That's Tamil.Com இணைய தளத்தில் சமீபத்தில் வெளியான கவிதை
ஆசை மொழி பேசவும்
ஆதுரமாய் அணைக்கவும்
அப்பா வேண்டுமென்று
அழுதது ஆயிரம் முறை
பள்ளிக்கும் பார்க்குக்கும்
கைகோர்க்கும் பாக்கியமில்லை
எனக்குத் தந்தை
இனிஷியலில் மட்டும்தான்
அப்பன் பெயராவது
அறிந்த விஷயம்
அதிக சந்தோஷம்
அளிக்கவில்லை
தொடுப்பு மகனென்று
ஊர்தூற்றும் போது
துக்கம் அடைக்க
தூக்கம் தொலைத்தேனே
கொஞ்சம் கொஞ்சமாய்
நடக்கும் கொலைக்கு
கர்ப்பத்திலேயே என்னை
கலைத்திருக்கலாமே?
அறியாத இரவுகளில்
புரியாத சப்தம்
காலையில் எழுந்தவுடன்
கனவுகள் வலிக்கும்
அப்பா வந்து வழமையாய்
அவசரமாய் வெளியூர் போகும்
அம்மா சொன்ன பொய்யின்
உண்மை சுடும்
உன் உயிலில்
பங்கு வேண்டாம்
உன் சொந்தங்களின்
பந்தமும் வேண்டாம்
அரையிருட்டு உறவுக்கு
அர்த்தம் கொடுப்பாயா?
உந்தன் விந்தினில் விளைந்ததை
உலகிற்கு உரைப்பாயா?
மகனேவென்று மடியில் கிடத்தி
ஆண் குந்தியாய்
அழுவேனென்று சொல்
மரிக்கின்றேன் இப்போதே
முடியாவிடில் சொல்லி விடு
விபரம் தெரியும் வயதில்
கரத்திற்கு வலு வரும்
காத்திருப்பேன் அதுவரை
Thursday, October 21, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment