Thursday, April 06, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

விட்ட குறை தொட்ட குறையாக இத்தொடரை நான் முடிக்க விரும்பவில்லை.

இணைய அரசியல், தர்க்கம், விவாதம் போன்றவற்றில் ஆர்வமில்லாதவர்களும் இப்பதிவினைப் படியுங்கள்.

செய்தித்தாளில் ஒரு துர்சம்பவம் பற்றி செய்தி வருகின்றது. குறைந்தபட்ச மனநலம் கொண்ட யாருமே அச்சம்பவம் குறித்து தமக்குள்ளேயே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான உண்மைக் காரணங்களை அறிய முற்படுவது இயற்கை. ஆனால் நடந்தது என்ன?

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுடப்பட்டார்கள் என்று டெக்கான் க்ரோனிக்கிளில் செய்தியை வாசிக்கின்றார் ரோஸா. அவர் உடனடியாக செய்த அடுத்த காரியம் என்ன தெரியுமா? ஹிந்து பேப்பரைப் பினாயில் ஊற்றிக் கொண்டு இதே செய்தி வந்திருக்கின்றதா என்று பார்த்ததுதான். ரோஸாவின் நோக்கமென்னவோ? இதனால் சுடப்பட்ட மீனவர்களுக்கு ஏதேனும் நன்மை விளையப்போகின்றதா? இந்து ராமின் செயல்பாடுகளின் உள்நோக்கத்தைத்தான் ஏற்கெனவே உங்களைப் போன்றவர்கள் இணையத்தில் "வெளிச்சம்" போட்டுக் காட்டிவிட்டார்களே? இன்னும் மிச்சம் மீதி உள்ளதா?

பிறகு ஒரு கோர்வையில்லாத பதிவு. அதில் வழக்கம் போல் சலம்பல் சொற்றொடர்கள். பிரச்சினை குறித்து உண்மையான அக்கறை உள்ளவருக்கு சாதாரண படகிற்கும், டிராலருக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடற்பாதுகாப்பு படை (Indian Navy & Indian Cost Guard) மற்றுமிவை இரண்டிற்குமுண்டான வேறுபாடுகளைக் கூட ரோஸா அறியவில்லை. தமிழக தேர்தல் பற்றி கருத்து கூறும்படி ரோஸாவை ஒருவர் கேட்டிருக்கின்றார். அவசரத்தில் ரோஸா "பாராளுமன்ற தேர்த்லைப்" பற்றி எழுதிவிடப் போகின்றார். யாரேனும் கேள்வி கேட்டால் "தேர்தலைப்" பற்றி தான் பேப்பரில் படித்த அடிப்படையில் எழுதினேன் என்று சால்ஜாப்பு சொல்லி விட்டால் சந்தோஷம்.

இந்த லட்சணத்தில் நான் எழுதியது ஏன் (என் முதல் பதிவைக் குறித்து) என்று அனைவருக்கும் தெரியும் என்ற கயமைத்தனமான திரிப்பு வேறு. எழுத நேரமில்லை என்று புலம்பி விட்டு 1800 வார்த்தைகளில் எனக்கு அர்ச்சனை செய்யும் நேரத்தில் உருப்படியாக எதையாவது பிரச்சினை குறித்து படித்து விட்டு வந்திருக்கலாமே? இவ்வளவு ஏன்? கூகிள் தேடுபொறியையாவது உபயோகித்திருக்கலாமே?

பணிப்பளு அனைவருக்கும் உண்டு. விரும்பியோ, விரும்பாமலோ உங்களுக்கு அறிவுஜீவி பட்டம் சூட்டி உங்களது வாசகர் வட்டம் ஆர்ப்பரிக்கின்றது. அவர்களுக்காகவாவது பிரச்சினை பற்றி நேர்மையாகத் தெரிந்துகொண்டு, தெளிவாகப் பேசியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் உங்களது வாசக வட்டம் காணாமல் போய்விடுமே. அவர்கள் விரும்புவது உங்களது இந்த வெற்று சவடால்கள் தானே. பதிவுகளில் உங்களை இணைய சண்டியராய் உருவகம் செய்து கொண்டு காட்டமாய்க் கேட்டேன், தடித்த உடை, உறுப்பு நுழைத்தல், புடுங்குதல், குறியறுத்தல் என்று நீங்கள் எகிறிக் குதிக்க, பாருங்கள் உங்கள் விசிலடிச்சான்குஞ்சுகள் "ஆடுறா ராமா ஆடுறா ராமா" என்று கைதட்டி களிப்படைகின்றன!

டின் பிகா-பங்களாதேஷ் விவகாரத்தை நான் முதல் பதிவில் கோடு காட்டிய பின்னராவது அது குறித்து படித்திருக்கலாம். அதை விட்டு விட்டு பின்னால் சால்ஜாப்பு நான் சொல்லப்போகின்றேன் என்று ஜோஸ்யம் கூறுகின்றார்.

வாசிப்பைக் கடத்தியவர், திரிப்பு செய்பவர், கேனத்தனமாய் கேள்வி கேட்பவர், முட்டாள் போல் பேசுபவர், அறிவு நேர்மை இல்லாதவர், ஆதாரமின்றி பேசுபவர், தர்க்க யோக்கியதை இல்லாதவர், அயோக்கியத்தனம் கொண்டவர், ஹிப்போகிரட், நார்மலில்லாத ஆசாமி, உளறுபவர் எல்லாவற்றிற்கும் மேலாக தர்க்க சுயமைதுனம் செய்பவர் என்று நீங்கள் எனக்குக் கொடுத்த அத்தனை அடைமொழிகளையும், அந்த அடைமொழிகளுக்கு முழுதும் பொருத்தமானவர் தாங்களே என்பதால் மனமுவந்து திருப்பித் தருகின்றேன். அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ளவும்.

பதிலுக்கு நான் நன்றியைக் கூட எதிர்பார்க்கவில்லை.

இணையத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வளர வேண்டுமென்ற அடங்காத ஆவல் எனக்குண்டு. அது சாத்தியப்படும் என்ற அசையாத நம்பிக்கையும் எனக்குண்டு. தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது. அது கருத்து ரீதியானதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்ட தொடரே இது. ஒரு நிகழ்வைக் குறித்த கருத்துகளை பல்வேறு கோணங்களிலிருந்து, பலரால் ஆராயப்பட்டால், உருப்படியான முடிவுகளுக்கு நாம் வர முடியும். அதற்காகவாவது விவாதங்கள், அதுவும் இணையத்தில் தொடரப்பட வேண்டும்.

தொடருமா?

Wednesday, April 05, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:

பதிவு 1
பதிவு 2
பதிவு 3

இலங்கை-இந்திய மீனவர்களின் உண்மையான பிணக்குகளின் பல்வேறு கூறுகளை மேற்சொன்ன பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். இப்பதிவில் சில நடைமுறைத் தீர்வுகளைப் பார்ப்போம்.

இலங்கை மீனவர்கள் ஒருபோதும் இந்திய டிராலர்களை எல்லை மீற அனுமதிக்கப்போவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட காலவரைக்குள் டிராலர்களை விட்டு விட்டு பிழைக்க வேறாதாவது வழி தேடவேண்டும். இந்திய டிராலர்கள் மற்றும் இலங்கை அடையும் பாதிப்பின் புள்ளிவிபரங்கள் (நன்றி: விவேகானந்தன்):

மாவட்டம் (டிராலர் மையம்): ராமநாதபுரம் (இராமேஸ்வரம், மண்டபம்)
டிராலர் எண்ணிக்கை: 1,700
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 900
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: தலை மன்னார் மற்றும் டெ(ல்)ப்ட் தீவு (Delft Island)
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மிக அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): புதுக்கோட்டை (கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம்)
டிராலர் எண்ணிக்கை: 1000
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 1000
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: டெ(ல்)ப்ட் தீவு (Delft island) முதல் யாழ்ப்பாண குடாவுக்குள்
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): நாகப்பட்டினம் (கோடிக்கரை மற்றும் வடக்கு வாங்காள விரிகுடா)
டிராலர் எண்ணிக்கை: 1300
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 600
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: பாக் நீரினையும், அப்பாலும்; யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மீடியம் அல்லது குறைவு (அவ்வப்போது ஊடுருவுவதால்)

ஆக மொத்தம் 4,000 இந்திய டிராலர்களில் சுமார் 2,500 இலங்கை கடலெல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதாக திரு. விவேகானந்தன் தெரிவிக்கின்றார். இந்த 2,500 டிராலர்களை எவ்வாறு கைவிடுவது? அரசாங்கமே முன்வந்து இந்த டிராலர்களை நியாய விலையில் வாங்க வேண்டும். மீன் வளத்துறை மூலம், தேவைப்பட்டால் உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தைச் சீராக செயல்படுத்த முடியும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் புனர் வாழ்வுத் திட்டங்களையும் தீட்ட வேண்டும்.

இறால் பண்ணைகள் அமைத்துத் தருவது, ஏரி/குளங்களில் மீன்வளத்தைப் பெருக்குவது போன்று எத்தனையோ, நடைமுறையில் இருக்கும் தொழில்களில் இம்மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, மறுவாழ்வு தர முடியும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மீனவ சமுதாயத்தைக் கருணையோடு இந்திய அரசாங்கம் மீண்டும் அணைத்துக் கொள்ளும் தருணமிது.

இத்திட்டங்களை செயல்முறைப்படுத்த குறித்த காலவரையை நிர்ணயிக்க வேண்டும். பின்னர் இச்செயல்திட்டம் குறித்து இலங்கை அரசு மற்றும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தினால், திட்டம் முடியும்வரை எல்லை கடக்கும் டிராலர்கள் மீது அவர்களுக்கும் பார்வைகள் புதிதுபடும்.

இந்திய டிராலர்கள் தெரிந்தே எல்லை கடந்தால் தயங்காது கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும். திட்டம் முடியும் வரை எந்த வித புது டிராலர்களுக்கும் லைசன்ஸ் கொடுக்கப்படக் கூடாது.

தமிழக அரசு மீனவர் பாதுகாப்புக்காக 2004'ல் பல முடிவுகள் எடுத்தது. 1. மீனவருக்கு அடையாள அட்டைகளை வழங்கி மீன் பிடிக்கும் போது கட்டாயம் அவற்றை வைத்திருக்க வேண்டும் 2. படகின் சொந்தக்காரர்கள் தமது படகுகளுக்கு இந்திய கடற்பாதுகாப்புப் படையின் விதிகளுக்குட்பட்டு ப்ளோரோசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டும். 3. தவறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் முதல் லைசென்ஸ் ரத்து போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் 4. இந்திய கடற் பாதுகாப்புப்படையின் நிர்வாகத்தில் 5 ரோந்துப் படகுகள் பாதுகாப்புப் பணியில் இயங்கும்... போன்றவையே அவை.

இம்முடிவுகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இந்திய மீன்வளத்துறை உடனடியாக இம்முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.

இலங்கை கடற்படை சுடுவதற்கான காரணமாய் நிருபமா கூறியதை பின்னூட்டத்தில் அறியத் தந்த பத்ரிக்கு நன்றி. 1997'லேயே Intelligence and Counter Piracy Operations Centre இலங்கை கடற்பரப்பை மிகவும் அபாயகரமானது என்று சர்ட்டிபிகேட் தந்திருக்கின்றது. அமெரிக்க நிறுவனமான Centre for Strategic and International Studies, இலங்கையின் கடற்படையைச் சேர்ந்த கலங்களில் 30 - 50% கடற்புலிகள் அழித்து விட்டிருக்கலாம் என்று யூகிக்கின்றது. இந்திய மீனவர்கள் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவினர்/உதவுகின்றனர் என்று நம்பும் இலங்கை கடற்படை, எல்லை கடந்து அடையாளம் காண இயலாத மீன் பிடிப்படகுகளை சுடுவதற்கான காரணங்களை நீங்களே கற்பிதம் செய்து கொள்ள முடியும்.

இருப்பினும் Art 73 of the UN Law of the Sea'படி இலங்கை கடற்படை, எல்லை கடப்பவர்களை சுடுதல் சட்ட மீறுதலாகும். தேவைப்பட்டால், சுடுதல் தொடருமானால், இந்திய அரசு இலங்கைக்கு கடுமையான கண்டனங்களை முன்வைப்பதுடன், ஐநா'விற்கே கூட புகார் செய்யலாம். பதிலுக்கு இந்திய கடற்பாதுகாப்பு படையை விட்டு இலங்கை மீனவர்களை (எல்லை கடந்தவர்களை) சுடச் சொல்லுவது ஜனநாயக மரபுகளுக்கே இழுக்கு.

இந்நிலையில் இப்பிரச்சினையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு கையாண்டன?

ஆகஸ்ட் 15 1991: கச்சத்தீவினை மீட்பேன் - செல்வி ஜெயலலிதா சூளுரை.

ஏப்ரல் 29, 2000: இலங்கை இந்திய நல்லுறவுகளுக்காக தமிழக மீனவர்களை (நாகப்பட்டிணம் அருகில் அக்காரப்பட்டைச் சேர்ந்த குமார், முனுசாமி மற்றும் ஐய்யப்பன் ஏப்பிரல் 29 காலை பத்து மணி அளவில் கோடிக்கரையில் தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டனர்) இலங்கை ராணுவம் கொல்லுவதை அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் இலங்கை கடற்படை இத்தகைய அநியாயத்தைச் செய்ய முடியாதவாறு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலைஞர் கருணாநிதி.

வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்ற தலைவர்களும் சுள்ளென்று இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு எதிரான கருத்துகளைப் பதிய தவறவில்லை. மத்தியில் காங்கிரஸோ, பிஜேபியோ இருந்தாலும், தமிழக அரசியல் (திராவிடத்) தலைவர்கள், மீனவர்கள் குறித்தான கருத்துகளைத் தீவிரமாக வெறுமனே பேசியும், எழுதியும் மட்டுமே வந்திருக்கின்றார்கள். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு நிலையான முடிவெடுத்து அதைச் செயல்படுத்த மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது வருத்தம் தரும் விடயம். (இராமகி'யின் பின்னூட்டம் நினைவிற்கு வருகின்றது)

பேராசிரியர் சூர்ய நாராயணன் என்பவர் இன்னொரு தீர்வை முன்வைக்கின்றார் (Conflict Over Fisheries In the Palk Bay Region (Lancer, New Delhi, 2005) Prof V Suryanarayan). அதாவது இழந்த கச்சத்தீவை மீண்டும் எழுதிக் கொடுக்க இலங்கை ஒப்பாது. அதனால் கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு (lease in perpetuity) இந்தியா இலங்கையிடமிருந்து பெறவேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்ததால் தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டது என்ற கடுமையான விமர்சனத்தை வைக்கும் அவர், நிரந்தர குத்தகைதான் தகுந்த தீர்வு என்று சொல்கின்றார். இந்தியா பங்களாதேஷிற்கு இவ்வாறுதான் டின் பிகாவை குத்தகைக்கு விட்டது என்பதையும் சுட்டிக் காண்பிக்கின்றார்.

கச்சத்தீவினை குத்தகைக்கு எடுத்த பின்னர் இந்தியாவும், இலங்கையும் ஒரு கூட்டு கடற்தளத்தை அமைத்து கடற்புலிகள், ஆய்தம்/போதை மருந்து கடத்துபவர்கள் போன்றோரிடமிருந்து இருநாடுகளையும் காக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்.ஆனால் இலங்கை அவ்வாறு செய்ய முன்வருமா?

ஆனால் புல் கூட முளைக்காத நிலமாக கச்சத்தீவு இருந்தாலும் பல்வேறு அரசியல் காரணிகளால் இலங்கையால் நமக்கு குத்தகைக்குத் தரமுடியாது. இந்தியா டின் பிகாவைக் கொடுத்தபோது பங்களாதேஷ் (இந்திய நண்பரான) முஜிபுர் ரஹ்மான் வசமிருந்தது. இன்றைய சூழலில் இந்தியா-இலங்கை உறவு அவ்வாறு சுமுகமானதாகக் கருத முடியாது. சேது சமுத்திர திட்டம் குறித்து இலங்கைக்கு இந்தியாவின் மீது நல்ல விமர்சனம் கிடையாது என்பது கொசுறுச் செய்தி. தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகளாவது சூர்யநாராயணனின் தீர்விற்கு ஆதரவு அளிப்பார்களா? சந்தேகம்தான். போலி அரசியல் வெளிப்பாடுகள் கட்டுடையும் தருணமிது.

26 செப்டம்பர் 05'ல் லங்காநியூஸ்பேப்பரில் சூர்யநாராயணன் தீர்வு பற்றி செய்தி வெளியானதும் இலங்கை வாழ் மக்கள் (தமிழர் உட்பட) "இலங்கை தனது இறையாண்மையை இந்தியாவிற்கு விற்கக்கூடாது" என்ற கருத்தையே பிரதிபலித்தனர்.

எனக்கென்னவோ தோன்றுவது இதுதான். நாளையே இலங்கையில் சிவில் யுத்தம் மீண்டும் வெடிக்கலாம். இலங்கை மீனவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு புலம் பெயரலாம். அப்போது முன்னே நடந்தது போல் அவர்களும், இவர்களும் இணைந்து ஒரே இடத்தில் (இந்திய/இலங்கை எல்லைகள் உட்பட) மீன் பிடிக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் பலவருடங்களாக மீன் பிடித்தொழிலில் நம்மை விட அதிகம் நசிந்த காரணத்தாலும், உள்ளூரில் (இலங்கையில்) டிராலர்களை அனுமதிக்காததாலும், சுனாமியில் நம்மை விட அதிகம் அடி வாங்கியதாலும், நமது பொருளாதாரம் டிராலர் விடுத்த மாற்று வழிகளை இலங்கையை விட எளிதாக செயல்முறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகத்தின் மீதுள்ள பற்றாலும், இந்திய மீனவ சகோதரர்கள் இப்பிரச்சினைக்கு உண்மையிலேயே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினால் கொஞ்சம் இலங்கை மீனவர்களுக்காக விட்டுக் கொடுத்துதான் போகவேண்டும்.

இது இன்றைய சுகங்கள் எனக்குத் தந்த சொகுசில் தட்டச்சு செய்யப்பட்ட பதிவல்ல. சிறிதே கடல் அனுபவம் எனக்குத் தந்த பாடங்களின் பதிவு! வாசகர்களின் பொறுமைக்கும், ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி !!!

தொடர்வேன்...

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:
பதிவு 1

பதிவு 2

கடலைப்பற்றி அறிந்தவர்கள், வியக்கும் முக்கியமான விடயம் "அதன் பிரும்மாண்டம்". அலைகளின் சலனமில்லாத ஆழ்கடலின் பிரும்மாண்டத்தில் ஆஜானுபாகுவான விமானந்தாங்கிக் கப்பல் கூட கொசுவாகத் தெரியும். கடல்நீரில் தோன்றி மறையும் வீக்கங்கள் (Swellings) அந்த பிரும்மாண்டத்தை இன்னும் பெரிதுபடுத்திக் காட்டும். மீனவர்கள் கடலை வெறும் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக படைக்கப்பட்டதாய் நினைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடல் ஒரு தாய், கடவுள், மாதா என்று பலவகைகளில் உருவகப்படுத்தி மகிழ்வார்கள். நாள் முழுதும் அலைந்து நினைத்த அளவு மீன் கிட்டாவிட்டாலும் கடலைச் சபிக்க மாட்டார்கள். தனது கடலெல்லைக்குள் மற்றவர் நுழைவதை "வன்புணர்வு" என்று இலங்கை மீனவர்கள் கருதுவது அதீதமான உணர்வு வெளிப்பாடல்ல. இதே காரணத்தால்தான் இந்தியாவிற்குள்ளும் மீனவ குப்பங்களிடையே சண்டை மூள்கின்றது. எனவே இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை "மேலாண்மை" திறத்துடன் மட்டும் அணுக முடியாது. உணர்வுப்பூர்வமாகவும் அணுக வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒரு உடனடி தீர்வு கிடையவே கிடையாது.

இதனை நன்கு புரிந்து கொண்ட SIFFS தனது முதலாவது நல்லெண்ணப் பயணமாக இந்திய மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றது. மீனவர்களும் மனம் விட்டு தமது பிரச்சினைகளை அலசினார்கள். பொதுவாக இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்களின் எல்லை கடந்து மீன் பிடிக்கும் பிரச்சினையில் வெளிப்படுத்திய உணர்ச்சிக் குமுறலைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். "கடற் கொள்ளை", "கடற் கற்பழிப்பு" போன்ற சொற் பிரயோகங்களைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.

இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாகக் கூறியது இதுதான் "இன்னும் 3 மாதத்திற்குள் எந்த இந்திய டிராலர்களும் இலங்கை கடற்பிரதேசத்திற்கு வரக்கூடாது". இது குறித்து இலங்கை சென்ற இந்திய மீனவர்களால் (சக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல்) மட்டும் உடனடியாக ஒத்துக் கொள்ளவும் முடியாது.

மேலும் இந்திய டிராலர்களால் இன்னொரு அபாயமும் உண்டு. அது இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து விடுவது. வாரத்திற்கு மூன்று நாள் இராமேஸ்வரத்திலிருந்து எப்படியும் இலங்கை கடற்பரப்பில் வரும் டிராலர்களால் பலமுறை இலங்கை மீனவர்களின் வலைகள் அறுந்து போனது இன்னொரு பிரச்சினையாக எழுப்பப்பட்டது. பெசாலைக்கு அருகிலுள்ள வங்காளபாடு கிராமத்தில் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய படகையும் நமது மீனவர்கள் பார்த்தார்கள். தமிழக அரசின் உத்தரவான ஆறு வாரங்கள் டிராலர்கள் மீன் பிடிக்கக்கூடாது என்பதைக் கூட இலங்கை மீனவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. பலர் டிராலர்களுக்குப் பயந்து கடல் பக்கமே போகாமல் கூட இருப்பதாய் குமுறியிருக்கின்றார்கள். இந்த நல்லெண்ணப் பயணத்திற்கு யோசனை தெரிவித்த திரு. அடைக்கலநாதன் MP'யையும் நமது மீனவர்கள் சந்தித்தார்கள். இமாதிரி முன்னோடி முயற்சிகளை நமது அரசியல்வாதிகள் செய்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.

மேலும் டிராலர்கள் பயன்படுத்தும் வலைகளான pair trawl, “mixture” net, “chank” net and “roller” net போன்றவை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், இலங்கை மீனவர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிரச்சினைக்குரிய அவ்வகை வலைகளை தாங்களாவே பயன்படுத்துவதில்லை என்ற முடிவை இராமேஸ்வரம் மீனவர்கள் கூறினார்கள்.

டிராலர்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே. இருப்பினும் அவற்றை இயக்குபவர்கள் பெரும்பாலும் குத்தகைக்கு எடுத்த, அல்லது வேலைக்கமர்த்தப்பட்ட ஏழை மீனவர்களே. இவர்கள் மீது இலங்கைப் பரப்பில் சென்று மீன் பிடிக்க வேண்டிய பணி கட்டாயமாக்கப்படுகின்றது. இருதலைக் கொள்ளியெறும்பு நிலைதான் இவ்வகை மீனவர்களுக்கு. இதனால் நாகப்பட்டினத்தில் 50 டிராலர்களை விற்று விட்டதாகவும் செய்தியுண்டு. நாகூர் மீனவர்களோ டிராலர் பிஸினஸே வேண்டாமென்று Yellow Fin Tuna பிடிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கின்றார்கள்.

இந்திய அரசாங்கம் முன் வந்து இவ்வகை டிராலர்களை நியாயமான விலைக்கு வாங்கினால் விற்பதற்கு பலரும் தயராக இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. குறைந்தபட்சம் வாங்கிய கடனை அடைத்தாலே போதுமென்று பலரும் நினைக்கின்றார்கள்.இராமேஸ்வரத்தில் டிராலர்கள் எண்ணிக்கை 500 ஆக உயந்தபோதே பல சங்கங்கள் மூலம் கடும் எதிர்ப்பை சில மீனவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் போய்விட இன்றைக்கு எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. டிராலர்கள் புள்ளி விவரம் வரும்பதிவில்.

இலங்கை மீனவர் பிரச்சினையின் தீர்வுகளாக முன்வைப்பது:

1. இராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கரையிலிருந்து மூன்று கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
2. நாகப்பட்டினம் மீனவர்கள் 7 கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
3. ஏற்கெனவே கூறியபடி நான்கு வகை டிராலர் வலைகளை யாருமே பயன்படுத்தக் கூடாது
4. கடலெல்லையைக் கடக்கும் படகுகளை மீண்டும் மீன் பிடிக்காதபடி இந்தியாவே தண்டிக்க வேண்டும்
5. வட-இலங்கை மீனவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் புழங்கும் கடலெல்லை ஏனைய மீனவர்களை விட வெகு குறைவு. எனவே அப்பகுதியில் இந்திய படகுகளின் ஊடுருவல் கூடவே கூடாது
6. இலங்கை அரசின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வடமராட்சி மீனவர்கள் குறைவான பகுதியில் மீன் பிடிப்பதால், இந்திய டிராலர்கள் நுழையக் கூடாது
7. மூன்று மாத கால அவகாசத்தில் அனைத்து இந்திய டிராலர்களும் இலங்கையில் கடலெல்லைக்குள் எங்குமே நுழையக் கூடாது. சுருங்கக் கூறின் அனைத்து இந்திய டிராலர்களையும் முடக்கவேண்டும்

பின்னர் நடந்த குழு கலந்துரையாடலில் இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்கள்:

1. இலங்கையில் டிராலர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதால் (செய்தியை உறுதி செய்ய முடியவில்லை), இந்திய மீனவர்களும் வருங்காலத்தில் டிராலர்களை கைவிட வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிவாகவில்லை. (மூன்று மாதம் பின்னர் மீண்டும் கால வரையறைப் பற்றி பேசவேண்டுமென்று எடுத்த முடிவு என்னாகியது என்றும் தெரியவில்லை)
2. பா(ல்)க் வளைகுடாவிலிருந்து 3 கடல் மைல் தொலைவு, யாழ்ப்பாணம்/வடமராட்சியிலிருந்து 7 கடல் மைல்கள் தொலைவு விதியை இந்திய மீனவர்கள் ஏற்றுக் கொண்டனர்
3. நான்கு வகை டிராலர் வலைகளும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய மீனவர்கள் உறுதி மொழி கொடுத்தார்கள்.
4. விதிகளை மீறும் படகுகள் மீது இந்தியா/மீனவ சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இலங்கை மீனவர்கள் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடாது
5. இரு நாடுகளிலும் சிறைப்பட்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை பெற இருதரப்பும் மும்முரமாக ஈடுபடும்

நல்லுறவு பயணத்தின் தொடர்ச்சியாய் இலங்கை மீனவர்கள் இந்தியா வந்தார்களா என்று தெரியவில்லை.

பிரச்சினைக்கு மேலும் சில தீர்வுகள் உண்டா? தொடர்ந்து அலசுவோம்.

Tuesday, April 04, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-2

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை இவ்விரு நாடுகளில் (குறிப்பாக இலங்கையில்) நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த காலகட்டங்களைக் கொண்டு ஆராயலாம்.

எனது முதல் பதிவில் கூறியபடி 1974'ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன் பின்னர் அதே ஒப்பந்தத்தில் 5 மற்றும் 6 வது ஷரத்துகளின் மூலம் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவினருகில் மீன் பிடிக்க முழு உரிமை வழங்கப்பட்டது.

1983'ல் இலங்கையில் தொடங்கிய சிவில் யுத்தம் ஒரு முக்கியமான திருப்புமுனை. பா(ல்)க் ஜலசந்தியில் மற்றும் பா(ல்)க் நீரினையில் மீன் பிடிக்கும் இரு நாட்டு மீனவர்களும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக இலங்கை மீனவர்கள் சிங்கள அரசின் பாதுகாப்பு குறித்த ஏகப்பட்ட கட்டுபாடுகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் புலம் பெயர்ந்து தமிழகக் கடற்கரைகளில் (இராமேஸ்வரம், மண்டபம்) தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் 1974 முதல் 1983 வரை இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக, இருவரது கடற்பகுதிகளிலும் மீன் பிடித்துக் கொண்டுதான் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரச்சினையை மேலும் ஆராயுமுன்னர் சில தகவல்கள். கரையிலிருப்பதைப் போல கடலிலும் ஒரு நாட்டிற்குண்டான ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைப் பார்ப்போம்:

Territorial Sea: கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு மிகாமல்
Contiguous Zone: கரையிலிருந்து 24 கடல் மைல்கள் மிகாமல்
exclusive economic zone: கரையிலிருந்து 200 கடல் மைல்கள் மிகாமல்

இந்த எல்லைகளைப் பற்றியும், குறிப்பிட்ட எல்லைகளில் ஒரு நாட்டிற்கு உண்டான உரிமைகளைப் பற்றியும், விதிகள் மீறப்படும் போது எவ்வாறு பிரச்சினை தீர்ப்பது போன்ற விடயங்களை விரிவாக ஐநா சபையின் இணையதளத்தில் படிக்கலாம். குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட வேண்டியது Territorial Sea. கரையிலிருந்து 12 கடல் மைல் (13.8 மைல்/22.22 கிமீ) வரை முழு உரிமை ஒரு நாட்டிற்கு உண்டு. பிரச்சினை என்னவென்றால் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் territorial sea 7 கிமீ (3.8 கடல்மைல்) தூரம்தான். எனவே தத்த்தமது கடலெல்லைகளைத் துல்லியமாக பிரித்துக்கொள்ள இந்தியாவும் இலங்கையும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன.

இந்தியாவின் கடலெல்லைகள் பற்றி விரிவாக அறிய இங்கே சுட்டுங்கள்
இலங்கையின் கடலெல்லைகள் பற்றி விரிவாக அறிய இங்கே சுட்டுங்கள்

தென்னிந்திய மீனவர் குமுகாயங்களின் தலைவரான வி. விவேகாநந்தன் (V.Vivekanandan, South Indian Federation of Fishermen Societies (SIFFS), Trivandrum) இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்திருக்கின்றார். அவர் Release of Innocent Fishermen (ARIF) என்ற அமைப்பின் கன்வீனராகவும் இருக்கின்றார்.

SIFFS என்பது ஒரு அரசு சாராத நிறுவனமாகும் (NGO). மொத்தம் 21 நபர்களை (16 மீனவர்கள் உட்பட) அழைத்துக் கொண்டு இலங்கைக்கு மே' 2004 நல்லெண்ண தூது சென்றார். அவரது பயண அனுபவங்கள் ஏறத்தாழ என்னுடைய கருத்துகளை ஒத்துப்போயின.

1983 இலங்கை சிவில் யுத்தம் ஆரம்பித்த பிறகு இலங்கை மீனவர்கள் ஒருபுறம் இந்திய கடற்கரைகளுக்கு புலம் பெயர, இந்திய மீனவர்கள் இலங்கை கடறெல்லைக்குள் நுழைந்தால் அந்நாட்டின் இராணுவம் சுடுவதும் ஆரம்பமாகியது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ஆழ்கடல் விசைப்படகுகள் (Trawlers) இலங்கை கடற்பகுதியில், இலங்கை மீனவர்களின் போட்டியின்றி மீன் பிடிக்கத் தொடங்கின. ஆழ்கடல் விசைப்படகுகள் பெயருக்கேற்றபடி ஆழமில்லாத (Shallow) கடலில் மீன் பிடிக்க உதவாது. இந்திய கடலெல்லையிலிருந்து இவ்வகை ஆழ்கடல் விசைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டுமென்றால் கரையிலிருந்து குறைந்தபட்சம் 3 கடல் மைல் தூரமாவது செல்லவேண்டும். இது சாதாரண கட்டுமரங்கள், மோட்டார் பொருத்திய படகுகள் கொண்ட மீனவர்கள் பிழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம். இராமேஸ்வரத்திலிருந்து 3 கடல்மைல் கடந்து, ஆழமிகுந்த இடத்தில் மீன் பிடிக்க டிராலர்கள் முயன்றால் அவை இலங்கையின் கடலெல்லைக்குள் தான் செல்ல வேண்டும்.

பிறகென்ன? இலங்கை மீனவர்கள் (1983'ற்கு பிறகு) ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்திய டிராலர்கள் நிறைக்கத் தொடங்கின. தெற்கு இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே நாகப்பட்டினம் வரை 4,000 டிராலர்கள் இக்காலக்கட்டத்தே களமிறங்கின என்று விவேகாநந்தன் தெரிவிக்கின்றார். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து மட்டும் 1000 படகுகள் இலங்கை கடலெல்லைகளை நம்பியே இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

2002'ல் இலங்கை அரசாங்கம் புலிகளோடு செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி இலங்கை மீனவர்களின் வாழ்வில் ஒரு புதிய விடிவெள்ளி தோன்றியது. மெல்ல மெல்ல தமது து(ம)றந்த வாழ்வினை தேடியெடுக்க பெயர்ந்த புலத்தை விட்டு, தாயகம் சென்றடைந்து தமது இயல்பு வாழ்க்கையான மீன்பிடி தொழிலுக்கு சென்றார்கள். இராமேஸ்வரத்திலும், மண்டபத்திலும் புலம் பெயர்ந்த இலங்கை மீனவர்களுக்கு நாம் செய்த நன்றிக்கடனாக கச்சத்தீவினிக்கருகில் மீன் பிடிக்க நம்மை அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற இந்திய டிராலர் மீனவர்கள் நம்பியது நல்லெண்ணப் பிரயாணத்தில் மறைந்து போனது. இந்திய மீனவர்கள் பெசாலையைச் சேர்ந்த இலங்கை மீனவர்களைச் சந்தித்தபோது அவர்கள் கூறியது "இந்திய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செய்வது கடற்கற்பழிப்பு (rape of the sea)". தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதானே.

அரசு சாராத நிறுவனம் SIFFS ஏற்பாடு செய்த நல்லெண்ணப் பயணத்திற்கு, தமிழ்நாட்டு அரசு Tamilnadu Fisheries அப்சர்வர் கூட அனுப்பமுடியவில்லை. ஏனென்றால் யார் போவது, வெளிநாட்டு பயணத்திற்கு வேண்டிய அநுமதி எவ்வாறு பெறுவது என்ற ரெட் டேபிஸம்.

24'ம் தேதி இக்குழு மன்னாரை அடைந்தது. அங்கே குழுமியிருந்து வரவேற்றவர் திரு. விசுவலிங்கம் (மாவட்ட கலெக்டர் அந்தஸ்து), திரு. ரெவரெண்ட். ராயப்பு ஜோசப் (பிஷப், யாழ்ப்பாணம்), தந்தை தேவராஜா, லெப்டினெண்ட் காலுஹெட்டி (இலங்கை கடற்படை) உட்பட்ட பல முக்கிய நபர்கள். லோக்கல் பிபிஸியும் ஆஜர்.

இதிலிருந்தே தெரியவில்லையா? இலங்கை தனது மீனவர் பிரச்சினைக்கு கொடுக்கும் மதிப்பும் இந்தியாவில்/தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளும் கொடுக்கும் மதிப்பும்? விவேகாநந்தன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் இந்தியாவில் இல்லாதபடி "இலங்கையிலுள்ள உள்ளூர் நிறுவனங்கள் மீனவர்களின் பிரச்சினைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தன...; மீனவ சங்கங்களுக்கும் அரசு கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தன...".

இலங்கையில் தற்போது இந்தியாவிலுள்ள அளவு போல அதிக ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில்லை. தனதெல்லை தாண்டி வந்து இந்திய டிராலர்கள் மீன் பிடிக்கும் போது தமது வலைகள் அறுந்து போவதை இலங்கை மீனவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அன்றைக்கு சோறு போட்டதற்காக இன்றைக்கு வயிற்றில் அடிப்பதை அவர்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப்போவதேயில்லை.இது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.

இன்றைய இலங்கை கடற்படை எல்லை கடந்த இந்திய மீனவர்களை சுடுவதை ஒருக்காலும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால் அவர்கள் கைது செய்யட்டும். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கெட்டும்.

ஆனால் எல்லை கடப்பது, அதுவும் மரைன் டெக்னாலஜி சாதனங்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் செய்வது சட்டப்படி குற்றம் என்ற பொதுப்புத்தி நமக்கு வேண்டும்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலிகளின் கடத்தல் தொழிலில் உதவினார்கள் என்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றார்கள் என்பது திரிப்பு என்று கூறுபவர்கள் தங்களின் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளலாம் உண்மை எதுவென்று. இப்பதிவு இந்திய மீனவர்களை எதிர்த்து என்று கூடத் திரிப்பு செய்யப்படலாம் என்பதையும் நான் அறிந்தே இருக்கின்றேன்.

1983'க்கு முன்னால் பெசாலையில் ஒரு நாளில் 20 லாரி லோட் செய்யுமளவிற்கு இருந்த மீன்பிடி இன்று (2004'ல்) 2-3 லாரிகளுக்கே தள்ளாடுகின்றது. ஏன்? அவர்கள் கூறுவது இந்திய டிராலர்கள் செய்யும் "கடற் கற்பழிப்பு". வடமராட்சி மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களோடு நடந்த சண்டையில் மரித்தார். நெகோம்போவில் மீனவர்கள் நல்லெண்ண சந்திப்பில் "இது போன்ற எத்தனையோ விடயங்களை இந்திய மீனவர்கள் (கடலெல்லை கடக்காமல்) கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருந்தால் தடுத்திருக்கலாம்", என்றார்கள்.

இந்திய மீனவர்கள்தான் இன்றைய பிரச்சினைக்குக் காரணமா?

இராமேஸ்வரத்தின் கடற்கரையை டிராலர்கள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அதன் படுகை ஆழமில்லாத கற்படுகை. எனவே இலங்கை எல்லைக்குள்தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அங்கே கிடைக்கும் Tiger Prawns விடுத்து Yellow Fin Tuna பிடிக்கலாமென்றால் அதற்கு இலங்கை மீனவரிடம் போட்டி போட வேண்டும். வருடத்திற்கு சராசரியாக 28 லட்சம் டன் மீன்களை இந்தியா செய்யும் அறுவடையில், டிராலர்கள் மூலம் கிடைப்பது ஏறக்குறைய 50%. இவ்வகை டிராலர்களுக்கு டீஸல் விலை உயர்வு, இறால் விலை வீழ்ச்சி, கடற்கரையிலிருந்து மூன்று கடல்மைல் அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும், பருவ காலக் கட்டளைகள் (இராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜகதாம்பட்டினம், கோட்டைப்பட்டினம் டிராலர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலேயே மீன்பிடிக்க வேண்டும்; 15 ஏப்பிரல் முதல் ஆறு வார காலத்திற்கு டிராலர்கள் தமிழக அரசுக் கட்டளைப்படி மீன் பிடிக்க முடியாது) இவற்றையெல்லாம் தாண்டி வருமானம் பார்த்து வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயம். இராமேஸ்வரம் - நாகப்பட்டிணம் ஏரியாவில் மட்டுமே 1983-2004 வரை சுமார் 4,000 டிராலர்கள் முளைத்து விட்டன. முதலீடு சுமார் 120 கோடி இந்திய மதிப்பில். இதில் பாதி இந்திய மீனவர்கள் கடனாய் வாங்கியது. இலங்கையோடு இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ந்தால் (இருதரப்பும் சுனாமியால் பாதிக்கப்பட்டது போக) நிலைமை மேலும் கடுமையாக மோசமடையும். இந்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தன்னார்வ நிறுவனமோ, ஏனைய ஸ்தாபனங்களோ ஆய்வறிக்கைகள் மட்டுமே தர முடியும்.

மேலும் பார்ப்போம்.

Monday, April 03, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-1

ஹைபர்னேஷன் எனப்படும் "நீண்ட தூக்கம்" கலைந்தது ஒரு விதத்தில் நல்லதுதான். ரோஸாவசந்த்தின் இன்னும் எத்தனை காலம்தான் என்ற பதிவினைப் படிக்க நேர்ந்தது. முற்றிலும் மாறுபட்ட, இணையத்தில் வேறு யாரும் இதுவரை பயன்படுத்தாத பிற்போக்கு வார்த்தைகளான இந்தியா, அதன் இறையாண்மை, இந்திய கடற்படையின் நோக்கம் என்றெல்லாம் கனத்த விஷயங்களைக் கதைத்திருக்கின்றார்.

சில நேரங்களில் "இப்படியும்" சில மனிதர்கள்....என்று அலுப்போடு இப்பதிவினை நான் ஒதுக்கிவிடத் தயாராயில்லை. எனது இந்தப் பதிவு வெறும் ரோஸாவசந்திற்கு எதிரான பதில் வினை என்று மட்டுமே என்னை சுருக்கிக் கொள்ள விழையாமல், இந்திய-இலங்கை மீனவர்களின் இன்றைய உண்மையான பிரச்சினை என்ன? அதற்கு மாற்று என்ன என்று வரும் பதிவுகளில் விவரமாக அலச உத்தேசித்துள்ளேன்.

அரசியல் முடிவுகள் அனைத்துமே பிற்காலத்தில் நன்மை பயக்குமென்று கூறிவிட முடியாது. அதுவும் இந்தியா போன்ற வலுவான ஜனநாயக நாட்டில் முடிவுகளின் பலன்களை "அரசியல்வாதிகளின் நோக்கங்கள்" மட்டுமே தீர்மானிப்பதில்லை.

11, டிசம்பர் 1971: கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷ் ஆக்கியதன் பலனை இன்னமும் பாகிஸ்தானின் காஷ்மீர் ஊடுருவல் மூலம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். சரி இந்தியாவால் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷாவது நம்மோடு நட்பு பாராட்டுகின்றதா என்றால் அதுவும் இல்லை. பங்களாதேஷ் தேசியவாதிகளின் கட்சியின் (Bangaladesh Nationalist Party) தலைவரான பேகம் காலீதா ஜியா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகளை "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று புகழாரம் சூட்டியவர். பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கூட இந்திய இறையாண்மைக்கு காஷ்மீரில் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை அவ்வாறே விளிப்பார். இதைத்தான் தலைவலி போய் திருகு வலி தேடிக் கொள்வதென்பார்கள். இருப்பினும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இருந்தவரை பங்களாதேஷோடு இருதரப்பு உறவுகள் நன்றாகத்தான் இருந்தன. அப்படியிருப்பினும் டின் பிகாவை (Tin Bigha) இந்தியா பங்களாதேஷிற்கு குத்தகைத் தாரை வார்த்தது. இதன் குறித்த இப்பிரச்சினையின் ஒப்பீடு வரும் பதிவுகளில் விளக்கமாக ஆராயப்படும்.

28 ஜூன் 1974: கச்சத்தீவை இந்திரா இலங்கைக்குத் தாரை வார்த்து கொடுத்தார். இந்திராவின் கூற்றுப்படி கச்சத்தீவு ஒரு "யுத்த தந்திரப்படி முக்கியமில்லாத வெறும் பாறை". ஆனால் அப்பாறையைச் சுற்றி Tiger Prawns எனப்படும் இறால் மீன்கள் அதிகம். இராமேஸ்வரம் மற்றும் இதர கரைகளிலிருந்து தமிழக மீனவர்களை இப்பாறை தொடர்ந்து ஈர்த்தது. 1974'ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் தலைமுறை வழக்கப்படி (traditional rights) மீன் பிடிக்கும் உரிமையையும், புனித அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதியும் பெற்றார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் 5'வது ஷரத்து சொல்கின்றது "இந்திய மீனவர்களும், பக்தர்களும் கச்சத்தீவிற்கு தாராளமாக விரும்பும் போது செல்ல இதன்மூலம் வழிவகை செய்யப்படுகின்றது. இதற்காக இலங்கையிலிருந்து பயண ஆவணங்களோ விசாவோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

6'வது ஷரத்து: இந்தியா மற்றும் இலங்கையின் கலங்கள் தலைமுறைகளாக இருந்து வரும் வழக்கப்படி இருவருக்கும் சொந்தமான கடற்பரப்பில் தொடர்ந்து இயங்கி வரும்.

கச்சத்தீவினை தானம் கொடுத்தவுடன் இந்தியாவிற்கு இலங்கையின் அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட விதயங்களிலேயே (தற்காலிகமாகவே) இருந்தது வந்தது. இன்றைய தமிழக/இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இந்திராவின் கச்சத்தீவு முடிவே தொடக்கமென்றாலும், 1974 ஒப்பந்தம்தான் தெளிவாக இருக்கின்றதே? அதன் ஷரத்துகளை தீவிரமாக செயல்படுத்துவதின் மூலம் பிரச்சினைக்கே முற்றுப் புள்ளி வைக்கலாமே?

கச்சத்தீவு பிரச்சினையில் மேற்கூறிய டின் பிகா சம்பவத்தை இக்கணத்தில் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது, எனது அடுத்த பதிவுகளில் இது குறித்து விரிவாக எழுத எண்ணங் கொண்டுள்ளேன்.

ரோஸா கூறுவது போல இது வெறும் என்பது ஒரு இலங்கை ராணுவம் மட்டுமே இந்திய மீனவர்களைக் தாக்குகின்றது பக்க கதை. 1983'லிருந்து 2002 வரை மொத்தம் 112 இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஹிந்துவின் இணையதளம் (Frontline) கூறுகின்றது. ஹிந்து பத்திரிக்கையை பினாயில் ஊற்றி தேடிப்படிக்கும் ரோஸாவசந்திற்கான செய்தி இது.

3 & 5 மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?

கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை தன் "உறுப்பை" நுழைத்தாலும், ரோஸாவசந்த் கூறுவது போல "தன்னிச்சையாய்" குறியை அறுக்க முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான "உத்தரவின்றி" இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகளா என்று ரோஸா கேட்பது நல்ல நகைச்சுவை. அங்கதம்/நகைச்சுவை' பிரிவில் அவர் தனது பதிவை தேன்கூடில் பதிவு செய்து கொள்ளலாம்.

//இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்?//

ஐய்யா ரோஸா! GPS (Global Positioning Syatem) இல்லாமலேயே ஆதிக்காலத்திலிருந்து கடற்வலம் வந்தவன் தமிழன். "அறியாமல்" அடுத்தவரின் கடலெல்லைக்குள் நுழைந்த சாதாரணப் படகுகள் என்று சால்ஜாப்பு வேண்டாம். நுழைந்தது சாதாரணப் படகுகள் கிடையாது. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்.

//புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே!//

ஓ... இதுதான் உங்களின் தார்மீகப் பிரச்சினையா? நானென்னவோ உங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு விளக்கம் அளிப்பதாய் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பிரச்சினை ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும், தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது.

//தமிழகத்து கடற்கரையில் நிலைகொண்டிருக்கும் கடற்படையின் ஏதோ ஒரு அட்மிரலோ, கமாண்டரோ, ஒரு வடக்கத்தியான், 'நாங்கள் எதற்காக அவர்களை மனிதாபிமான அடிபடையில் அனுமதிக்க வேண்டும்?' என்று டீவியில் தர்க்கபூர்வமாய் கேட்க, இங்கே ஆட்சியில் இருந்த திமுக அரசு தன் மாபெரும் துரோகத்தை மௌனத்தின் மூலம் நிகழ்திக் காட்டியது. //

அருமையான தர்க்கம் ரோஸா. இந்திய இராணுவப் படைகளில் கூட வடக்கு, தெற்கு கலாச்சாரமா? நன்றாக அந்த வடக்கத்தியானை உற்றுப் பார்த்தீர்களா? அவன்(ர்) கைபர் போலன் கணவாயைக் கடந்து வந்தவனாக இருப்பானே(ரே)? முடிந்தால் அந்த வடக்கத்தியான் பார்க்க பார்ப்பனனாய் இருந்தான் என்று சொன்னீர்களானால் உங்கள் பதிவு இன்னும் வர்ணாசிரமக் களை கட்டும்.

இந்தியப் படைகளில் இதனாலேயே சாதி/இன/மத/மொழி அடிப்படையில் ரிஸர்வேஷன் வேண்டும் என்று நீங்கள் கூக்குரலிட்டால் நீங்கள்தான் அல்டிமேட் அறிவுஜீவி.

//இந்திய அரசை இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிர்பந்திக்க, எந்த வடிவத்திலாவது போராட்டம் நடந்திருக்கிறதா? சம்பந்த பட்ட மீனவர்கள், மற்றும் சில தமிழ் தேசியவாதிகளை தவிர மற்றவர்கள் ஏன் சக இந்தியர்கள் கொல்லப் பட்டதை பற்றி வாய் திறக்கவில்லை?//

அடடே ரோஸா "சக இந்தியர்கள்" பற்றி பேசுகின்றார். வரவேற்கக் கூடிய விடயம். தேர்தல் நேரத்து அரசியல் கட்சிகளின் அறிக்கை போன்று அவரது சமீபத்திய பதிவு இருக்கக்கூடாதென்று நம்புகின்றேன். தமிழ் தேசியம் பேசும் வாதிகள் இந்தியா, இறையாண்மை என்று பேசும் போது அதன் அதிர்வெண் பற்றி சந்தேகமெழுவது இயற்கையே. இருப்பினும் காத்திரமான பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்பது ரோஸாவின் உண்மையான விழைவென்றால் அதற்கான முழு ஆதரவு என்னிடமிருந்து அவருக்குண்டு. அதைவிடுத்து "பீயள்ளும் நிலைமையை அழிக்க பீ பேலுபவர்களை ஒழிக்க வேண்டும்" என்ற தங்கமணியின் ரீதியான தர்க்கத்தை ரோஸாவும் சுவீகரித்திருந்தால் மன்னிக்கவும். எனக்கு தர்க்கம் புரிய வேறு தலைப்புகளுண்டு.

ரோஸாவின் பதிவில் பின்னூட்டமிட்ட இரா.கி. //இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை.// என்று தெரிவிக்கின்றார். இதற்கும் எனக்கு எதிவினைக் கருத்துகள் உண்டு. அவற்றைப் பதிவிட எல்லாம் வல்ல ஏதோ ஒருவன் எனக்கு அருள் பாலிப்பானாக! இருப்பினும் அவரது கருத்தாக தனது பின்னூட்டத்தில் //என் கோவமெல்லாம் நடுவண் அரசின் அரசியலாரிடமோ, அதிகார வருக்கத்திடமோ கிடையாது; நமக்கென்று வாய்த்திருக்கிறார்களே ஒரு சில தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தான். உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம் பேசி என்ன பலன்?// என்று குறிப்பிட்டதற்கு நான் முற்றிலும் உடன்படுகின்றேன். ரோஸா இதற்கு உடன்படவில்லை என்பதால் அல்ல இம்முடிவு.

Wednesday, March 29, 2006

தவமாய் தவமிருந்து


மார்ச் 5, 2006

எல்லோருக்கும் விடிவது போலவே ஷ்யாம் சுந்தருக்கும் விடிந்தது. ஆனால் அந்த விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. ஆம். ஷ்யாம் சுந்தர் இறந்து போனார். இறப்பது ஒரு விபத்தா? இல்லவே இல்லை. ஜனித்தவை மரிக்க வேண்டும். இயற்கையின் சுழற்சி. ஆனால் மரிக்கும் முறையை யார் தீர்மானிப்பது?

ஷ்யாம் சுந்தரின் மனைவி தீபா. கணவனை இழந்த துக்கத்தில் 3 வயது மகளை நினைத்து, குமுறுகின்றார். தீபாவின் இழப்பு ஏனையோரின் இழப்பை விட எவ்வகையிலும் உயர்ந்ததா? ஷ்யாமை அவரது பெற்றோர் தவமாய் தவமிருந்து பெற்றிருக்கலாம். அப்பாவே பிள்ளைக்கு கொள்ளி வைப்பது புதிதான ஒன்றா?

ஒவ்வொரு நாளும் கணவரோ, மனைவியரோ, மகனோ, மகளோ ஏதாவதொரு பந்தம் இப்பூவுலகை விட்டு விடுதலையாகிக் கொண்டுதான் இருக்கின்றது. வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வது 99.9% நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் ஷ்யாம் சுந்தர் மரணம் காத்திருப்பது தெரிந்தும் அதைத் தேடிப் போனவர். அவர் "திரு" என்ற அடைமொழியை விட இராணுவ "மேஜர்" என்னும் அடைமொழிக்கு உரித்தானவர். இந்திய இராணுவத்தில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் தோட்டா துளைத்து வீர மரணமடைந்தார்.

மேஜர் ஷ்யாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பாவம் இவருக்கு தமிழ் தேசியம் பற்றி தெரிந்திருக்குமா?

கடந்த சில காலமாக தமிழ் ஊடகங்களை ஆழமாகக் கவனித்து வாசித்து வந்தேன். இதே மேஜர்.ஷ்யாம் ஒரு கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளகியிருந்தாரென்று வைத்துக் கொள்வோம். உடனே அவர் தமிழ் வலைப்பதிவாளர்களின் "நட்சத்திரம்" ஆகிவிட்டிருப்பார்.

ஆமாம் அவ்ர் வாங்கிய சம்பளத்துக்கு பதிலாகத்தானே உயிரை விட்டிருக்கின்றார். அவர் ஒன்றும் இலவசமாக உயிர் துறக்கவில்லையே? இலவச ரேஷன், இலவச வீடு, படிகள், மானியங்கள், அரசு உத்தியோகத்தில் 1% ரிஸர்வேஷன் போன்ற பல சலுகைகளை அனுபவித்தவர் தானே?

மேஜர் ஷ்யாம் மரணம் பற்றி நான் பார்த்த வரையில் வெகுஜன ஊடகங்களின் வரிசையில் "குமுதம் பப்ளிகேஷன்ஸ்" மட்டுமே செய்தி வெளியிட்டு இருந்தது. இறக்கும் ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும், அதுவும் சண்டையில் உயிர் துறப்பவனுக்கு என்ன மரியாதை என்று அமெரிக்காவில் பார்த்த பின்னரே அறிவேன்.

எனது வருத்தம் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது மீடியாக்களில் அதுவும் வலைப்பதிவுகளில் ஒரு குறைந்த பட்ச செய்தி ஆகும் தகுதி கூடப் பெறவில்லையே என்றுதான்.

இச்சமயத்தில் உயிர் மற்றவர்களுக்காக இறப்பதற்காகவா என்று தனது தடாகம் வலைப்பதிவில் நியாயமான கேள்வியெழுப்பிய சக வலைப்பதிவர் சுருசல் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

மறைந்த மேஜர். ஷ்யாம் சுந்தருக்கு என் வீர வணக்கங்கள்! அன்னாரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஜெய்ஹிந்த்

படம்: மேஜர். ஷ்யாமிற்கு மெட்ராஸ் ரெஜிமெண்ட்டின் இராணுவ மரியாதை.
நன்றி: நியூஸ் டுடே நெட்

Sunday, April 10, 2005

ஆடிப் பிம்பங்கள்

இடவலமாய்ப் பிரித்துப் போட்டாலும்
உயர்வுமனப் பிறள்வு உடைந்த நேரம்
பாதரசப் பூச்சு பல்லிளித்தாலும்
பிம்பத்தில் முதல் திடுக்கிடல்

கனவுக்கும் நனவிற்கும் நடுவே
கட்டமைத்த பிம்பமா இது?
முக அளவிலேயே முற்றும் போடத் தோன்றியது
ஆளுயரத்திற்கு அவசியமில்லை

அகத்தின் அழகினை முகப்பூச்சால் மெருகேற்றி
அயலானை அங்கலாய்க்க வைத்து
வாழ்க்கையில் ஏமாந்தது யார்?
ஏமாற்றியது யார்?

நரையென்பது நிறையா குறையா?
இறுக்கம் தளர்ந்த தசைநார்கள் சிரிக்கின்றன
காய்ந்த சருகொன்று காற்றினில் உதிர
ஆடிப்பிம்பமொன்று உடைந்து போனது
சிதறிய ஒவ்வொரு சில்லிலும்
தொலைத்த வாழ்க்கையின் பிம்பம்

Tuesday, March 08, 2005

நிதர்சன நட்பு

பறை இழந்தவன் கைபோலே
வள்ளுவன் எழுதா வாக்கியம்
அரைஞாண் அரணில் கோவணம்

Sunday, February 27, 2005

இயந்திர நட்டங்கள்

எங்கேயோ பார்த்து ரசித்தது
நீலம்பாரித்து பாதரசமிழந்த
விழித்திரையில் பிம்பமாய்

எப்போதோ கேட்டு மகிழ்ந்தது
தேய்ந்து சுரங்கெட்ட
செவியில் திகிரியாய்

என்றும் உணர்ந்து சுகித்தது
திகட்டி இராசயனமறந்த
தசையில் தீண்டலாய்

எவரோ ஊட்டி களித்தது
சுவைகெட்டு சாத்வீகமில்லா
நாவரும்பில் காளானாய்

எக்காலமும் நுகர்ந்து முகிழ்த்தது
வியர்வையுறைந்து நாற்றமுணரா
மூக்கில் முக்தியாய்

ஆற்றல் தருவதே இயந்திரம்
இயந்திரங்களா தீர்வு
பயனில்லா யந்திரத்திற்கு


வருவதைதான் முடிவு செய்யவில்லை
கருணை வையுங்கள் தயவுடன்
தருக்குடன் போவதையாவது

Tuesday, February 08, 2005

ஓட்டமும் சில உண்மைகளும்

நீர்த்துவாலையாய் அணுக்கள்
ஓடையைப் போல் துவங்கும்
வாழ்க்கையின் ஓட்டம்

எதிர்கால ஏக்கங்கள்
எதுவும் தெரியாமல்
நீர்க்குடத்தில் நிம்மதியாய்

உண்ண உணவு
உறைய இடம்
உடுப்பதை உதறி

அருவியாய் வேகம்பிடித்து
தலைகீழ் பயணம்
அந்தோ கொடியறுந்தது

மலைகளைப் போல்
வேகம் தாங்கும்
அன்னையின் நேசம்

ஆர்ப்பரித்து அடங்கி
அகண்ட காவிரியாய்
நிதானமாய் சிலநேரம்

முடிவு தெரிந்தாலும்
கரிப்பு இலக்கினை
மறக்கச் செய்த துணையாறு

போகின்ற போக்கில்
முளை விட்டுப் போன
சில கிளையாறுகள்

இறுதியை எய்ய
சாக்கடை நோய்கள்
சங்கமித்து உதவும்

பள்ளத்தை நோக்கியே
பாய்ந்து விட்டோமா
குறுகுறுக்கும் மனம்

நதியாவது பரவாயில்லை
அணையால் அவ்வப்போது
வந்த பாதை திரும்பிப் பார்க்கும்

மனித ஓட்டத்தை மறிப்பதென்ன?
பிரிவென்பதும் அணைதான்
வாழ்வின் துலாக்கோலாய்

Thursday, January 27, 2005

காட்சிப் பிழைகள்

தட்ஸ்தமிழ்.காம் தளத்தில் வெளியான சிறுகதை

(சுனாமிக்கு முன்னாள் எழுதியது)

காலை நான்கு மணிக்கு ஏர்போர்ட் சவாரி ஆரம்பித்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. எங்காவது ஓரமாக ஒதுங்கி டீ குடிக்கலாமென்றாலும் முடியவில்லை. எப்போதோ பிய்த்துப் போட்ட இட்லி சீரணமாகி வயிறு கரபுரவென்று சத்தம் போட ஆரம்பித்தது.

இன்று யார் முகத்தில் முழித்தேன்? ஓய்வின்றி சவாரிகள்தான். பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு முதிய தம்பதியை இறக்கி விட்டவுடன், இன்றைக்கு இதுவே கடைசி சவாரியென்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன்.
ஆனாலும் லட்சுமி தேவி என்னை விடுவதாகத் தெரியவில்லை. ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் கைகாட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்கள். அவர்களது சைகை ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தோன்றியது. நிறுத்துவது போல் வேகம் பிடிக்கும் பல்லவனைப் போல தப்பிக்க மனம் சொன்னாலும், முடியாமல் ஆட்டோவை நிறுத்தினேன்.

"மெரினா பீச் போகணும்", வாலிபன்தான் பேசினான்.

அடச்சே இதுதான் அவசரமா? ஏன் பஸ்ஸ¤ல போகக்கூடாதா?

"மீட்டர் சார்ஜ்தான். பரவாயில்லையா?", வேண்டா வெறுப்பாய்ச் சொன்னேன். சென்னைவாசிகள் பெரும்பாலும் 'பேசிக்கலாம்ப்பா' என்றுதான் சொல்வார்கள்.
அப்படிச் சொன்னால் ஜீட் விடலாமென்று நினைத்தேன்.

"பரவாயில்லை. போகலாம்." வாலிபனின் பதில் ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஆட்டோவினுள் ஏறிக் கொண்டார்கள்.

சென்னையில் கொஞ்சம் காசு அதிகமாக உள்ளவர்கள் இப்போதெல்லாம் கால் டாக்ஸியைத்தான் கூப்பிடுகின்றார்கள். என்னைப் போல் சூடு வைக்காமல் நியாயமாய் ஆட்டோ ஓட்டுபவர்களையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார்கள். மதுரையில் பட்டப் படிப்பு படித்து, சென்னையில் வேலை கிடைக்காமல் அலையும்போது, நந்தாலால் சேட்டின் புத்திமதி மற்றும் கருணையோடு இப்போது ஆட்டோ ஓட்டுகின்றேன். நேர்மையால் நன்மை கிட்டாமல் இல்லை. ஷேர்டு வேனில் இடம் கிடைக்காதோர், பள்ளிக் குழந்தைகளென்று ரெகுலர் சவாரி கிடைப்பதால் கையைக் கடிக்காமல் நாள் ஓடுகின்றது.

உள்ளூர ஓடிய சிந்தனைகளை பின்சீட்டில் நடந்த உரையாடல் கலைத்தது. ஓட்டும்போது பொதுவாக ஒட்டுகேட்கும் வழக்கம் எனக்கில்லை. யாராவது வலிய பேச்சுக் கொடுத்தாலொழிய பதில் பேசாமல் பெரும்பாலும் போக்குவரத்திலேயே என் கவனம் இருக்கும். இருப்பினும் ஆரம்பத்தில் முணுமுணுப்பாய் பேசியவர்கள் நடு நடுவே உரத்தும் பேச ஆரம்பித்தார்கள். என்னையும் மீறி அந்த ஜோடியின் உரையாடலில் ஆர்வம் கூடியது.
ரியர் வியூ கண்ணாடியை லேசாக நகர்த்தி அவர்களை மேலோட்டமாக நோட்டமிட்டேன். அவர்களோ தமது பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள். வழக்கமாக மெரீனா செல்லும் ஜோடிகள் போலின்றி அவர்கள் இருவரும் நெருங்கி கைகோர்த்து அமர்ந்திருக்கவில்லை. இந்தப் பெண்ணோ தன் கைகளை முன்னே கோர்த்து, தலையைக் கவிழ்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். இளைஞனோ சற்றே அவள் பக்கம் திரும்பி கிசுகிசுப்பாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"... ஒரு வழியாய் நிச்சயம் முடிஞ்சாச்சு...", பெண் கூறினாள்.

"... இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நானும் நம்பலே பிரியா..."

எப்படித்தான் அவர்கள் பேச்சில் மூழ்கினேனோ தெரியாது. ஓவர்டேக் செய்ய முயன்ற வெள்ளை அம்பாசடரை சைடு கொடுக்காமல் ஏறத்தாழ இடித்திருப்பேன்.

"ஏய்... கஸ்மாலம் ரோட்டைப் பாத்து ஓட்டுமே", அம்பாசடர் டிரைவர் தலையை நீட்டி திட்டியதும் அவமானமாயிருந்தது. ஜோடி கேட்டிருக்குமோவென மீண்டும் கண்ணாடியை நோக்கினேன். இச்சம்பவத்தில் பின்சீட்டுக்காரர்கள் அதிக அக்கறை காட்டியது மாதிரி தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்.

மாலை வேளையானதால் வெளியே போக்குவரத்து அதிகமாகிவிட்டிருந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் விட்டால் ஆட்டோ உள்ளேயே வந்து விடுவார்கள் போல் உரசியபடி சென்றார்கள்.

"பத்திரிக்கையெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?"

"ஆமாம் செல்வா."

"கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட தனியா பேசவே முடியாதோன்னு நினைச்சேன்"

"இனிமே இப்படி சந்திக்க முடியுமென்று எனக்கும் தோணல"

இப்போது அவர்களது பேச்சின் உள்ளர்த்தம் ஓரளவு புரிய ஆரம்பித்தது. 'அடப் பாவிங்களா... என்ன பட்டணம் வாழ்வுடா இது? நிச்சயமான பொண்ண எவனோ ஒருத்தன் பீச்சுக்குத் தள்ளிட்டுப் போறான். இந்தப் பொம்பளையும் கூடப் போகுதே?'

உள்ளுணர்வு நமக்கெதுக்கு வம்புபென்று எச்சரித்தது. கடைசி சவாரி இப்படியா முடியவேண்டும்? எரிச்சல் படர்ந்தது.

ஒருவழியாய் பீச் வந்தாயிற்று. ஒழியுங்கள் சனியன்களா என்று மனதில் சபித்தபடி மீட்டர் காசு வாங்கினேன்.

"இந்தாப்பா...இதை வச்சுக்க", என்று மேலும் ஐந்து ரூபாயை என் கையில் திணித்தான். மனக்குரங்கை அதற்கு மேல் அடக்க முடியவில்லை.

"மீட்டருக்கு மேல வேண்டாம் சார். நிச்சயமான ஒரு பொண்ணை இப்படி தள்ளிக்கிட்டு வந்திருக்கீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஏம்மா இது உன்னோட வாழ்க்கைப் பிரச்சினை இல்லே? உனக்கெதுக்குடா இதெல்லாம்...பொத்திக்கிட்டு போன்னு வேணாலும் சொல்லுங்க. சீய் இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்றபடி ஆட்டோவினுள் நுழையும் போது இளைஞனின் குரல் தடுத்தது.

"நீங்க எங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போலிருக்கு. நாங்கதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவசர அவசரமா நிச்சயம் நடந்ததால எங்களுக்குள்ள பேசிக்க அதிக நேரமில்லை. அதான் கல்யாணத்துக்கு முன்னாடி பீச்சுல சந்திக்கலாம்னு முடிவு செஞ்சோம். வர பதினைஞ்சு வடபழனியில எங்க கல்யாணம். முடிஞ்சா நீங்க கண்டிப்பா வரணும்."

செருப்பாலடித்த மாதிரியிருந்தது. "மன்னிச்சுக்குங்க சார். அம்மா நீங்களும் தான். தப்பா புரிஞ்சுக்கிட்டேன்", திக்கித் திணறி பேசி, திரும்பிப் பார்க்காமல் ஆட்டோவைக் கிளப்பி அவசரமாய் இடத்தைக் காலி பண்ணினேன்.

பீச்சில் இளஞ்சூட்டு மணலை கிளறியபடி செல்வா பேசினான், "இனிமே உங்க அப்பாவிடம் பேசி புண்ணியமில்லை. வர்ற பதினைஞ்சாம் தேதி காலை பத்து மணிக்கு பிரண்ட்ஸோட வடபழனி வந்துடறேன். நீயும் கரெக்டா வந்துடு. தாலி கட்டிய கையோட ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம். ஏற்கெனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இதுதான் நம்ம காதல் பிழைக்க ஒரே வழி. சரியா பிரியா?"

Wednesday, January 26, 2005

நினைக்க மறந்தவை

வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது
பாலைவனத்தில் மழை அறியாதது
அமெரிக்க பாலைவனத்தில் மழை
புஷ் வெற்றியாலென ஆத்திக அமெரிக்கர் களிக்கவில்லை

காகிதக் கப்பல் செய்ய நேரமெனக்கில்லை
என் பிள்ளையும் கவலையுறவில்லை
வேர் மறந்த செடியோ?
கேள்வியும் எழவில்லை

அரையிருட்டில் மனைவியின் குரல்
நாட்குறிப்பு மூளையிலோடியது
புணர்ச்சிக்கான நாளில்லையிது
எரிச்சலுடன் எழும்பினேன்

'பேடியோ' ஆன முன்னாள் திண்ணையில்
இருளின் நிறத்தில் பூனை
குப்பைப் பைகளின் கதகதப்பில்
சுருட்டிய டாலராய்

மழைத்துளிகள் மேனியில் மினுத்தது
பூனையும் என்னைப் போலவே எரிச்சலில்
ஏனெழுப்பினாய் என்று

இயலாமையில் என்னைப்போலவே
ஆனால் மௌனம் தொலைத்த அதன்
ஈனஸ்வர அழுகை

சகுனம் பார்க்கும்
மனைவியின் மனதிலும் ஈரமுண்டானது
ஓ... மழையின் மகிமையோ?

ஒரு காலத்தில் செல்லமாய் வாழ்ந்திருக்க வேண்டும்
கொழுப்பில்லா பாலை திருப்தியாய் நக்கியது
தினமும் அண்டுமோவென்ற கவலையெனக்கு

கிரீன் கார்டும், அடுத்த ஒப்பந்த வேலையும்
மனதை ஆட்கொள்ள மறந்தேபோனேன்
விதவையாய் காப்பகத்தில் இட்ட அம்மாவை

Friday, January 21, 2005

வலைப்பூ நண்பர்களுக்கு

ஞாநியைப் பற்றிய எனது இரண்டு பதிவுகளை ரோஸாவஸந்த் என்பவர் பாராட்டி பின்னூட்டங்கள் இட்டிருந்தார். பின்னர் அப்பின்னூட்டங்களை நீக்கும்படி தனியஞ்சலில் கடிதம் எழுதியிருந்தார். பின்னூட்டம் இடுவதும், அதை நீக்கும்படி கோருவதும் அவரது தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட நான் விரும்பவில்லை.

எனது பதிவுகளில் அவரது பின்னூட்டங்கள் தானாக நீக்கப்பட்டிருந்தது. யார் நீக்கினார்கள்? எவ்வாறு நீக்கினார்கள் என்று இன்றும் விளங்கவில்லை. பின்னூட்டம் விட்டவரே அழிக்க முடியுமா? பிளாக்கரின் தொழில்நுட்பம் விளங்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக கோபமாக அவர் இன்னொரு பின்னூட்டமும் விட்டிருக்கின்றார். அவரது கோபம் படிப்பவர்க்கு ஏதோ நானே அவரது பின்னூட்டங்களை நீக்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தலாம். ஆனால் நான் அவரது பின்னூட்டங்களை நீக்கவில்லை.

அவரது வேண்டுகோளின் பெயரில் நானே நீக்க நினைத்திருந்தேன். வலைப்பூ என்பது எனது வாசஸ்தலம். அங்கே புழங்குவது எனது உரிமை. அதை விமர்சனம் செய்ய யாவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் தானே விமர்சனம் செய்து, பின்னர் பின்னூட்டத்தை அழிக்கும் உரிமையும் அவர்க்கே உண்டென்பது ஆபத்தானது.

பின்னூட்டத்தைப் போலவே நாளை நமது வலைப்பதிவுகளையும் 'ஹேக்' செய்யமுடிமோ?

Friday, January 14, 2005

ஞான சூன்யத்தின் பார்வைகள்

வெ.சா. மற்றும் ஞாநி அவர்களின் கடிதங்கள் 6/1/05 திண்ணை பதிவில் படித்தவுடன் விவரிக்க இயலாத வியப்புக்கு உள்ளானேன். கருத்து சுதந்திரம் என்ற பதமே அர்த்தம் இழந்து சைபர் மற்றும் அவதூறு சட்டங்களின் கட்டமைப்பில் சங்கடங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றதோ என்ற ஐயப்பாடே எனக்குள் மேலோங்குகின்றது.

நாணயத்தின் இருபக்கங்கள் போல எக்கருத்திற்கும் எதிர்வினையுண்டு. ஞானி சொல்வது போல் 'பொது நாகரீகத்திற்கு' உட்பட்டு தாம் வேண்டும் எதிர்வினையைப் பதிய யாவர்க்கும் உரிமையுண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த நாகரீகத்தின் வரையறை யாது? நாகரிகம் என்பதே ஒப்புநோக்குவதன்றோ? நிர்வாண உலகில் கோவணம் கட்டியிருப்பது நாகரீகம் என்பது ஒவ்வாமைதானே? ஆப்கானிஸ்தான் ஆடையலங்காரத்தை 'ஆர்மானி' கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா?

முதலில் திரு. ஞாநி அவர்களின் கடிதத்தைப் பார்ப்போம். 'ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை' என்று மாயவரத்தான் அவர்கள் திண்ணையில் கடிதம் வெளியிட்டார். அதற்கு பதில் சொல்லியிருக்கும் ஞானி அவர்கள், திண்ணை மின்னிதழும், மாயவரத்தானும் 'பகிரங்க மன்னிப்பு' கேட்க வேண்டுமென 'அன்புடன்' மிரட்டியிருக்கின்றார். இங்கு நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இருவரது கருத்துகளையும் சீர் நோக்கிப் பார்ப்போம்.

மாயவரத்தான் தனது கடிதத்தில் ஞாநியின் 'பார்ப்பனீய எதிர்ப்பை' அவரது 'இயலாமையே' காரணமென்று இடித்துரைத்திருந்தார். ஞானி போன்ற இலக்கியவாதிகளின் இயலாமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாரப்பத்திரிக்கைக்கு மூடுவிழா நடந்ததையும் குறிப்பிட்டு எழுதினார்.

அதற்கு ஞாநியிடமிருந்து வந்த பதில் அணுகுண்டு அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. முதலில் நான் சொல்ல விரும்புவது மாயவரத்தான் என்ற 'போர்வையில்' யாருமில்லை. அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். அவரது பெயர் கி.ரமேஷ்குமார். அவரது ரூபக்குறிப்பை இந்த வலைப்பூ சுட்டியில் காணலாம். ஏறத்தாழ ஞாநியின் பத்திரிக்கை அனுபவ காலத்தை தனது வயதாக கொண்டிருக்கும் மாயவரத்தான் தனது கண்ணோட்டத்தில் ஞாநியை கண்டனம் செய்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக 'சைபர் மற்றும் அவதூறு சட்டங்களை' பாய்ச்சுவேன் என்று சீறுகின்றார் ஞாநி. எனக்குத் தெரிந்த வகையில் தேர்ந்த கடைநிலை அரசியல்வாதியின் நிலைப்பாடுதான் இது. எதிர்வினையை எதிரி வினையாய் பாவிப்பதுதான் அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவமா? பத்திரிக்கை சுதந்திரத்தை கடைச்சரக்காய் பயன்படுத்தும் ஜெ'யின் புகழ் பாடும் ஞாநியின் உள்மனது புரிகின்றது.

ஜூனியர் போஸ்ட் வார இதழின் ஆசிரியராய் 30 ஆயிரம் பிரதிகளை 80 ஆயிரம் பிரதிகளாய் விற்பனையை உயர்த்தியதாய் ஞாநி தெரிவிக்கின்றார். அவரது திட்ட மேலாண்மை திறனுக்கு வாழ்த்து தெரிவிப்போம். அதே சமயம் சட்டங்களைப் பாய்ச்சுவேன் என்னும் அவரது உயர்மனப்பிறள்விற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.

இதற்கு பதிலாக மாயவரத்தானும், திண்ணையும் மன்னிப்பு கேட்ட கடிதங்களை ஞாநி படித்தாராவெனத் தெரியவில்லை. வெ.சா. கடிதம் போலவே பகடிக்கு சிறிதும் குறை வைக்காமல் அவர்களது பதில் கடிதங்கள் இருக்கின்றன. ஞாநியின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு களையப்பட்டதில் எமக்கும் மகிழ்ச்சியே!

'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று எம்ஜியார் போல பாடத் தோன்றுகின்றது. ஞாநியின் 'சபாஷ் ஜெ' கட்டுரைக்கு எனது எதிர் வினையை that's Tamil.com வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். என்மீது சைபர் சட்டத்தை ஞாநி இன்னும் பாய்ச்சவில்லை.

இம்மாதிரி அரை வேக்காட்டு கட்டு-உரைகளுக்கு எதிர்வினை எழுதி எனது நேரத்தையும், படிக்கும் வாசகர் நேரத்தையும் வீணாக்கியமைக்காக...

ஞாநி அவர்களே இந்த ஞான சூனியத்தை மன்னியுங்கள்!!!

கைமாறு

ஊழித் தாண்டவமது
உதவிக்கரம் நீட்ட பேராசைதான்

கிழிந்த ஆடை
சூட்டை மறந்த அடுப்பு
நசுங்கல் ஏனங்கள்
எலும்பு துருத்திய பிள்ளைகள்
இயலாமையின் சின்னங்களாய் இளித்தன

இரத்தமிழக்கும் பேனாவில்
நைந்து போன சாணித்தாளில் பிறந்தது
கடவுளைக் கண்டிக்கும் கவிதை

உலர்ந்த நாவில்
எஞ்சிய எச்சிலில்
கடனுக்கு ஸ்டாம்பு வாங்கி
வாரநாவலுக்கு அனுப்பியபோது
ஏளனமாய்ப் பார்த்தாள் மனைவி

அருமையான பதிவென்று
கடிதமுடன் காசோலை

சுநாமி நிவாரணத்துக்கு
பணம் கொடுத்து
இயலாமையை இகழ்ந்தேன்

கவிதைக்கு கண்டன கடிதங்கள்
அடுத்த இதழில் வந்ததை
காசு கொடுத்து படிக்க முடியவில்லை

Saturday, December 25, 2004

தமிழ்நாட்டில் நிலநடுக்கம் சுட்டி

முதல் சுட்டி : thatstamil.com

உயிர் மற்றும் பொருட்சேதமில்லை என்று வலைத்தளம் கூறுகின்றது.

தமிழ்நாட்டில் நிலநடுக்கம்???

இப்போதுதான் கேள்விப்பட்டேன். இன்று (சற்று முன்னர்) சென்னை, கடலூர் மற்றும் காரைக்காலில் நிலநடுக்கம் ஏற்பட்டதென்று. இங்கு எனக்கு தமிழ் சேனல்கள் பார்க்கும் வாய்ப்பு கிடையாது. திருவல்லிக்கேணியில் கடல் நீர் புகுந்து விட்டதாக கவலையுடன் உறவினர் கூறினர். மெரினாவில் காலை நடைக்கு சென்றவர் காணாமல் போனதாகவும் சொல்கின்றனர். இணையத்தில் செய்தி எதுவும் இல்லை. விபரம் அறிந்தோர் செய்தி பரிமாறிக் கொள்வீர்களா?

கவலையாக இருக்கின்றது.

Wednesday, December 22, 2004

சபாஷ் ஞாநி

திரு. ஞாநி அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அவரும், சின்னக்குத்தூசியும் இணைந்து சங்கராச்சாரியாரை முன்னர் எடுத்த பேட்டியில் இருக்கும் 'சரக்கு', இக்கட்டுரையில் சுத்தமாக இல்லையென்கின்ற ஆதங்கம் பிடுங்கித் தின்கின்றது. வலைபூக்களில் இக்கட்டுரையை விமர்சனம் செய்த சிலர் 'தட்டையாக இருக்கின்றது' என்றார்கள். உண்மைதான். ஞாநியின் எழுத்து வன்மையைப் பற்றி அறிந்த பலருக்கும் இந்த வாசிப்பு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அனைத்து ஊடகங்களிலும் வரும் மறுப்பை (Disclaimer) நானும் முன்னரே சொல்லி விடுகின்றேன்(!!). தீபாவளி கொண்டாடாத குடும்பத்தில் உதித்தவன் நான். முத்திரை குத்த விரும்புவோரின் விருப்பத்திற்காக இதை முன்னரே சொல்லியாக வேண்டும். இக்கட்டுரை பச்சையாகவோ, மஞ்சளாகவோ, காவியாகவோ, கறுப்பாகவோ பார்வையில் பட்டால், அது உங்கள் கண்களின் குற்றமே தவிர எனது நிறமதுவல்ல.

ஞாநியின் கட்டுரை ஆரம்பமே வித்தியாசமாக இருக்கின்றது. "கிரிமினல் சங்கராச்சாரி. நாம் சொல்லவில்லை! அரசே சொல்லுகிறது!" அப்படியென்றால் இதுவரை அரசு சொன்னதை எல்லாம் வேத வாக்காக ஞாநி எடுத்துக் கொண்டார் போலிருக்கின்றது. ஆமாம்...ஒரு கிரிமினலை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளவேண்டும்? கைது செய்யப்போன அதிகாரிகள் காலணிகளை கழட்டிவிட்டு, மிகவும் பவ்யமாக கைகட்டி 'கைது' செய்து சொகுசாக அழைத்து வந்திருக்கின்றார்கள். மேலும் சிறையில் காவியுடுத்தி, பூஜை புனஸ்காரத்திற்கு ஏற்பாடு செய்து, தண்டத்தோடு உலவ வகை செய்து, பிராமண அதிகாரியை மேற்பார்வை பார்க்கச் செய்து, பிராமண கைதியை விட்டு சமைக்கச் செய்து என்று ஏகத்திற்கும் சலுகைப் பட்டியல் நீளுகின்றது. ஒரு கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு 'கிரிமினலை' அரசு நடத்தும் விதம் 'பாராட்டுதற்குரியதுதான்'. இல்லையா ஞாநி அவர்களே? இக்குற்றத்தையே நீங்களோ அல்லது நானோ செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கணித்துறையில் திட்ட மேலாளராக இருக்கும் எனக்கு மடிக்கணி (laptop) கொடுத்து, இணைய இணைப்புத் தந்து சிறைச்சாலையில் உலவ விடுமா இந்த அரசு? ஜெயலலிதா அரசின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி ஞாநி ஏன் வெளிப்படையாகச் சாடாது பூடகமாய் மௌனம் காக்க வேண்டும்?

அதே சமயம் தனது கேள்வி-பதில் பகுதியில், 'சங்கர மடம் காப்பாற்றப் படவேண்டும்', 'சங்கர மடத்தில் வருமான வரித்துறை சோதனையிட வேண்டி தனது அமைச்சரை கருணாநிதி பணிக்கவில்லை', 'அப்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆள்; அதனால் கருணாநிதிக்கும் இவ்வழக்கில் உள்நோக்கம் இருக்கலாம்' என்று கருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கவனமாகக் கலைக்கின்றார் ஞாநி. அவை யாவுமே கருணாநிதியைப் பற்றி மிகச் சரியான கருத்துகள்தாம். ஆனால் சங்கராச்சாரிக்காக சனிக்கிழமை நீதிமன்றம் கூடியதிலிருந்து, தனிப்பட்ட செஸ்னா விமானம், டயோட்டா குவாலிஸில் பயணம், போலீஸ் அவர் மீது சுட்டுவிரல் கூடப் படாமல் நடத்தும் விதம், தனது அரசியல் வாழ்விலேயே எடுத்த வேதனையான முடிவு என்று ஜெயலலிதா டில்லியில் கொடுத்த அறிக்கை என்று அரசின் இரட்டை நிலைப்பாட்டினை ஞாநி ஏற்றுக் கொள்கிறாரா? அரசாங்கத்திற்கு தெரியாமல் இத்தகைய சலுகைகள் 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு கிட்டியிருக்குமா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிய அப்துல் நாசர் மஹ்தனிக்கு கால் வலியென்று கேரள மருத்துவமனையில் சிகிச்சை கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு செய்த பதில் மனுவில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியும் தரப்பட்டது. அம்மனுவை தாக்கல் செய்த தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராயிருந்த முனீர் ஹோதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரணமென்ன? தமிழக முதல்வருக்கே இத்தகவல் தெரியாததுதானாம். முனீர் ஹோதா ஆகஸ்ட் மாத இறுதியில் சஸ்பெண்ட் ஆனார். ஆனால் அவர் அரசின் சார்பில் பதில் மனு பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்து விட்டார். ஐந்து மாதங்களாக முதல்வர் என்ன செய்தார்? 'தீவிரவாதி' மஹ்தனிக்கு ஒரு நியாயம். 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு அதே அரசாங்கம் வேறு 'நியாயம்' படிக்கின்றது. இது ஜெயலலிதா அரசாங்கத்தின் இரட்டை வேடமில்லையா?

இக்கைது வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வு என்று ஞானி சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆஹா எத்தகைய அபார கண்டுபிடிப்பு? இதை ஞாநி சொல்லித்தான் ஞாலம் அறிய வேண்டுமா? கருணாநிதி முதலமைச்சராய் இருந்தால் இக்கைதை நிறைவேற்றியிருப்பாரா என்று விஷமத்தனமான கேள்வி வேறு. அவரும் சராசரி அரசியல்வாதிதான். தனக்குச் சாதகமென்றால் கண்டிப்பாய் செய்திருப்பார். ஆட்சிக்கலைப்பு என்ற பதம் கருணாநிதிக்குப் புதிதில்லை. மேலும் சங்கராச்சாரிக்கு ஓட்டு வங்கியில்லையென்பதையும் தாங்கள் அறிவீர்கள். திமுக ஒரு பிராந்தியக்கட்சி தான். தேசீயக்கட்சியா என்ன மற்ற மாநிலங்கள் பற்றி கருணாநிதி கவலைப்பட? ஏன் ஜெயலலிதாவே பிஜேபி ஆட்சி மத்தியில் இருந்தால் சங்கராச்சாரி மீது கை வைத்திருப்பாரா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தானே?

ஜெயேந்திரர் கைது பற்றி ஜெயலலிதாவை புகழ்ந்து எழுதிய ஞாநியின் கரம், நீதிபதியிலிருந்து, ஜனாதிபதி வரை காஞ்சியில் நமஸ்கரித்த சம்பவங்கள் கூறி வழக்கின் எதிர்காலப் போக்கு பற்றி சந்தேகங்கள் கிளறுகின்றது. ஜெயலலிதா திருந்தியது (?) போல் ஏன் நீதிபதிகளும், குடியசுத் தலைவரும் திருந்தக் கூடாது? திருந்த வாய்ப்புத்தான் கொடுத்துப் பார்ப்போமே! நீதி தனது வழியில் பயணித்து உண்மையை நிலை நாட்டட்டும். இதற்கு ஐ.நா.வின் உலக நீதிமன்றம் அவசியமில்லை.

ஜெ துதி பாட முடிவு செய்த பின்னர் அதை கருத்தில் வடிக்க ஞாநி அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கருணாநிதி பேசுவது போலி பகுத்தறிவு, வீராணம் தண்ணீர், வீரப்ப சம்ஹாரம் என்று 'கடவுள் பக்தை'யின் சாதனைகளை பட்டியலிட 'பகுத்தறிவு பகலவன்' ஞாநி தேவையில்லை. அமைச்சர் 'ஓ' பன்னீர் செல்வமே பொதும். வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட வேண்டியது, அதில் ஊழல் செய்து தமிழகத்தில் லஞ்ச லாவண்யத்தே அறிமுகப்படுத்தியவர் கருணாநிதியென்று காலம் காலமாய் எம்ஜியாரும், ஜெயலலிதாவும் அரசியல் பேசியதை ஞாநி சுலபமாக மறந்து விட்டாரா? இன்று அதே வீராணத்தில் இருந்து (சிறிய) குழாய் போட்டு சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்த போது இத்திட்டத்திற்கு முன்னோடியான கருணாநிதி (ஊழல் புரிந்திருப்பினும்) ம(றை)றக்கப்படுகின்றார்.

உயிரோடு பிடித்து, பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதை விட்டு விட்டு, பொறியில் சிக்கிய எலியான வீரப்பனை 'என்கௌண்டர்' வதம் கண்டு பலருக்கும் புனர்வாழ்வளித்த ஜெ சரணம் பாடுங்கள் ஞாநி! ஆமாம் ஜெவின் முரட்டுப் பிடிவாதம் எல்லா பகுத்தறிவாளர்களாலும் (குறிப்பாக பெரியார் திராவிட கழக அன்பர்கள்), எல்லா அசல் பக்தர்களாலும் பாராட்டப்பட வேண்டியதே! வர வர இடதுசாரிகள் மற்றும் பகுத்தறிவாதிகளின் நிலைப்பாடும், திராவிடத் திராபைகள் போலவே திரிந்து போய், என் சிற்றறிவிற்கு எட்டமாட்டேன் என்கின்றது.

பாவம்...கருணாநிதி மதித்ததால் 'மகாப் பெரியவா'ளையும் ஞாநி விட்டு வைக்கவில்லை. பகுத்தறிவை முன்னிறுத்தி மகாப்பெரியவாளின் தீண்டாமை மற்றும் வருணாசிரமத்தை கண்டிக்க வேண்டிய ஞாநி, கருணாநிதியை நிந்தித்து, ஜெ துதி பாடுவது சகிக்கவில்லை. (தனது கேள்வி-பதில் பகுதியில் பெரியவாளை தனது பாணியில் சாடியிருக்கின்றார். சபாஷ்!)

சட்டத்திற்கு முன்னர் யாரும் 'பெரியவா/சின்னவா' இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டனை அடைந்தே தீர வேண்டுமென்று முழங்கவேண்டிய ஞாநி, தனது கட்டுரையில் கருணாநிதியை சாடுவதில்தான் அதீத சிரத்தை காட்டியிருக்கின்றார்.

சங்கரராமன் பற்றி ஊடகங்களின் வழியே தான் அறிந்தவற்றை அழகாக தொகுத்திருக்கின்றார் ஞாநி. பிறகு நாம் அறியாத ஒரு அரிய உண்மையையும் அகழ்வாராய்ந்து சொல்கின்றார். "ஓட்டையும், பணத்தையும் தவிர எந்த லௌகீக சக்தியும் நம்முடைய அரசியல்வாதிகளை கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் வகையறாக்களை இயக்குவதாக நான் கருதவில்லை." சபாஷ்! ஞாநி சரியான கண்டுபிடிப்பு! நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியது. உங்களது புதிய 'நடுநிலைமை சங்கடம்' புரிகின்றது.
ஜெயலலிதாவை சாடும் சாக்கில் கொஞ்சம் அள்ளிப் போடவும் ஞாநி தயங்கவில்லை. "தன்னை விட உயர்ந்தவர் என்று ஜெயலலிதா அவர் நம்புகின்ற கடவுளைத் தவிர வேறு எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை", என்று பிரஸ்தாபம் செய்கின்றார். கோவில் கோவிலாக சுற்றி, புலிப் பலி கொடுத்து, யானைத் தானம் கொடுத்து மறுபடி சென்ற தேர்தலில் சட்டசபையை வளைக்காவிடில், கடவுளரும் ஜெ பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியாதென்பது நிதர்சனம். பணிக்கரின் கணக்குப்படி ஜெ சென்றது பலருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம். பாவம் நீதி கேட்கும் கண்ணகி சிலை கூடத் தப்பவில்லை.

கருணாநிதியியாகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும், அவர்களது குறி மக்களின் ஓட்டு மட்டும்தான்; வேறில்லை. இதைச் சொல்ல ஒரு மூடன் போதும். ஞாநி போல் ஒருமூத்த பத்திரிக்கையாளர் தேவையில்லை. அதே போல் பத்திரிக்கைக்கு வாசகர்கள் தேவை. தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் தேவை. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினராகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தாம். திராவிடக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு சென்றதும், அவரது மந்திரிகள் அலகு குத்தி தேர் இழுத்தனர். ஜெ'க்கு பச்சை என்றால் கருணாநிதிக்கு மஞ்சள் நிறத்தின் மீது (மூட)நம்பிக்கை. எல்லாம் காலத்தின் கோலம். இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு போன்ற வீர தீரக் குறிக்கோள்களை திராவிடக் கட்சிகள் தொலைத்து வெகு காலமாகி விட்டன. தேவைப்படும்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி இக்கொள்கைகளை திராவிடக் கட்சிகள் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததுதான். அதனால் கருணாநிதி சன் டிவியில் தீபாவளி கொண்டாடச் சொல்கிறாரென்று ஞாநி விசனப்பட வேண்டாம்.
ஜெயேந்திரர் கொலைக் குற்றம் புரிந்தாரா? அனுராதா ரமணிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா? ராதா கிருஷ்ணனை கொல்ல கூலிப்படை ஏவினாரா? ஸ்ரீரங்கம் உஷாவுடன் அவருக்கிருந்த தொடர்பென்ன? மடத்தின் நிதி நிர்வாகத்தில் மோசடி நடந்ததா? இது போன்ற பல கேள்விகட்கு நீதிமன்றம் முறைப்படி பதில் காணட்டும். சாமியாரைக் கைது செய்ததால் ஏதோ ஜெயலலலிதா 'நல்ல அரசியல்வாதி'யாகவும் (தைரியலட்சுமி?), கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் தைரியமாக இதைச் செய்திருக்க முடியாதென்று முடிவு கட்டி அவரை 'கோழை அரசியல்வாதி' என்று ஞாநி வருணிக்க விழைவதுதான் காலத்தின் கட்டாயமோ?

போகிற போக்கில் RSS'யையும் விட்டு வைக்கவில்லை ஞாநி. அதிகாரம் கிட்டுமானால் பைபிள், குரானையும் பற்றி கூட அவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களாம். அவ்வாறே நடக்கட்டும். பெரியார் திராவிடக் கழக அன்பர்களும் பைபிள், குரானையும் பற்றி பேசட்டும். எவ்வளவு நாட்கள்தான் (சோதா) இந்து மதத்தையே கிண்டலடித்து பகுத்தறிவு வளர்ப்பது? மேற்கூறியது நடந்தால் ஞாநிய்¢ன் வாயில் சர்க்கரை போடுவோம்.
'பொது வாழ்க்கையில் உள்ள எந்தப் பிரமுகரும் இனி எந்த மதத்தின் நடவடிக்கைகளுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வோம் என்று அறிவிக்க வேண்டும்' என்ற ஞாநியின் கருத்து கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டியது. சங்கரமட சரணாகதியாகட்டும், நோன்புக் கஞ்சியாகட்டும், பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையாகட்டும் மதத்தை நினைவுபடுத்தும் எத்தகைய நிகழ்வுகளிலும் பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் பங்கேற்கக் கூடாதென்று 'சத்தியப் பிரமாணம்' வாயிலாக உறுதிமொழி எடுக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் முக்கியமான விஷயத்திற்கு வருகின்றார் ஞாநி. ஞாநி+சின்னக்குத்தூசியின் செவ்விக்கு தவறான உள்நோக்கு காட்டியமைக்காக சோ மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார். இந்த விவரத்தை கட்டு-உரையின் முகப்பிலேயே கூறியிருந்தால், படிக்க நினைத்து நேர விரயம் செய்யாமல் பல வாசகர்கள் தப்பித்திருக்கலாம்.

தனிமனித தோப்புகளும், மற(ர)த்தமிழர்களும்

திரு சுப. வீர பாண்டியன் அவர்களின் பாஞ்சாலத்திற்கு ஒரு நீதி, பைந்தமிழ் நாட்டிற்கொரு நீதியா என்ற கட்டுரை படித்தேன். அவரது குமுறல் மிகவும் நியாமானதொன்று.

பஞ்சாபியர், கன்னடர், மராத்தியர் மற்றும் தெலுங்கர் நடத்திய மாநாடுகளையும், அதற்கு மைய அரசு செய்த உதவிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டு தமிழென்றால் அதே அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கினையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றார். தமிழ் விழாக்களென்றால் பாரபட்சமாய் நடவடிக்கைகளை எடுத்து வரும் மைய அரசினை கண்டிக்க அந்நாளைய மாநில அரசுகள் முன் வராத கயமைத்தன்மையையும் அவர் சாடத் தவறவில்லை. இருப்பினும் முத்தாய்ப்பாய் அவர் கூறியது சிறிதே ஆச்சர்யம் தருகின்றது. "இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகவே பார்க்குமானால், தமிழர்களும் இந்திய அரசை அந்நியமாகத்தானே பார்க்க முடியும்?" இதுதான் சுப.வீ. கட்டுரையின் சாரம்சமா? இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகப் பார்க்க காரணமென்ன? 'வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றதென்ற' வாதத்திற்கு இன்றும் வலுவுண்டா?

