Wednesday, November 03, 2004

பாபாராஜ் கவிதைகள்

கை, கால்களை உதைத்து மகிழும் பிஞ்சிற்கு முதன்முறை 'குப்புறத்' திரும்பும் போது இனம்புரியாத ஒரு மகிழ்வேற்படும். அதே நிலைதான் தவழும் போதும், தடுமாறி நடக்கும் போதும், பின்னர் உலக நிகழ்வுகள் கண்டு ஓடும்போதும். ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரிடமிருந்தேனும் ஏதேனும் ஒரு வகை உதவி தேவைப்படுகின்றது.

வெகு நாட்களுக்கு முன்னர் கவிஞர் பாபாராஜ் பதில் மடல் அனுப்பியிருந்தார். தக்க சமயத்தில் அது குறித்து எழுத ஆசைப்பட்டதால் சிறிதே தாமதமாகிவிட்டது. தம்பியாய் பாவித்து அவர் எழுதிய மடல் ஓடும் குழந்தைக்கு சிறகு தந்தது போலிருந்தது. காலம் நகர்த்தும் காய்களாக இருந்தாலும், தமிழுணர்வால் என்னை அணைத்துக் கொள்கின்றார். எனது பொழுதுபோக்குத் தமிழிலும் அழகு கண்டு ஊக்கப்படுத்துகின்றார். ஊக்கம் தந்த தைரியத்தில் இன்று வலைப்பூவில் நூறு பதிவுகளைத் தாண்டி விட்டேன். எழுதுவதற்கு இதை விட நல்ல விடயம் கிடைக்காதென்றுதான் இன்றுவரை காத்திருந்தேன்.

அவரது சில கவிதை நல்முத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். பகைவனையும் நண்பனாக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இவரின் கவிதையைப் படியுங்கள்.

பகைவனையும் நண்பனாக்கு !

பகைவனையும் நண்பனாக்கும் பக்குவத்தை ஏற்று
சிகரத்தை நோக்கித்தான் செல்க -- புகைச்சல்
எரிச்சலை விட்டுவிடு ! என்றென்றும் இங்கே
பெருந்தன்மைப் பண்புகளைப் பேண் .

பகைவனை நண்பனாக்கும் பெருந்தன்மை வேண்டுமென்னும் கவிஞர், அப்பண்பினையும் யாதென்று விளக்குகின்றார். கனிவும், கருணையும் கூட்டான வீரமென்று காந்தீயத்திற்கு புது விளக்கம் தருகின்றார்.

பெருந்தன்மை கோழைத்தனமல்ல !

பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது ? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத் தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து

சோர்ந்து போகும் நேரங்களில் புத்துயிர் ஊட்டும் கவிதைகள் 'எங்கே? எப்படி?' மற்றும் 'நிழலல்ல உண்மை'. நம்பிக்கைதான் நாற்று என்று கட்டியம் கூறும் கவிஞர், இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்காதே என்னும் நிதர்சனமும் காட்டுகின்றார்.

எங்கே ? எப்படி ?

என்னென்ன சாதனைகள் எங்கெங்கே தோன்றுமோ ?
என்னென்ன வேதனைகள் எங்கெங்கே ஊன்றுமோ ?
மண்ணகத்து மக்களெல்லாம் வாழ்க்கையிலே ஏந்துகின்ற
நம்பிக்கை மட்டுந்தான் நாற்று.

நிழலல்ல உண்மை !

இழந்ததை எண்ணி இருப்பதை விட்டுப்
புலம்பாதே என்றே புகன்று - வலமா ?
இடமா ? எதையும் எதிர்கொள் ! தடையைக்
கடந்துவிடு ! வாழ்க களித்து.

சுதந்திர இந்தியாவின் படமாய் அந்நிய நாடுகளில் அடிக்கடி காட்டப்படுவது 'நடுத்தெரு வாசிகளும்', 'பாம்பாட்டிகளும்'தான். பாம்பாட்டி பாடாவது பரவாயில்லை. ஆனால் நடுத்தெருவாசிகளின் அவலமோ கொடுமையிலும் கொடுமை. கவிஞரும் குமுறுகின்றார்:

கொடுமை !

விடியலைத் தேடும் விழிகளின் ஏக்கம்
நடுத்தெரு வாசியின் நற்றமிழ்ப் பிஞ்சின்
துடிப்பை உணர்ந்தால் துடிக்கும் இதயம்
கொடுமை இதுவென்று கூறு.

இன்று புத்தகங்கள் குறித்து பல்வேறு சர்ச்சகைகளே கிளப்பப்படும்போது, கவிஞரின் நோக்கோ 'மனிதன் மனிதனாக வாழவழி காட்டும் தினமாக', உலக புத்தக நாளைக் குறிப்பிடுகின்றார்.

உலகப்புத்தக நாள் ! 23.04.04

அறிவுச் சுடரேற்றி ஆக்கபூர்வ வாழ்வின்
நெறியில் நடைபோட நித்தம் - சிறப்பாய்
மனிதன் மனிதனாக வாழவழி காட்டும்
புனிதநாள் இந்தநாள் ! போற்று.

மென்மையும், கடுமையும் அடுத்தடுத்து தமிழ் குழைத்து தரும் வித்தை பாபாராஜுக்கு கை வந்த கலை. 'அ·றிணையாய் மாற்று' என்று தலைப்பிட்டு, துளையிட்ட மூங்கிலை சிலாகிக்கும் போது ஏற்படும் குழப்ப முடிச்சை அடுத்த இரண்டு வரிகளில் காணாமல் அடிக்கின்றார்.

அஃறிணையாய் மாற்று !

துளையிட்ட மூங்கிலில் தோன்றுவது கானம் !
மலைக்கவைத்து நெஞ்சை மயக்கும் - துளைகொண்ட
மேனியுள்ள மாந்தரின் வேடமெல்லாம் வக்கிரங்கள் !
மானிடனை அஃறிணையாய் மாற்று.

மத நல்லிணக்கம் அமைதிக்கு அடிப்படை என்று பகர்கின்றார் இதோ:

நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று !

அனைத்துமத நல்லிணக்கம் அன்றாடம் பூத்துக்
கனிந்துவிட்டால் நல்லமைதி காண்போம் -- அனைவரும்
ஏட்டளவில் இந்தியராய் இன்றி , இமையனால்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று.

சொற்களை செட்டுக் கட்டி இல்லறம், இன்ப துன்பம், பிள்ளைப்பேறு, முதுமை, கூட்டை விட்டுப் ப(இ) றத்தல் என்ற ஒரு வாழ்க்கையே எட்டு வரிகளில் கண்முன் நிறுத்துகின்றார்.

புறப்படத்தயாராய்

ஆண்பெண் படைப்பு அற்புதப்படைப்பு
படிப்படியாக வளர்ச்சிப் பயணம்
இல்லறக் கூட்டில் இணைந்திடும் பறவைகள்
இன்பமும் துன்பமும் கூட்டின் நிகழ்வுகள்
குழந்தைத் தளிர்கள் வாழ்க்கையின் விழுதுகள்
விழுதுகள் அமைக்கும் தனித்தனி வாழ்க்கை
தாயும் தந்தையும் முதுமையின் நிழலில்
கூட்டைவிட்டுப் புறப்படத்தயாராய் !

பி.கு. வலைப்பூ வடிவம் தந்து, தமிழ்ச் செயலிகள் மற்றும் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி, உதைத்த உந்துசக்தியான திரு. சுந்தரராஜனுக்கு நன்றி !!!

No comments: