பிறந்தது நந்தவனமில்லை
நஞ்சையோ புஞ்சையுமில்லை
வெறும் புறம்போக்குதான்
பாக்டெம்பாஸ் எசமான்
பாக்கெட்டிற்கு பத்தாது
எருமைச்சாணம்தான் என்றாவது
மலரென்பார் எம்மை
மலரவிடார் என்றும்
மொட்டுக்குத்தான் மார்க்கெட்டாம்
முதலிரவில் முழுவுடலை
மொக்கவிழ்க்கும் கட்டாய
பதைபதைப்பு தினம்தினம்
சூ(ட்)டு நாயகர் கையில்
கிடைக்கும் முன்னரே
கிட்டத்தட்ட ம(அ)லர்ந்திருப்பேன்
என்விதி எப்படியோ?
கூவக்கரையில் பிறந்துவிட்டு
கொசுக்களுக்கா கூவுவது?
பாடைகட்ட நேரமில்லை
வெட்டியானுக்கும் வேலையில்லை
மாருதிவேனிலொரு இறுதிப்பயணம்
அய்யோ தெரியவுமில்லை
கரண்டு அடுப்பு
ஷாக் அடிக்குமோ?
சாவில்சங்கு சரிதான்
ஆரவாரமேன் மானிடா?
பிய்த்தெறிந்த மாலையிலிருந்து யோசித்தேன்
பிய்ந்தொட்டிய என்னிதழொன்றை
உதறினாள் மாதொருத்தி
வெறுப்புடன் ஏனோ?
பூவையினி பூச்சூடாளென
சட்டாம்பிள்ளை சமூகமீதான
இழந்தவளின் எரிச்சலோ?
சோறானால் வாய்க்குணவாய்
சோரமில்லை ஆனால்
வாய்க்கரிசியாய் வாய்த்தேனோ?
விதி வகுப்பேன்
இப்பூக்கள் இனிமேலும்
இறுதிப் பயணத்துக்கல்ல
சக்கரமொன்று மேலேற...
எஞ்சிய இதழ்களும்
எங்கேயோ சிதறின...
Wednesday, March 14, 2007
Subscribe to:
Posts (Atom)