தனிக்கட்சி ஆட்சியென்று இல்லாமல் மத்தியிலே கூட்டாட்சி என்பதே இன்றைய நிதர்சனமாகிப் போனது. பிராந்தியக் கட்சிகளின் பேச்சு மத்தியில் எடுபடும் காலத்தில் பிரிவினையால் விளையும் பயன்தான் என்ன? தமிழை 'செம்மொழி'யாக்கி 'வரலாற்று சாதனை' படைத்த கால கட்டத்தில் பேசும் பேச்சா இது? சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த மைய அரசும் செய்ய விரும்பாத அல்லது செய்ய மறுத்த 'செயற்கரிய செயல்' அல்லவா இச்சாதனை? இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கைக்கு படை அனுப்ப மாட்டோம் மென்று 'சுயம்பு வெளியுறவுத்துறை அமைச்சரான' திரு வைகோ மூலம் கருத்து தெரிவித்ததாய் ஊடகங்கள் வாயிலாக அறிய நேர்ந்தேன். ஆஹா...இன்று தமிழனின் 'பவர்' மையத்தில் எப்படிப்பட்டதென்று கண்டிப்பாய் சுப.வீ அறிந்திருப்பார். இன்று மட்டும் உலகத்தமிழ் மாநாடோ, சைவ விழாவோ, முருகன் விழாவோ நடத்துவதாய் இப்போதைய தமிழகத் தலைவர் யாராவது அறிவிக்கட்டும். பின்னர் பாருங்கள் சுப.வீ... பகை நாடென்ன, நம்மைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கும் நகை நாடுகளிலிருந்து கூட 'தமிழர்கள்' கலந்து கொள்ள மத்திய அரசு ஆவன செய்யும். தன் கையால் குத்து விளக்கேற்றி பிரதம மந்திரி அவர்கள் ஓரிரு வார்த்தைகள் உடைந்த தமிழும் பேசுவார். அப்புறம் தமிழுணர்வு தானாக வளரலாம். பிறகெதற்கு பிரிவினை எச்சரிக்கை?

எட்டு கோடி தமிழர்களின் எடுப்பாய் செயல்பட வேண்டிய ஆளும் மாநில கட்சிகளின் நிலைப்பாடே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம். சுப.வீ அவர்களின் கட்டுரைப்படி தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைக்காலத்தில் கழகங்களே மாறி மாறி ஆட்சி செய்தன. எதற்கெல்லாமோ 'அடைப்பு' நடத்தி தினவாழக்கையை பாழடித்த கழகங்கள் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டும் காந்தாரியாய் கண்கள் கட்டி இருந்த ரகசியமென்ன? இன்று திடீரென்று தமிழ்ப்பற்றுடன் உலவும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவரது முன்னாள் உடன் பிறவா சகோதரி ஜெயலலிதா அவர்கள் தமிழ் கொடுமைக்கெதிராக என்ன செய்தார்கள்? அவரது தற்போதைய உடன் பிறவா சகோதரர் திரு. தொல்மா என்ன செய்தார்? கள்ளத்தோணி ஏறிச் சென்று தனது 'நாட்டுப் பற்றை' பறைசாற்றிய திரு. வைகோ'வாவது பரவாயில்லை. தமிழுக்கு மற்றும் தமிழருக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து அவ்வப்போது குரல் கொடுத்தார். அவரது பேச்சும் தமிழ்நாட்டின் பிரிவினையை ஒட்டி அமைந்ததில் வியப்பில்லை. 'போடா' சட்டத்திற்கு அரசாங்கமே 'போடா' சொன்ன பின்னர் இப்போது பல அரசியல்வாதிகளும் தைரியமாக தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளை உணர்ச்சிப் பூர்வமாக பேச முன் வருவார்கள். சுப. வீ நினைப்பது போல் அப்போது தமிழுக்கு நேர்ந்த இழுக்குகள் துடைக்கப் படலாம். கனவு காண்பதென்பது தமிழனின் பிறப்புரிமை. வாருங்கள் கண்களை அகல விரித்து கனவு காண்போம்.

நமது தமிழனின் இன்னொரு தனிச்சிறப்பு 'தனிமனித தோப்புகளாக' வாழ்வதுதான். இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் இணைந்தால் வேறொரு தமிழனைக் கவிழ்ப்பதற்காகவென்று அவதானித்துக் கொள்ளலாம். பிரதமராக திரு. மூப்பனார் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியபோது நமது தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை நமக்குத் தெரிந்த விஷயம்தானே? மலிவான அரசியல் காரணங்கள், சுயலாபங்கள், தனிமனித துதிகள் போன்றவையே தமிழ்த் தலைவர்களின் ஆக்கங்கள் என்றாகிவிட்டது. காவிரி நீர்ப்பிரச்சினையில் நமது மாண்புமிகு MP'க்கள் மற்றும் MLA'க்களின் செயல்பாடுகள் நாடறிந்ததுதானே? இன்று தமிழக மத்திய மந்திரிகளின் துறைகள் எவ்வாறு பெறப்பட்டன? எதிர்காலத்தில் 'மாநிலத்தை' ஆள வேண்டிப் போடப்பட்ட அச்சாரம்தானே இப்போதைய மாநில கூட்டணிகள்? இவர்கள்தான் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி கவலைப்பட போகின்றார்கள்?

மத்திய அரசாங்கத்தில் முன்னெப்போதுமின்றி அதிகபட்சமாக தமிழக அமைச்சர்கள் இப்போது இருக்கின்றார்கள். இருப்பினும் தமிழ்க்கொடுமைகளை நினைத்து தனித் தமிழ்நாடு அடைந்தோமென்றே வைத்துக் கொள்வோம். இதே கழகத் தலைவர்கள் தனித்தமிழ்நாட்டை ஆண்டால் நாமிழந்த தமிழ் உணர்வுகள் தழைத்து விடுமா? மாறாக தமிழ்நாட்டினையே அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது போலாகாதா? இந்தி தெரிந்தால் மத்திய மந்திரி வாய்ப்புக் கிட்டுமென்பது கலைஞர் குடும்பத்தில் தான் நடக்கும். அதற்காக தமிழ் தெரிந்தவர்கள் விசனப்பட தேவையில்லை. கழகங்களுக்கு மாற்று கூட்டணி ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றது. மாற்றான் தோளிலேயே சவாரி செய்து பழக்கப்பட்ட காங்கிரஸோ சொந்தக் கால்களையே மறந்து விட்டது. உதிரிக் கட்சிகளோ 'கழகங்களின் சத்துணவில்' காலமோட்டுகின்றது. எனவே இந்திய அரசு தமிழர்களை அந்நியப்படுத்துகின்றது என்று கூறுவதைவிட நமது தமிழ் அரசியல் தலைவர்களே நம்மை அந்நியப்படுத்திவிட்டார்கள் என்பதே சரி. இந்தியாவுடன் கூடியிருக்கும் போதே கொண்டாட்டம் போடும் இந்தக் கழைக்கூத்தாடிகளிடம் பிரிந்த தமிழ்நாட்டினைக் வேறு கொடுக்க வேண்டுமா?

இப்போதைய உடனடித் தேவை தமிழுக்கென்று ஒரு மாநாடல்ல. 'தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா' என்ற ஏட்டளவுப் பெருமைமையை நடைமுறைப் படுத்த அனைத்து தமிழரும் முயலவேண்டும். இதற்காக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ஆரவாரம் செய்ய வேண்டாம். கூட்டம் கூட்டி பிரிவினைக் கோஷமும் போடவேண்டாம். அரசியல் பேதமின்றி அனைத்து தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் ஒன்று கூடி நம்மிடையே தமிழுணர்வு வளர்க்க நடைமுறைப் படுத்தக் கூடிய 'செயல்முறைத் திட்டம்' ஒன்றினை வரையலாம். இன்றைய தொழில் சார்ந்த நவீன கல்வி முறையில் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழ் ஆசான்களின் பங்களிப்பு இம்முயற்சிக்கு பெரிதும் உதவும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தனிப்பாட வருமானமுமின்றி, கூலிக்கு மாரடிக்காமல் உண்மையாய் தமிழ் புகட்டும் ஆசான்கள் இன்னும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு மாணவ சமுதாயத்திடையே மீண்டும் தமிழுணர்வு புகட்டப்பட வேண்டும். அதை விடுத்து மூலையில் உட்கார்ந்து 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று முகாரி பாடுவதால் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

இன்று கணித்துறை வளர்ந்து விருட்சமாய் நிற்கின்றது. இத்துறையால் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே உள்ளன. இணையத்திலும், வலைப்பூக்களிலும் சத்தமின்றி ஒரு 'தமிழ்ப் புரட்சி' நடந்து வருகின்றது. வருமானமோ, லாபமோ பாராமல் சிலநேரங்களில் தங்கள் கைக்காசைப் போட்டு பலர் இணைய தமிழின் வளர்ச்சிக்கு தேவையான எழுத்துருக்கள், செயலிகள், நிரலிகள் என்று உருவாக்கிப் பாடுபடுகின்றார்கள். அச்சு ஊடகங்களில் இல்லாத இந்த இணைய கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக எதிர்கால தமிழ் மற்றும் தமிழுணர்வு வளர கண்டிப்பாக உதவும்.

அதன் தீமையாக தமிழறிவு சோறு போடுமா என்று கூசாமல் பேசும் 'வல்லுநர்களை'யும் இந்நாளில் காணலாம். ஆனால் ஆங்கிலம் குறைவாகவே அறிந்த சீனாவில், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கிளைகளைத் திறக்கின்றன. கணிபொறி செய்யும் IBM நிறுவனக் கிளையன்றை லெனோவா என்ற சீன நிறுவனம் வாங்கியிருக்கின்றது. இதெல்லாம் தமிழறிவு சோறு போடுமாவென்று குதர்க்கம் பேசும் அந்த 'வல்லுநர்களின்' கண்களுக்கு தெரியாமலில்லை. மெல்ல அவர்களும் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் பன்னாட்டு நிறுவனமொன்றின் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' (Customer Call Center) வயிறு கழுவலாமென்று நினைக்கும் இன்றைய இளைய சமுதாயத்தில் தமிழுணர்வை உடனடியாக ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. ஆனால் மணி கட்ட வேண்டிய தருணமிது. ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயல்பட ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் முன் வருமா?

Wednesday, December 01, 2004

Hum Tum (நானும் நீயும்) 05/28/04

C:\Sam\Blog\New Items\humtum1
மெல்லிய காதல் கதையை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கலந்து 'ரிச்சாகக்' கொடுப்பது இந்தித் திரையுலகிற்கு புதிதில்லை. அரைத்த மசாலாவையே மீண்டும் அரைப்பதிற்கு கோலிவுட்டிற்கு சற்றும் சளைத்ததில்லை பாலிவுட். இப்படத்திலும் நாயகர், நாயகி நியூயார்க் பயணிக்கும் போது ஆரம்பத்திலேயே ஏற்படும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் கரண் கபூர் (செய்ப் அலி கான்) மற்றும் ரியா (ராணி முகர்ஜி) ஆம்ஸ்டெர்டாமில் ஆறு மணி நேரம் ஒன்றாக செலவிட நேருகின்றது. வாழ்க்கையை பார்ப்பதில் கரணுக்கும், ரியாவுக்கும் ஒற்றுமை என்பது எள்ளளவும் கிடையாது. 'எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்' என்ற பழமைத் தத்துவம் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்குமே! இருப்பினும் கதையை சின்ன சின்ன சம்பவங்கள் மூலம் அலுப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றிருக்கும் பாங்கு அலாதியானது. குணால் கோலியின் இயக்கத்தில் யாஷ் ராஜ் பேனரில் வெளியான மற்றுமொரு வெற்றிச் சித்திரமே ஹம் தும்.

கரணுக்கு நாடுகள், மதங்கள் போன்ற உலகப் பிரிவினைகளைவிட ஆண்-பெண் வேற்றுமையே பெரிதாகப் படுகின்றது. இக்கருத்தையே தனது ஹம் தும் என்ற கேலிச்சித்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றான். இக்கார்ட்டூன் முன்னணி நாளிதழில் வெளியாகி புகழும் பெறுகின்றது. திரைப்படத்தில் தேவைப்படும்போது கேலிச்சித்திரத்தின் பாத்திரங்களே கதையை நகர்த்துவது வித்தியாச முயற்சி.

ஆர்ம்ஸ்டர்டாமில் விளையாட்டாய் (நட்பாய்?) கரண், ரியாவை முத்தமிடுகின்றான். பிறகென்ன கன்னம் பழுக்கின்றது. அதிலிருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கின்றது.

பிளாஷ்பேக் பார்த்தே அலுத்துப்போன ரசிகப் பெருமக்களுக்களை கருத்தில் கொண்டு ஆறு மாதங்கள்/ஒரு வருடம்/ பத்து வருடங்கள் கழித்துதென்று படம் எதிர்காலத்திலேயே பயணிக்கின்றது. இக்காலகட்டத்தில் ரியாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சற்றே யூகிக்கும்படியிருந்தாலும் அதிக சினிமாத்தனம் கலக்காமல் இயல்பாய் இருக்கின்றது. முக்கால்வாசிப்படத்தில் வழக்கமான 'சாக்லேட் ஹீரோ' பிம்பத்தை தக்க வைத்து மீதிப் பகுதியில் முதிர்ச்சியான இளைஞனாக கரண் வேடத்தை செய்ப் அருமையாகச் செய்திருக்கின்றார். ராணியும் சளைக்காமல் நடிப்பில் ஈடு கொடுக்கின்றார்.
அவ்வப்போது ஆண்-பெண் உறவுமுறையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு கேலிச்சித்திரம் மூலம் விடை கொடுப்பது அசத்தல். உதாரணமாக 'வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்ணிருப்பாள் என்பது உண்மைதான். வெற்றி பெறாத ஆணை எந்தப் பெண் விரட்டப் போகின்றாள்?'

சிறப்பு வேடத்தில் செய்ப்பின் அப்பாவாக ரிஷி கபூரும், நட்புக்காக அபிஷேக் பச்சனும் வந்து போகின்றனர்.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் பில்லி கிரிஸ்டல் மற்றும் மெக் ரையான் நடித்த ‘When Harry Met Sally’ படத்தின் வாடை அடிக்கலாம். ஆனால் பாலிவுட்/கோலிவுட்டில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரமல்லவா? கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். கடைசி அரைமணி நேரம் இழுவை தேவையில்லை.

அசம்பாவிதங்கள் தாண்டி கரணும், ரியாவும் இணைகின்றார்களா என்பதை வெள்ளித்திரையில் காணவும். (இப்படித்தான் சினிமா விமர்சனத்தை முடிக்க வேண்டுமென யார் சொன்னதென்று நறநறக்க வேண்டாம்!)