Sunday, July 25, 2004

எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள்

ஈழத்தில் இந்திய ராணுவக்காலம்

அன்பார்ந்த தோழியர்க்கு,

வதனா அவர்களின் பதிவினைப் படித்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் யாவர்க்கும் பொது. அதன் அடிப்படையில் அவரது படைப்பினை வரவேற்கின்றேன். கூடவே வெளியான கவிதைதான் வேதனையை வெளிப்படுத்துகிறது.

நாட்களின் நகர்வில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் இயலவில்லை
இன்னும்

இக்கவிதையைப் படித்தபின் என்னுள் பல கேள்விகள்.

எங்கேயோ இருக்கும் நார்வே, இலங்கை தேசத்தில் அமைதி ஏற்படுத்த தீவிரமாய் செயல்படுகிறது. முதன் முறை கையைச் சுட்டுக் கொண்டாலும், இந்தியா அமைதிப் பேச்சுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கும் சமயத்தில் இக்கவிதை எனது பலவீனமான பகுதியில் பலமாய் இடித்தது. காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.

ஆமாம். வதனா, உங்களுக்கு இக்கவிதையில் முழு உடன்பாடா? இதுதான் அனைத்து ஈழத்தமிழர்களின் எண்ணவோட்டமா? அப்படியென்றால் உங்கள் தேசத்தில் யார் நெருப்பள்ளிக் கொட்டியது? இந்திய ராணுவமா? உங்கள் வானத்தின் மீது இருளள்ளிப் பூசியது யார்? இந்தியாவா? விடுதலைப் புலிகள் என்றால் அவரும் ஈழத் தமிழரா? இல்லை அவர்கள் வேறா?

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்? தனது 1,200 மகன்களை காவு கொடுத்து 3,000 மகன்களை காயப்படுத்தி இந்தியத் தாய் கண்ட பலன் என்ன? தனது மண்ணிலேயே ஒரு தலைவனை/தனையனை இரத்த சகதியில் அமிழ வைத்தென்ன புண்ணியம்? தடா, பொடா இன்னும் எத்தனை "டா"க்கள் காத்துள்ளன? என்னாலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை, இன்னும்.

உடனே கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்துகிறேனென்று எண்ணாதீர். அது நான் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

நியாயமான பின்னூட்டங்களுக்கும், எதிர் பதிப்புகளுக்கும் கண்டிப்பாய் என் பக்க நியாயத்தை நிலை நிறுத்துவேன்.

வந்தியத்தேவன்.



No comments: