Wednesday, May 03, 2006

கடைசியாகக் கச்சத்தீவு

கலைஞர் பங்களிப்பு

இத்தொடரினைப் பற்றி பின்னூட்டத்தில் முடிந்தால் சுட்டிகள் கொடுக்குமாறு ரோஸா கூறியிருந்தார். நல்ல யோசனை. பிரச்சினைகளை மேலும் ஆழமாகப் படிக்க விரும்புவோர்க்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். கூடுமானவரையில் எப்பத்திரிக்கையில் எந்த தேதியில் செய்திகள் திரட்டப்பட்டன என்பதை கூறியே வந்துள்ளேன். ஒரே பதிவில் பல சுட்டிகள் தந்தவுடன், ப்ளாக்கர் பப்ளிஷ் பண்ணும் பொழுது சில சுட்டிகள் தாண்டிய பதிவின் மீதங்களை விழுங்கி விடுகின்றது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளுக்கு அதீத சுட்டிகள் தர இயலவில்லை. முடிந்தால் ரோஸா கூறியது போல இறுதிப்பதிவாக சுட்டிகளின் தொகுப்பை வழங்க முயலுவேன். யோசனைக்கு நன்றி ரோஸா!

பிப்ரவரி 3 2001, ஹிந்து: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து தமிழக சட்டசபையில் நீண்ட விவாதம் நடை பெற்றது. ஜனவரி 29'ல் நடந்த தாக்குதலில் 2 இந்திய மீனவர்கள் இறந்து, ஐவர் காயமுற்றனர். திமுகவின் பெர்னார்டு என்ற உறுப்பினர் 'கச்சத்தீவை தாரை வார்த்தது கொடூரமான தவறு' என்று முழங்கினார். தமிழக முன்னேற்ற முன்னணியின் தலைமைக் கொறடாவான ஞானசேகரனும் இந்தியா, இலங்கையுடன் இது குறித்து கடுமையான கண்டங்களை தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அதிமுகவின் PR. சுந்தரம் கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டுமென்று கூறினார். சார்க் (SAARC) உறுப்பினராய் இருந்து கொண்டு இவ்வாறு வாலாட்டும் இலங்கையையிலிருந்து இந்தியா எத்தகைய இறக்குமதியும் செய்யக்கூடாது என்று சிபிஐ (மா) உறுப்பினரான ஹேமச்சந்திரன் கொந்தளித்தார். பின்னர் பேசிய அந்நாள் மீன்வளத்துறை அமைச்சரான ஜெனிபர் சந்திரன் உறுப்பினர்களின் உணர்ச்சிகளைப் புரிந்த அரசு, இந்திய வெளியுறவுத்துறையினைத் தொடர்பு கொண்டு இனிமேலும் இலங்கை அவ்வாறு செய்யக் கூடாதென்று வலியுறுத்துமாறு வேண்டுகோள் விட்டிருக்கின்றது என்று தெரியப்படுத்தினார். மேலும் கலைஞர் பிரதமருக்கு ஏப்பிரல் 98' மற்றும் நவம்பர் 2000'த்தில் கடிதங்களும் எழுதியிருப்பதாய்க் கூறுகின்றார். இறந்த மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகை ரூ. 1 லட்சத்திற்கு உயர்த்தியிருப்பதையும் தெரிவித்தார்.


இம்முறை இரு பெரும்கழகங்களின் தேர்தல் அறிக்கைகளில் கச்சத்தீவு பிரதானமாக இல்லை.

கொசுறு: ஜனதாக்கட்சியின் தலைவரான சுப்பிரம்ணியம் சாமி 1998 இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட கச்சத்தீவிற்கு டிராலர்களுடன் சென்றதாக கட்சியின் இணையதளம் கூறுகின்றது.

வைகோ இவ்விஷயம் குறித்து முழங்கியிருப்பினும் (சுட்டிகளில்லை; ஞாபகத்திலிருந்து கூறுகின்றேன்) அவரது புலி ஆதரவு என்பது கச்சத்தீவு பிரச்சினைக்கு எந்த அளவிற்கு உதவும் என்று கூறமுடியவில்லை. அவரது அரசியல் நிலைப்பாடுகள், சமீபத்திய கொள்கை சமரசங்கள் போன்றவ்ற்றால் இந்திய மற்றும் இலங்கை தமிழர்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பகத்தன்மை ஆட்டம் கண்டிருக்க வேண்டுமென்பது எனது அனுமானம். இன்று அம்மாவோடு கூட்டணியில் உள்ளவர் (பொடாவில் கைதானதை மறந்தும், அடுத்த அவரது நடவடிகையான நடைபயணம் துறந்தும்) புலிகளின் நலன்களைக் கடந்த கச்சத்தீவினைக் கையகப்படுத்துவதை வலியுறுத்துவாரா? தமிழகத் தேர்தல் முடியும்வரை காத்திருக்க வேண்டும்.

திருமாவின் கடல் கடந்த கன்னிப்பேச்சுக்களில் கச்சத்தீவினைப் பற்றி பேசியிருக்கின்றாரா என்று தெரியவில்லை. எனக்கென்னமோ அவர் தனது சமுதாயத்தை தூக்கி நிறுத்த வேண்டுமென்பதையே பிரதானமாகக் கொண்டு செயல்படவேண்டுமென்று நினைக்கின்றேன். அவர் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. கற்பு, தமிழில் திரைப்படப்பெயர்கள் என்று கிளைபிரியாமல் தலித் மக்கள் உரிமைக்காக குரல் கொடுத்தால் அவரது சமுதாயம் நன்றியுடன் நோக்கலாம். அவரது அரசியல் நிலைப்பாடுகள் பற்றி இங்கே விவாதித்து திசை மாற இப்போது விருப்பம் இல்லை.

வைகோ+திருமாவின் கலவையாக இராமதாஸ். சற்றும் சளைக்காத, முரண்பட்ட அரசியல்வாதி.

லட்சக்கணக்காக கரையோரத்தில் வாழும் இந்திய மீனவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியாகவோ, ஒரே இடத்தில் குவிந்து ஒரு சட்டசபை உறுப்பினரையாவது தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த பெரும்பான்மையானவராகவோ இருக்கும் வரையில் அரசியல்வாதிகளின் அரவணைப்பு அவர்கட்கு கிடைக்காதோ என்னும் அச்சம் எழுகின்றது. இந்த அரசியல் சுனாமிகள் சுரண்டிக்கொண்டு இருக்கும் வரையில் மீனவர்களின் கண்ணீர் கடலை மேலும் கரிப்பாகவே வைத்திருக்கும்.

களம் தந்த திண்ணைக்கு நன்றி.

2 comments:

ROSAVASANTH said...

பார்தேன். இந்த விவாதத்தின் பல சுட்டிகளை, ஒரு வசதிக்காக, என் பதிவில் சேர்த்து வருகிறேன். அதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன். (ஆட்சேபம் இருந்தால் மட்டும் பதில் சொல்லவும்.) நன்றி.

Mey said...

Glad to see that you are back with a bang. Great to see that you have put your heart and soul to get the real details out to the people.