"மதிமுக வா?" அப்பாவியாய் நோக்கினோம்.

கலகலவெனச் சிரித்தார் குருவியார். "அடடே ரொம்ப பயந்துட்டீங்களா? நம்ம ஜனநாயகப்படி ஆளுங்கட்சியெல்லாம் எதிர்கட்சிகளை எல்லாத்தையும் ஏதாவதொரு காரணம் காட்டி தடை செய்யணும்." புரியாமல் விழித்தோம்.

சப்ஜெக்ட் மாற்ற வேண்டி,"மதுர நியூஸ் ஏதும் உண்டா?" என்றோம்.

சினிமா ஜிகிடி (இளைய தளபதி விஜய்யின் படம் மதுர) அறியாத குருவியார், "ஓ...ஜெயலஷ்மி நியூஸ் ஏராளமாயுண்டு. கேளும். காக்கி சட்டைகளின் காமாக்னி பட்டவர்த்தனமாய் தெரியுது." இது பற்றி இராமேஸ்வரம் நிர்விலா கிட்ட கேட்டேன். "இதுவரை இந்திய சிப்பாய்களோட (குறிப்பா மணிப்பூர்) பெண்கொடுமை (வன்புணர்ச்சி) தெரியும். ஆனால் போலீஸ¤மா? தமிழ்நாட்டுல சட்ட ஒழுங்கு கேடுன்னு சொல்லிட்டு இந்திய ராணுவம் வந்துட்டா எங்க கற்புக்கு என்ன பாதுகாப்பு?", அப்படின்னு அவங்க கேட்டப்போ குன்றிப்போய்விட்டேன். நிதர்சனம் சுட்டது. "காக்கிச்சட்டைய்யும் ஆலீவ் உடையானதோ?", கவித்துவமானார் குருவியார்.

"என்ன இப்படி சொல்லிவிட்டீர். பங்களாதேஷை உருவாக்கவில்லையா நம் சிப்பாய்கள்? பலனென்ன இன்று? பார்டர் போர்சை பலி க(கொ)ண்டார். நதி பங்கீடு கூடாதென்றார். வேலியெதற்கென்றார். பெண் எழுத்தை (தஸ்லிமா நஸ்ரீன்) தடை கண்டார். சரி அதெல்லாம் விடும். உமது நவீன கவித்துவத்திற்கு விடைதான் என்ன?", அப்பாவியாய் கேட்டோம்.

"கணிதத்துக்கென்ன என்ன முக்கியம்? மெஜாரிட்டிதானே? எல்லாம் கணித ஆட்டமல்லவா? நீர் சொல்லும் 40,000 பெரிசா 5,00,000 பெரிசா?"

"வாழ்க்கை வயசுன்னா 5,00,000 வகுப்பில ரேங்குன்னா 40,000!", லாஜிக் திறமைமையைக் காட்ட குருவியார் மறுபடி காட்டமானார்.

மறுபடி பேச்சை மாற்ற,"சரி சரி வெளிநாட்டு விவகாரமுண்டோ?"

கடுப்பு மாறாத குருவியார் சொன்னார்,"சும்மா ஆரியன் மாதிரி பேசாதீர்".

லேட்டஸ்ட் அமிதாப்பச்சன், பிபாஷா பாசு பட வில்லனாய் நினைத்துவிட்டாரோ? "குருவியாரே நான் திராவிடன். என் மூக்கை (இந்திரா மற்றும் ஜெயவர்த்தனே மூக்கு போலல்லாமல்) நல்லா பாருங்க." என்றோம்.

"சும்மா இந்தியன் மாதிரி பேசாதீர். திராவிடனாய் பேசும்."

"அப்போ இந்தியன்னா (டைரக்டர் சங்கர் படமாய் நினைத்து) ஆரியனா குருவியாரே? கமலஹாசன் சொந்த ஊர் பள்ளத்தூர் தெரியுமா? திராவிடன்னா யார் தமிழன் மட்டுமா? திராவிடர்னா மலையாளி, கன்னடர், தெலுங்கரும் அடங்குவாரென எமது வரலாற்று ஆசிரியர் சொன்னாரே? அப்படின்னா காவேரியில ஏன் கர்நாடகம் தண்னீர் விடல? ஒரு காலத்துல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல தமிழன்(?) குண்டு வைக்கப்போறதா பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே? இதெல்லாம் ஏன்? கிருஷ்ணா நீர் ஏன் தமிழ்நாட்டுல பாயவில்லை? தமிழ்நாட்டுக்காரங்களை பட்டி'ன்னு ஏன் மலையாளிங்க ஏசுறாங்க?", கேள்விகளின் நாயகர்களாய் மூச்சிறைத்தது எமக்கு.

"வெப்பு தாங்கலை உமக்கு. இந்தா குடியும் என்னோட நீர்மோர். ரொம்பப் பேசினா பெரிய ஆளானதா நினைப்பா?"

பறந்துபோக எத்தனித்த குருவியார்க்கு கதவைத் திறந்தோம்.

ஆஹா...இந்த ஊர்க்குருவி போல் எத்தனை உயரப் பறக்க எத்தனித்த பருந்துகளோ இந்த நாட்டிலே?

கும்மென்று காற்றடித்தது கதவங்களைத் யாம் திறந்ததும்.

அப்புறம்தான் குருவியார் கொண்டு வந்து வைத்த குடத்தை நோக்கினோம்.

அடடே எத்தனை எத்தனை தீபங்கள்!!! அதுவும் இந்தக் காற்றுக்கு ஒன்று கூட அணையவேவில்லையே!!!

ஓ...அவைதான் குடத்தினுள்ளே இன்னும் இருக்கின்றனவல்லவா?

Sunday, August 22, 2004

அமெரிக்காவும் என் கிராமமும்

பச்சைக் குத்தி
கைம்பெண்ணாய்
ஜாக்கெட் களைந்த
என் பாட்டி
இளம்பெண்களாய் இங்கே
எம்முன்னே

அமெரிக்க கலாச்சாரத்துடன்
ஐக்கியமாய் பிள்ளைக்குச் செய்தேன்
அய்யனார் முன்னர்
காதுகுத்து கல்யாணம்

கிடா வெட்டி
பார்பகியூ
கியக்கு மேக்கு
பேசித் திசை காட்டும்
தேசம்

ப்ரியமானவனை
'அது'வென
அ·றிணையாக்கும்
சமூகவியல்

கானாவோ
கிராம கானமோ
கொப்பியா கொட்டியாடும்
டிஸ்கோத்தேக்கள்

இங்கே பிள்ளைகளை
பெயர்த்த பின்னும்
சிறிதே நிம்மதி

வேர் மறவுமோ செடிகள்?
கோடை விடுமுறை

பொழுது விடிந்த
சேதி சொன்ன
சேவல் விருந்து
நுங்கு பெயர்த்து
கவட்டைக் குச்சியில்
காலம் பெயரும்

கோடையின் வாடையில்
வானம் பார்த்து
வாடியது பூமி
மட்டுமல்ல
வயலின் ஏரும்
தறியின் தாரும்

எல்லையோரக்
காளியாட்டத்தின்
களைப்பினூடே
ஊர்க்குட்டை குழப்பி
மீன் பிடிக்கும்

பூவரச இலையில்
பூரண கொழுக்கட்டை
பழுத்த பலாசுளைகள்
தேனோடு திகட்டும்

பனையோலை
தார்க்குச்சியில்
விசிறியாய்
நிலமளக்கும்

பால் ஐஸோ
பதினைந்து காசு
சேமியா ஐஸோ
சீதாலஷ்மி பாக்டரி
பணம் பார்க்கும்

மாத விடுமுறையில்
சூரிய வெப்பத்தை
சுத்தமாய் ருசிபார்த்து
கரிய சரீரமும்
கிராம சாரீரமும்
என் பிள்ளைக்கு
என்று கிட்டுமோ???
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது

அவ்வை சொன்னாள். ஆனால் மானிடராய்ப் பிறந்தும் தனது பூதவுடலை நேசியாது கத்தியால் சரி செய்யும் கலிகாலமிது. பிளாஸ்டிச் சர்ஜரி ஒரு விபத்தால் விகாரமான முகத்தை சரி செய்வதென்றால் பரவாயில்லை. இயற்கையிலேயே விளைந்த விகாரத்தை என்றால் என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீதேவியின் மூக்குக்கென்ன குறை வந்தது? கொஞ்சம் மொக்கை/மொன்னை தான். ஆனால் அரிவாள் மனை கூறு 'கிளி மூக்கல்லவா'?

அமெரிக்காவில் விடுமுறையைக் கழி(ளி)ப்பதை விட நடுத்தரவர்க்கத்து மாதுக்கள் இத்தகைய அறுவை சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். 'CTRL - C & CTRL - V' கணிணித்துறை தாண்டி மனித உடல்களிலும் வித்தை காண்பிப்பது கடந்த ஆறு வருடங்களில் 128%, அமெரிக்காவில் அதிகமாகியுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது 'சுலப தவணை' முறையும் இவ்வித சிகிச்சைக்குண்டு. அப்புறமென்ன?
பே வாட்ச் (Bay Watch) புகழ் பமீலா ஆண்டர்சன் மற்றும் பாப்பிசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் அறுத்துக் கட்டாத பாகமே உடம்பில் இல்லை எனலாம். ஏனிந்த எண்ணவோட்டம்?

பிரசித்தி பெற்ற அறுவைகள்(?) யாதெனப் பார்ப்போமா?

1. ABDOMINOPLASTY (Tummy Tuck): குவிமையமாயிருக்கும் வயிற்றை குழிமையமாக்கும் வித்(ந்)தை. தழும்புகள் ஆற 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகலாம்.
2. BREAST ENLARGEMENT (Augmentation Mammaplasty): மார்பக அளவுகளை அதிகப்படுத்த உதவும் சிகிச்சை. டயருக்கு காற்றடிப்பது போல சலைன் பலூன்களை விதைத்து செய்யப்படுவது. பமீலாவைச் சொல்வார்கள். இவர் 'இவ்விஷயம்' செய்வது மெத்தைத் துணியை மாற்றுவது போல...பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட விளைவு கிட்டவில்லையெனில் மீண்டும் மீண்டும் செய்யப்படவேண்டிய சிகிச்சையிது.
3. BREAST LIFT (Mastopexy): விளக்கம் தேவையில்லை.
4. CHEMICAL PEEL (Phenol and trichloroacetic acid [TCA]): முகச்சுருக்கமா? சூரியப் புள்ளிகளா? தோலையே ரசாயனத்தில் தோய்த்தெடுத்து 'பளபளா' செய்யும் தந்திரமிது. காலமமாக சுருக்கங்கள் மீண்டும் தோன்றும். எச்சரிக்கை: வெள்ளைத் தோலுக்கே பொறுத்தமானது
5. COLLAGEN / FAT INJECTIONS: உசிலைமணி முகத்துக்கு பாகவதர் பொலிவு தர வல்லது.
6. DERMABRASION: உதட்டோர சிம்ரன் மச்சம் ஓகே. ஆனால் பருக்கள்? கவலை கொள்ள வேண்டாம். காருக்கு மெழுகு தடவி மெருகேற்றுவது போல, 'உப்புத்தாள்' தேய்த்து, முக்கியமாய் வாயைச் சுற்றி 'தேய்த்து' மினுக்கச் செய்வார்கள்.
7. EAR SURGERY (Otoplasty): யானைக்காது குழந்தைகளா? கவலை வேண்டாம். நறுக்கி சரி செய்துவிடலாம்.
8. EYELID SURGERY (Blepharoplasty): கண்களுக்கு கீழ் 100 கிலோ பொன்னி அரிசி சாக்குப் பைகளா? 3 மணி நேரத்தில் காலி செய்யலாம்.
9. FACELIFT (Rhytidectomy): கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸை காதலிக்கின்றீர்களா? கல்யாணம் செய்யுமுன் மைக்கேல் டக்ளஸைப் போல் முகத்தை 'இவ்வாறு' சரி செய்யவும்.
10. FACIAL IMPLANTS: முகத்தையே முகம் மாற்றலாம்.
11. FOREHEAD LIFT (Browlift): முன்னெற்றிச் சுருக்கம் அறிவின் ஆழம் காட்டியதாய் சொன்ன காலம் மலையேறிப் போச்சு. 5 முறை ஊசியைச் சொருகியெடுத்தால் சுருக்கங்கள் சலவைச் செய்யப்படும்.
12. HAIR REPLACEMENT SURGERY: வழுக்கைத் தலைக்கு விடுதலை.
13. LASER FACIAL RESURFACING: கார்பந்டை-ஆக்ஸைடு மற்றூம் லேசர் மூலம் முகச்சலவை செய்வது.
14. LIPOSUCTION (Suction-Assisted Lipectomy): மிகச் சாதாரணமாகச் செய்யப்படுவது. அதிக கொழுப்பா? என் எழுத்தைத் தவிர மற்ற அனைத்து பாகங்களிலிருந்தும், உறிஞ்சியெடுத்துத் துப்பிவிடலாம்.
15. MALE BREAST REDUCTION (Gynecomastia): புரிந்திருக்குமே?
16: NOSE SURGERY (Rhinoplasty): மூக்கின் ஒடுக்கெடுப்பது.

ஆமாம்...ரஜினியின் கருப்பு உதட்டினை சிவப்பாக மாற்றும் சிகிச்சைப் பெயரரென்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thursday, August 19, 2004

பத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம்

இப்ப பகிரங்க கடிதம் எழுதுவதுதான் இணைய தர்மம். அநேகமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீங்கள் இணையம் surf பண்ணவில்லை(!@#) போலிருக்கிறது. அல்லது???

இந்திய பட்ஜெட் என்றாலும், தினமலரின் அக்குறும்பு செய்தியெனிலும், அதே மலர் தாக்கப்பட்டால் எதிர்குரல் விடும் நடுநிலைச் சார்பெனிலும், கிரிக்கெட்டில் விதவிதமான வித்தியாசமான கருத்தென்றாலும், இந்திய விதிகளின் வியாக்கியானமென்றாலும், பன்னாட்டு மேதாவிகளின் நூல்களின் ஸ்பரிசத்தையும் நான் அடைவது "பத்ரி திசாரஸ்"தான்.

'வேலையத்த ஜப்பானியர்கள்' பதிவு படித்தவுடன் தோன்றியது 'ஓஹோ பத்ரிக்கும் வேலையில்லையோவென்று'. ஆமாம்...லூசுன்னா என்னங்க பத்ரி? கொஞ்சம் அவிழ்த்து விடுங்களேன்.

'எட்டுத்திக்கும் சென்று நல்லவை கொணர்ந்திங்கு சேர்' அப்படின்னு பாரதி ஜப்பானியர்க்கு சொல்லவில்லை (PUN INTENDED)

ரஜினி காதலால் ஜப்பான்/ஜப்பானியர்கள் இழந்ததென்ன? அமெரிக்க டாலரையே அள்ளி நிறுத்தும் ஜப்பானிய யென் நிலை தடுமாற்றம் கண்டு விட்டதா? அவரது 'தேச பக்தி' குறைந்து விட்டதா? தரக் கட்டுப்பாட்டின் கட்டுக் கோப்பு குலைந்து விட்டதா? தேனீயின் சுறுசுறுப்பு அகன்று விட்டதா? கருப்பு ரிப்பனை தலையிலே கட்டி உற்பத்தித்திறனை பன்மடங்காக்கும் "ஸ்டிரைக்" பாணி அமரத்துமாகிவிட்டதா? இப்ப திடீர்னு என்னதான் ஆச்சு?

வேலையத்தவர் ஜப்பானியரென்றால் மற்றவரெல்லாம் எம்மாத்திரம்?
'அவர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட்', இதுதான் உம்ம பிரச்சினையா? விடுங்கள் பத்ரி. அமெரிக்காவில் செப்டம்பர் 11'ற்கு அப்புறம் 'ஓசாமா டி-ஷர்ட்' பிரபல்யமானதை விடக் கொடுமையா இது? விசேடமென்னவெனில் இந்தப்பக்கம் 'ஓசாமா டி-ஷர்ட்', அந்தப்பக்கம் 'அமெரிக்க கொடி', வித்தது ஒரே நாடு. அது சீனா.

ஜப்பானியர் தமிழ் படிப்பதில் பெருமை கொள்ளும் நீங்கள் அவரை பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் படிக்கச் சொல்கிறீரே? ஏன் இப்பெருந் தண்டனை? மீனைப் போன்ற கண்களென்றால் தமிழருக்கே (தமிழ்நாட்டு) புரிவதில்லை. மீனாவின் கண்களில் ஜப்பானியர் பார்த்து விட்டுத்தான் போகட்டுமே?

அப்புறம் தனிநபர் தாக்குதலில் பத்ரியா? இவ்வளவு வியாக்கியானம் இதற்கு மட்டும்தானா?

அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெ(பு)ரியவில்லை.

Wednesday, August 18, 2004

தொட்டிலும் கட்டிலும்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சில திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் மனதைத் தைத்தது "About Schmidt". ஜேக் நிக்கல்சன் நடித்து 2002'ல் வெளியான உணர்ச்சிச் சித்திரம். ரிட்டையரான ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் வைஸ் பிரசிடென்டின் வாழ்க்கையை அலசுவதே இத் திரைப்படம். சரியாக 120 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லிய பாங்கு அசத்த வைக்கிறது. நீளம் கருதி இவர்கள் வெட்டிய காட்சிகள் கூட ரசிக்கத்தக்கவவை (DVD புண்ணியம்).

23m வாரன் ஷ்மிட் உள்ளுக்குள் சோகம் புதைத்து, வெளியுலகிற்கு சாதாரணனாய் நாடகம் போட்டு வாழ்பவர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதெனத் தெரியாத போது, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் மூலம் தான்ஜானியாவில் ஒரு சிறுவனை (நுடுகு) தத்தெடுக்கின்றார். ஆறு வயது நுடுகுவுக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை (பல சமயங்களில் பொய்யாக எழுதி) பகிர்ந்து கொள்வது, "வாய்ஸ் ஓவர்" என்ற கைவிடப் பட்ட உத்தியென்றாலும் பார்க்க சுவாரஸியமாயிருக்கிறது.

பின்னர், சில தினங்களிலேயே தனது மனைவியைப் பறி கொடுக்கிறார். இழந்த பின்னர் மனைவியை நினைத்து மருகும்போது, பல வருடங்களுக்கு முன்னர் தனது உயிர் நண்பனுடனான அவளது "உறவு" பத்திரப்படுத்தப்பட்ட சில கடிதங்களில் தெரிய வருகிறது. வெறுத்துப் போய் 'வாழ்க்கையைத் தேடி' தனது பயணத்தை RUV'ல் (நகரும் வீடு?) தொடங்குகிறார். சொந்த மகளே 'இப்போது வர வேண்டாம்' எனச் சொல்லுவதும், 'எப்போதுமில்லாத அக்கறை இப்ப எங்கேர்ந்து வந்தது' என்று கல்யாணத்தை நிறுத்தென தந்தை சொல்லும்போது மகள் பதில் தருவுதுமென சூடான நிதர்சனக் காட்சிகள் பல உண்டு. சில நேரங்களில் கதை ஆமை போல் தவழும்போது கைகொடுப்பது மிக நேர்த்தியான வசனங்களே.

'நான் வாழ்ந்து யாருக்கென்ன பயன்? நான் ஒரு தோல்வியுற்றவன்', என்று கிளைமாக்ஸில் தத்துவம் பேசும் போது நுடுகுவின் முதல் பதில் கடிதமொன்று தான்ஜானியாவிலிருந்து வருகிறது. அதில் ஒரு ஓவியம் இணைக்கப்படிருக்கிறது. ஒரு நெடிய உருவத்தின் கைகளை ஒரு சிறிய உருவம் பிடித்திருப்பது போல. ஷ்மிட்டின் கண்களில் வழியும் கண்ணீர் 'தான் ஏன் இன்னும் வாழவேண்டும், தான் இதுவரை சாதித்ததென்ன' எனபவற்றை சொல்லாமல் சொல்லும். டைரக்டர் அலெக்ஸாண்டர் பேயின் பெரைச் சொல்லாவிடில் மோட்சமில்லை எனக்கு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் "முதியோர் இல்லங்கள்" அதிகமாவதாச் செவிவழியறிந்தேன். அமெரிக்காவில் சமீபத்தில் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும் அரசாங்க இயக்கத்திற்கு எதேச்சையாக செல்ல நேரிட்டது. சோஷியல் செக்யூரிடி நம்பருடன் இங்கே பதிவு செய்து கொண்டால் குடும்பத்திற்கு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நமது தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட முதியோருக்கென நலத்திட்டங்கள் உள்ளனவா? தெரியவில்லை. 'தொட்டில் குழந்தைகள்' திட்டமறிவேன். மெல்ல 'கட்டில் முதியோர்' திட்டமும் வந்துவிடுமோ? கவலையாயிருக்கின்றது.

Sunday, August 15, 2004

நிதர்சனம்

தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வருவதாய் திரு. இராமகிருஷ்ணன் வருந்தியிருந்தார். ஆனால் இணையத்தில் சிலர் அக்கலையை அழியாது காப்பாற்றி வருகின்றார்கள்.

தோல்பாவைக் கூத்து நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது
நூலு ஒருத்தன் கையிலே
வாலு ஒருத்தன் கையிலே

puppet

விடுதலை தினத்தை கொண்டாடியோர்க்கு நன்றிகள்.

Saturday, August 14, 2004

வெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I

தமிழிணையக்
காதலர் கெஞ்சுவர்
அண்டை
நாட்டைப் பார்ப்பாயோ?
யாம் பார்க்கும் போது
ரெட்டையிலை ச(கா)ப்தம் காண்பார்

இணையப் பெருசுகள்
வழமை போல்
அறிவோ உணர்வோ
நடுநிலை கூடக்
காட்டாது

ஏகாந்தாமாய் ஒரிருவர்
ஏளனப்படுத்தப் படுவர்
ஜினிமா ஜிகிடி
தொடரும்
பின்அப்
பின்னூட்டங்களுடன்

துறவறத்தில்
போணியாகா விடில்
இல்லறம் திரும்பு
போலிக் காவிகளை களை
புணர்ச்சியாவது செய்யலாம்
புழையின்றிக் கூட...

கபளீகரம் கஷ்டமில்லை
கற்றும் தேர்வாரிலை
கவுளியை நம்புபவர்
க(நி)சத்தை நம்பிலர்

கோடம் போடு
கேதம் தந்ததாய்
கோ(ஷ)லமிடு
இருக்கும் ஒரேதுரும்பையும்
கோட்டை விட்டு
கோட்டைப் பிடிப்பதாய்
கோடம் செய்
கோஷ்டி கானம் கேள்...
ஏதோவொரு வினை

ஜியோ பாலிடிக்ஸ்
ஜிகிடி
கார்கிலில்
வன்புணர்ச்சி வராமலும்
களங்கப்படுத்திக்
களிப்பு

ஆக்கிரமிப்புக்கும்
அமைதிக்கும்
எண்(ண) வேறுபாடு தெரியாமல்
ஆசுவாசஞ் செய்
ஆச்சர்யம் கொள்
ஆசியமுஞ் செய்

புத்தன் பிறந்த மண்தான்
மங்குணியான அரசியல்தான்
பெரிய புத்தனிருந்தாலும்
சிறிய புத்தனின்
சிரிப்பொலி போதும்
சின்னாபின்னா மாக்கிட
சநாயகமென் பலவீனம்

14 ஆண்டுகளானாலும்
14 வயது கன்னியின்
களங்கம் களைவோம்
காலனின் கயிற்றிலே
சனநாயக மின்னும் தளைக்கும்
எப்பொருளுக்கும்
உட்பொருளுணர்

கடார நகரடைய
கடிகை பலவானதெனக்
கட்டியம் கூறாதே
கணக்கு பலவீனமாய்
கழுத்தறுக்கிறது

போரிலே பணம்
பார்த்தல் இயல்பு
அமைதிக்கு அதுவும்
பில்லியன் டாலரில்
செலவீனமென்பது திரிபு

தமிழ்க் கணித வரலாறு
பாடங்கள் படித்து வரவும்
கூடவே பெருமஞ்சள் கோழியின்
தர்க்கசாஸ்திர உற்சாகம்
தொலைக்காட்சியில் பார்க்கவும்

அடுத்தமுறை ராமர்படை
மாறுகைகால் கட்டி வரக்கூடாது
அம்புட்டுதான்
இந்தத்திரி இன்னுமெறியும்
ஆனால் அந்தப்புர(ற)ம்
அந்தோ கருகிவிட்டது...
கைவிட்டேன்...
இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்

உறைபனி ஊடே
தேயிலையோ வடிகொட்டையோ
சில்லிட்ட நீரைத்
தினமருந்திப் பின்
கடமையே கண்ணாய்
நவீன கருவிகளின்
நாகரிக வாடையுமின்றி
வடக்கைக் காக்கின்றார்

முப்பது ஆண்டுகளுக்கு
முன்பிறந்த கப்பல் நீர்மூழ்கியில்
வித விதமான
வேதிப்பொருள் சுவாசித்து
கடல் எல்லை
காப்பவர் தெற்கிலே

இவர்கள் ஆச்சாரம்
அனுஷ்டிக்கவில்லை
மேசைக்கு கீழே
கிம்பளம் நோக்கியதில்லை
காஷ்மீரிலிருந்து
கன்னியாகுமரி வரை
ஒண்ணரை வருடத்திற்கு
ஒருமுறை
குடும்பம் காண்பதில்
குதூகலம் அடைவார்

ரேஷணுண்டு ரம்மும்முண்டு
நாடோடி வாழ்க்கையுண்டு
அமைதியோ யுத்தமோ
உயிரை நாட்டிற்கு
உயிலாய் எழுதியதுமுண்டு

தேர்தலிலே அஞ்சலோட்டில்லை
அதுகுறித்து கவலையுமில்லை
சம்பள கமிஷனின்
லீலைகள் தெரியாது
ராமரோ அல்லாவோ
அயோத்தி அரசியலில் அக்கறையில்லை
தமிழும் இந்தியும் ஒன்றுதான்
சாதி சமயமும் தெரியாது

சுதந்திர நாளில்
இந்திய இறையாண்மைக்கு
இப்படி(டை)யாக
இறந்தவருக்கும்
இருப்பவருக்கும்
ஓய்வு பெற்றவர்க்கும்
பணிக்காக பிறந்தவருக்கும்
வீரவணக்கங்கள் !!!

வந்தேமாதரம் !!!
ஜெய்ஹிந்த் !!!
மேரா பாரத் மகான் !!!
அம்மி கொத்தும் சிற்பிகள்

அயலாராய்
எம்விழிகள்
பாவித்ததில்லை
இன்று
எதிரிகளாய்
பார்க்கப்படுகிறோம்
புள்ளிவிவரப்
புலிகட்கு
இலங்கை
ஆக்கிரமிக்க
வந்தது
வெறும்
60,000
இந்திய
ஆமிக்காரரா?
ஈராக்கை
ஏறெடுத்துப்பாரும்
4,00,000
அமெரிக்க
ஆமிக்காரர்
ஆட்டம்
போடுகிறார்
அங்கே
ஏவிய
கணைகளின்
கணக்கென்ன?
கனமென்ன?
படைகலன்களின்
பராக்கிரமமென்ன?
நடந்ததும்
நடப்பதும்
நடுநிலையார்க்கு
கண்கூடு
சிலை
வடிக்கும்
கலை
கொண்டு
சிற்பிகளே
வாருங்கள்
அம்மி
கொத்துவோம்

Friday, August 13, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - X

சலதளமடியே
மலஜலம் கழித்தோரே
குதமும்
கும்பியும்
குறியும்
நலமா?

சாகரத்தில்
சாக்கடையாய்
சங்கமதித்தோரே
டாலரும்
வெள்ளியுமாய்
அள்ளி
நீவிர்
நெருப்பள்ளி
யார் மீது
பூசுகின்றீர்?

சாரதியாய்
சாகசம்
காட்டினும்
ஜகடா
செய்வேன்
உண்மை தந்த
உன்மத்தத்தாலே

விழுந்ததாய்
வியாக்கியானம்
விளம்பு
மகளிர் கட்சி
யோனி திறந்து
மாட்சிமை காண்

தாதராய் வாழ
தகுதி பெற்றபின்
சனநாயகத்தை
சந்திசிரிக்க வை

திருப்தியா?
திலகம் வைப்பேன்
திரும்பு
மல ஆரத்தியென
மல்லுக் கட்டாதே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - IX

விட்ட குறையோ
தொட்ட குறையோ
ஆடிக் களிப்போமோ
தேடிக் களைப்போமோ

கிழித்தபுழையின்
கணக்கு காமிக்கின்றார்
நிருமலமா
காட்டினேன்
நிருவாணங்களே

வருந்தும்
வாக்கியம்
புரியாது
புழைகிழித்த
கேள்வியில்
புளங்கிதமடை

குவிமையம்
குறித்துப் பேசாதே
குறுக்காய்
கும்மியடி
குதக்கொழுப்புக்கு
குறைவாவுமக்கு?

சமரச
சமர்ப்பணம் செய்
சங்கறு
சமாதி கட்டு
பிடிக்காவிடில்
இறையாண்மை பேசு
சுற்றியிருக்கும்
சும்பப் புழைகள்
உசுப்பேற்றும்

உடலுக்கு
ஒன்பது
வாசல்
வியர்வைச்சுரப்பி
விட்டு
மற்றதனைத்தும்
அழுத்திப் புணர்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII

விவாதம்
பழகென்றால்
விதண்டாவாதம்
செய்கிறார்
வெகுசனமாய்
வெஞ்சனம்
செய்ததை
பறையடித்துப்
பாடுகிறார்

அப்பியாசம்
புரியா
அறிவிலி
நாதர்களுக்கு
பதவுரை
சொல்லும்
பாக்கியம்
வேண்டிலேன்

நித்திலம்
சுட்டாலும்
நிமலம்
போகுமோ?
நிராகரணம்
செய்யாதே
நிர்மூலரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VII

குணஷ்டை
குதர்க்கம்
குதூகலமில்லை
குரோதமா எங்களிடம்???
குண விரோதரே???

தக்கவிடை
நிறுவ வந்தேன்
தகனமாக்கி
விட்டீரே???

சமாதி
சமாப்தியல்ல
சயமாய்
என்சற்குணம்

துவாஜாரோகணம்
செய்கிறேன்
கொழுப்பிருந்தால்
வா

நிர்வாண
நிர்மாணம்
காட்டுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - VI

தேடிக்
களைத்தேன்
தேமருதமருந்திக்
களித்தேன்

வியாச
விரக்திக்கும்
விகற்ப
வேட்டிற்கும்
வாக்கியார்த்தம்
வரவில்லை

எழுத்துப்
போக்கில்
இலக்கியம்தேடும்
இலௌகீகனார்

உன்மத்த
உச்சாட்டியம்
ஓட்டுவேன்
உசிதம்
காண்பேன்
போலி திருட்டாந்தம்
போக்குவேன்

கேதம் கொடுத்ததாய்
கேலிக்காதே
குஞ்சரம் நான்
குதம் பெயர்திடுவேன்
களிப்புற்றதும் களைப்புற்றதும் - V

காயவின்பம் தேடினால்
பெத்தாபுரம் போகலாம்
கவாத்து பெற்றவன்
களிக்க வந்தானோ?

யத்தனி
யதேஷ்டக்
கஷ்டமா?
மந்தத்திற்கும்
மருந்துண்டு
ஞானமந்தத்திற்கு?

மகத்துவம் பேசும்
மகராசிகளே
வெகுசன வேடத்திலே
தாமரைத் தனயனை
வெஞ்சனம் செய்ததார்?

தீக்குச்சியால்
தீபமேற்றலாம்
கொள்ளிக்குச்சியாக்கி
சிரமும் சொரியலாம்
சிரங்கு கிளறும்
குரங்குகளே

மார்ச்சரியம் காட்டும்
மகான்களே
மாந்மியம் பேசும்
மகராசிகளே
மத்தம் களைவீர்

ஜனனமோ
மரணமோ
வைராக்கியம்
சேருமிடம்
தாண்டும்
வரையில்தான்

Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - IV

தவறிழைத்தல்
தண்டிக்கக்கடவது
அம்பாரமாய்
ஆலீவுடை
துச்சாதனரென
அவதானிக்கும்
அக்கியானிகள்
அநேகம் பேர்

அகிம்சை
சோழமுத்திரை
சினி ஜிகிடி வார்த்தை
வாந்தியெடுத்து
அக்கிரகாரப்
பூணூலை
அரைஞாண்
கொடியாக்கிக்
களிப்பர்

அஞ்சிட்டன் மேலும்
அப்பழுக்குத் தேடி
அதமம் செய்வர்
அஞ்ஞாத வாசத்திலும்
அசௌரியம் கூறி
அஞ்சனம்
பூசுவர்

அநீதியென்னும் குரலை
அந்தியகிரியை செய்வர்
அப்புறமென்ன
அடக்குமுறையை
அறிந்தவர்
அவரன்றோ?
தமிழோவியப் பதிவுகள்

கிடைத்த சிறிது நேரத்திலே ஒரு விளையாட்டுக் கட்டுரை எழுதிப்பார்த்தேன். தமிழோவியத்தில். நேரமிருப்பின் எட்டிப் பாருங்களேன்.
அப்பியாசமும் வெளிவந்திருக்கிறது.
களிப்புற்றதும் களைப்புற்றதும் - III

இலக்கிய உபாதி
உச்சத்திலே
சொல்லாடல்
ஜோடனைகள்

ஏகோபித்த
ஏடணையாய்
பெண்டாளராம்
சண்டாளராம்

கூற்றுவனோடு
கூத்துகட்டவில்லை?
உயுக்கத்தில்
உதிரம் கொட்டவில்லை?

உவதியுடன்
உல்லாசமாம்...
உத்தரீயம் கலைக்கும்
உன்மத்தர்களாம்

ஊருக்குத்தான்
உபாசநம்
இவரது
இறையாண்மையும்
இட்லிப்பொடிதான்

களிப்புற்றதும் களைப்புற்றதும் - II

சேத்திரமென்றால்
சேவிக்கலாம்
குருச்சேத்திரத்தில்
சேதித்தல் திரிபல்ல

சுயம்பாகம் செய்தது
சம்போகத்திற்கா?
மான தத்தம்
செய்தோமே?

சமரசமாய் வந்து
சந்தி சிரித்தோமே?
சல்லாபம் பேசும்
சர்வகலாசாலைகளே
எரிவது எந்தன்
கும்பியோடு குதமும்

சரணாகதியடைந்து
சங்கறுத்தோரே இன்று
சவுந்தரியம்
சமைக்கின்றீரோ?

கிரம கிரந்தமிது
காயசித்தியாய்
காலம் கடத்தும்
காச காதகரே
களிப்புற்றதும் களைப்புற்றதும் - I

மகிதலம் கொண்டோர்
மகிமையறியவர்
மத்தியஸ்தமாய் கூறுவேன்
மதுரமாய் தோன்றாதுனக்கு

துவாரபாலகரை
தூஷித்தல் களிப்பு
லோகமே லோகாதயக்குழியா?
களைப்பு தாத்பரியம்

கூல ருசி
குருவியறியும்
தாசி ருசிக்கு
தபசு செய்திலேன்

சூரிய சூட்டுக்கு
சூரணமா?
சூரன் நான்
சூன்யனே...

மாந்மியமறியா
தற்குறிகளே
உங்குறி உனக்கெட்டாது
மாற்றானுக்கு மண்டியிடு

அப்பியாசம்

ஏகதேசக் கும்பலின்
விரை வீக்க விஷயத்தை
தேசமேலேற்றும் த்வனி

உபாதிக்கு ஔடதமுண்டு
பிச்சி உச்சிக்கு சூரணமேது?

சோபம் சேர்க்கத்தான்
சென்றான் சோதரன்
தக்கணியாய் பெற்றான்
தண்டமில்லை தகநம்

துராகிருதம் செய்து
துட்டனாய் துரோகமும் செய்து
துவி பாஷிதராய்
துவைதம் பேசுகிறார்

தௌகித்திரனின் பரிணயம்
பாஷாணத்தை பாணிக்கிரகணம்
செய்தவர் அறிவாரா?

பரிசனமே
பராமரிசம் செய்
பரதேசம் பார்த்துத் தெளி
பலிதமிது கடைசி

பரிசுத்த நாமம் வேண்டிலன்
பாண்டித்தியம் பயன்செய்ய
பரஞானத்தை
பரிகரித்தல் செய்கிலேன்

மோக மித்திரம்
மொத்த மந்திரமில்லை
தந்திரமாய்
யத்தனம் செய்யாதே

முகஸ்துதி முத்தியல்ல
மூட மதியாரே
மௌட்டியமே வேதனை
மௌலி களையுங்கள்

வநாந்தர வானரங்கள்
வர்த்தமானங்கள் தரும்
வந்தித்தல் செய்ய இறைஞ்சும்
நிந்தித்தால் விகடம் செய்யும்

வாதப்பிரதிவாதம் செய்
ஓதம் பேசும்
வாக்கியார்த்தம் செய்
வக்கிரலீலை செய்யும்

விடசெந்தை விரும்பியோரே
விடசுரமிதோ விசுவரூபமாய்
வேணுகானம் வேண்டாம்
அவலத்தில் அமலனும் உண்டு
அந்தகாரம் அகற்று...

புரியாவிடில்
பூஸ்திதி பற்றை
புன(ண)ர் விவாகம்
செய்...

Tuesday, August 10, 2004

பெண்ணுக்கு மரியாதை

அனைத்து நாட்டுப் படைகளிலும் பயிற்சியின் போது பெண்களுக்கு தரப்படவேண்டிய மரியாதை பிரதானமாக இருக்கும். எனது பயிற்சி அனுபவம் இதோ. கப்பலின் நுழைவாயிலில் (Gangway) அடியெடுத்து வைக்கும்போது ஆபீஸர்களுக்கு சல்யூட் வரவேற்பு தரப்படும். அதே மரியாதை கப்பலுக்கு வருகை தரும் பெண்களுக்கும் உண்டு. வயது வித்தியாசம் பாராமல் அடுத்தவரின் துணைவியாரை "மேடம்" என்றே விளிக்க வேண்டும். எவ்விடத்திலும் பெண்கள் வருகை தந்தால் கமாண்டிங் ஆபீஸரிலிருந்து, கடை நிலை ஊழியன் வரை எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். அவர்கள் அமர்ந்த பிறகே, அவர்கள் அமர வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் முடிந்தால், உண்ணும் போது கூட முதலில் குழந்தைகள், பெண்கள் பிறகே ஆண்கள் சாப்பிடுவார்கள். அனைத்திற்கும் மேலாக கப்பலையே "She" என்றுதான் விளிப்பார்கள். இது எவ்வளவு பேருக்குத் தெரியுமென நானறியேன். இது வெறும் இந்திய மகளிருக்குத்தானோ என்ற வெட்டிக் கேள்விகட்கு இங்கே விடையில்லை.

மற்றபடி "சேலை உருவுவதற்கு" பிரத்யேக பயிற்சி தரப்படுவதில்லை. ஒருவேளை அது களப் பயிற்சி (on the job training) எனக் கருதி விட்டு விட்டார்களோ என்னமோ?

இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களை விசாரிக்க வேண்டுமென்னும் கேள்வி மிக நியாயமானது. அப்படியாவது எங்கள் அரசாங்கத்திற்கு IPKF பற்றி ஞாபகப்படுத்தலாம். வியட்நாம் போரை எதிர்த்த அமெரிக்க மக்கள் கூட அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் வருடா வருடம் அப்போரில் உயிர் நீத்த இராணுவ மக்களுக்கு "Memorial" சென்று அஞ்சலி செய்கிறார்கள். அமைதிப்படை வீரர்களை இந்தியாவில் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கம் கூட புறக்கணித்து விட்டதென்பதே உண்மை.

இப்போது அட்டூழிய விசாரணக்கு வருவோம். வலைபதிவார்கள் குரலாய் அனைவரும் இந்திய அரசாங்கத்துக்கு மனுப் போடுவோம். என் பெயரும் அதில் கட்டாயமாய் இருக்கும்.

இல்லாவிடில் பூந்தமல்லியில் இன்னொரு சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய்வோம். ஏனென்றால் தீர்ப்புகளைத்தான் நாம் வழக்கம் போல் சுகமாக மறந்து விடுவோமே?

சுந்தரவடிவேல் "சேலை உருவிகள்" என்றார். நான் அனைவரும் அப்படியல்ல என்றேன். வன்முறையில் உயிர் நீத்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இறந்துபட்ட இராணுவத்தினருக்கும் (சேலை உருவாத) அநுதாபம் செய்யுங்கள் என்றேன். எனக்கு கிடைத்த பட்டங்கள் "நகைச்சுவையாளன்", "ஓப்பன் மைண்ட் இல்லாதவன்", "கண்மூடிய தேசப்பற்று உள்ளவன்", இன்னும் பல. ஏசுவோர் தாராளமாக ஏசிக்கொள்ளுங்கள்.

அமைதிப்படையை அம்மணப்படுத்தும் படை என்று சித்தரித்துக் காட்டும் விஷமத்தனமான பதிவு மதிக்கு "யதார்த்தமாய்" தோன்றுகிறது. ஓப்பன் மைண்ட் என்பது எதிர் வினையில் உள்ள தார்மீக நியாயங்களையும் ஏற்றுக் கொள்வதுதானே? இராணுவம் பற்றிய பதிவில் காந்தீயம், வெள்ளையுடை தேவதைகள், என்ற பின்னூட்டங்களால் நீர்த்துப் போகின்றது. திரும்பவும் சொல்கிறேன். வன்புணர்ச்சிக்குட்பட்ட சகோதரிகளுக்காக நான் விடுவது முதலைக் கண்ணீர் இல்லை. இவ்வழிச் செயல்களில் ஈடுபட்டவரை வன்மையாக கண்டிப்பது வெளிவேடமில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அமைதிப்படையை "ஆக்கிரமிப்புப் படை", "சேலை/குடல் உருவிகள்", (இன்னும் பல ஏசல்களுக்கு ஆயிரமாயிரம் வலைத்தளங்கள் உண்டு) என்று சொன்னால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை ஏன் ரமணீதரன், மதி, வதனா, மெய்யப்பன், தங்கமணி போன்றவர்கள் எதிர்க்க வேண்டும்?

புலிகளை ஆதரிக்காததாய் சொல்பவர்கள் அவர்களது "வீர தீர பராக்கிரமங்களை" சொல்லும் இணையத்தளங்களுக்கு மட்டும் சுட்டிகள் கொடுப்பார்களாம். அடடே...ஒரு "நாங்கள் புலி எதிர்ப்பாளர்கள்" என்று "Disclaimer" போட்டு விடலாமே?

ஈராக் யுத்தத்தின் போது புஷ் சொன்னார்"Either you are with us. or else supporting the terrorist". அதேபோல் "நீங்கள் ஒன்று என் பக்கம். இல்லாவிட்டால் சேலை உருவிகள் பக்கம்" என்பது என்ன நியாயம்? இதைச் சொன்னால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடுகின்றேனாம்?

அப்புறம் எம்ஜியார் துப்பாக்கி கொடுத்தார். அதனால் நாங்கள் (அட புலிகள்'ங்க) சும்மா சுட்டுப் பார்த்தோம். குறுக்கே அமைதிப்படை வந்தது. ஒரு 1,200 பேர் செத்துப் போயிட்டாங்க அப்படின்னு கதை விடாதீங்க. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும் பாடம் படிக்காத அப்பாவி இந்தியத் தமிழர்கள் நாங்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக அமர்ந்து நியாயம் கேட்டு நாம் தொடர்ந்து போராடுவோம். என்னாங்கய்யா ஆச்சு இணையத்துக்கு? ஜால்ராவுக்கு பழக்கமான செவிகளுக்கு எதிர்வினைகள் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்.

என்ன கப்பற் படையிலிருந்த ஏழு வருடத்தில் ஒருமுறை கூட சேலை உருவ எனக்கு வாய்ப்பு கிட்டாத கோபம். அதைத்தான் வலைப்பதிவில் தீர்த்துக்கொல்கிறேன். அப்படின்னும் சொல்லுங்களேன். கூடிய சீக்கிரம் இணைய துச்சாதனன் என்ற பட்டமும் கொடுங்களேன்.

காத்திருக்கின்றேன்.
பெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல்,

கும்பகோண தீ விபத்திற்கு இயலாமையில் எட்ட நின்று நான் மாரடித்தேன். நீங்கள் பல படி மேலே சென்று கலாம் வரை வலைபதிவாளர்களின் குரலை எடுத்துச் சென்றீர்கள். இறந்துபோன தளிர்களுக்காகவும், இனி இவ்வாறு நடக்கக் கூடாதெனும் உங்களின் மனித நேயம் வாழ்க !!!

அதே மனித நேயம் தங்களது "நம்மற்குரியர் அவ்வீரர்" பதிவிலும் காணப்பட்டது. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வல்வெட்டித்துறையில் வன்முறையில் இறந்து ஈழத்தமிழருக்காக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. நடந்தது தவறு என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் ஒருவழி அணுகுமுறைதான் பலமாய் இடிக்கிறது.

NCC'ல் ஒரு ஹவில்தாரின் "கதை" கேட்டு அமைதிப்படையின் நோக்கத்தையே எடை போட்டு விட்டீர்களே? பேஷ்..பேஷ்...கதை கேட்டதற்கு வெட்கப்படுவதாய் பாவமன்னிப்பு வேறு கேட்டு விட்டீர்கள். நாணயத்தின் இருபுறத்தையும் சீர் தூக்கி எழுதவேண்டியது எழுத்தாளனின் சமூகக் கடமை. இணையத்தில் ஈழம் பற்றி பேசவே பல "தமிழ்நாட்டுத் தமிழர்கள்" அஞ்சுகின்றார்கள். தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குகின்றார்கள். இதே பாலஸ்தீனம், அமெரிக்கா, ஈராக் என்றால் பத்தி பத்தியாக கதைக்கின்றார்கள். ஏனிந்த இழிநிலை?

மிகுந்த இழப்புகளைச் சந்தித்து, புலம் பெயர்ந்து, எழுதும் ஈழத்தமிழர்களின் பதிவுகளைப் படித்து வருகின்றேன். அவர்களின் கண்ணீரிலிருக்கும் சூடு, பிற தமிழர்களின் பதிவில் நீலியாக நீர்த்துத்தான் தெரிகிறது.

பல ஈழ இணையங்கள் புலிகள் வீரமாய் போரிட்டு இந்திய சிப்பாய்களைக் கொன்றதாக தெரிவிக்கின்றது. ஆறு வயது சிறுவனிலிருந்து, பெண்கள் வரை யாரையும் விடாத தற்கொலைப் புலிகள் மத்தியில் அமைதி காக்க வந்து, அவமானச் சின்னங்களுடன் திரும்பிய இந்திய இராணுவத்தின் கதையை "எல்லை தாண்டி எரிந்த சிறகுகளில்" எழுதினேன்.

யாராவது நூல் பிடித்து "அறிப்பூர்வமாகவோ", "உணர்வுப்பூர்வமாகவோ" எழுதுவார்களா என ஏங்கிய காலமுண்டு. மூக்கு சுந்தரின் பதிவு மிகவும் துணிகரமான ஒன்று. அவரெழுப்பிய பல நியாயமான கேள்விகட்கு பதில் காணும் தருணம் இது.

ஆமாம். ஆளாளுக்கு இந்திய இராணுவத்தை இழுக்காக்கிறார்களே? ஏன்? ஆக்கிரமிப்பு இராணுவமாம்...அமெரிக்கா குவைத்தில் கொண்ட காதலா இது? தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது? யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும்? யோசித்துப் பாருங்கள்.

வானவெளியிலிருந்து உணவுப்பொட்டலங்கள் போட்டவன்தானே IPKF அனுப்பிய ராஜீவ் காந்தி? ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, IPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே? அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே? சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு? நானும் இணையத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். 93 தளிர்களுக்கு ஒப்பாரி வைத்த உங்கள் உள்ளம் இப்போது கல்லாகி விட்டதா?

வல்வெட்டித்துறை வன்முறைக்கு ராஜீவின் சாவுக்கடியில் அசிங்கம் கண்டுபிடித்த அவலம் உங்களைப் போல் அதிமேதாவிகளாலேயே முடியும். இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ராஜீவ் என்கின்ற ஆரியன், ஈழத் திராவிட தமிழர்களை அழிக்க நினைத்தான் எண்டு நினைப்போம். அது பிடிக்கவில்லையெனில் ராஜீவுக்கு பார்சிய ரத்தத்தை விட பார்ப்பனீய ரத்தம் அதிகமுள்ளதெனப் பேசுவோம். உங்களுக்குத்தான் எதிலுமே ஆதியும் அந்தமும் வேண்டுமே?

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பின்னூட்டம் வேறு விட்டிருக்கிறீர்கள்? பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி? NCC'ல் பணியாற்றியதா? IPKF பணியாற்றிய சமயத்தில் MP'யான வை.கோபால்சாமி கள்ளத்தோணி ஏறி பிரபாகரனை சந்தித்து சாதனை படைத்தார். பின்னர் பிரேமதாசா "இந்திய இராணுவமே வெளியேறு" சொன்னபின் வந்த IPKF கடைசிக் கலத்தை வரவேற்க கூடச் செல்லாத கோமான் அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர். நான் இவ்விருவரையும் (உங்கள் கட்டுரை படித்தபின்) இன்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் டாக்டர் சுந்தரவடிவேல்...உம்மை...வார்த்தைகள் வரவில்லை.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஒரே ஒரு ஈழ இணையத் தமிழனைக் எனக்கு காட்டுங்கள். ஆச்சரியமாக உங்களால் முடியாது.இன்னொரு நிதர்சனம். புலிகள் ஒத்துக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.

மேலும் பதிவேன்.

Friday, August 06, 2004

மனித வாழ்க்கை

நடுத்தர வர்க்கத்தின்
வக்கிரத்தில்
நெருப்புக் கோழியாய்
முகம் புதைத்து

பிறர் நனவுக்காக
என் கனவுகளை
தாய்ப் பறவையாய்
உணவாக்கி

அவசர உலகில்
அவலங்களை அள்ளி விழுங்கி
கால்நடையாப் பின்னர்
அசை போட்டு

மன ரணங்கள்
முற்றிலும் ஆறு
முன்குரங்காய்
கீறிவிட்டு

எப்போதாவது
என்னையுமறியாமல்
மான் போல்
எம்பிக் குதித்து

காதல் விளக்கில்
விடியலைத்தேடி
விட்டிலாய் பூச்சியாய்
விழுந்து

சமுதாயச் சாக்கடையில்
சகலத்திலும்
புழுப் போல்
சமரசமாய் நெளிந்து

நிமிர்ந்து பார்க்கின்றேன்
நான்
நானாகவே
வாழவில்லை

சீய்...மனித வாழ்க்கையே...

Monday, August 02, 2004

மதுரை பாபாராஜ்

இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தியாசமாய் இவர் பூசை, புனஸ்காரமென்று ஊரை அடித்து உலையில் போடுபவரில்லை. தனது தனித்த தமிழ்த் திறமையால், பலரை அடித்துக் கட்டிப்போட்ட புதுக்கவிதை/மரபுக்கவிதை இயற்றும் சாமியார் இவர்.

சமீபத்தில் நண்பன் ராஜ், மதுரை பாபாராஜ் கவிதைகளில் சிலவற்றை அனுப்பியிருந்தான். பாபா தமிழ் இலக்கிய வட்டாரங்களில் மிகவும் பிரபலமான, ஆனால் ஆர்ப்பாட்டமே அறியாத மாமனிதர் இவர். ராஜ்க்கு தாய்மாமன் முறையானதால் எனக்கு இலகுவாக "அங்க்கிள்" ஆகிப் போனவர். அதென்னவோ அச்சிறு வயதில் எதோ ஒரு கோபத்தில் காவல்துறையினரை மட்டுமே "மாமா" என்று விளித்து வந்த காரணமாயிருக்கலாம்.

எட்டாவது படிக்கும் போதென நினைக்கிறேன். மதுரை தமிழ்ச் சங்கத்தில் கவிதை படிக்க வேண்டுமென, தலைப்பை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டான் ராஜ். நானும், ராஜும் கவிதை படிக்கவேண்டுமென்பது பாபா அவர்களின் ஆசை (ஆணை???). திரு பாபா அவர்கள் நான் கவிதை என்று கூறிக் கொண்டதை அப்போது படித்திருப்பாரென்னும் பலமான சந்தேகம் அன்று ஏற்பட்டது.

இருப்பினும் ஏதோ எழுதிச் சென்று சிறப்பாகப் படித்தது (தனி நடிப்பு - Mono Acting எனக்கு கை வந்த கலை) ஞாபகம் இருக்கிறது. கைம்பெண் மறுமணத்தை சிறுவனாய் மேசையைத் தட்டி, "மூடி உடைந்தால் நீவிர் ஜாடியை எறிவீரோ?" என்ற வரியை இரண்டு முறை திருப்பிச் சொல்லி கைத்தட்டலைப் பெற்ற போது நான் எங்கேயோ பறப்பதாய்ப் பட்டது. (இரண்டு முறை திருப்பிச் சொல்லி எனக்கு முன் பாடிய ஒரு புகழ் பெற்ற கவிஞர் கைத்தட்டல் பெற்றதை சிறுவனான நான் காப்பியடித்தேன்). தப்பாக எழுதி மொத்து வாங்கக் கூடாதெனெ கவிதையின் ஆரம்பத்திலேயே "இம்முயற்சி நடக்கத் துடிக்கும் ஒரு தவழும் குழந்தையின் கனவு. தவறி விழுந்தால் எள்ளி நகையாடாதீர். கைக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்", என்று சொல்லி விட்டேன். கைத்தட்டல் பாராட்டா, தூக்கி விடச் செய்த முயற்சியா நானறியேன். இக்கவிதை போல் பின்னர் எழுதிய பல கவிதைகளையும் நான் பத்திரப் படுத்தவில்லை. நேயர்கள் தப்பித்துக் கொண்டீர்கள். இன்றும் நான் எழுதுகிறேனென்றால் பாபா போன்றவர்கள் இன்றியமையா கிரியா ஊக்கிகளாக அமைந்த காரணத்தாலே என்றால் அது மிகையில்லை.

பாபாவின் கவிதைகளை சிறு வயதில் படித்து அர்த்தம் காண முயற்சி செய்திருக்கிறேன். இன்றும் முயற்சி செய்கிறேன். ஒரே ஒரு ஆதங்கம் இன்னும் மனதில் எழும்பி அடங்குகிறது. இம்மாமனிதரின் நிழலில் தமிழ் பயில ஒரு சிறிய சந்தர்ப்பம் கூட அமையவில்லையேயென்று...

மதுரையிலும், சென்னையிலும் இவரைச் சந்தித்தபோது மணித்துளிகளை வீணடித்து விட்டேனோவெனத் தோன்றுகிறது. இன்றும் அவரை நினைத்தால் ஒரு மரியாதை கலந்த பயம்தான் வருகிறது.

பாபாராஜ் அவர்கள் வலைப்பூவிற்கு வரப்போகிறாராம். நண்பன் ராஜ் சொன்னான். ஆஹா...இழந்த மணித்துளிகளை மீண்டும் பெறும் இன்பம் எனக்கு.

இதோ அவரின் சில கவிதைகள் (ராஜ் அனுப்பியது; அனுமதி கேட்கப் பயமானதால் அப்படியே வெளியிடுகிறேன்)

கைக்கிளை
============

திரைகடலோடி
திரவியம் தேடி
திசைக்கு ஒன்றாய்
பிள்ளைகள் விமானம் நோக்கி !கையசைத்து
வழியனுப்பிய
பெற்றோர்கள்
ஏக்கமுடன் காப்பகம் நோக்கி !

பெருந்தன்மை கோழைத்தனமல்ல
================================

பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத்தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து.

கொள்ளை அழகு
=================

பச்சை வயல்களில் பால்நிற நாரைகள்
இச்சை யுடனே இருந்தன - சட்டென
வெள்ளைச் சிறகை விரித்தன வானிலே!
கொள்ளை அழகெனக் கூறு.

இதுதான் வாழ்க்கையா?
========================

நாளை எனக்கென்ன? நாளை உனக்கென்ன?
கேள்வி துளைத்தெடுத்துக் கேட்கிறது - வாழ்க்கையிங்கு
நூலறுந்த பட்டமா? நூலேணி ஆட்டமா?
கோலத்தின் காட்சியென்ன கூறு.

மாலையாக்கும் அற்புதம்
=========================

சிங்காரப் பத்துவிரல் சேர்த்து நடம்புரிய
வண்ணவண்ணப் பூக்களை வாகாக - கண்கவரும்
மாலையாக்கி நம்மை மலைக்கவைக்கும் அற்புதத்தை
வாழ்க்கையாக்கி வாழ்கின்றார் பார்.

வாருங்கள் பாபா !!! உங்கள் எழுத்தை இணையத்தில் படிக்க ஆர்வமாயுள்ளேன். பின்னூட்டதிலாவது தைரியமாய் வினாவெழுப்பி உங்களிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ள முயல்வேன்.

நன்றியுடன்,
வந்தியத்தேவன்.

Tuesday, July 27, 2004

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

பில்லியன் மக்களின் கனவு நாயகன். உலகில் மற்ற எந்த ஜாம்பவானாலும் நினைத்துப் பார்க்க முடியாத பேரையும், புகழையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்றவர். தனது "கனத்தை" ஆட்டக் களத்தில் மட்டுமே காட்டும் அதிசய மனிதர். இவரைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
Sachinchild 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத கிரிக்கெட் அணியின் பாரம் தூக்கியாய், அனைவரையும் அனுசரித்து அணிக்காக ஆடுபவராய் இருப்பவர் மீது காழ்ப்புணர்வின் காரணமாய் விமர்சன அம்புகள் விழுந்த வண்ணம் இருக்கும்.

கடைசியாக விழுந்த கணை: ஆட்டத்தில் அழகுணர்ச்சி இல்லையாம். ஆமாம்...அழகு என்பது பார்ப்பவர் கண்ணோட்டத்தில் அல்லவே இருக்கிறது. காமாலைக் கண்கள் காண்பதெல்லாம் மஞ்சள் தானே?

பத்ரி தமிழோவியத்தில் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அவரும் டெண்டுல்கரின் ஆட்டத்தில் அழகு குறைந்ததாகவே கருதுகிறார். எனக்கு அக்கருத்தில் முழு உடன்பாடு இல்லை.

ஆரம்ப காலத்தில் அதிரடியாக ஓட்டங்கள் குவித்த போது, பொறுப்பின்றி ஆடி விக்கெட்டைத் தானம் செய்கிறார் என்றார்கள். கடைசிவரை நின்று ஆடினால் அவரால் இந்தியாவிற்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத் தர முடியுமென ஆருடம் கூறினார்கள். இன்று நளினத்தைக் கூட்டி, வேகம் குறைத்து விவேகத்துடன் ஆடும் போது அழகு போய்விட்டதாய் புலம்புகிறார்கள். பழமரம் கல்லடி படத்தானே செய்யும்?   
tendulkarloftaus
கிரிக்கெட் விளையாட்டின் பலமும், பலவீனமும் என்ன தெரியுமா? தாம்பூலக் கடையிலிருந்து, டாஸ்மாக் பார் வரை அக்குவேறு ஆணிவேறாக அனைவராலும் அலசப்படுவதுதான். தென்னை மட்டையில், கோல்ப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் ஆடத் தொடங்கிய நான் இன்று விமர்சனக் கட்டுரை எழுதவில்லையா?

பொங்கி வரும் புது வெள்ளமாய், விதிகளின்றி எழுதப்பட்ட புதுக்கவிதையாயிருந்த டெண்டுல்கர், இன்று அகண்ட நதியாய், விதிகளோடு எழுதப்படும் வெண்பாவாய் விளங்குகிறார். வெள்ளத்தை ரசித்தவர்கள் ஆழ்ந்த நதியின் அழகை ஏன் இனம் காண முடியவில்லை? புதுக்கவிதைக்கு ஆதரவு தர வெண்பாவை ஏன் வெறுக்க வேண்டும்?

டெண்டில்யா ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். கடவுளில்லை. அவர் தனது பலவீனங்களை அடையாளம் கண்டு உடனே அரண் அமைப்பதில் கில்லாடி. வயதாகும் போது கணிக்கும் திறன் (Timing), அணுகுமுறை (Approach) போன்றவற்றை சற்றே திருத்தி அமைத்தார். மேலும் அதிரடியாக ஆடுவதற்கு ஜெராக்ஸ் டெண்டுல்கராய் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக்கும், மத்திய வரிசையில் இளம் யுவராஜ் சிங் மற்றும் முகமது கேய்ப்'ம் இருக்கும் போது டெண்டுல்கர் நிதானமாய் ஆடுவதுதான் நல்லது. இரட்டைக் குழல் துப்பாக்கியாய் கடந்த பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை மோதல் போல தேவைப்பட்டால் மட்டும் வெடிக்கலாம்.

நடந்து முடிந்த பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளரான ஓமர் குல் சொன்னது, "சச்சினுக்கு Incoming Seaming Delivery'யை ஆட தொடக்கத்தில் தயங்குவார். இது ஒரு பலவீனம்". இதே பழைய டெண்டுல்கராக இருந்தால் Leg Glance/ Nice Flick / Short Arm Pull / Lofted Staraight Drive ஏன் Inside Out கூட ஆடத் தயங்கியிருக்க மாட்டார். தற்காப்பு முறையில் (அதே பந்தை) தடுப்பாட்டத்தையே சிறிது முரட்டுத்தனம் கலந்து ஆடி, ஒரு ரன் எடுக்க முயல்வது தவறா?   
sachin pull
பிஷன்சிங் பேடி தன்னிடம் கூறியதாக நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, "சச்சினை "Caught & Bowled" முறையில் அவுட் ஆக்க வேண்டும்" என்றார். எப்படி பந்தி வீசி என்று தெரிவிக்கவில்லை. ஆனால் இது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். C&B முறையில் இதுவரை மொத்தம் 45 முறை அவுட்டாகி உள்ளார். (போல்டு: 47, காட்ச் 148, 24 LBW, 8 Stumped, 25Runout : மொத்தம் 297 அவுட்)

மொத்தத்தில் டெண்டுல்கரின் பலவீனங்களைப் பட்டியலிட்டால்:
1. கால்களின் கிரமமாக சேர்த்தல் (Leg Co-ordination) புத்தக விதிப்படி தற்போது இல்லை. அதனால் பேட்டிற்கும், பேடிற்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் "Sharp off-cutter" போன்று விரைவான உள்நோக்கித் திரும்பும் பந்துகளை வீசினால் கிளீன் போல்ட் மற்றும் "Played On"ஆகும் வாய்ப்பு அதிகம்.

2. தடுத்தாடும் போது அடிக்கைக்கு அதிக அழுத்தம் கொடுத்து மட்டையை பிட்ச் நோக்கிச் சிறிதாய் தாழ வைத்து விளையாடாமல், சற்றே மேல் நோக்கி ஆடுவது. இதனால் மெதுவாக வரும் பந்துகளை (ஸ்பின்னானலும், வேகப்பந்து வீச்சாளர்கள் தந்திரமாய் வீசும் ஸ்லோ பந்தானாலும்), சிறிதே நேரம் பிசகினாலும் பந்து கெந்தப்பட்டு (Ballooning) "V" பகுதியில் கேட்ச் ஆகும் வாய்ப்பு அதிகம். முதன் முதலில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் (முக்கியமாக De Villiers, Petrus S) திறமையாக இப்பலவீனத்தை பயன்படுத்தினார்கள்.

3. கூட ஆடுபவர் "strike rotation" செய்யாவிட்டால், பொறுமை இழப்பது.

4. அனைத்து மட்டையாளர்களுக்கும் இருப்பதை போலவே தொடக்க ஓவர்களில் ஆப் ஸ்டம்ப்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை ஸ்லிப்கள் தாண்டி "ஒத்தியாட" முனைவது. இது ஒரு நாள் போட்டியால் விளைந்த சாபக்கேடு. ராகுல் திரவிடையும் இது விட்டு வைக்கவில்லை.

அவர் குவித்த ஓட்டங்களும், சராசரி ஓட்டங்களும், ஓட்ட வேகமும் அவர் தனது தவறுகளை உணர்ந்து, ஆடும் போக்கை திருத்தி அமைத்துக் கொண்டதாகவே படுகிறது. அவரது கூற்றுப்படி தினமும் புதிதாக ஒன்றை அறிந்து, தன்னை மெருகேற்றிக் கொள்வது தெளிவாகப் புரியும்.
புள்ளி விவரம் வேண்டுவோர்க்கு, கடந்த 5 வருடக் கணிதம் பார்ப்போமா?

மட்டை பிடித்தல்
வருடம்  M  Inns  NO  50s  100s  HS  Runs  Avg     Ca  
2000          34  34     0      6         3     146  1328 39.06  11  
2001           17  16     3      3         4      146  904  69.54   3  
2002          20  19     5      3         2      113  741   52.93   4  
2003          21  21     1       8         3      152  1141 57.05   4  
2004          17  17     1       4         1       141  656  41.00   4  

பந்து வீசுதல்

வருடம்  O   M  R      W  4w  Best  Avg     S/R     E/R
2000        170   2  835  20  1    4/56  41.75  51.00  4.91
2001         43    1  230   5    0    3/35  46.00 51.60  5.35
2002         66.5 0  363  7    0    2/41  51.86  57.29  5.43
2003         39    0  202  3    0    2/28  67.33  78.00  5.18
2004         60    1  352  13   0    3/21  27.08  27.69  5.87

7/6/75'ல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சுனில் கவாஸ்கர் 174 பந்துகளைச் சந்தித்து 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 31/10/87'ல் புருடன்ஷியல் கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 88 பந்துகளில் தனது ஒரே சதத்தை (103 ஆட்டம் இழக்காமல்) அடிக்கவில்லையா? அன்று ஈவான் சாட்பீல்டிற்கு தூக்கமே வந்திருக்காது. ஏனென்றால் எதிரே ஆடும் அதிரடி சிரீகாந்த்திற்கு முன் அரை சதம் அடித்தார் கவாஸ்கர். இன்று நளினத்தின் பெயரில் அவ்வளவு மெதுவாகவா டெண்டுல்கர் விளையாடுகிறார்? என்ன ரன் குவிக்கும் வேகம் 100'க்கு மேலிருந்து 80'பதுகளுக்கு இறங்கி வந்து விட்டது.   

அழகு போய்விட்டது (நளினம் கூடினாலும்), பெராரி கார் (ஒழுங்காக வருமான வரி கட்டினாலும்), அதிகம் பேச ஆரம்பித்து விட்டார் (பேசாவிடில் மண்டைக்கனம் என்பார்கள்), ஆட்டத்தின் மீது நாட்டம் குறைந்து விட்டது (50 முறை ஆட்ட நாயகனாகி சாதனை புரிந்தாலும்) இன்னும் பல புரட்டு பேசுவார்கள். அதையெல்லாம் பொய்யாக்கி தனக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயத்தில் க(வ)னம் செலுத்துவார் டெண்டுல்கர். அது தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடுவது. 

எனக்கிருக்கும் ஒரே ஒரு ஆதங்கம். அணித்தலைவராய் இரண்டு முறை வந்தாலும் சோபிக்க முடியவில்லையே என்று. இது செய்வினையா, செய்யா வினையா, ஊழ் வினையா, ஊழல் வினையா?



Monday, July 26, 2004

இலட்சியம்

முதலே
தெரியாதபோது
எதற்கும்
முடிவென்பதேது?

மழைத்துளிக்கு
மணல் முடிவு
ஆறுக்கு
கடல் முடிவு
நீருக்கு
எது முடிவு?

பிறப்பு
இறப்பு
உடலுக்கு
ஆன்மாவிற்கு
அழிவேது?

பழையவற்றைப்
பார்க்க
விரும்பவில்லை
நாளையிருப்பதை
நம்பவில்லை
இன்றுவாழ்கிறேன்
இதுநிஜம்

இன்றே
வாழ்ந்துவிடு
இருக்கும்வரை
வாழவிடு!

Sunday, July 25, 2004

எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள்

ஈழத்தில் இந்திய ராணுவக்காலம்

அன்பார்ந்த தோழியர்க்கு,

வதனா அவர்களின் பதிவினைப் படித்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் யாவர்க்கும் பொது. அதன் அடிப்படையில் அவரது படைப்பினை வரவேற்கின்றேன். கூடவே வெளியான கவிதைதான் வேதனையை வெளிப்படுத்துகிறது.

நாட்களின் நகர்வில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் இயலவில்லை
இன்னும்

இக்கவிதையைப் படித்தபின் என்னுள் பல கேள்விகள்.

எங்கேயோ இருக்கும் நார்வே, இலங்கை தேசத்தில் அமைதி ஏற்படுத்த தீவிரமாய் செயல்படுகிறது. முதன் முறை கையைச் சுட்டுக் கொண்டாலும், இந்தியா அமைதிப் பேச்சுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கும் சமயத்தில் இக்கவிதை எனது பலவீனமான பகுதியில் பலமாய் இடித்தது. காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.

ஆமாம். வதனா, உங்களுக்கு இக்கவிதையில் முழு உடன்பாடா? இதுதான் அனைத்து ஈழத்தமிழர்களின் எண்ணவோட்டமா? அப்படியென்றால் உங்கள் தேசத்தில் யார் நெருப்பள்ளிக் கொட்டியது? இந்திய ராணுவமா? உங்கள் வானத்தின் மீது இருளள்ளிப் பூசியது யார்? இந்தியாவா? விடுதலைப் புலிகள் என்றால் அவரும் ஈழத் தமிழரா? இல்லை அவர்கள் வேறா?

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்? தனது 1,200 மகன்களை காவு கொடுத்து 3,000 மகன்களை காயப்படுத்தி இந்தியத் தாய் கண்ட பலன் என்ன? தனது மண்ணிலேயே ஒரு தலைவனை/தனையனை இரத்த சகதியில் அமிழ வைத்தென்ன புண்ணியம்? தடா, பொடா இன்னும் எத்தனை "டா"க்கள் காத்துள்ளன? என்னாலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை, இன்னும்.

உடனே கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்துகிறேனென்று எண்ணாதீர். அது நான் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

நியாயமான பின்னூட்டங்களுக்கும், எதிர் பதிப்புகளுக்கும் கண்டிப்பாய் என் பக்க நியாயத்தை நிலை நிறுத்துவேன்.

வந்தியத்தேவன்.



Saturday, July 24, 2004

Scent of a Woman

21m 

உலகிலேயேகொடிய நோய் எதுவென்று கேட்டால் "தனிமை" என்றுதான் சொல்லுவேன், எப்போதோ படித்த சிறுகதையில், மகன் முதுமைப் பருவத்திலிருந்த தந்தைக்கு அனைத்து வசதிகளையும் அவரது அறையிலேயே செய்து கொடுப்பான். ஆனாலும் தந்தை முகத்தில் சந்தோஷமில்லை. காரணம் அந்த அறையே அவருக்கு சிறையானதுதான். ஹாலில் குடும்பத்துடன் தொலைக்காட்சி காண்பதிலுள்ள சுகம் அம்முதியவர்க்கு தனியே, தன்னறையில் கிட்டவில்லை.

