Wednesday, August 09, 2006

இலங்கைப் பிரச்சினை ஒரு கண்ணோட்டம் - 5

இத்தொடருக்கு பின்னூட்டத்தில் அனானிமஸாக பல மின்னஞ்சல்கள் வந்தன. அவற்றிலும் பயனுள்ள சில தகவல்கள் இருந்தன என்று தெரிவித்துக் கொள்கின்றேன். தூஷணங்களும் இருந்தன என்பதைச் சொல்லித்தானா தெரியவேண்டும்?

ஒரு சிறிய ஒப்பு நோக்கை வாசகர் முன்னர் வைக்க விழைகின்றேன். அமெரிக்கப் படை (கூட்டுப்படை என்று பொய் சொன்னாலும்) எவ்வித அசுர பலத்துடன் ஈராக் மீது யுத்தம் தொடுத்தார்களென்று பார்த்தோமல்லவா? எனது முந்தைய பதிவில் அநாநியாக ஒரு தமிழன் கேட்டது நினைவிற்கு வந்தது.

//புலிகள் இந்திய இராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைத்தனர் தானே? அதுவும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகத்தானே நடந்தது. (ஆம் முழு ஆயுதங்களும் கொடுக்கப்படவில்லை. அப்படித் தரத்தேவையில்லையென்று புலிகளுக்கும் ராஜீவுக்கும் நடந்த ஒப்பந்தம் பற்றி பாலசிங்கம் எழுதியுள்ளார். இந்தியத்தரப்பில் அப்பேச்சில் நேரிலிருந்த பண்ருட்டி இராமச்சந்திரன் இப்போது என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவல்)//

ட்ரக்குகளில் வந்திறங்கிய புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களையும், புலிகளின் தலைவரின் பேச்சையும் அந்நாள் ரூபவாகினியில் பார்த்திருக்கின்றேன். "பெரிய அண்ணன் சொல்கிறார். நம்பி நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்" என்று அவர் சொன்னது (அதே வார்த்தைகளில் இல்லை என்று தயவு செய்து யாரும் தொங்க வேண்டாம்) அந்நாள். ஆனால் பின்னாளில் பாலசிங்கம் புத்தகம் எழுதி 'அப்படித் தரத் தேவையில்லை' என்பார். கேட்டால் ஒப்பந்தத்தில் கட்டாயப்படுத்தி பிரபாகரனிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதனால் 'ராஜதந்திரத்துடன்' முழு ஆயுதங்களையும் புலிகள்ஒப்படைக்கவில்லை என்பீர்கள் 'ஒரு தமிழன்' அல்லவா? அதையே 'இத்தகைய ஈனச் செயலால் புலிகள் இந்தியா முதுகில் குத்தினார்கள்' என்று சொல்பவர்கள் 'தேசியவாதத் தமிழ்த் துரோகிகள்' அப்படித்தானே? எலும்பில்லாத நாக்கு நமக்கு 'ஒரு தமிழன்', விட்டுத் தள்ளுங்கள்.

//புலிகளின் ஆயுத, ஆட்பலம் பற்றிய உங்கள் கருத்து பிழை. இன்றைக்கிருக்கும் பலத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். இந்திய இராணுவத்துடனான சண்டையின் போது இருந்த பலம்தானே கதைக்கப்பட வேண்டியது. சிறுரக ஆயுதங்கள் என்றளவில் புலிகளிடம் நவீனமான, இலகுவான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவைமட்டுமே ஆயுதபலமாகிவிடாது. தோட்டாக்கள், கைக்குண்டுகள் முதற்கொண்டு நிறைய விசயங்களில் அவர்கள் தட்டுப்பாட்டுடன் தான் இருந்தார்கள். ஒரு நேரத்தில் 3 தோட்டாவுக்கு ஒரு சிப்பாய் என்ற கணக்கு அவர்களுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். போராளிகளின் எண்ணிக்கையும் மிகமிகச் சொற்பமே.//

'ஒரு தமிழன்' அவர்களே! நான் புலிகளின் ஆயுத பராக்கிரமத்தை சிலாகித்துச் சொன்னதாக ஞாபகமில்லை. ஆமாம். புலிகள் வெறும் ஆயுதமே பலமாய் நம்பியிருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள். இதைப் பற்றி பெரிய அத்தியாயமே எழுதலாம். இருப்பினும் இப்போது ஒப்புமை IPKF vis a vis LTTE செய்வோமே...

