Thursday, October 28, 2004

DRDO வெள்ளை யானையா?

சமீபத்தில் திண்ணையில் வெளியான கட்டுரை

DRDO'ல் அரசு செய்யும் முதலீட்டிற்கு தக்க பலன்கள் கிட்டவில்லை என்று அவுட்லுக்கில் 18 அக்டோபர் 04'ல் எழுதியிருக்கின்றார்கள். கட்டுரையை இணையத்திலும் படிக்கலாம்.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ரவி கண்ணா 'மகா வாயு சக்தி' என்னும் பயிற்சியில் ஈடுபடும்போது, ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளாக இறக்கின்றார். இவ்விபத்துக்கு காரணம் என்னவென்று விசாரணை பின்னர் நடந்தது. 1000 பவுண்டு குண்டுகளில் பொருத்தப்பட்ட ப்யூஸ்தான் காரணமென்று கண்டுபிடித்தார்கள். பயிற்சியில் மாதிரி இலக்கை நோக்கி கண்ணா இக்குண்டினை வீச, குண்டு விமானத்தின் உள்ளேயே வெடித்து விட்டது. இந்த ப்யூஸை உற்பத்தி செய்தது பூனாவிலுள்ள DRDO. அவுட்லுக் பத்திரிக்கை மேலும் கூறுவது:

1. FBRN-4I என்றழைக்கப்படும் அந்த ப்யூஸில் உணர்வான்கள் (sensors) செயல்படவில்லை
2. பாதுகாப்பின்மை அல்லது அபாய சுட்டுவான்கள் (unsafe indicators) இல்லை
3. பழைய சோவியத் ப்யூஸை காப்பியடித்தது

DRDO வருடத்திற்கு 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், 51 அதி நவீன சோதனைச் சாலைகளை கொண்ட DRDO இன்றுவரை சாதித்தது என்ன? மிக முக்கியமான குற்றச்சாட்டு அடுத்து வருகின்றது. 1958'ல் ஆரம்பிக்கப்பட்ட DRDO'ன் தனது முக்கிய குறிக்கோளான 'அன்னிய ஆயுத இறக்குமதி குறைக்க வேண்டும்' என்பதையே மறந்து விட்டது என்று அவுட்லுக் கட்டுரை கூறுகின்றது.

இந்தியாவின் இவ்வருட இராணுவ பட்ஜெட்டான ரூ.77,000 கோடியில் பாதிக்கும் மேல் தளவாளங்கள் இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அடுத்த 15 வருடங்களில் ரூ.1,20,000 கோடி பெறுமான இராணுவ கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்க அனுமதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியெனில் DRDO என்னும் வெள்ளை யானை ஏன் அரசாங்கம் கட்டியழ வேண்டுமென்று கேள்வியையும் எழுப்புகின்றது. DRDO'வை தனியார் மயமாக்க யோசனையையும் முன் வைக்கின்றது.
DRDO'ல் பிரச்சினைகளே இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கிவிட முடியாது.
அதே போல் DRDO'வே தேவையேயில்லை அல்லது தனியார் மயமாக்கி விடுங்கள் என்ற வாதமும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்காவில் தயாரான சாதாரண திருப்புளி குறைந்தது $5 இருக்கும். ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதே திருப்புளி வெறும் 99 செண்ட்தான். இதே நிலைதான் ஆயுதங்களுக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதம், இறக்குமதி செய்யப்படுவதை விட விலை அதிகம்தான். அதனால் ஆயுதங்களை இறக்குமதி மட்டுமே செய்ய முடியுமா?

இறக்குமதியும், தனியார் மயமாக்கலும்

கேளா கொடுத்து வேளா வாங்கினோம் என்று கப்பற் படையில் கிண்டலாக கூறுவார்கள். இந்தியில் வாழைப்பழத்தை கேளா என்பார்கள். வேளா என்பது ஒருவகை நீர்மூழ்கி (Vela class submarines).முன்னால் சோவியத் யூனியனுக்கும் நமக்கும் இருந்த புரிதல் காரணத்தால் கடனுக்கே, இராணுவ சமாச்சாரம் வாங்க முடிந்தது என்பதைதான் கூடுதல் நகைச்சுவையுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் இன்று நிலைமையோ தலை கீழ். கப்பலிலிருந்து வீசப்படும் P வகை ஏவுகணைகளுக்கு (SSM) புதிய ரேடார் தேவைப்பட்டது. ரஷ்யாவை அணுகியபோது அவர்கள் சொன்ன விலையில் கப்பற் படைக்கு தலை கிர்ரடித்து விட்டது. ஒரு ரேடார் ஒரு லட்சம் டாலர்களை விட அதிகம். அதுவும் முழுக்காசையும் மொத்தமாக என்ணி வைக்கச் சொல்லி விட்டது. இறக்குமதி செய்வதினால் விளையும் அபாயம் இது. மைக்ரோசாப்டில் மென்பொருள் வாங்கினால், நம்மை அறியாமல் அந்த நிறுவனத்திடம் நாம் அடமானம் போகின்றோம். நாளை அவர்கள் வேறு மென்பொருளுக்கு மாறச் சொன்னால் மாறத்தான் வேண்டும். ஏனெனில் முதலீடு செய்தாகி விட்டதே? இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து ராணுவ தளவாடங்களுக்கும் இது பொருந்தும். எவ்வளவு நாட்கள்தான் இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளையே நம்பிக்கொண்டு நாட்களை ஓட்டுவது?

சரி 'நமக்கு நாமே' என்ற திட்டத்தை செயல்படுத்தி, DRDO'வை தனியார் மயமும் ஆக்குவோம். அயல் நாட்டிற்கு புலம் பெயரும் இளம் விஞ்ஞானிகள் இந்தியாவிலேயே தங்கி விடுவார்களா? இந்தியாவின் பாதுகாப்பை தனியார் மயமாக்கலாமா? அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அனைத்துமே தனியார் மயம்தானே போன்ற கேள்விகளில் நியாயம் தென்படும். மற்ற நாடுகளில் இருக்கும் தனியார் நிறுவனங்களின் தணிக்கை இந்தியாவில் இல்லை. இருக்கும் தணிக்கைகளும் வெறும் பேப்பர் ஆணைகளாகவும், அதிகார மட்டத்தில் சிலருக்கு வரும்படி வருவதற்கு உதவும் வகையில் தான் உள்ளன. இந்திய பாதுகாப்புக்கு எப்படி வெறும் இறக்குமதி பயன்படாதோ அதே போல் முற்றிலும் தனியார் மயமாக்குதலும் உதவாது. தெளிவான விதிகள் ஏற்படுத்தாவரை உடனடி, முற்றிலும் தனியார் மயமாக்குவது விஷப்பரீட்சையாகவே முடியலாம். ஆனால் தனியார் நிறுவனங்களை இராணுவத் தளவாடத் தயாரிப்பிற்கு தேவை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஏவுகணை தயாரிப்பில் ரேடாரையோ அல்லது வேறு உபகரணங்களையோ தயாரிக்குமாறு சொல்லலாம். இது கண்டிப்பாக தயாரிப்பை துரிதப்படுத்த உதவும். GSLV ராக்கெட் இஞ்சின்கள் தயாரிப்பில் கோத்ரெஜ் மற்றும் Machine Tools and Reconditioning (MTAR) நிறுவனங்கள் ISRO'விற்கு உதவி செய்கின்றன.

ஆனால் அமெரிக்காவில் உள்ள ஏற்றுமதி/இறக்குமதி விதிகள் பற்றி தெரியுமா? சூப்பர் கணிணிகளை இந்தியாவிற்கு தரக் கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு தடா போட்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அக்கணிணிகள் கல்விக்கு மட்டுமின்றி அணு ஆயுத திட்டத்திற்கு இந்தியா பயன்படுத்தும் என்று காரணம் கற்பிக்கப்பட்டது. கடைசியில் நடந்தது என்ன? 2003'ல் பூனாவின் C-DAC (Centre for the Development of Advanced Computing) நிறுவனம் பரம் பத்மா (Param Padma) எனப்படும் சூப்பர் கணிணியை கண்டுபிடித்தது. அணுகுண்டு சோதனையில் இந்தியா சேகரித்த தகவல்களை இது போன்ற சூப்பர் கணிணிகளில் உள்ளீடு செய்து ஆராய்ச்சி செய்யலாம். வரும் நாட்களில் பாலைவனத்தில் அணுகுண்டு வெடித்துதான் சோதனை செய்ய வேண்டுமென்பது இருக்காது.

மிகுந்த தட்பத்தை உண்டு பண்ணும் தொழில்நுட்பத்தை (Cryogenic Technology) நமக்குத் தரக் கூடாதென்று அமெரிக்கா போட்ட கட்டளைக்கு ரஷ்யா தலை வணங்கியது. ஏன்? GSLV என்னும் சாடிலைட் ஏவ உதவும் ராக்கெட்டை பயன்படுத்தி நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து விடுவோமென்ற பயம். 2005'ல் இவ்வித ராக்கெட்டை நாமே தயாரிக்க முடியுமென்ற நிலையில் இருப்பதாக ISRO சொல்கின்றது. அமெரிக்காவின் தடை நமக்கு அதீத உத்வேகம் தந்ததை மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இதேபோல் DRDO'வின் திட்டங்கள் நிறைவேறினால் இந்தியா பாதுகாப்புத்துறையில் தன்னிறைவடைந்துவிடும். ஆயுத இடைத்தரகர்களின் லாபி இதை சுத்தமாக விரும்பவில்லை.

DRDO'வின் பிரச்சினைகள்

முன்னாள் தரைப்படை தலைவரான ஜெனரல் எஸ்.ஆர். சௌத்திரி கூறுவதாவது:"DRDO பேராசை நோக்கம் கொண்டிருக்கின்றது. மேலும் பயன்பாட்டாளரையும், DRDO'வையும் இயைந்து இயக்கும் சக்தி இல்லை." இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. DRDO மற்றும் NSTL (Naval Scientific and Technological Laboratory) போன்ற நிறுவனங்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு. திட்டங்கள் வகுக்கப்பட்டவுடன் அவற்றை செயல்படுத்துவதில் இந்நிறுவனங்கள் பயன்பாட்டாளர்களுடன் ஒருமித்து செயல்படுவதில்லை. இது வெறும் 'சிவிலியன்' மற்றும் 'மிலிட்டரிக்காரன்' வேற்றுமையென்று ஒதுக்கிவிட முடியாது.

தனது வலைப்பூவில் வெங்கட் அவுட்லுக்கின் கட்டுரையை அலச ஆரம்பித்து இருக்கின்றார். முப்படைகளிள் மற்றும் DRDO அதிகாரிகள் மற்றும் அகங்காரம் (Ego) குறித்து எழுதியுள்ளார். மிலிட்டரிக்காரனிடம் இயல்பாகவே கொஞ்சம் Ego அதிகம்தான். ஆனால் இத்தைய திட்டங்களில் பெரும்பாலும் அனுபவமிக்க இராணுவத்தின் உயரதிகாரிகளே இருப்பார்கள். நாட்டின் தன்னிறைவுக்காக நடத்தப்படும் இத்தகைய திட்டங்களில் ஈகோ ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. கப்பல் மராமத்து (Naval Dockyard) செய்யும் இடங்களில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கின்றேன். தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் சிவிலியன்கள் ஒத்துழைப்பு அபரிமிதமாக இருக்கும். நாட்டிற்காக உழைக்கின்றோம் என்ற தேசப் பற்று ஒன்று போதும். தேவையில்லாத ஈகோ பறந்து விடும்.