26 வருடங்கள் ஆர்மியில் பணியாற்றி, இயல்பு வாழ்க்கையிலும் கஞ்சி போட்ட விறைப்புடன் வாழ்பவர் கர்னல் பிராங்க் (Lt. Col. Frank Slade). உற்றாரும், சுற்றாரும் ஒதுக்கி விட தனது தனிமையும், ஜாக் டேனியல் விஸ்கியுமாக வாழ்கிறார். பணியிலிருக்கும் போது நடந்த கையெறிகுண்டு விபத்தில் கர்னல் பிராங்க்கின் கண் பார்வை சுத்தமாக போய்விடுகிறது.

ஸ்காலர்ஷிப்பையே நம்பி வாழும் சார்லி, Thanksgiving விடுமுறையிலும் பகுதி நேர வேலை செய்து காசு பார்க்க வேண்டிய கட்டாயம். கர்னல் பிராங்க்கை பார்த்துக் கொண்டால் $300 தருகிறேனென, அவரது மகள் கேட்க, சார்லி சம்மதிக்கிறான்.

கர்னல் பிராங்க் ஒரு அருமையான திட்டம் வைத்திருக்கிறார். சார்லியோடு நியூயார்க் செல்வது. பிஸினஸ் வகுப்பு பயணம், உயர் ரக ஓட்டலில் தங்குவது, அருமையான மது, விலை உயர்ந்த மாது, பின்னர்...45மிமீ கைத்துப்பாக்கியால் மூளை சிதறி சாவது.

ஒரு சாதாரணக் கதைக்கு வலுவூட்டுவது கர்னல் பிராங்க்காகக் தோன்றும் அல் பாசீனோ (Al Pacino). ஹ¤ஹா என்று நீட்டி முழக்குவதும், பெண்களின் வாசனாதி திரவியத்தை தூரத்திலேயே முகர்ந்தறிந்து வளைக்கும் லாவகமும், டாங்கோ நடனமாடுவதும், இறுதிக் காட்சியில் சார்லிக்காக பள்ளியில் வாதாடுவதும் என்று பின்னியெடுத்திருக்கிறார்.

அல் பாசீனோவோடு நடிக்க வேண்டுமென்றால் நிறைய தன்னம்பிக்கை வேண்டும். சார்லியாக வரும் கிறிஸ் ஓ'டோனலிடம் (Chris O'Donnel) அது எக்கச்சக்கமாய் இருக்கிறது. நேர்மையான அப்பாவி இளைஞனாய் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

படத்தில் எனக்கு பிடித்த வசனங்களைத் தமிழ்ப்படுத்தி தர இயலாது. ஆனால் வசனங்களில் விரசம் தெரியவில்லை. மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வே தெரிகிறது.  

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது (1992) அல் பாசீனோவுக்கு கிட்டியது மிகவும் பொருத்தமானது.

புதிய பதிவுகள்

தமிழோவியத்தில் எனது படைப்புகள் வெளியாகி உள்ளன. எட்டிப் பாருங்களேன்.
அம் மெய்யப்பன்: சிறுகதை
பியானோ ஒளிர்வதும் மிளிர்வதும் - 1
பியானோ ஒளிர்வதும் மிளிர்வதும் - 2  

Tuesday, July 20, 2004

ஷியாமளன் VS. Sci Fi சேனல் (Guerilla Marketing Campaign)
 
முதல் பதிவின் பின்னூட்டத்தில் பாஸ்டன் பாலா குறிப்பிட்டது போல இந்த சர்ச்சை புஸ்வாணமாம். 3 மணி நேரம் விரயமானதுதான் மிச்சம். இதற்கு பெயர் "Guerilla Marketing Campaign".

ஒன்று மட்டும் நிச்சயம். பார்வையாளர்களை அதிகப்படுத்த சேனல் நினைத்திருந்தால் வெறுப்பையே அதிகம் சம்பாதித்திருக்குமென்பது என் கருத்து.

The Village படம் ஓடுவதற்காக ஷியாமளனின் ஐடியாவாம் இது. விஜய் விஷம் குடித்தார், நடிகை டைரக்டரோடு நெருங்கிப் பழகுகிறார் என்று படம் வெளியாகு முன்னர் கோலிவுட்டில் கிளப்பப்படும் வதந்திகளுக்கும், இதற்கும் துளியும் வித்தியாசமில்லை.

ஹாலிவுட் போனாலும், புதுச்சேரியில் பிறந்த மனோஜ் நைட் ஷியாமளன் தன் பாரம்பரியம் மறக்கவில்லை. வாழ்க !!!

Sunday, July 18, 2004

பூவுதிர் அவலம்
அக்னி ஆண்டவா
உன்
அகோரப் பசிக்கு
இளம் குருத்துக்களா?

சிறாரை
சிறைவைத்து
பறந்ததோடினராம்
ஆசிரியப் பேடிகள்

கோழையாம்
அவர்தம்மை
தீயே நீ
தின்னிருக்க வேண்டாமா?

சட்டசபை கட்டவும்
அதைத் தடுக்கவும்
கஜானா நிரப்பவுமே
நேரம் போதவில்லை
அரசியல்வாதிகட்கு

இச்சம்பவமினி
மெல்லச் சாகும்
அடுத்த மயானச்செய்தியில்
வரலாறாகும்

நீதி
கேட்போருக்கு
நிதி
கொடுப்பர்

பள்ளிப்
பாதுகாப்புக்கு
புதிய துறை
உருவாகும்

இன்ன பிற
அரசுத் துறைகள் போல
லஞ்ச லாவண்யம்
தலை விரித்தாடும்

உதவிக்கரம் நீட்டி
இறந்துபோன
தொழிலாளிக்கு
சிலை வைக்காதீர்

அவனது
இறுதி ஈரத்தை
மனித நேயம் வளர்க்க
எல்லார் மேலும் தெளியுங்கள்

எட்ட நின்று மாரடிக்கும்
இயலாமை என்னை
மெல்லக் கொல்லும்
சப்தமின்றி
 

சியாமளனின் சர்ச்சை
மனோஜ் நைட் சியாமளன், பிலடெல்ப்பியாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர். The Sixth Sense, Signs திரைப்படங்கள் மூலம் ஹாலிவுட்டை கலக்கி வருபவர். அமானுஷ்ய விஷயங்களை படமாகக் கொடுப்பதில் கில்லாடி. The village என்னும் படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரும் நேரத்தில்தான், Sci Fi என்ற TV சேனலுடன் சர்ச்சை வெடித்திருக்கிறது.
Sci Fi சேனல், சியாமளனைப் பற்றி 3 மணி நேர விவரணப் படமெடுக்க விரும்பியது. சியாமளன் சம்மதம் தெரிவிக்க கடந்த 4 மாத காலமாக அவரின் அந்தரங்க வாழ்க்கை மற்றும் திரைப்படமெடுக்கும் விதம் என்று படமெடுத்தார்கள்.
என்னவானதோ தெரியவில்லை. (மிகவும் அந்தரங்கமாக் கேள்விகள் கேட்கப்பட்டன என்று வதந்தி). சியாமளன் மேலும் ஒத்துழைப்பு தர மறுக்க, வந்தவரை படம் காட்டலாமென Sci Fi முடிவு செய்து விட்டது. The Buried Secret of M. Night Shyamalan, ஞாயிறு 8:00 PM ET ஒளிபரப்பாகிறது. சியாமளனின் பல ரகசியங்களை அவிழ்த்து விடுவோமென சேனல் மார் தட்டுகிறது.
பார்ப்போம்.
சியாமளனைப் பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக்குங்கள்.

Sunday, July 11, 2004

நிழலும் நிதர்சனமும்

சில நல்ல மனிதர்கள் (A Few Good Men)

1992'ல் வெளியான இந்த ஆங்கிலப் படத்தை நேயர்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்கள் எனத் தெரியாது. ராபர்ட் ரைனெர் இயக்கத்தில் டாம் குரூஸ், டெமி மூர் நல்லவர்களாகவும், கீபர் சதர்லேண்ட் மற்றும் ஜேக் நிக்கோல்சன் உச்சபட்ச கெட்டவர்களாகவும் நடித்து பிரமாதப்படுத்திய திரைப்படம் Few Good Men.

fewgoodmen

எனது பதிப்பு திரை விமர்சனம் இல்லை. ஆகவே சுருக்கமாய் முடித்து மேலே செல்வேன். கியூபாவிலுள்ள அதிரடிப்படையின் கமாண்டிங் ஆபீஸர் ஜேக் நிக்கோல்சன். அதிரடிப்படையினர்க்குண்டான கடுமையான கட்டுக்கோப்புக் கொண்டவர். அவரது பிரிவில் ஒரு வீரர் மர்மமமான முறையில் இறக்க, சக வீரர்கள் இருவர் மீது கொலைப்பழி விழ, இராணுவ நீதிமன்றம் (Court Marsall) கூடுகிறது. பழி விழுந்தவர் அப்பாவிகள். உண்மையில் கமாண்டிங் ஆபீஸரின் "Code Red" என்னும் எழுதப்படாத சட்டம் இறந்த வீரர் மேல் வீசப்படுகிறது. Code Red என்பது அதிரடிப்படை வீரர், இயல்பாக செய்யக்கூடிய உடற்கூறு செயல்கள் (Physical activities) செய்ய முடியாவிட்டால் தரப்படும் தண்டனையாகும். சராசரிக்கும் குறைவான திறன் கொண்ட அந்த துர்பாக்கியசாலி உணவு, நீர் மறுக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட, காவலுக்கிகிருந்த அப்பாவி வீரர்கள் அனுதாபப்பட்டு உதவுகின்றனர் (கொஞ்சம் நீர் மற்றும் உணவு தந்து...). இறுதியில் மர்மமான முறையில் Code Red வீரர் இறக்க, பழி காவலாளிகள் மீது விழுகிறது. மயிர்க்கூச்செறியும் வசனங்களுடன் (இராணுவத்தில் இருந்தவர் இன்னும் ரசிக்கலாம்), சிறந்த காட்சியமைப்புடன் நல்லவர், கெட்டவரை (வல்லவராயிருந்தும்) வெற்றி கொள்ளுமாறு படம் முடியும்.

ஒரு சிறிய காட்சி மாற்றம். ரபீந்திர சிங் பதிவில் நான் சொன்னதேதான். கண்களைக் கொஞ்சம் மூடுங்கள்.

எதிரி நாட்டினுள் சண்டைபுரிபவர் நீங்கள். போரின் பரிமாணம் முற்றிலும் மாறுபட்ட தருணம். தற்கொலைப் படை, திடீர் தாக்குதல் (Ambush) நடுவே குடிமக்கள் யார், தீவிரவாதி யார் என அடையாளம் காணும் அவகாசம் மிகக் குறைவு. அதாவது கரணம் தப்பினால் மரணம்.

வெள்ளைக் கொடியாட்டி சரணடையப் போவது போல் இடுப்பில் குண்டு கட்டி கொல்லும் கட்டத்தில், சிறியவர் பெண்கள் கூட தற்கொலைப்பிரிவின் அங்கத்தினராய் இருக்கும் காலத்தில், உங்களை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

எங்கும் கந்தகப் புகை...குண்டுகளின் சப்தம்...இறப்பவரின் ஓலம்...இறந்தவரின் பிண்டங்கள்...மரணத்தின் வாசனை...அட்ரலீன்னின் அதீத சுரப்புகள்...சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்புக் குரல் (போரை எதிர்த்து)...சண்டையிடும் நாட்டின் மக்களும் சலித்துப்போன தருணம்...

நல்லதெனக் கூற கூட ஒன்றுமே இல்லை. ஆனாலும் உங்களை எதுவும் அசைத்து விடாது. முப்படைகளின் தளபதி ஆணை கேட்டு சிலிர்த்த சிங்கங்களாச் சென்றவர் நீங்கள். தளபதி ஒரு அரசியல்வாதி. ஆயினும் மக்களின் பிரதிநிதி. இராணுவத்தில் குடியாட்சிக் கேள்விகள் கேட்க இயலாது. கடமையே கண்ணான வீரரன்றோ நீங்கள்?

உங்களின் உற்ற தோழன் கையிலிருக்கும் ஆயுதங்களும், உயிர் காக்கும் சமாச்சாரங்களுமே...

ஆமாம் என்ன இது? ஒரு உல்லாசப் பயணிபோல் காமிராவும் தெரிகிறதே? அடடே...பரவாயில்லை. இடைப்பட்ட நேரத்தில் முக்கிய தருணங்களை "சிறை" பிடிக்க நினைத்திருப்பீர்கள். தப்பில்லை. ஆனால் சிறையிலேயே சிறை (போட்டோ) பிடிக்க நினைத்தீரோ?

அதுவும் எப்படி? பாலியல் பலாத்காரம், வர்ணனைக்குட்படாத வக்கிர காட்சிகள், மானுடம் அறியாத சித்ரவதை இன்னும் பிற. மனிதனுக்குள் மிருகம் படித்திருக்கிறேன். இருப்பினும் மிருகத்தில் மிருகமாய்...அதுவும் நீங்களா? இதென்ன தேசப்பற்றை 50 ரூபாய் வாசனாதிப் பொருளும், 5 ரூபாய் மல்லிகைப் பூவிலும் காட்டிவிட்டீரே? இத்துனை மலிவாய்?

கணிணியில் கைவிரல் நர்த்தனமிட கண்டபடி உங்களைப் பற்றி எழுதிவிட்டாலும் ஒரு கணம் உங்களோடு ஐக்கியமாகிறேன். "சொல்வதைச் செய்" உங்கள் கொள்கை அல்லவா?

திரைப்படத்தில் ஜேக் நிக்கோல்சன் கூட ஒத்தூதினார். கட்டளையை கடமையாய் நிறைவேற்ற வேண்டுமென்று...மேலும் "வழக்கறிஞராய் (ஏனைய எழுத்தாளர் போல) கேள்வி கேட்பதென்பதெளிது. நீங்கள் நானளிக்கும் சுதந்திரப் போர்வையில் உல்லாசமாய் உறங்குபவர்கள். இப்போர்வையை எப்படி வழங்குகிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள்."

விசிலடிக்கும் வசனங்களில் ஒன்று.

மேலதிகாரி (Superior Officer) சொல்லாமல் ஓரணுவும் அசையாது. உங்களோடு ஒத்துப் போகிறேன். உங்களில் "மனிதப் போர்வையில் மிருகத்தில் மிருகம்" உண்டு. ஆமோதிக்கிறேன். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒன்றா? இடிக்கிறது. இன்று நீங்கள் மட்டும் இராணுவ விசாரணையில்...மேலதிகாரிகளோ?

நீதிக்கு கண்ணுண்டு. பார்வையில்லையோ? எய்தவர் இருக்க அம்பை நோவரோ? தளபதி மற்றும் பல அரசியல்வாதிகள் நீங்கள் தந்த சுதந்திரப் போர்வையில் உல்லாசமாய் இருக்க Few Good Men போலவே இன்று இராணுவ நீதிமன்றத்தில் உங்கள் தோல் உரிக்கப்படுகிறது.

காட்சி மாற்றம். Few Good Men படத்தின் உச்சகாட்சி (கிளைமாக்ஸ்). பழிக்குட்பட்ட வீரர்கள் கொலை மற்றும் கொலைக்கான திட்டமிடல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலையாகின்றனர். ஆனால் இராணுவ விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக "Dismissed with Disgrace" செய்யப்படுகின்றனர்.

மரண தண்டனை எதிர் நோக்கிய பழிதூற்றப்பட்ட வீரர்கள் சந்தோஷக் களியாட்டமாடுவதாய் படம் முடியவில்லை. வீரர்களில் ஒருவன் உரிமைக் கேள்வி கேட்கிறான்.

"Dismissed with Disgrace என்றால் என்ன? மேலதிகாரி சொன்னதைத்தானே செய்தேன்?"
இரண்டாமவன் பதிலளிக்கிறான்,"இறந்தவனின் உரிமையை குறைந்தபட்சம் காப்பாற்ற நாம் போராடியிருக்கவேண்டும்"

இராணுவத்தில் குடியாட்சியா? இராணுவ உடையில் (பதிவு முடியும் வரையில்) இருந்த உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

Few Good Men நிழல். Abu Ghraib scandal நிதர்சனம்.

Tuesday, July 06, 2004

டாலர் தேசம் - விமர்சனம் பகுதி 2

முதல் ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை சுமார் 5,50,000. கூட்டு நாடுகளின் பங்களிப்பு சுமார் 1,60,000. பல உலக நாடுகளின் அங்கீகாரத்துடன் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட போரிது.

இப்போரில் குவைத்திலிருந்து ஈராக்கியரை அப்புறப்படுத்துவதே முதல் நோக்கமாயிருந்தது. ஈராக்கியர் இந்த யுத்ததிலும் வீரமாகப் போரிடவில்லை என்பதே என் கணிப்பு. குவைத்திலிருந்து பாலைவனத்தில் புறமுதுகாட்டி ஓடிய ஈராக்கிய படையினரை துவம்சம் செய்துவிட்டது அமெரிக்காவும் கூட்டுப் படைகளும். ஈராக்கின் சேதாரக் கணக்கு வேண்டுமா? சுமார் 1,00,000 பேர் மரணம்; 3,00,000 காயம்; 1,50,000 பேர் படையை விட்டு ஓட்டம்; 60,000 பேர் சிறைபிடிப்பு. இழந்த ராணுவ தளவாடங்களோ கணக்கிலடங்காதது.