முதலில் இந்திய அமைதிப்படையில் முக்கிய கடமையாற்றி, உயிரினைத் துச்சமாய் மதித்து, தாய்நாட்டின் கட்டளையை சிரமேற்கொண்டு, அந்நிய தேசத்தில் அமைதி காக்கச் சென்று, புகழுடம்பு எய்திய தரைப்படை வீரர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!

ஊடகங்களில் எழுதப்படும் வரலாறு நோக்கி எனக்கு ஒரு சிறப்புப் பார்வையுண்டு. IPKF வீரர்களை மறைந்திருந்தோ, டிரம் கண்ணிகளாலோ, இதர பல கொரில்லா தந்திரங்களாலோ கொன்றவர்கள் LTTE 'வீரர்கள்'. அத்தகைய முயற்சிகளில் இறந்தவர்கள் புலிகளில் 'மாவீரர்கள்'. சரி அவர்கள் அவ்வாறே வைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால் என் தேசத்தில் IPKF'ல் இறந்த/இருக்கும் வீரர்களுக்கு என்ன மரியாதை? நாட்டிற்காக எதையும் செய்த/செய்யும் வீரர்களை, முன்னாள் இராணுவத்தில் பணிபுரிந்தவன் என்ற முறையில் பூரிப்பெய்தும் அதே நிலையில், இன்று ஒரு இந்தியக் குடிமகனாய் அவர்களுக்கு தரப்படாத 'உரிய' மரியாதையை எண்ணி வெட்கித் தலை குனிகின்றேன்.

இது வெறும் Rhetoric என்று சொல்லும் அறிவுஜீவிகளை எதிர்நோக்கியே செ(சொ)ல்கின்றேன். ஆனல் இது வெறும் Empty Rhetoric இல்லை. காலமும் இதனை உறுதி செய்யும்.

முதலில் அமைதி காக்கச் சென்று சண்டைக்கிழுக்கப்பட்டு அல்லது சண்டை போடும் நிலைமைக்கு தள்ளப்பட்ட இந்திய இராணுவம் முழுமையாக அதற்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் சென்றதா? இல்லையென்பதே வரலாறு. 'சென்றேன்; வென்றேன்' என்ற இரு குறுகிய காலமே கொண்ட, அதுவும் 'நேரிடையான, முழுமையான' யுத்தத்தையே இந்திய இராணுவம் இருமுறை பாகிஸ்தானுடன் கண்டது. 'ஹிந்தி சினி பைய் பைய்' என்ற சீன (அத)களத்தைத் தவிர. அமைதி காக்கச் செல்லும் போது 'யுத்தம்' அதுவும் புலிகளுடனான 'கொரில்லா யுத்தம்' காணும் 'worst scenario'விற்கு அமைதிப்படை தயாராய் இருந்ததா? இல்லையென்பது வெள்ளிடைமலை.

ஏன்?

1. அங்கு சென்ற ஒவ்வொரு 'பிரிகேட்' அமைப்பிலும் குறைந்தபட்சம் 2 பட்டாலியன்கள் குறைவு
2. ஏற்கெனவே கூறியபடி கைவசம் அரதப்பழசான இலங்கை வரைபடங்கள். ஆனால் சண்டை போட்டதோ புலிகளின் குகையில்
3. இன்று ஆர்டிலரியிலும் புலிகள் கொடி நாட்டியுள்ளார்களாம். ஆனால் அன்று IPKF'விற்கு கொடுக்கப்பட்ட ஆர்டிலரி ஆற்றல் என்ன? அன்றைய இந்திய இராணுவத்தின் முழு ஆர்டிலரி ஆற்றல் அன்று IPKF'விற்கு பயன்படுத்தப்பட்டதா? அரசியல் காரணங்களால் 'அவ்வப்போது' மட்டுமே அதுவும் 'மிகக் குறைந்த அளவில்' மேலும் 'சிவிலியனுக்கு சேதமின்றி'... என்று ஆர்டர் கொடுத்துப் பல் பிடுங்கிய ஆர்டிலரி பின்னெதற்கு? செத்த IPKF வீரர்களின் பல் குத்தவா?
4. இரவானால் பார்க்க உதவும் உபகரணங்கள் இல்லை (பின்னெப்படி இரவில் வன்புணர்ந்தார்களென்ற குயுக்தியான கேள்விக்கு என்னிடம் விடையில்லை)
5. இவ்வளவு ஏன் புலிகளிடம் AK-47; நம்மிடம் Semi-auto SLR
6. புலிகளின் ஜப்பான் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள். நம்மிடம்? Ni-Cd பேட்டரிக்கே பற்றாக்குறை என்பதால் தரம்தாழ்ந்த புராதன ரேடியோ செட் (மன்மதப் பாட்டுகள் கேட்டு, களிப்பாட்டம் போடுவதற்காக இல்லை)

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆயுத பலத்தை விட போர்த் தந்திரங்களை, போலி சாமர்த்தியங்களை, குறுக்கு வழிகளை நம்புபவர்கள் புலிகள். ஒரு தற்கொலைப் புலி பலபேரைப் போட்டுத் தாக்க முடியும். கண்கூடாகவும் கண்டிருக்கின்றீர்கள். அணுகுண்டுவிற்கே அஞ்சாத பொதுமக்கள் கூட இவர்களது தற்கொலைப்படைக் கலாச்சாரத்திற்கு இன்று அஞ்சுகின்றார்கள். இவர்களை எதிர் கொண்ட/கொள்ளும் இராணுவம் எவ்வாறு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்?

ஆமாம் இத்தைகைய கொரில்லாத் தாக்குதலை எதிர்கொள்ள 'என்னதான் செய்திருக்கலாம்? எப்படிச் செய்கின்றார்கள் இன்று?' என்ற முறையில் ஆராய்வோம்.

4 comments:

Anonymous said...

நீங்கள் சொன்ன அத்துனை கருத்துகளும் சரியானவை.. இந்த புலி கூட்டத்தால் தனது ஊயிரை இழந்த இந்த ரானுவ வீரர்களுக்கு எந்த வித மரியாதையும் தரபடவில்லை..

Anonymous said...

விசயங்களை கோர்வையாக சொல்கிறீர்கள்.நன்றாக உள்ளது.

IPKF-ன் பணி அப்போது மிகவும் சிரமம் மிகுந்ததாக இருந்தது.சாதாரண மக்களிடம் இருந்து போராளிகளை இனம் பிரிப்பது சவாலாக இருந்தது.ஒரு IPKF அதிகாரி கூறியது நினைவுக்கு வருகிறது..'கவச வண்டியை சாலையில் நிறுத்தியிருப்போம்..பெரியவர்கள்..பெண்கள்..குழந்தைகள் என எல்லோரும் சூழ்ந்து கொண்டு அந்த வண்டியை தடவி பார்ப்பார்கள்..நாங்களும் மெல்ல பேச்சை ஆரம்பிப்போம்..திடீரென்று ஒரு இளம் வயதினன் லுங்கியில் இருந்து எடுத்து ஒரு கிரனைட் குண்டை எறிந்துவிட்டு கூட்டத்தில் மறைவான்..நம் வீரர்கள் இரண்டு பேர் செத்துக்கிடப்பார்கள்..சிலர் காயம் அடைந்திருப்பார்கள்.இந்த வகை தாக்குதலை சமாளிப்பது உலகின் எந்த ஒரு ராணுவத்திற்கும் சிரமமானது'.

இந்திய ராணுவத்தை மனரீதியில் தயார் செய்யாமல் அனுப்பியது தவறு.ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பலபேருக்கு அங்கு ஒரு மோதல் வரலாம் என்பதே தெரியாதாம்.ராணுவ வீரர்களோ ஒரு அரசியல் பொதுகூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு போவது போல் சென்றுள்ளார்கள். நிலமையின் தீவிரம் புரிந்து சுதாரிப்பதற்க்குள்,அரசியல் பகடையில் காய்கள் நகர்த்தப்பட்டு ராணுவம் நாடுதிரும்பியது.

உங்களுடைய முந்தய பதிவில் ஒரு அனானி IPKF-LTTE பயன்படுத்திய துப்பாக்கிகளை பற்றி எழுதியிருந்ததை படித்தேன்.ஒரு நவீன ராணுவத்தில் M-16, AK , G-3,SLR போன்ற துப்பாக்கிகளின் பங்கு குறைவானதே.INFANTRY-யில் பாதுகாப்புக்காக எடுத்துச்செல்வார்கள் மற்ற தாக்குதல்களை artillery மற்றும் missile lanchers பார்த்துக்கொள்ளும்.

ஆனால் LTTE போன்ற அமைப்புகளுக்கு இந்த வகை துப்பாக்கிகள் மிக முக்கியமானவை.LTTE இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்துவதால் அது நவீனமாகிவிட்டதாம்..இந்தியா SLR பயன்படுத்துவதால் அது நவீனமாகவில்லையாம். அதை ஒருவர் ஒத்துக்கொள்கிறராம்.இலங்கையில் நடந்தது போரே அல்ல..அது ஒரு hit and run முறையில் நடத்தப்பட்ட ஒரு வகை இன்னல்கள்.இந்திய ராணுவத்தின் ஆண்டு பட்ஜெட் அவருக்கு தெரியுமா? இந்திய ராணுவத்தை LTTE யுடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்தவும். இது என்ன இந்திய-ஸ்ரீலங்கா கிரிகெட் போட்டியா?

CAPitalZ said...

ஐயா... போர் என்று வந்தால், ஞாயமான போர் அனியாயமான் போர் என்று இருக்கிறதா?

போரில் எதிரியை துவம்சம் செய்வதுதான் குறிக்கோள், அது எந்த வழியானாலும்.

புலிகள் மறைந்திருந்து தான் தாக்கினார்கள். இந்திய இராணுவம் மட்டும் அந்தக் காலத்தில் போர் புரிவது போல் ஒர் அறிக்கை விட்டு, இந்த இடத்தில் தான் போர் நடக்கும் என்று தெரிவித்து, அந்த நேரத்தில் அங்கு சென்று, ஒழுங்கு வரிசையாக நின்று தலைவனின் கட்டளையின் பின் ஒவ்வொரு படையாக எதிரி நோக்கி சுட்டு, பின் அந்த படை நிற்க எதிரி படை சுட ஒரு நேரம் கொடுத்து, அவர்கள் சுடவும் ஓடி ஒழியாமல் அந்த இடத்திலேயே இருந்து சூடு வாங்கி இறக்க, எஞ்சி உள்ள படை திரும்பவும் தங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நின்று மீண்டும் எதிரி மீது தலைவனின் கட்டளையின் பின் சுட்டு... இப்படி மாறி மாறி சுட்டு வென்றிருந்தால் நீங்கள் சொல்வதை நான் சிரம் தாழ்த்தி ஒப்புக்கொண்டிருப்பேன்.

இன்றைய காலகட்டத்தில் எந்த இராணுவமும் இப்படி செய்வது இல்லை. இது ஏன், அன்று அம்பும் வில்லும் வைத்து சண்டை பிடித்த ஆதிவாசிகளை துப்பாக்கி வைத்து ஒழிந்திருந்து கொல்லவில்லையா? அப்படி எத்தனை பேரரசுகள் எத்தனை இறையாண்மை உள்ள நாடுகளை ஆக்கிரத்து ஆண்டாண்டு காலம் ஆண்டிருக்கின்றான? இன்று இராணுவம் இப்படி சண்டைபிடிக்கிறது; எதிர்காலத்தில் கெரில்லா தாக்குதல் தான் போர்.