கடற்படையின் தரை விட்டு தரை பாயும் ரஷ்ய ஏவுகணைகள் இன்றைக்கு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டவை. ரஷ்ய விதிகளின் படி இந்த ஏவுகணைகளின் வாழ்க்கை (Shelf Life Period) ஏறத்தாழ முடிந்து விட்டது. கடற்படையில் இரண்டு தளங்களில் இந்த ஏவுகணைகள் அனைத்தும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். சோதனையின் போது NAI எனப்படும் (Naval Armament Inspectorate) தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் உடனிருப்பார்கள். ஆய்வாளர்களில் கடற்படை அதிகாரிகளும், சிவிலியன் அதிகாரிகளும் அடங்குவர். ஆதலால் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் வெற்றி பெறும் ஏவுகணைகளே கப்பலில் பொருத்தப்படும். பேப்பர் விதிகளின் படி வாழ்க்கை முடிந்த இந்த ஏவுகணைகள் சோதனை ஓட்டத்தில் பழுதுகளின்றி தேர்வாகியது. ரஷ்யாவின் உதவியுடன் அனைத்து ஏவுகணைகளுக்கும் மறுவாழ்வு (Life Extension) அளிக்க முடிவெடுக்கப்பட்டது. பயன்படுத்தப்படாமல் ஹேங்கரில் இருப்பினும், நுட்பமான சோதனைகளைக் கடந்தாலும், ஏவுகணைகளின் மூலப்பொருள் சோதனைக்கு (Material Test) உட்படுத்த முடிவெடுக்கப்பட்டது. DRDO'வின் உதவி நாடப்பட்டது. மிகவும் உயர்ந்த பதவியிலிருந்த DRDO அதிகாரி பலமுறை வந்து சென்றார். அவரின் குறிக்கோளெல்லால் இத்திட்டதிற்கான ஒதுக்கப்பட்ட தொகையினை செலவுக்கணக்கு காட்டுவதில்தான். உச்சக்கட்ட கோபத்தை அடக்கி கேள்விகள் கேட்டால் புரிந்து கொள்ள கடினமான தூய வேதியியல் காரணங்கள் சொல்வார். கடைசியில் ஏவுகணைகள் மூலப் பொருள் சோதனைகளில் வெற்றி பெற்றதாய் கூறினார். எந்த விதமான சோதனைகள் செய்யப்பட்டன? விளைவுகள் என்ன? எவ்வித காரணிகள் அடைப்படையாய் எடுத்துக் கொள்ளப்பட்டன? ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஒரு காரணத்தால் DRDO என்னும் ஒட்டு மொத்த நிறுவனத்தையே குறை சொல்ல முடியாதுதான்.

ஆயினும் DRDO ஒரு வெற்று வேட்டு என்று ஒதுக்கி விடவும் முடியாது. 1958'ல் தரைப்படையின் TDE (Technical Development Establishment), DTDP (Directorate of Technical Development & Production), DSO (Defence Science Organisation) போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து DRDO உருவாக்கப்பட்டது. இன்று சுமார் 5000 விஞ்ஞானிகள் மற்றும் 25,000 தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பிருமாண்டமாய் DRDO வளர்ந்து நிற்கின்றது. விண்கலன்கள், வெடிப்பொருட்கள், மின்ணுவியல், போர் வாகனங்கள், மின்னணு கருவிகள், ஏவுகணைகள், அதி நவீன கணிணியல், கடற்படை சாதனங்கள், வாழ்வியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் விவசாயத் துரை என்று DRDO பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை சிரத்தையாக செய்து வருகின்றது.

DRDO'வின் தொலை நோக்குப் பார்வையும் (Vision), செயல் படுத்தும் நடைமுறையும் (Mission) படிக்க மிகவும் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் நிதர்சனத்தில் குறைபாடுகள் உள்ளதை மறுக்கவும் முடியாது. உதாரணமாக ஜெனரல் சவுத்திரியின் ஆதங்கத்தை எடுத்துக் கொள்வோம். பயன்பாட்டாளர்களையும், DRDO'வையும் இயைந்து பணி புரிய தடையாக உள்ளது எது? தவறு யாருடையது? NSTL விசாகப்பட்டினம் நிறுவனத்தை நடத்திச் செல்பவர் அட்மிரல் மொகப்பத்ரா. இவ்வாறு முக்கியமான உயர்பதவிகளில் அனுபவமிக்க, சிவிலியன்களை புரிந்த இராணுவ அதிகாரிகளை நியமித்தால் குழப்பங்கள் குறையலாம். முன்னேறிய நாடுகள் கடை பிடிக்கும் கொள்கையைத்தான் கூறுகின்றேன். பாதுகாப்புத்துறை மந்திரி, செயளாலர் போன்ற பதவிகளுக்கு, பதவி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிக்கலாம். முக்கியமான திட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்களாகவும் இவர்களின் சேவை பயன்படுத்தப்படலாம்.

அர்ஜூன் டாங்குகள்

அவுட்லுக்கில் கூறியபடி தரைப்படை 1983'ல் குறைந்த எடை டாங்குகள் தேவையென்று கூறியது. பின்னர் இரு வருடங்களில் தேவையில்லையென்று கூறிவிட்டது. 1993'ல் மீண்டும் த்ரைபடை இக்கருத்தையே உறுதிப்படுத்த, DRDO தலைவரும் ஒத்துக்கொண்டார். 1995'ல் தரை சோதனைகளுக்குப் பின்னரே DRDO இத்திட்டத்தைக் கைவிட்டது. இந்தியாவின் உயரிய தணிக்கை நிறுவனமான Comptroller and Auditor General (CAG), DRDO'வை தேவையின்றி செலவு செய்ததற்காக கடுமையாக இடித்துரைத்தது. இதற்காக யாரும் தண்டிக்கப்படவோ குறைந்தபட்சம் கண்டிக்கப்படவோ இல்லையென்பதுதான் வேதனை தரும் விடயம். நமது ஜனநாயகத்தில் இவையெல்லாம் சகஜமானது என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை. இரண்டு வருடம் கழித்து CAG கருத்தை ஆமோதித்த பார்லிமெண்ட் குழுவொன்று, முப்படைகளையும் கண்டிக்கத் தயங்கவில்லை. வெறும் துண்டுப் பிரசுரங்களை எடுத்துக் கொண்டு, DRDO'விடம் கொடுத்தால் விளைவுகள் மோசமானதாகத்தானிருக்கும் என்றது. இக்காரணங்களால் வெறும் DRDO'வை குற்றங் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அர்ஜூன் டாங்குகளைப் பற்றி அவுட்லுக்கில் கூறப்பட்ட கருத்துகளில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த டாங்குகளின் எடை அதிகமென்று முதல் குற்றச்சாட்டு. உண்மைதான். 58.5 டன் எடையிருக்க வேண்டியது 61.5 டன் ஆகிவிட்டது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட்ட இஞ்சினால் அவதானிக்கப்பட்ட முழு வேகம் தரமுடியவில்லை. மேலும் எடை கூடிய காரனத்தால் அவற்றை பாலங்கள் மூலம் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு எடுத்துப் போக முடியாதென்று தரைப்படை கூறுகின்றது. 1974'ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பலமுறை தாமதப்பட்டது. இன்றும் டாங்கிகளின் முழு உற்பத்தித்திறனை DRDO எட்டவில்லை. தாமதங்களினால் விளைந்த அதீத செலவினங்கள் யானையைக் கட்டி தீனி போடுகின்றோமே என்று நினைக்குமளவிற்கு போய்விட்டது. நடுவில் பாகிஸ்தான் உக்ரைனிடமிருந்து T-84 டாங்குகளை வாங்க, இந்தியாவிற்கு வேறு வழியின்றி T--90 டாங்குகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டியதாகி விட்டது. பீஷ்மா என்று பெயரிடப்பட்ட இந்த டாங்குகள் அதிநவீனமானது. எடையோ 48.5 டன்கள் மட்டுமே.

மேலும் அர்ஜூனின் சோதனை ஓட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை தரைப்படை பட்டியலிட்டது. நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அர்ஜூனைப் போலவே ஜெர்மனிக்கு லெப்பேர்டு - II (Leopard II) டாங்குகளை தயாரிக்க ஆன காலம் மற்றும் செலவு என்ன? மேலும் பணம் ஒதுக்குவது, திட்டத்தை விரைந்து நடத்த ஒத்துழைப்பென்று ஜெர்மனியின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் பின்பற்றியதா?

இன்று கையில் ஒரு டாங்கு உள்ளது; ஆனால் குறைபாடுகளுடன். You will have to live with ugly baby என்றில்லாமல், குறைபாடுகளை உடனடியாகக் களைவோம். T-90 டாங்குகளின் இறக்குமதி இடைத்தீர்வுதானென்று அறிவோம். பராமரிக்கும் நேரம் (Maintenance Time) அர்ஜூன் டாங்குகளில் அதிகமென்ற தரைப் படையின் குற்றச்சாட்டில் எவ்வளவு வலுவுள்ளதென்றும் தெரியவில்லை. முழு உற்பத்தி திறனை எட்டியபின்தான் இக்குறைப்பாடைப் பற்றி பேச முடியும். முதலில் DRDO குறைகளை நிவர்த்தி செய்ய முடுக்கி விடப்பட வேண்டும்.

Tejas எனப்படும் LCA திட்டம்

அவுட்லுக்கின் அடுத்த பெரிய விமர்சனம் Tejas எனப்படும் LCA (Light Combat Aircraft) பற்றியது. LCA என்பது உலகிலேயே மிகச் சிறிய, குறைந்த எடை கொண்ட, பன்முனை தாக்குதலுக்காக உருவாக்கப்பட்ட விமானம். DRDO' இணைய தளம் தரும் தகவலின்படி 1983'ல் கருக்கொண்ட இத்திட்டத்தின் தேவைகளை ஆவணமாக்கும் போது 1989 ஆகிவிட்டது. ஒரு திட்டத்தின் தேவைகளை நிர்ணயிக்க ஆறு ஆண்டுகளா? இதற்கு DRDO'வை மட்டும் பொறுப்பாக்க முடியுமா? ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாய் வந்த LCA'விற்கு அரசாங்கம் தந்த முக்கியத்துவமென்ன? 04 ஜனவரி 2001'ல் சுமார் பதினெட்டு நிமிடங்களுக்கு LCA'வின் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடந்தது. விமானப்படையின் தலைமைத் தளபதி எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியதாய் அவுட்லுக்கில் பதிவானது,"LCA கொஞ்சம் மெதுவாக நகருகின்றது. காவேரி எஞ்சினை நடுமுறை தரக்கட்டுப்பாடு மறு ஆய்வு (mid-term quality review) செய்யப்பட கோரியிருக்கின்றேன்."

தரைப்படையின் அர்ஜூன் டாங்குகள் சந்தித்த எதிர்ப்புகளை விட, விமானப்படையிடம் LCA சந்தித்த எதிர்ப்புகள் குறைவே. இத்திட்டமும் பலமுறை காலதாமதமானதுதான். அமெரிக்காவின் தடை காரணமாக GE-404 எஞ்சின் கிடைப்பதில் தாமதம்; காவேரி எஞ்சின் 18,000 அடிக்கு மேல் சரியாக செயல்படுவதில்லை போன்ற காரணங்களால் Tejas தாமதமாகின்றது. நமது தேவைகளை முறைப்படுத்தி LCA'வை நேர்ப்படுத்துவோம். கையிலிருக்கும் வெண்ணையை சரிப்படுத்தி நெய் எடுப்போம். இடை நிவாரணமாக மிராஜ் 2000 வாங்கவும் தயங்கக் கூடாது.

ஏவுகணைகள்

ISRO மற்றும் அதன் தலைவராயிருந்த அப்துல் கலாம் இல்லாமலிருந்தால் ஏவுகணைத் திட்டங்களும் செயலிழந்து போயிருக்குமென்று அவுட்லுக் குற்றம் சாட்டுகின்றது. ப்ரித்வி (Prithvi) ஏவுகணை மட்டுமே வெற்றிகரமாக அமைந்தது என்று சொல்லிவிட்டு அக்னி, ஆகாஷ், திரிசூல் வெற்றிகள் பற்றி அவுட்லுக் மறந்துவிடுகின்றது. நாக் (Nag) முழுமையாக வெற்றியடையவில்லைதான். ஆனால் தளச் சோதனைகள் தொடர்கின்றன.
கடற்படைக்காக திரிசூலை (Trishul) தரையிலிருந்து வானம் நோக்கித் தாக்கும் ஏவுகணையாக மாற்றம் செய்ய DRDO முடிவெடுத்தது. பிப்ரவரி 2001'ல் திரிசூலின் கடற்படை வடிவம் தயாரிப்பு முடிந்து, பிரம்மபுத்திரா வகைக் கப்பல்களில் நிறுவப்படுமென்று திட்டமிடப்பட்டது. ஆனால் 15 மார்ச் 01 அன்று முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னான்டஸ் திரிசூலின் சோதனைகள் தொடர்வதாக அறிவித்தார். அதன் பின்னர் இடைக்கால நடவடிக்கையாக பராக் (Barak) ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்கி இணைத்துள்ளார்கள். இதில் தவறேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. நவம்பர்'03 அன்று இந்தியா பிரம்மபுத்திரா வகை கப்பல்களில் பராக் ஏவுகணைகளை பொருத்துவதற்காக 100 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டது. ஏற்கெனவே இந்திய தரைப்படையானது 260 மில்லியன் டாலர்களுக்கு இதே ரக ஏவுகணைகளை வாங்கியிருந்தது. மேலும் விமானந்தாங்கிக் கப்பலான விராட்டில் பராக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. திரிசூலுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பிரம்மபுத்திரா கப்பல் வகைகளை நிறுத்தியா வைக்க முடியும்? ஏற்கெனவே சோதிக்கப்பட்ட பராக்கை பொருத்தி பிரம்மபுத்திரா கப்பலை கடற்படையின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது சரியான முடிவே. திரிசூலின் கடற்படை வடிவம் முழுமை பெற அரசு மற்றும் DRDO அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

அணுசக்தி நீர்மூழ்கித் திட்டம்

இன்னொரு பெரிய தாக்குதல் ரூ.7,500 கோடி செலவு செய்தும் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தில் முன்னேற்றம் ஏதுமில்லையென்பது. 2008'ல் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கட்டி விடுவோமென்று DRDO மார் தட்டுகின்றது. அவுட்லுக்கோ இத்திட்டத்திலும் 'இறக்குமதி சாதனங்களே' பிரதானமாயிருக்கும் என்று ஆருடம் கூறுகின்றது. LCA, அர்ஜூன் மற்றும் திரிசூல் சோதனைகளை ஏன் நிறுத்தக் கூடாதென்று கூறிய காரணங்கள் இவ்விஷயத்திற்கும் பொருந்தும். முதலில் நீர்மூழ்கியைக் கொண்டுவருவோம். அதே நேரத்தில் உள்நாட்டிலேயே உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்வோம். அணுசக்தி நீர்மூழ்கி கட்டும் திட்டம் மிகவும் 'ரகசியமாய்தான்' உள்ளது. இதனால் எவ்வாறு பணம் வருகின்றது, செலவு செய்யப்படுகின்றது என்பதை தணிக்கை செய்ய முடியவில்லை என்பதும் உண்மைதான். தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதென்னும் வாதத்தில் சுரத்துண்டு. ஆனால் இதையே கவசமாக DRDO எடுத்துக்கொள்ளக் கூடாது. வெகு விரைவில் 'நம்பக்கூடிய' முடிவு தேதியை அறிவித்து சுறுசுறுப்பாய் திட்டத்தை நகர்த்த வேண்டும்.

அகலக்கால்

வெங்கட் தனது கட்டுரையில் இன்னொரு சுவாரஸியமான தகவலை முன்வைக்கின்றார். ஒரே நேரத்தில் விமானம், ஏவுகணைகள், டாங்குகள், அணுசக்தி நீர்மூழ்கி, ஆளில்லாத விமானம் என்று DRDO பேராசையுடன் அகலக்கால் வைக்கின்றதென்று. அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய நாடுகள்தான் இவ்வாறு செய்தன என்று குறிப்பிடுகின்றார். தனது கருத்திற்கு வலு சேர்க்க பிரேசில், இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற நாடுகளை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட ஒரு துறையில் தனித்துவம் பெறவேண்டுமென்று கூறுகின்றார். நமது நாட்டின் இறையாண்மைக்காக DRDO'வின் திட்டங்கள் அகலக்கால் போல் தோன்றினாலும் இன்றியமையாதது. மேலும் DRDO போன்ற பெரிய நிறுவனத்தால் இத்திட்டங்களை வெற்றிகரமாக செயலாக்கும் தகுதி வேண்டும். அகலக்கால் என்பதைவிட சரியாகத் திட்டமிடாமல், முடியாத இலக்குகளை நிர்ணயித்து இன்று DRDO அவதிப்படுவதாகவே நான் கருதுகின்றேன். இதனால் தனது நம்பகத்தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று இப்படி ஒரு கையாலாகாத அரசு நிறுவனம் தேவையா என்ற கேள்வியில் சிக்கித் தவிக்கின்றது. DRDO ஊழியர்கள் அரசாங்கத்தின் வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை எப்படிப் பெறுவது, செலவு செய்வது என்பதிலேயே குறியாக இருக்கக்கூடாது. மேலும் தான் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு பொறுப்பும் ஏற்க வேண்டும். திட்டம் தள்ளிப் போகின்றது என்ற மேம்போக்கான பதிலைத் தராமல், குறித்த தேதியில் சொன்னதைச் செய்யாவிட்டால், காரணமானவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ வேண்டும். அதே போல் தேவைப்படும்போது, இலக்குகளை அடைந்ததற்கு பாராட்டி கௌரவிக்கவும் தயங்கக் கூடாது. முன்னது நடக்கின்றதோ இல்லையோ, இரண்டாவது தவறாமல் நடக்கின்றது.

DRDO'ல் குறைபாடுகளே இல்லையென்று சொல்லிவிட முடியாது. அரசின் கட்டுப்பாடுகள், குறித்த நேரத்தில் பட்ஜெட் கிடைக்காமை, முக்கிய மூலப்பொருட்கள் மீது அமெரிக்காவின் தடை, முப்படைகளுடன் திட்ட ஒருங்கிணைப்பின்மை என்று பலகுறைகளை களையும் நேரம் வந்து விட்டது. பங்கு பத்திர ஊழல், பங்குச்சந்தை ஊழல் இவற்றிலே பல்லாயிர கோடிக்கணக்கான ரூபாய்களைப் பறி கொடுத்தோம். ஆனால் ரூ 34 கோடி ரூபாய் கொடுத்து விட்டு, 'ஆளிள்ளாமல் பறக்கும் விமானம் என்னாச்சு?' என்று கேள்விகள் கேட்கின்றோம். செலவிடப்பட்டது மக்களின் வரிப்பணம். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்கத்தான் வேண்டும். அதில் சந்தேகமில்லை. ஆனால் DRDO'வை முற்றிலும் வேண்டமென்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்தும் கதைக்கு சமானம். ஆயுத வியாபரமென்பது கோடிகள் புரளும் சமாச்சாரம். இடைத்தரகர்கள் அனைவரும் DRDO ஒழிந்தால் நல்லதென்று என்ணுகின்றார்கள். வெறும் இறக்குமதி மட்டும் நமது சிரமங்களையும், செலவீனங்களையும் குறைத்து விடாது.

இங்கிலாந்திலிருந்து கடற்படைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 'Sea Eagle' என்னும் ஏவுகணை இன்னமும் சோதனைகளில் சொதப்புகின்றது. ஆனால் இறக்குமதி செய்து விட்டோம். DRDO'வை முற்றிலும் தனியார் மயமாக்குதலும் சரியான வாதமாய்ப் படவில்லை. இப்போதைக்கு கொஞ்சம் இறக்குமதி, கொஞ்சம் தனியாரிடம் DRDO பணிகள் ஒப்படைப்பு என்று செல்வது சரியாகப் படுகின்றது.

DRDO சோதனைகளில் செலவழிப்பது சராசரி இந்தியனின் வரிப் பணம் என்பதை உணர்ந்து இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். செயல்பட வேண்டுமென்பது கோடிக்கணக்கான மக்களின் ஆசை. செய்யுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஆதாரம்/நன்றி
http://www.israeli-weapons.com/weapons/missile_systems/sea_missiles/barak/Barak.htmlhttp://www.outlookindia.com/rants.asp?date=11/01/2004&type=magazinehttp://www.drdo.org/http://fecolumnists.expressindia.com/full_column.php?content_id=60088http://www.fas.org/spp/guide/india/launch/gslv.htmhttp://www.domesticatedonion.net/blog/index.php?itemid=315

1 comment:

Anonymous said...

Very well written essay with lot of information. Hats off to Vanthiyathevan. "Be Indian Buy Indian" even we live in the era of globalization. At one point of time we should be self sufficient. Privatization is not a solution for inefficiency.We need to correct the errors, corruptions and laziness in our organizations. Wishing you to continue your horse ride.
Venkatselvam