Wednesday, December 22, 2004

தனிமனித தோப்புகளும், மற(ர)த்தமிழர்களும்

திரு சுப. வீர பாண்டியன் அவர்களின் பாஞ்சாலத்திற்கு ஒரு நீதி, பைந்தமிழ் நாட்டிற்கொரு நீதியா என்ற கட்டுரை படித்தேன். அவரது குமுறல் மிகவும் நியாமானதொன்று.

பஞ்சாபியர், கன்னடர், மராத்தியர் மற்றும் தெலுங்கர் நடத்திய மாநாடுகளையும், அதற்கு மைய அரசு செய்த உதவிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டு தமிழென்றால் அதே அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கினையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றார். தமிழ் விழாக்களென்றால் பாரபட்சமாய் நடவடிக்கைகளை எடுத்து வரும் மைய அரசினை கண்டிக்க அந்நாளைய மாநில அரசுகள் முன் வராத கயமைத்தன்மையையும் அவர் சாடத் தவறவில்லை. இருப்பினும் முத்தாய்ப்பாய் அவர் கூறியது சிறிதே ஆச்சர்யம் தருகின்றது. "இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகவே பார்க்குமானால், தமிழர்களும் இந்திய அரசை அந்நியமாகத்தானே பார்க்க முடியும்?" இதுதான் சுப.வீ. கட்டுரையின் சாரம்சமா? இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகப் பார்க்க காரணமென்ன? 'வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றதென்ற' வாதத்திற்கு இன்றும் வலுவுண்டா?

தனிக்கட்சி ஆட்சியென்று இல்லாமல் மத்தியிலே கூட்டாட்சி என்பதே இன்றைய நிதர்சனமாகிப் போனது. பிராந்தியக் கட்சிகளின் பேச்சு மத்தியில் எடுபடும் காலத்தில் பிரிவினையால் விளையும் பயன்தான் என்ன? தமிழை 'செம்மொழி'யாக்கி 'வரலாற்று சாதனை' படைத்த கால கட்டத்தில் பேசும் பேச்சா இது? சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த மைய அரசும் செய்ய விரும்பாத அல்லது செய்ய மறுத்த 'செயற்கரிய செயல்' அல்லவா இச்சாதனை? இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கைக்கு படை அனுப்ப மாட்டோம் மென்று 'சுயம்பு வெளியுறவுத்துறை அமைச்சரான' திரு வைகோ மூலம் கருத்து தெரிவித்ததாய் ஊடகங்கள் வாயிலாக அறிய நேர்ந்தேன். ஆஹா...இன்று தமிழனின் 'பவர்' மையத்தில் எப்படிப்பட்டதென்று கண்டிப்பாய் சுப.வீ அறிந்திருப்பார். இன்று மட்டும் உலகத்தமிழ் மாநாடோ, சைவ விழாவோ, முருகன் விழாவோ நடத்துவதாய் இப்போதைய தமிழகத் தலைவர் யாராவது அறிவிக்கட்டும். பின்னர் பாருங்கள் சுப.வீ... பகை நாடென்ன, நம்மைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கும் நகை நாடுகளிலிருந்து கூட 'தமிழர்கள்' கலந்து கொள்ள மத்திய அரசு ஆவன செய்யும். தன் கையால் குத்து விளக்கேற்றி பிரதம மந்திரி அவர்கள் ஓரிரு வார்த்தைகள் உடைந்த தமிழும் பேசுவார். அப்புறம் தமிழுணர்வு தானாக வளரலாம். பிறகெதற்கு பிரிவினை எச்சரிக்கை?

எட்டு கோடி தமிழர்களின் எடுப்பாய் செயல்பட வேண்டிய ஆளும் மாநில கட்சிகளின் நிலைப்பாடே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம். சுப.வீ அவர்களின் கட்டுரைப்படி தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைக்காலத்தில் கழகங்களே மாறி மாறி ஆட்சி செய்தன. எதற்கெல்லாமோ 'அடைப்பு' நடத்தி தினவாழக்கையை பாழடித்த கழகங்கள் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டும் காந்தாரியாய் கண்கள் கட்டி இருந்த ரகசியமென்ன? இன்று திடீரென்று தமிழ்ப்பற்றுடன் உலவும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவரது முன்னாள் உடன் பிறவா சகோதரி ஜெயலலிதா அவர்கள் தமிழ் கொடுமைக்கெதிராக என்ன செய்தார்கள்? அவரது தற்போதைய உடன் பிறவா சகோதரர் திரு. தொல்மா என்ன செய்தார்? கள்ளத்தோணி ஏறிச் சென்று தனது 'நாட்டுப் பற்றை' பறைசாற்றிய திரு. வைகோ'வாவது பரவாயில்லை. தமிழுக்கு மற்றும் தமிழருக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து அவ்வப்போது குரல் கொடுத்தார். அவரது பேச்சும் தமிழ்நாட்டின் பிரிவினையை ஒட்டி அமைந்ததில் வியப்பில்லை. 'போடா' சட்டத்திற்கு அரசாங்கமே 'போடா' சொன்ன பின்னர் இப்போது பல அரசியல்வாதிகளும் தைரியமாக தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளை உணர்ச்சிப் பூர்வமாக பேச முன் வருவார்கள். சுப. வீ நினைப்பது போல் அப்போது தமிழுக்கு நேர்ந்த இழுக்குகள் துடைக்கப் படலாம். கனவு காண்பதென்பது தமிழனின் பிறப்புரிமை. வாருங்கள் கண்களை அகல விரித்து கனவு காண்போம்.

நமது தமிழனின் இன்னொரு தனிச்சிறப்பு 'தனிமனித தோப்புகளாக' வாழ்வதுதான். இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் இணைந்தால் வேறொரு தமிழனைக் கவிழ்ப்பதற்காகவென்று அவதானித்துக் கொள்ளலாம். பிரதமராக திரு. மூப்பனார் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியபோது நமது தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை நமக்குத் தெரிந்த விஷயம்தானே? மலிவான அரசியல் காரணங்கள், சுயலாபங்கள், தனிமனித துதிகள் போன்றவையே தமிழ்த் தலைவர்களின் ஆக்கங்கள் என்றாகிவிட்டது. காவிரி நீர்ப்பிரச்சினையில் நமது மாண்புமிகு MP'க்கள் மற்றும் MLA'க்களின் செயல்பாடுகள் நாடறிந்ததுதானே? இன்று தமிழக மத்திய மந்திரிகளின் துறைகள் எவ்வாறு பெறப்பட்டன? எதிர்காலத்தில் 'மாநிலத்தை' ஆள வேண்டிப் போடப்பட்ட அச்சாரம்தானே இப்போதைய மாநில கூட்டணிகள்? இவர்கள்தான் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி கவலைப்பட போகின்றார்கள்?

மத்திய அரசாங்கத்தில் முன்னெப்போதுமின்றி அதிகபட்சமாக தமிழக அமைச்சர்கள் இப்போது இருக்கின்றார்கள். இருப்பினும் தமிழ்க்கொடுமைகளை நினைத்து தனித் தமிழ்நாடு அடைந்தோமென்றே வைத்துக் கொள்வோம். இதே கழகத் தலைவர்கள் தனித்தமிழ்நாட்டை ஆண்டால் நாமிழந்த தமிழ் உணர்வுகள் தழைத்து விடுமா? மாறாக தமிழ்நாட்டினையே அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது போலாகாதா? இந்தி தெரிந்தால் மத்திய மந்திரி வாய்ப்புக் கிட்டுமென்பது கலைஞர் குடும்பத்தில் தான் நடக்கும். அதற்காக தமிழ் தெரிந்தவர்கள் விசனப்பட தேவையில்லை. கழகங்களுக்கு மாற்று கூட்டணி ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றது. மாற்றான் தோளிலேயே சவாரி செய்து பழக்கப்பட்ட காங்கிரஸோ சொந்தக் கால்களையே மறந்து விட்டது. உதிரிக் கட்சிகளோ 'கழகங்களின் சத்துணவில்' காலமோட்டுகின்றது. எனவே இந்திய அரசு தமிழர்களை அந்நியப்படுத்துகின்றது என்று கூறுவதைவிட நமது தமிழ் அரசியல் தலைவர்களே நம்மை அந்நியப்படுத்திவிட்டார்கள் என்பதே சரி. இந்தியாவுடன் கூடியிருக்கும் போதே கொண்டாட்டம் போடும் இந்தக் கழைக்கூத்தாடிகளிடம் பிரிந்த தமிழ்நாட்டினைக் வேறு கொடுக்க வேண்டுமா?

இப்போதைய உடனடித் தேவை தமிழுக்கென்று ஒரு மாநாடல்ல. 'தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா' என்ற ஏட்டளவுப் பெருமைமையை நடைமுறைப் படுத்த அனைத்து தமிழரும் முயலவேண்டும். இதற்காக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ஆரவாரம் செய்ய வேண்டாம். கூட்டம் கூட்டி பிரிவினைக் கோஷமும் போடவேண்டாம். அரசியல் பேதமின்றி அனைத்து தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் ஒன்று கூடி நம்மிடையே தமிழுணர்வு வளர்க்க நடைமுறைப் படுத்தக் கூடிய 'செயல்முறைத் திட்டம்' ஒன்றினை வரையலாம். இன்றைய தொழில் சார்ந்த நவீன கல்வி முறையில் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழ் ஆசான்களின் பங்களிப்பு இம்முயற்சிக்கு பெரிதும் உதவும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தனிப்பாட வருமானமுமின்றி, கூலிக்கு மாரடிக்காமல் உண்மையாய் தமிழ் புகட்டும் ஆசான்கள் இன்னும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு மாணவ சமுதாயத்திடையே மீண்டும் தமிழுணர்வு புகட்டப்பட வேண்டும். அதை விடுத்து மூலையில் உட்கார்ந்து 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று முகாரி பாடுவதால் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

இன்று கணித்துறை வளர்ந்து விருட்சமாய் நிற்கின்றது. இத்துறையால் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே உள்ளன. இணையத்திலும், வலைப்பூக்களிலும் சத்தமின்றி ஒரு 'தமிழ்ப் புரட்சி' நடந்து வருகின்றது. வருமானமோ, லாபமோ பாராமல் சிலநேரங்களில் தங்கள் கைக்காசைப் போட்டு பலர் இணைய தமிழின் வளர்ச்சிக்கு தேவையான எழுத்துருக்கள், செயலிகள், நிரலிகள் என்று உருவாக்கிப் பாடுபடுகின்றார்கள். அச்சு ஊடகங்களில் இல்லாத இந்த இணைய கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக எதிர்கால தமிழ் மற்றும் தமிழுணர்வு வளர கண்டிப்பாக உதவும்.

அதன் தீமையாக தமிழறிவு சோறு போடுமா என்று கூசாமல் பேசும் 'வல்லுநர்களை'யும் இந்நாளில் காணலாம். ஆனால் ஆங்கிலம் குறைவாகவே அறிந்த சீனாவில், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கிளைகளைத் திறக்கின்றன. கணிபொறி செய்யும் IBM நிறுவனக் கிளையன்றை லெனோவா என்ற சீன நிறுவனம் வாங்கியிருக்கின்றது. இதெல்லாம் தமிழறிவு சோறு போடுமாவென்று குதர்க்கம் பேசும் அந்த 'வல்லுநர்களின்' கண்களுக்கு தெரியாமலில்லை. மெல்ல அவர்களும் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் பன்னாட்டு நிறுவனமொன்றின் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' (Customer Call Center) வயிறு கழுவலாமென்று நினைக்கும் இன்றைய இளைய சமுதாயத்தில் தமிழுணர்வை உடனடியாக ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. ஆனால் மணி கட்ட வேண்டிய தருணமிது. ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயல்பட ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் முன் வருமா?

1 comment:

ROSAVASANTH said...
This comment has been removed by a blog administrator.