கெரில்லா தாக்குதல் ஒன்றை மட்டும் உணர்த்துகிறது. எதிர் காலத்தில் எந்த நாடும் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்து ஆளமுடியாது. இதை உணர்ந்து எந்த ஒரு நாடும் வேறோர் நாட்டுக்கு போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற என்ற நோக்கில் இராணுவம் அனுப்பாது.

சரி ஆயுதங்கள் எதற்காக உற்பத்தி செய்யப்பட்டன? ஒரு உயிரை தூர இருந்து மிக துல்லியமாக, மிக வேகமாக, மிக சேதம் கொடுக்கவல்லனவாக இருக்கவே. அப்படியானின் இந்த ஆயுதம் நன்று அந்த ஆயுதம் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா ஆயுதமும் உயிரை எடுக்கவே அன்றி உயிரை சிறைப்பிடிக்க அல்ல.

கொல்ல என்று வந்த பின் எதனால் கொண்டால் என்ன? துப்பாக்கியால் என்னோர் உயிரைக் கொல்வது ஞாயம்; கைக்குண்டை எறிந்து உயிர்களைக் கொல்வது ஞாயம்; உலங்கு வானூர்தியில் [கெலிcஒப்டெர்] பாதுகாப்பாக மேலிருந்து கீழ் நோக்கி சுட்டுக் கொல்வது ஞாயம்; விமானத்தில் பாதுகாப்பாக வந்து குண்டு போட்டு அந்த குண்டு வெடித்த சத்தம் கேட்கமுன்னே அந்த இடத்தை விட்டு போவது ஞாயம்; அணுகுண்டு போட்டு ஒரு பரந்த பிரதேசமே நாசமாக்குவது ஞாயம். ஆகவே ஓர் உயிரை கொல்ல மற்றோர் உயிர் காரணமாக இருக்கிறது. இதையே ஓர் உயிர் மற்றய உயிரைக் கொன்றால் [தற்கொலை] தப்பா?

அகிம்சைவாதிகள் ஏன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்? ஐநா பொருளாதாரத் தடை செய்தும் அணு ஆயுதத்தை செய்து [5] முடித்தவர்கள். எங்கே உலக நாடுகள் எல்லாம் இனி ஆயுதங்களை ஒழிப்போம் என்று தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை இல்லாதொழிக்கட்டும்.

"தலைக்கு மேல் வெள்ளம் போனால் பிறகு, சாண் என்ன முழம் என்ன"
கொல்ல என்று முடிவெடுத்தாற் பின் ஆயுதத்தால் கொன்றால் என்ன தற்கொலையால் கொன்றால் என்ன.


======
இந்திய இராணுவம் தகுந்த ஆயுதங்களுடன் வரவில்லை என்று சொல்கிறீர்கள். சரி தகுந்த ஆயுதம், படை என்று ஒழுங்குபடுத்த இரண்டு (2) வருடம் போதாமல் இருந்ததா?!

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

கால்கரி சிவா said...

//ஐயா... போர் என்று வந்தால், ஞாயமான போர் அனியாயமான் போர் என்று இருக்கிறதா?

போரில் எதிரியை துவம்சம் செய்வதுதான் குறிக்கோள், அது எந்த வழியானாலும்.
//

அப்படியென்றால் பொதுமக்களை கேடயமாக போரிடும் சமயம் அப்போரில் பொதுமக்கள் சாகும் போது மட்டும் அடக்குமுறை ஒழிக என பொய் கோஷமிடுவது ஏன்? இனம் அழிகிறது அதைக் காப்பற்ற எல்லாரும் வாருங்கள் என முதலைக் கண்ணீர் வடிப்பது ஏன்?

போரில் இதெல்லாம் சகஜமப்பா என சொல்லலாமா காபிடல்?