இரண்டாம் ஈராக் யுத்தமோ சதாம் உசேன் மண்ணில் பிரதானமாய் நடந்தது. பிரான்ஸ¤ம், ஜெர்மனியும் இந்தப் போரை வன்மையாய் கண்டித்ததுடன், தனது படைகளையோ, இராணுவ தளவாடங்களையோ அனுப்ப மறுத்து விட்டது. முந்தைய போரில் 18,000 படையினரையும், 60 போர் விமானங்களும் இன்னும் பல கப்பல்கள், டாங்குகளுடன் பிரான்ஸ் களம் புகுந்தது. ஜெர்மனி தன் பங்குக்கு 200 ஆர்மி வீரர்கள், 500 நேவி வீரார்கள், பல போர்விமானங்களுடன் குஸ்தி போட்டது.

மொத்தம் 49 நாடுகள் இரண்டாம் போரை ஆதரிப்பதாய் புஷ் பீற்றிக்கொண்டாலும், நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் சிரிப்புதான் பீறிடும். மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, சாலமன் தீவுகள், டோங்கா இவையெல்லாம் அந்த ஆதரிப்பு லிஸ்டில் அடங்கும்.

இம்முறை அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை சுமார் 3,00,000. இங்கிலாந்து 26,000 பேரையும், ஆஸ்திரேலியா 2,000 பேரையும், கனடா 25 பேரையும், போலந்து 200 பேரையும் அனுப்பி வைத்தது. ஆக படையினர் எண்ணிக்கை மற்றும் படைகலன்கள் கணக்கை ஏறிட்டுப் பார்த்தால் முதல் போரைவிட இரண்டாம் போர் சரி பாதி அல்லது அதற்கும் குறைவெனலாம். எனவே வெறும் எண்ணிக்கையினால் ஈராக் வீரர்கள் பயந்தனர் என்று சொல்ல முடியாது.

முதல் போரில் நேர்ந்த உயிர்ப்பலியாலேற்பட்ட கிலி, சதாம் தலைமறைவு, கடந்த 10 வருடங்களில் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றம் (தகவல் தொடர்பு, ஏவுகணை இன்னும் பல) இவைதான் ஈராக் எளிதாய் வீழ்ந்ததற்கு காரணமெனலாம்.

இவ்விரண்டு போரிலும் ஈராக் ரொம்ப சுலமாகப் அமெரிக்காவால் புரட்டியடிக்கப்பட்டது. கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவைப் புரட்டியது போல. என்ன ஒரு முக்கிய வித்தியாசம் முதல் போரில் சதாம் ஸ்கட் ஏவுகணைகள் வீசினார். இம்முறை செய்யவில்லை. ஒருவேளை உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா தாக்குதல் தொடுக்காது என்ற அல்ப ஆசை வந்ததால் ஸ்கட்டை தயார் செய்து வைக்கவில்லையோ என்னமோ?

Monday, July 05, 2004

டாலர் தேசம் - விமர்சனம் பகுதி 1

எழுத்தாளர் திரு பா. ராகவன் அவர்கள் டாலர் தேசம் என்ற மெகா தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வந்தார். அமெரிக்க சரித்திரத்தை மிகவும் சுவாரஸிமாய் எழுதி வந்ததை யாரும் மறுக்க முடியாது. கீழ்க்கண்ட விமர்சனம் அவரது ஈராக் யுத்தம் பற்றி மட்டுமே.

அத்தியாயம் - 113'ல் ஈராக் ஏன் யுத்தத்தில் சீக்கிரமாய்த் தோற்றுப் போனது பற்றி சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.முதலாவது மற்றும் இரண்டாவது ஈராக் யுத்தங்களை ஆர்வத்துடன் கூர்ந்து நோக்கியவன் என்ற முறையிலும், 7 வருடங்கள் கப்பல் படையில் பணியாற்றிய அனுபவத்துடனும் என் கருத்துக்களை இங்கே பதிகிறேன்.

ஈராக் யுத்தத்தில் ஏன் தோற்றது என்பதற்கான இரண்டாவது காரணமாய் அமெரிக்க கூட்டுப் ராணுவப் படையில் இம்முறை அமெரிக்காவும், பிரிட்டனும் மட்டுமில்லை. இன்னும் ஏராளமான தேசங்கள் இணைந்து கொண்டிருந்தன. ஆனானப்பட்ட ஜப்பானே ஒரு படையை அனுப்பத் தயார் என்று அறிவித்ததை அவர்கள் (ஈராக் ராணுவத்தினர்) எதிர்பார்க்கவில்லை...என்று போகிறது தொடர். இது என்னைப் பொறுத்தவரை திரு. பாராவின் சொந்தக் கருத்தாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தவிர நடைமுறை கணிதம் வேறு விதமாய் இருக்கிறது.

முதலாவது ஈராக் யுத்தத்தில், அமெரிக்காவைச் சேர்த்து மொத்தம் 34 நாடுகள் பங்கு கொண்டன. இவற்றுள் தனது படைகளை அனுப்பிய நாடுகள் 26. ஜப்பான் மருத்துவக் குழு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அறிக்கைப்படி முதலாம் "பிரவர்த்தனம் பாலைவனப் புயல்" (Operation Desert Storm), செலவு சுமார் US $61 பில்லியன். ஜப்பான் சுமார் US $16 பில்லியனை அமெரிக்காவுக்கு கொடுத்தது. இதை காசோலை சாதுர்யம்/ காசோலை ராஜ தந்திரம் (checkbook diplomacy) என்று உலக நாடுகள் ஏளனமாய் வர்ணித்தன.

அரசியல் சாசனப்படி (Pacifist Constitution), இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பன்னாட்டு வேறுபாடுகளைக் களைய, வேற்று நாடுகளுக்கு தனது படைகளை ஜப்பான் அனுப்ப முடியாது. இருப்பினும் 11 செப்டம்பர் அமெரிக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஜப்பானின் பிரதம மந்திரி ஜுனிஷிரோ கொஜுமி (Junichiro Koizumi) ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அதன் பின்னர் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக நடத்தும் யுத்தத்தில் ஜப்பான் பங்கு கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு மாறுதல் நிகழ்ந்தது.

ஆரம்பம் முதலே இரண்டாவது ஈராக் யுத்தத்தில் ஜப்பானின் நிலைப்பாடு குழப்பமாகவே இருந்து வந்தது. 80% ஜப்பானிய மக்கள் யுத்ததில் தங்கள் நாடு பங்கு கொள்வதை விரும்பவில்லை. ஆனால் அண்டை நாடான வட கொரியா ஜப்பானுக்கு எதிராக காட்டமான கருத்துகளை அள்ளி வீசிய போது, கொஜுமி வேறு வழியின்றி அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். நாளை வட கொரியா, ஜப்பானைத் தாக்கினால் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவி வேண்டுமே? சட்ட திருத்தமும் கை கொடுக்க கொஜுமி இந்த அரசியல் சூதாட்டத்தை அரங்கேற்றினார். அப்படியும் போர்முனைக்கு அனுப்பப்பட்ட ஜப்பானிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 1000 தான் இருக்கும்.

தொடருவேன்.

Wednesday, June 30, 2004

சினிமாவும் கலாச்சாரமும்

poli
மர்டர்
வெகு நாட்களுக்குப் பின் "மர்டர்" என்னும் இந்திப் படம் பார்த்தேன். உடனே கெட்ட பையன் என்று கூறி விடாதீர். மகேஷ் பட்டின் தயாரிப்பில், அனுராக் பாசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் இது. பாங்காக்கில் வாழும் கல்யாணமான இந்தியப் பெண், தனது முன்னாள் காதலனுடன் (சூழ்நிலையால்?) இணைய (புனைய?) பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மொத்தத்தில் "மறுபடியும்" படத்தின் மகடூ முன்னிலை தான் "மர்டர்".

இப்படத்தின் விமர்சனங்கள் ஆஹா...ஓஹோ ரகம். போட்ட காசு வசூலென ரசிகர்கள் புளங்கிதமடைந்தனர். புரட்சிக்கதையெனெ பலரும் புகழாரம் சூட்டினர்.

உண்மையில் "மர்டர்" இதற்கெல்லாம் தகுதியானதுதானா?

ஆராயுமுன் ஒரு கொசுறு செய்தி. ஆட்ரியன் லைன் இயக்கத்தில் வெளியான படம் "அன்பெய்த்புல்" (Unfaithful). ரிச்சர்ட் கேர் மற்றும் டயான் லேன் முன்னணி கதாபாத்திரங்கள். கதாநாயகன் சொந்தமான (குண்டு துளைக்கா) கார் கம்பெனி வைத்து இரவு பகலாய் உழைப்பவர். குடும்பத்தின் மீது தணியாத பாசமுள்ள சராசரி மனிதன். கதாநாயகி தனது கணவன், குழந்தை, அலுவல் பணி என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்க, புயலொன்று (உண்மையான) குறுக்கிடுகிறது. புயலில் கடையில் வாங்கிய பொருட்கள் சாலையில் சிதற, அழகான வாலிபன் குறுக்கிடுகிறான். புயலினால் ஏற்பட்ட முழங்கால் சிராய்ப்பிற்கு மருந்து போடும் சாக்கில் "ரகஸிய ஸ்னேகிதம்" ஆரம்பிக்கிறது. ஆட்ரியன் தனக்கே உரிய பாணியில் ஸ்னேகித்தை "உரித்து" காட்டியிருப்பார் இப்படத்தில்.

இப்போது பளிச்சென்று உங்களுக்கு புரிந்திருக்குமே? மர்டர் என்பது அன்பெய்த்புலின் இந்திய பதிப்பென்று. அங்கே ஆட்ரியன் இங்கே அனுராக். அங்கே டயான். இங்கே மல்லிகா (தமிழில்லை. முழுப் பெயர் மல்லிகா ஷ்ரெவத்).

ஆட்ரியனின் முந்தைய படங்களான பேடல் அட்ராக்ஷன் (Fatal Attaction) மற்றும் இண்டீஸெண்ட் ப்ரொப்போஸல் (Indecent Proposal) மாதிரியல்லாமல் அன்பெய்த்புல் சிறிதாய் வித்தியாசப்பட்ட படம். பேடல் அட்ராக்ஷனில் கதாநாயகன் (மைக்கேல் டக்லஸ்) ஒரு பெண்ணுடன் (கிளென் க்லோஸ்) ஸ்னேகிதம் ஏற்பட இல்லறத்தில் வீசும் புயல் பற்றியது. இண்டீஸெண்ட் ப்ரொப்போஸலில் கதாநாயகி (டெமி மூர்), கதாநாயகன் (வுட்டி ஹேரல்சன்) இருவருக்கும் கனவு இல்லம் கட்ட ஆசை. ஆனால் பணமில்லை. லாஸ் வேகாஸில் சூதாட்டம் ஆடி பணம் சேர்க்கச் செல்லும் போது ஒரு கோடீஸ்வரர் (வில்லன்?) குறுக்கிட்டு, வுட்டியிடம், "ஒரு நாள் உன் மனைவியை கொடு. ஒரு மில்லியன் டாலர் தருகிறேன்" என்று பேரம் பேச, கதை சூடு (வேறு விதமாய்) பிடிக்கிறது. ஆக முதல் கதையில் கணவனும், இரண்டாவது கதையில் கணவன்,மனைவியும் தடுமாற, மிஞ்சியிருப்பது மனைவிதானே...அதுதான் அன்பெய்த்புல். [நான் ஆட்ரியனின் லொலிடா (Lolita) மற்றும் நைன் அண்டு ஹாப் வீக்ஸ் (Nine 1/2 Weeks) பார்க்கவில்லை]

தனது பதினோரு வருட சந்தோஷ வாழ்க்கையை டயான் அன்பெய்த்புல்லில் ஏன் பறி கொடுக்க விரும்பினாள் என்பது கேள்விக்குறி. எனக்கென்னவோ ஆட்ரியனை பாராட்டத் தோன்றுகிறது. பெண்களும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆண்களைப் போல் செயல்படுகிறார்கள் என்ற கருத்தை தைரியமாய் சொன்னமைக்கு.

asal
அன்பெய்த்புல்
அனுராக், ஆட்ரியனைப் போல சூடான காட்சிகள் அமைக்கத் தவறவில்லை. ஒருமுறை இயக்குனர் பாக்கியராஜ் சொன்னார். ஆபாசமென்பது எல்லோர் முன்பு ஆரத் தழுவுவதோ, முத்தமிடுவதோ இல்லை. மூடிய போர்வையில், கட்டிலின் சப்தம் காட்டினால் அதுவே ஆபாசமென்று. ஆங்கிலத்தில் உள்ளங்கை நெல்லிக்கனியான சமாச்சாரத்தை, படு ஆபாசமாய் அனுராக் சித்தரிக்கிறார்.

டயானுக்கு நமது கலாச்சாரப்படி தடம் மாற காரணம் ஏதுமில்லை. ஆனால் அனுராக்கின் இந்தியர் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? நாயகியின் செயலை நியாயப்படுத்த வேண்டுமே? ஆஹா...இருக்கவே இருக்கிறான் கணவன். தன்னுடன் தரமான நேரம் (Quality Time) கழிப்பதில்லை. வேலையிலேயே முழுக் கவனம். தனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. இத்யாதி. இத்யாதி. மாஜி காதலனோ மல்லிகா மீது பைத்தியமாய் அலைபவன். (ஆமாம் காதலில் அனைவரும் அப்படித்தானே இருப்பார்கள்?) காரணங்கள் போதாதா? மல்லிகா டயான் ஆகிறாள். மேலும் நம்மை மல்லிகாவுடன் உடன் பட வைக்க இயக்குநர் வாசு போல குடும்ப சென்டிமெண்ட் வேறு. மல்லிகா தனது அக்கா இறந்தபின் குழந்தையுடனிருந்த கதாநாயகனை மணக்கிறாளாம். தியாகமாம். த்சோ... த்சொ...

இடைவேளையுடன் முடிந்த ஆங்கில கதையை, வணக்கம் வரை வளர்ந்ததற்கு வேண்டுமானால் அனுராக்கை பாராட்டலாம். ஆங்கிலத்தில் அருமையாய் கையாளப்பட்ட கணவன்-கள்ளக் காதலன் சந்திப்பு, விவ(கா)ரம் தெரிந்தவுடன் கணவன் மனைவியைக் கையாளும் அணுகுமுறையில் ஆட்ரியன் உண்மையிலேயே ஜொலிக்கிறார். அனுராக்கோ விரசத்தின் எல்லையைத் தொடுகிறார். மர்டர் நாயகனின் முகத்திலே தன் வீட்டில் மல்லிகா விட்டுச் சென்ற ஜட்டியை வீசுகிறான் மாஜி காதலன். மேலும் மனைவியை நேசிக்கத் தெரியாதவன் என்ற ஏச்சு வேறு. என்னே புரட்சி?

ஆட்ரியனின் நாயகன் கள்ளக் காதலனைக் கொன்றுவிட்டு, போலீஸ் மோப்பம் பிடிக்கு முன்னர் குடும்பத்துடன் மெக்ஸிகோ தப்பிச் செல்வதாய் அன்பெய்த்புல் முடிகிறது. அனுராக்கோ கள்ளக் காதலனை கொலை செய்ததாக பாங்காக் போலீஸ் மல்லிகாவை கைது செய்ய, கணவனோ தான் கொலை செய்ததாக அதே நேரத்தில் சரணடைய இடைவேளை விடுகிறார். அச்சமயம் பார்ப்போரை படம் திடுக்கிடச் செய்வதென்னமோ நிஜம்தான். அதற்குப் பிறகு ஏண்டா பார்த்தோம் என்று பிளேடு போடுவதும் நிஜம்தான். கதை தெரிந்த ரசிகர்கள் எழுந்து சென்று விடுவது உத்தமம். ஏனென்றால் அதிக ஸீன்கள் (?) இல்லை. செத்தவன் பிழைப்பதென்பது இந்திய சினிமாக்களில் செய்யப்பட்ட அறுதப் பழைய புரட்சி. அனுராக் அதையும் விட்டு வைக்கவில்லை. காதலனின் கொலை சஸ்பென்ஸ் உடையும்போது மல்லிகை கதம்பமாய் காதில் மணக்கிறது.

ஆட்ரியன் ஒரு மென்மையான (ஆங்கில அளவுகோலில் !) நீலப் படம் எடுப்பவர். அன்பெய்த்புல்லில் அதை மீண்டும் நிரூபித்தாலும், மற்ற படங்கள் போலில்லாமல் கதையாழத்தில் (ரொம்பத் தேவை?) கோட்டை விட்டார். அனுராக்கோ புரட்சி என்ற பெயரில் கள்ளப்புணர்ச்சியை நியாயப்படுத்த முயன்றுள்ளார். இதைவிட கோலிவுட்டில் வெளியாகும் மலிவான மலையாளப் படங்கள் எவ்வளவோ மேல். புரட்சிக் கருத்துகள் இல்லாததால். அப்படியே இருந்தாலும் யார் கண்டுகொண்டார்கள்?

மொத்தத்தில் மர்டர் ஒரு கலாசாரக் கொலை.

Friday, June 25, 2004

தேடல்

முகம் தெரியாத
உன்
முகவரியை
எத்தனை நாள்
தேடுவது?

தொலைத்தவரும்
கிடைக்கப் பெறாதவரும்
தேடுகின்றனர்
நானோ என்னையே
தொலைக்க
உன்னைத் தேடுகின்றேன்

இது
வாழ்க்கையைத் தோற்ற
ஞானியின் தேடலா?
வார்த்தையைத் தொலைத்த
கவிஞனின் தேடலா?
இல்லை
தொட்டில் குழந்தை
தொட்டிச் செடியின்
சுதந்திரத் தேடலா?

தெரியவில்லை
இருப்பினும்
தேடுகிறேன்

உனது தேடலில்
ஒவ்வொரு நாளும்
ஒளியாண்டாய் நகர
நாட்காட்டிதான் பாவம்
நாளும் இளைக்கிறது

இந்த மூச்சுக்காற்று
உடலைத் தொலைக்குமுன்
முகம் காட்டிவிடு
இதயத்தின்
இறுதித்துடிப்பாவது
உன் பெயராய்
இருக்கட்டும்
வெள்ளை உள்ளம் - பகுதி 4

"சுகன்யா, நான் குமார் பேசுறேன்"

"சொல்லுங்க"

"உங்களோடு கொஞ்சம் தனியா பேச வேண்டும்"

"எங்கே சந்திக்கலாம்"

குரலில் சிறு பதட்டம் கூட இல்லை. இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல. "ஹோட்டல் புளூ நைல், அரை மணி நேரத்தில்"

"நோ ப்ராப்ளம்"

உணவுக்கான ஆர்டர் கொடுத்தபின் எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பினான். ஹாய், ஹலோ என்று உதட்டளவில் பேசித்தான் பழக்கம். "காலையில் நீங்க கேட்டதைப் பத்தி..."

"என்ன முடிவு எடுத்தீர்கள்?"

முடிவு கட்டி விடலாமெனப் பார்த்தால், முடிவு எடுக்கச் சொல்கிறாளே? விமலாவின் முகம் மின்னிச் சென்றது. நீண்ட பெருமூச்சுடன்,"முதல்ல நீங்க என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்" விலாவாரியாக சொல்லி முடித்தான்.

உணவு வந்தது. "நீங்க சொல்லியது அனைத்தும் எனக்கு முன்பே தெரியும்"

அம்மா சொல்லியிருப்பாளோ? ஒருவேளை நடப்பதில் அவளுக்கும் பங்குண்டோ?

"தெரிஞ்ச பின்னால் அனுதாபம் வந்திருக்க வேண்டுமே? எனக்கு அடுத்தவங்களோட அனுதாபம் பிடிக்காது. தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று என் கதையை உன்னிடம் சொல்ல வேண்டியதாகிவிட்டது. கண்டிப்பாய் அனுதாபம் தேடியல்ல"

"ப்ச்...அனுதாபம்னா உச் கொட்டிவிட்டு போயிருக்கலாம்தான். குமார்...உறவுகள் மலரவோ, கருகவோ உணர்ச்சிகளும் ஒரு காரணம். அது கோபமோ, சந்தோஷமோ, வருத்தமோ, அனுதாபமோ வாக இருக்கலாம். பேச்சுக்கு சொல்றேன். நீங்க அழகாய் இருக்கீங்க. கை நிறைய சம்பாதிக்கிறீங்க அதனால்தான் காதல் வந்ததுன்னு சொன்னால் நம்புவீர்களா?"

"குழப்புறே சுகன்யா"

"இல்லை. நீங்களே குழப்பிக் கொள்றீங்க. ஆமாம் நீங்க ஏன் மறுமணம் செய்துகொள்ளவில்லை?"

"அதான் சொன்னேனே...விமலாவோட நான் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்"

"என்னோட ஈர்ப்புக்கு இதுவும் காரணம்னு வச்சுக்கங்களேன். விமலா மேல நீங்க இன்னும் வைத்திருக்கும் காதல். தனது உணர்வுகளை மரத்து போகவைத்து, குழந்தை வளர்ப்பின் சங்கடங்களை சமாளித்து...காதல்னா என்ன குமார்? பரஸ்பரம் அன்பு செய்தல், பகிர்தல், விட்டுக் கொடுத்தல்...இன்று உங்களோட சுக துக்கங்களை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது தவறா?"

இவள் ஷணத்தில் முடிவெடுத்தது போல் தோன்றவில்லை. நெற்றி சுருக்கி நிறைய யோசித்தான்.

"அப்படி உங்களுக்கு இதில் விருப்பமில்லையென்றால் பரவாயில்லை. என்ன ஆச்சர்யமாயிருக்கா? காதல் விளக்கத்தின் மூன்றாம் பகுதி பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல்தானே. என்னோட அன்பை மறுதலித்த காதலர்க்காக என் திருமணத்தை விட்டுக் கொடுக்கிறேன். எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை. காதல்ங்ற பயணத்தில் திருமணம் ஒரு ஸ்டேஜ். ஆனா கடைசி ஸ்டேஜ் அல்ல. காதலுக்கு முற்றுப் புள்ளி கிடையாது. " சற்றே ஆசுவாசப் படுத்தியபின் தொடர்ந்தாள். "ஆனா ஒன்று மட்டும் சொல்வேன். நீங்க மனைவி மீதுள்ள காதலால் வாழ்வது மாதிரி நானும் வாழ்வேன் உங்கள் நினைவுகளை சுமந்தபடி. உள்ளத்தில் காதலனை இழந்த விதவையாய்...என்றாவது எனது காதலை நீங்கள் அங்கீகரிப்பதாயிருந்தால் அழைப்பு அனுப்புங்கள். அதுவரை காத்திருப்பேன்...வெள்ளை உள்ளத்துடன்..."
வெள்ளை உள்ளம் - பகுதி 3

அம்மாவின் அண்டை வீட்டு சிநேகிதம் விபரீதமாகிவிட்டதோ?

"நேத்து சாயங்காலம் திடீர்னு விக்னேஷ் நிறுத்தாம அழுதப்போ சுகன்யாதான் ஆட்டோவப் புடிச்சு, ஆஸ்பத்திரி கூட்டிப் போய், டாக்டரிடம் பேசி...ஐயோ சாமி...எனக்கு கை காலு ஓடல தம்பி...அவதான்...கடவுளா வந்தாப்பா", என்று அம்மா சொன்ன போது இயல்பான மனிதத்தன்மைக்கு மனமாற வாழ்த்தினேன்.

ஒரு வேளை இது பச்சாதாபமோ? எண்ணங்கள் அலை மோதியது. விக்னேஷின் அழுகுரல் குமாரை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. சமைலறையிலிருந்து ஓடிவந்த அம்மா பிரிஜ்ஜிலிருந்து பால் புட்டியெடுத்து வீதியில் போகும் வாகனங்களைக் காட்டியபடி புகட்ட குமார் புதைந்திருந்த நினைவுகளிலிருந்து மீண்டான்.

கொஞ்ச நேரத்தில் விக்னேஷ் உறங்கிப் போனான். திடீரென்று குமாருக்கு அந்த ஐடியா முளைத்தது. நாம் ஏன் சுகன்யாவுடன் பேசிப்பார்க்க கூடாது? காலையில் காரை ஸ்டார்ட் செய்யும் போது சுகன்யாவின் ஒற்றை வரி கேட்டவுடன் பேசியிருக்க வேண்டும். மனதுக்குள்ளே திட்டிக் கொண்டான்.

"அம்மா நான் மறுபடி ஆபீஸ் போறேன். லஞ்ச் அங்கேயே பாத்துக்கறேன்"

"தலைவலி எப்படி இருக்குப்பா?"

"சரியாயிடுச்சிம்மா...போயிட்டு வரேன் "

ஆபீஸில் நுழைந்த குமாரை வினோதமாய் ஏறிட்டாள் கவிதா. கவனியாமல் தனது அறையில் நுழைந்தான் குமார். டெலிபொன் டைரெக்டரியில் துழாவி சுகன்யாவின் ஆபீஸை டயல் செய்ய முதல் முறையிலேயே தொடர்பு கிட்டியது.


"சுகன்யாவோட பேசணும்"

இரண்டு நிமிட இசைக்குப்பின் சுகன்யா ஹலோ சொன்னாள்.
வெள்ளை உள்ளம் - பகுதி 2

அம்மா கொடுத்த காபியைப் பருகியபடி தனது முன்னாள் மனைவியின் போட்டோவை ஏறிட்டான் குமார். நினைவுகள் பின்னோக்கி ஓடின. விமலா...விமலா...விமலா...உள்ளம் விக்கித்தது.

அப்பப்பா...நெஞ்சமெலாம் நீக்கமற வியாபித்த விமலா. எங்கும் விமலா. எதிலும் விமலா. என்ன மாயம் செய்தாயடி? கல்யாணமான முதல் வருடம் ஓடியதே தெரியவில்லை. விக்னேஷ் என்ற புது வசந்தம் சேர்ந்தது. எங்கள் சந்தோஷம் கடவுளுக்கும் பொறுக்க முடியவில்லை போலிருக்கிறது.

வழக்கம் போல் ப்ரியமானவளிடம் விடை பெற்று அலுவலகம் சென்று அரைமணி நேரம் கூட ஆகவில்லை. இடியாய் வந்தது செய்தி. பக்கத்துத் தெருவிலிருந்த மார்கெட்டில் காய்கறி வாங்கி வரும் வழியில் தண்ணீர் லாரியொன்று எமனாய் மாறி தவிக்கவிட்ட செய்தி.

ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். இதைப் பொய்க்கணக்காக்கிய விமலாவை போஸ்ட்மார்ட்டம் முடித்து பொட்டலமாய் பார்த்தபோது அதிர்ச்சியில் அழக்கூட தோன்றவில்லை. விமலாவின் முகம் அப்போதும் சிரிப்பது போல்தான் தோன்றியது.

அம்மா சொன்னாள்,"வாய் விட்டு அழுதுடு தம்பி".

விமலாவின் காலைப் பார்த்தேன். ஒரு கொலுசு காணவில்லை. காது வலித்தது. என் தேவதையைப் பறித்த காலன் என்னும் கடவுளைச் சபித்தேன். முழுதாய் மூன்று வருடம் கூட முடியவில்லை. வசித்த இல்லம் விமலாவை மறுபடி மறுபடி ஞாபகப்படுத்த வீடே கசந்தது. இதுதான் விதியா?

சென்னையிலிருந்து பெங்களூர் குடி பெயர்ந்தான். அலுவலகம், வீடு, அம்மா, விக்னேஷ் என்று தனது உலகத்தை சுருக்கிக் கொண்டான்.

"தம்பி ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

இப்படி பலமுறை சொன்ன அம்மாவை அக்னிப்பார்வையால் அமைதிப்படுத்தினான். ஹீம்...விமலா இடத்தில் இன்னொருத்தியா? சே...நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆனால் இன்று???
வெள்ளை உள்ளம் - பகுதி 1

"உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்", என ஒற்றை வரியில் பக்கத்து வீட்டு சுகன்யா சொல்ல மூர்ச்சையாகாத குறையாய் குமார் விழித்தான். இளம் பெண்ணின் மனதைக் கலைத்து விட்டாய் பாவியெனெ உள்மனம் லேசாய் குத்தியது.

அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. சாமகாலையில் ஒலிக்கும் ஆலய மணி போல அந்த ஒற்றை வரி மட்டும் மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. தேவையின்றி சுகன்யாவை சஞ்சலப்படுத்தி விட்டேனா?

தான் உள்ளே வந்ததைக் கூட கவனியாத குமாரை வியப்புடன் கவிதா ஏறிட்டாள். கவிதா குமாரின் அந்தரங்க உதவியாளர்.

"என்ன குமார். டல்லாயிருக்கீங்க?"

திடுக்கிட்டு நிமிர்ந்த குமார், "சாரி கவிதா. ஏதோ சிந்தனை. இன்றைய ப்ரொக்ராம் எல்லாம் கேன்செல் செய்துடு ப்ளீஸ். எனக்கு மனசு சரியில்லை. வீட்டிற்கு போகிறேன்" என்றான்.கவிதா குழப்பமுடன் தலையாட்டினாள்.

காரில் குமார் வீடு செல்லுமுன் ஆயிரம் சிந்தனைகள் அலை மோதின. சுகன்யாவின் வயது 24 இருக்கலாம். முது நிலை பட்டதாரி. வீட்டிற்கு ஒரே பெண். உள்ளூரிலேயே கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை. மிஞ்சிப் போனால் குமாருடன் இரண்டு வருடப் பழக்கம்.

வழக்கத்திற்கு மாறாய் காலையிலேயே வீடு திரும்பிய மகனை கவலையுடன் நோக்கினாள் காவேரி. "என்னப்பா உடம்புக்கு சுகமில்லையா?"

"ஒண்ணுமில்லையம்மா லேசா தலைவலி. அதான்"

"சூடா காபி ஒண்ணு தரட்டுமா? தலைவலி பறந்துடும் தம்பி"

"சரிம்மா". காப்பி அவசியம் தேவைப்பட்டது.

ஹாலில் சரிந்த குமாருக்கு எதிரே மாலையிடப்பட்ட விமலா போட்டோ, "என்னங்க அவ்வளவுதானா?", என்று சிரிப்பது போல் பட்டது.

Thursday, June 24, 2004

கானல் கனவு

இருட்டறையில்
அகல்விளக்கு
இருளைக்
கொன்றதாய்
இறுமாப்பு

அமைதியாய்
அதனடியே
ஆடியது
நிழல்
சந்தேகம்

ஆமாம்
இதயத்தை
இறுக்கமாகத்தானே
வைத்தேன்
விருட்சமாய்
உன்
நினைவுகள்
வெடித்த
இதயப் பாறை
ஒரு வழியாக நானும் இணையத்தில் புது வீடு கட்டிவிட்டேன். எனது சரித்திரப் பதிவுகளுக்கு நிறைய படங்கள் தேவைப்படுகிறது. படங்கள் bandwidth காரணமாக நேயர்கள் பார்க்க முடியவில்லை. பிரச்சினைகள் தவிர்க்க புது மனை புகுந்துவிட்டேன். வந்தியத்தேவன் தொடர்ந்து இதே சுட்டியிலும் வலம் வருவான்.

நேரம் கிட்டினால் புது இல்லத்தை எட்டிப் பாருங்களேன்.
அன்புடன்,
வந்தியத்தேவன்.
06/24/2004.
அமாவாசை

கடன் வாங்கியே
காலம் தள்ளும்
சுந்தர நிலவின்
சுயரூபம் தெரிந்தது

சூரிய அழகிருந்தும்
கடன் தரமறுக்கும்
கருமி நட்சத்திரங்கள்
கண் சிமிட்டின

காணாமல் போன
காதல் நிலவினை
கண்டுபிடிக்கும் நோக்குடன்
வெண்மேகக் கூட்டங்கள்

அடடே...
அமாவாசை
அழகுதான் என்
காதலியைப் போலவே

Friday, June 18, 2004

நீ இறந்தால் தீபாவளி

ரா --- ரபீந்திர சிங்


இவன் 20 வருடங்களாக இந்தியாவின் உளவு நிறுவனமான ரா'வில் (Research Analysis Wing) பணியாற்றி, இந்தியாவையே உளவு பார்த்த டபுள் ஏஜெண்ட். அமரிக்க உளவு நிறுவனமான CIA'வின் கையாளாய் இருந்து வருபவன். ஜூனியர் விகடனிலும், ஹிந்துவிலும் இவனைப் பற்றி பத்தி பத்தியாகப் பதிக்கிறார்கள்.

நினைக்கவே நெஞ்சம் கூசுகிறது. ரா'வில் இணைச் செயளாளர் அந்தஸ்து வரை வளர்ந்த இவன் ஒரு முன்னாள் இராணுவ வீரன். மேஜராய் இருந்த போது புளூ ஸ்டார் ஆபரேஷனில் கலந்து கொண்டவன். கப்பற்படையில் லெப்டினென்ட்டாய் பணியாற்றிய நான் இதைப் படித்த போது குன்றி போய்விட்டேன். எப்படி இவனால் இத்தகைய பாதகச் செயல் செய்ய முடிகிறது?

தேசப் பற்று என்பது தாய் பக்தியைப் போன்றது. தாயைக் கூட்டிக் கொடுக்கும் செய்கையைச் செய்த இவனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

பாகிஸ்தானோடு போர் புரியும் போது எண்ணற்ற முஸ்லிம் வீரர்கள் இந்தியாவிற்காக போரிட்டு மாண்டனர். அப்போது மதம் நாட்டுப் பற்றுக்குக் குறுக்கே வரவில்லை. இந்திய அமைதிப்படையில் பல தமிழ் வீரர்கள் தங்கள் கடமையை செய்தார்கள். வம்சாவழி தேசப்பற்றுக்குக் குறுக்கே வரவில்லை. நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்பவர் மத்தியில் இப்படியும் சில மிருகங்கள்.

செய் அல்லது செத்து மடி, The more you sweat in peace the less you bleed in war போன்ற பல்வேறு பொன்மொழிகளை நான் இராணுவத்தில் தான் கற்றுக் கொண்டேன். உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் விமான தளத்தைக் கொண்டிருக்கும் லே (Leh) ஆகட்டும். விஷ், விஷ் என்று எப்போதும் புல்லட்டுகள் பறக்கும் காஷ்மீர் எல்லையாகட்டும். முப்படைகள், எல்லையோர காவல் படை, இன்னும் கணக்கில்லா "Support Groups" இவற்றிலிருந்து பலர் தமது கடமையை செம்மையாகச் செய்வதால்தான் நாம் ஒழுங்காக உண்டு உறங்க முடிகிறது. இலஞ்சம்/கையூட்டு என்று காசுக்கு சோரம் போபவரே...யோசித்துப் பாருங்கள்...காஷ்மீரில் ஒரே ஒரு இராணுவ வீரன் கையேந்தினால் என்ன நடக்குமென்று...

ரபீந்திர சிங் அமெரிக்காவிற்கு பறந்து விட்டான். நேபாள எல்லையில் அவனுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டு ராஜ மரியாதையுடன் பயணம் (இதிலெல்லாம் அமெரிக்கா விசா கோட்டா பார்ப்பதில்லை). அவரது பெண் அமெரிக்காவிலேயே படித்து, கல்யாணம் செய்து செட்டில் ஆகி விட்டாராம்.

ஐயா! அம்ரிஸ்தாரின் ரகுநாதத் தொண்டைமானே...உமது மனைவி மற்றும் மகளை அமெரிக்காவிற்காக கூட்டிக் கொடுத்து விடாதீர்கள். அமெரிக்கா பற்றித் தெரிய வேண்டுமென்றால் மாதத்திற்கு $400,000 (ஈராக் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்புக்காக) கொடுத்து உங்களை மாதிரியே இருந்த ஈராக் டபுள் ஏஜெண்ட் "அகமது சலாபி" கதை கேளுங்கள். சலாபி ஈரானுக்காக உளவு பார்த்ததாகச் சொல்லி CIA பெரிய ரெய்டு நடத்தியது. நேற்று வரை "ராஜா" மாதிரி இருந்த சலாபி இப்போது "குற்றவாளி". பல வருடங்களாக (உங்களைப் போல) பணியாற்றியதற்கான பரிசு சலாபிக்கு விரைவில் கிட்டி விடும். அது அதிகாரப்பூர்வமாகவா (பல வருடம் ஜெயில் அல்லது மரண தண்டனை) இல்லை அதிகாரப்பூர்வமற்றோ...(அடையாளங் காணப்படாத நபர்களால் சுடப்பட்டு இறந்தார்).

எப்படியோ நீ வதம் செய்யப்படும் நாள் எனக்கு இன்னுமொரு தீபாவளி...

Sunday, June 13, 2004

அழுகை

பிறந்த போது
தெரிந்த பாஷை

துன்பத்தின்
வெளிப்பாடா
அழுகை?
அதீத இன்பத்திலும்
கண்ணீர்

அழுகை
நாதமா?
நாராசமா?

சுகத்தின் சுவடுகளை
கண்ணீர் கலைக்குமா?

ஆண்களுக்கு அழுகை
அவலமா?
பெண்களுக்கு அழுகை
கவசமா?

அழுகை
அவசியமா?
அனாவசியமா?

எனக்கொரு
இலட்சியமுண்டு
சிதை செல்லுமுன்
நிம்மதியாய் ஓர்முறை
சிரித்து விட வேண்டும்
நான் யார்

நல்ல கேள்வி
விந்து தந்த
தந்தையைக் கேட்டேன்
விடை கிட்டவில்லை

விளைத்து களை(ளி)த்த
தாயைக் கேட்டேன்
விடை விளையவில்லை

வந்தார் சென்றார்
உற்றார் உறவினர்
நண்பர் நல்லவர்
நவிலவில்லை

படைத்த பாவி
விடை கொடுக்கவில்லை
விடை கிட்டியவன் சொன்னதோ
புரியவில்லை

வந்ததும் தெரியாமல்
வாழ்வதும் புரியாமல்
நாளும் யோசிக்கின்றேன்
நான் யார்?
நன்றி

இனியவளே

இருந்தேன்
முன்பொரு காலத்தில்
சோலை வனமாய்

பசுமைப் போர்வை
புள்ளினங்களின் கானம்
மும்மாரி மழை
வாய்க்கால் வரப்பு
இன்னும் பல

காலம் கடந்தது

ஆசை மரங்களை
அறுத்தார்கள்
கிருமி நாசினியால்
விடமிட்டார்கள்
உரமிட்டு உயிர்
பறித்தார்கள்
செயற்கை மழை வேண்டி
மேகம் கலைத்தார்கள்

வாடினேன்
வதங்கினேன்
தேம்பினேன்
திணறினேன்

பசுமை பறந்தது
புள்ளினம் மறந்தது
மாரி ஓய்ந்தது
வாய்க்கால் காய்ந்தது

இன்று நான்
மேய்ந்த நிலமல்ல
காய்ந்த புலம்
நந்த வனமல்ல
வெந்த மனம்

திசை மாறிய மேகமே
நான் உன் நிலமல்ல
பாதை தவறிய பறவையே
நான் உன் பலமல்ல
விசை மாறிய கலமே
நான் உன் காற்றல்ல

இருப்பினும் நன்றி
இந்த
கடைசி நிமிடங்களில் என்னை
கடந்து போனதற்கு
வாழ்க்கை

பால்ய பருவத்தில்
கட்டிய மணல் வீடு கரைந்த போது
பள்ளிப் பருவத்தில்
புத்தகம் நடுவே புதைந்த போது
கல்லூரிப் பருவத்தில்
காதலெனும் கானலில் கலந்த போது
அலுவல் பருவத்தே
கணிணி எண்களால் களைப்படைந்த போது
திருமணப் பருவத்தே
திருமதியின் திருவிளையாடலில் திகைத்த போது
நரைமுடி பருவத்தே
பிள்ளைப் பாசத்தால் மூப்படைந்த போது
சாகாட்டுப் பருவத்தே
வசித்த மண்ணை சுவாசித்த போது
யோசித்தேன்

ஏக்கத்தில் பாதி
தூக்கத்தில் மீதி

ஆமாம்
என் வாழ்க்கையை
யார் வாழ்ந்தது?

Wednesday, June 09, 2004

நன்மைகள்

இன்று எனக்கு
வித்தியாசமான விடியல்
அழுது வடியாமல்

திவ்ய சுகந்தம்
ஏற்றிய விளக்கு
புதிய ஆடை
மலர் மாலை

உச்சியிலமர்ந்தும்
உயிரெடுக்காத மனைவி
அருகே அமர்ந்தும்
அறுக்காத அலுவல் நண்பர்கள்
புறங்கூறா உறவினர் கூட

இவையனைத்தும் புதியது
முன்பின் அறியாதது
இத்தனை நன்மைகள்
இருப்பதை அறிந்திருந்தால்
எப்போதோ நான்
இறந்திருப்பேனே

வந்தியத்தேவன்

Tuesday, June 08, 2004

வலி

இந்த வலி
எனக்கு மட்டும்
பட்டறிந்த பத்தாம்பசலியாக
பட்டறிந்த காரணத்தால்
இந்த வலி
எனக்கு மட்டும்

பேனாவின் உரசல்
பேப்பருக்கு வலி
தபால் தலைகளுக்கு
முத்திரை வலி
எனக்கோ
நித்திரை வலி

காலில் வலி
ஓய்வில் ஓயலாம்
கண்ணின் வலி
இமைகளில் இறங்கலாம்
இது இதயவலி
இறக்கி வைக்க
என்ன வழி?

வலிகள் பல
வடிவங்களில்
விடியல் மட்டும்
வெகு தூரத்தில்

இந்த வலி
எனக்கு மட்டும்
பகிர முடியாத
பாரம்
வலி தாங்கிக்காகவே
வடிக்கப்பட்ட பாரம்

ஓ...
இதுவொரு
பிரசவ வலியோ?
இந்த வலியென்
இறப்புக்கணக்கெழுதாதோ?

கோடை இடியில்
வானம் பிளப்பதில்லை
சூரியக் காய்ச்சலில்
பூமி எரிவதில்லை
வலியேவுன் வெப்பமுன்
நானும் கரையேன்

இந்த வலி
எனக்கு மட்டும்
இன்னுமொரு அவதாரத்திற்கு

வந்தியத்தேவன் (23/04/93 2310 Hrs.)

Monday, June 07, 2004

பஸ்ஸ்டாப் பார்வைகள்

காலைகள் மாலைகள்
காளைகள் ஊர்வலம்
பாவைகள் வரவு
பார்வைகள் கனிவு

ஒத்திகைகள் எத்தனையோ
அரிதாய் அரங்கேற்றங்களும்
காதல்வித்துகள் விளைய
மனங்கள் புதைக்கப்படுகின்றன

எத்தனையோ பூக்கள்
அத்தனை வண்டுகள்
பூங்கா அதிபர்களோ
மடியில் நெருப்புடன்

பறக்கும் ஊர்திகள்
பல்லிலுக்கும் பல்புகள்
எராளமாய் சாட்சிகள்
எதிர்கால ஏக்கத்திற்கும்

தோல்வியோ வெற்றியோ
வருங்கால வரப்பிரசாதமாய்
பஸ்ஸ்டாப் பார்வைகள்
பரிமாற்றம் நடக்கின்றது
இருட்டு ரோஜாக்கள்

ஒருசாண் வயிற்றுக்கும்
ஒட்டுத் துணிக்கும்
சந்தையில் விற்பனை
சதைப் பிண்டங்கள்

சிபியின் தசையையும்
சிலாகித்து சமைத்து
சாப்பிடப் பார்க்கும்
சாக்கடைச் சமுதாயம்

பகலிலே பாராமுகம்
இரவிலே இளிக்கும்
வக்கிரச் சமூகத்தின்
வற்றாத வடிகால்கள்

மண்ணுலக உயிர்களின்
தாகப்பசி தீர்ப்பதால்
நீரின் மானம்
நீர்த்துப் போவதில்லை

எத்தனையோ ஈரல்களில்
சுருங்கி விரிவதால்
காற்று என்றுமே
கற்பு இழப்பதில்லை

வையத்து நெளிகளில்
விழுந்து எழுவதால்
சூரியன் எப்போதும்
சோரம் போனதில்லை

மானம் என்பது
மனதில் உள்ளது
இருளிலும் இவர்கள்
கற்பு ரோஜாக்கள்

Saturday, June 05, 2004

அநாமிகாவின் கருத்துக்கு அடிவணங்கி...

கப்பல் என்றாலே மூழ்கினால் தான் அதற்கு பெரிய பெயரா?
Titanic-ல் இருந்து கேள்விப்பட்ட கப்பல் கதையெல்லாம் மூழ்கித்தான் இருக்கு.

"மூழ்காத ஷிப்பே Friendship தான்" படி மூழ்காத கப்பல் கதை இருக்கா?
"Anamikaa" Meyyappan

இதோ பதித்திருக்கின்றேன். ஒரு மூழ்காத ஷிப் பற்றி அதுவும் Friendship'பான ஷிப்.

ஒரே ஒரு விண்ணப்பம். படித்த பின் தவறாது உங்களின் கருத்தையும் சொல்லவும்.

Friday, June 04, 2004

வீதிவரை உறவு...

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளையின் தாய்மாமன் கல்யாணத்திற்கு வரவில்லை. என்னடா விஷயமென்றால் உப்புப் பெறாத சமாச்சாரம். பத்திரிக்கை முதலில் வைக்கவில்லையாம். சொந்த ஊரில் பத்திரிக்கை வைக்க மாப்பிள்ளையின் பெற்றோர் சென்ற போது, தாய் மாமன் வீட்டிற்குத்தான் முதலில் சென்றனர். ஆனால் தாய் மாமன் ஊரில் இல்லை. தான் வீட்டில் இருக்கமாட்டேன் என்ற விஷயத்தை போனில் வேறு கூறியிருக்கிறார். ஆனாலும் முதல் பத்திரிக்கை மாமனுக்குத்தான் என்று அவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். மாப்பிள்ளையின் அத்தையும், பையனும் வீட்டில் இருந்தனர். தாய் மாமன் மாலையில் வந்துவிடுவார் என்று அத்தை கூற, சரி அதற்குள் ஊரில் பத்திரிக்கை வைத்து முடித்துவிடலாமென்று முடிவு செய்து அதன்படியே செய்தும்விட்டனர். மாலை வரை மாமன் வரவில்லை. வேறு வழியின்றி பையன் கையில் முறைப்படி பத்திரிக்கை வைத்துத் திரும்பினர். அதுதான் குற்றமாம்...

நமக்குத்தான் ஆயிரம் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உண்டே. கல்யாணம் என்றாலும் கருமாதி என்றாலும் தாய்மாமன் முன்னாடி நிற்க வேண்டும். எனது தந்தைக்கு 5 மூத்த சகோதரிகள். எனவே "தாய்மாமனின் கடமைகள்" பற்றி புத்தகமே என்னால் போடமுடியும்.

இன்னொரு தாய்மாமன் ஏன் வரவில்லை என்ற காரணம் கூட சொல்லவில்லை. கல்யாணத்திற்கு முதல் நாள் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் இரண்டு தாய் மாமன்களும் மிஸ்ஸிங். மற்ற உறவினர்க்கோ அல்வா சாப்பிட்ட மாதிரி சந்தோஷம். நாளைக்கு நம்மில் ஒருவரைத்தான் மேடைக்கு அழைக்க வேண்டும். அப்போது குத்திக் காமிக்கலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது.

மாப்பிள்ளையின் தாயாருக்கு முன்னமே மூக்கு வியர்த்து விட்ட காரணத்தால், தனது மூத்த மகனிடம் "Stand-By" சொல்லியிருந்தார். கல்யாணத்தின் போது மூத்த மகனே தாய்மாமன் ஸ்தானத்தில் அனைத்து சடங்குகளையும் செய்ய, உறவினர்க்கு ஏமாற்றம்.

இது மட்டுமா? மண்டபத்தில் வரவேற்புக்கு நிற்க உறவினர் யாரும் முன்வரவில்லை. பந்தியில் விசாரிக்க ஆளில்லை. பெண்ணின் தாலியை அட்ஜஸ்ட் செய்து தர ஆளில்லை. மிகவும் வற்புறுத்திய பின் மாப்பிள்ளை-பெண்ணிற்கு திருநீறு பூச வந்தனர் சொந்தக்கார பெருசுகள். பெரிய தாய்மாமன் தனது சகோதரி மூலம் (மாப்பிள்ளையின் அம்மா இரண்டாவது சகோதரி) பணமும், தங்க காசும் கொடுத்திருந்தார். மற்ற நேரங்களில் கட்சி/ நீதி பேசும் அந்தச் சகோதரியும் நாறட்டும் என்ற நல்ல உள்ளத்துடன் மொய்யெழுதிச் சென்றார். இதை விடக் கொடுமை என்னவென்றால், இதே சகோதரி "அண்ணன்/மாமன்" ஏன் வரவில்லை என்று மாப்பிள்ளைக் குடும்பத்தையே கேட்டதுதான்.

மாப்பிள்ளையின் அத்தை ஒருவர் ஆடிய ஆட்டம் இன்னும் கொடுமை. இவர்தான் பெண் பார்த்தலிருந்து அனைத்தையும் அருகிலிருந்து செய்தவர். பெண்வீட்டார் இந்த அத்தைக்கு நெருங்கிய சொந்தம். அத்தை தனது பெண்ணை அங்கேதான் கொடுத்து இருந்தார். பெண்வீட்டாரிடம் நல்ல பேர் வாங்க இவர் போட்ட நாடகம் கொடுமையிலும் கொடுமை...
இதுபோல் இன்னும் பல சம்பவங்கள்.

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சொந்தக் கிராமத்திலிருந்து வந்த மக்கள். வாஞ்சையுடன் பேசியதென்ன, பழைய விஷயங்களைப் பகிர்ந்ததென்ன...அவர்களால்தான் கல்யாண வீடே களை கட்டியது. இவர்களுக்காகவே தனியாக பஸ் அனுப்பினார்கள் மாப்பிள்ளையின் பெற்றோர். ஏனென்றால் அவர்களில் பலர் ஏழ்மையானவர்கள். ஆனால் அன்பிலும், பண்பிலும் மிகவும் வசதியானவர்கள். அதே போல் மாப்பிள்ளையின் தந்தையின் நண்பர்கள். இவர்கள் ஓடியாடி வேலை செய்யாவிடில் பெரிய பிரச்சினையே வந்திருக்கும்.

அப்போதுதான் தோன்றியது. லட்சங்கள் செலவு செய்து, தேவையின்றி சொந்தங்களை அழைத்து திருமணம் செய்வதைவிட கோயிலில் சிம்பிளாகத் திருமணம் செய்யலாம். பின்னர் வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கிராமத்தில் நடத்தலாம். தெருவுக்கே ஒரு நாள் விருந்திட்ட நிம்மதி கிட்டும். கிராமம் வரை போகமுடியாதவர்கள் ஒரு அனாதை ஆசிரமத்திற்கு ஒரு நாள் உணவிடலாம். புண்ணியம் கிட்டும்.

கல்யாணம் முடிந்து வெளியே வந்தேன். பந்தி இலைக்காக தெரு நாய்கள் அடித்துக் கொண்டிருந்தன. அனைத்து நாய்களுக்கும் உணவிருந்தும் தனது குரைத்து சண்டைபோடும் குணத்தை மாற்றிக்கொள்ள மனமில்லை. மாப்பிள்ளையின் அண்ணனான நான் வெறுப்புடன் அவற்றை திட்டினேன்..."ச்சீய் சொந்தக்காரனுங்களா !!!".

Tuesday, June 01, 2004

நட்பு

நம்பிக்கைதான்
நட்புத்தேரின்
கடையாணி
அச்சாணியே
ஆட்டங்கண்டால்
தேரெப்படி
சீராய்ச் சேரும்?

நட்பு ஒன்றும்
நடைபாதைக் கடையல்ல
நண்பனே
கொடுக்கல்
வாங்கலிற்கு...

உங்கள்
விமர்சன உளிகள்
விளையாடிய போதுதான்
ஜீவசிற்பமானேன் என
நானித்தபோது
நீ மட்டும்
காயம்பட்டதாய்
கலங்குவானேன்?

உணர்ச்சிகளுக்கு
உடுப்பணிவிக்க
எனக்குத் தெரியாது
சிரிப்பு வந்தால் சிரித்து
சீற்றம் வந்தால் சீறி
சூழ்நிலைக்கு நான்
சோரம் போபவன்

நட்புச் செடியின்
நலங்கெட
வேரில் நானே
வெந்நீர் ஊற்றி
விளையாடுவேனா?

இதழிலே இனிப்பும்
நெஞ்சிலே வஞ்சமும்
வைக்கும்
கொடியவனானேனா?

நான்
வெடித்தால்
ப(ம)றந்து விடும்
வெண்பஞ்சுக் காய்

உண்ர்வுகளால் நாம்
ஒன்றுபடாத போது
திருத்தங்களா நம்முள்
திருப்புமுனையாகப் போகிறது???

நட்பில்
அனுசரணையே அலங்காரம்
அடங்கிப் போதல்
அழகன்று

பிடித்தவற்றையே
பேசுவதற்குப்
பெயரா நட்பு?
பிடிக்காதவற்றையும்
பெயர்ப்பதே நட்பு

பிடிக்காதவற்றை
நாமினி
பேசவேப் போகாததால்
போலி நட்புப்
போர்வயை உதறி
பழகுவோம்...
நண்பர்களாக அல்ல
நல்லவர்களாக !!!