Thursday, April 13, 2006

கச்சத்தீவு: ஜெயலலிதாவின் பங்கு: 2

கச்சத்தீவு - டாக்டர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு - 2

எனது முதல் இடுகையை ப்ளாக்கர் சாப்பிட்டு விட்டதெனெவும், அதற்கு நீளமான தலைப்பே காரணமென்றும் ரோஸாவசந்த் அவர்கள் எனது முந்தைய இடுகையின் பின்னூட்டத்தில் தெரித்திருந்தார். நன்றி ரோஸா.

இலங்கை கடலெல்லையில் மீன் கொள்ளையை தடுக்கவும், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையோ, இலங்கை மீனவர்களோ தாக்குவதிலிருந்து தடுக்கும் முயற்சியாக டிராலர்களை அந்தந்த அரசாங்கங்களே நியாய விலையில் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று ஏற்கெனவே பார்த்திருந்தோம். அவாறு செய்வதன் மூலம் பாக் குடா மற்றும் நீரிணை பகுதிகளில் இன்று நிலவும் இருதரப்பு இறுக்கம் குறையும் என்று Coastal Resources Management நிறுவனத்தின் தலைவரான டாக்டர் B சுப்பிரமணியம் தெரிவிக்கின்றார் (6 அக்டோபர் 2004, ஹிந்துஸ்தான் டைம்ஸ்).

இவர் மன்னார் மற்றும் யாழ் மீனவர்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசியவர். Exclusive Economic Zone (EEZ) குறித்து ஏற்கெனவே தகவல் தந்திருந்தேன். இப்பகுதியில் ஆழ்கடல் மீன் பிடித்தலை இந்திய மீனவர்கள் மேற்கொள்ளச் செய்யவேண்டும்.

மேற்கூறிய இரண்டு காரியங்களைச் செய்தாலே இன்றிருக்கும் பிரச்சினையில் 50 - 70% குறைந்து விடுமென்று அவர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

பாம்பனில் Release of Innocent Fishermen (ARIF) என்ற பொதுநல தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஊவணி பெர்னாண்டோ அருளானந்தம் இலங்கை கடற்படையால் 1983'லிருந்து 2004 வரை 116 இந்திய மீனவர்கள் உயிரிழந்தும், 242 பேர் காயமடைந்தும் போனார்கள் என்று தெரிவிக்கின்றார். மேலும் இந்திய மீனவர்களின் டிராலர் தவிர்த்து சிறு படகுகள் (அ·தாவது வலையை வீசிவிட்டு மீன் விழக் காத்திருக்கும் முறையில் செயல்படும்) இலங்கை கடலெல்லைக்குள் நுழைவதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கவில்லை யென்றும் கூறுகின்றார்.

இந்திய மீனவர்களின் டிராலர்களை அரசாசாங்கமே வாங்கிக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்க்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கி, மாற்றுத் தொழிலுக்கோ/புனர் வாழ்வுக்கோ வழிகாட்ட வேண்டுமென்ற மூன்று அம்ச கோரிக்கைகளை தமிழக அரசிற்கு இவர்கள் வைத்துள்ளனர். முதல்வரான செல்வி ஜெயலலிதாவும் அவர்களின் தீர்வுகளை முழுமனதோடு பாராட்டியதாகவும் தெரிவிக்கின்றார். மேற்கொண்டு அரசு நடவடிக்களுக்காக காத்திருக்கின்றோம் என்றும் சொல்கின்றார்.

இது முடிந்து ஏறத்தாழ 21 மாதங்கள் உருண்டோடி விட்டன. அரசு நடவடிக்கை எடுத்ததா? அதிகார வர்க்கம் வழமையான மெத்தனத்துடன் மேலெடுத்துச் செல்லவில்லையா? தன்னார்வன நிறுவனங்கள் சோர்ந்து போய்விட்டனவா?

தேர்தல் வந்தாலும், மீனவர்கள் இறந்தாலுமே, கச்சத்தீவு பிரச்சினை அதுவும் "வெறுமனே" பேச்சளவில்/எழுத்தளவில் மட்டும் இருக்கின்றதோ?

தொடரலாம்.

Tuesday, April 11, 2006

கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு

தமிழக முதல்வரான டாக்டர் செல்வி ஜெயாலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சத்தீவினை "நிரந்தரக் குத்தகைக்கு" எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கின்றார். சகவலைப்பதிவர் மூலம் இச்செய்தி தினமணியில் வெளியானதாக அறிந்தேன். தினமணியின் எழுத்துருவை எனது கணியில் சரியாகப் படிக்க முடியவில்லை. சுட்டியோடு தகவலை பின்னூட்டமாய்த் தந்த முகமூடிக்கு நன்றி.

செல்வி ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சினைகளின் போது "இராணுவ நடவடிக்கை மூலம் கச்சத்தீவினைக் கட்டாயமாகப் பெற வேண்டுமென்று", ஆவேசமாக பலமுறை கூறியிருக்கின்றார். அந்த நிலையிலிருந்து இப்போது ஓரளவு நடைமுறைக்கு ஒத்து வரும் செய்தியைக் கூறியிருக்கின்றார்.

இதே கருத்தை அவர் முன்பொரு சமயத்திலும் பேசியதாக ஞாபகம்.

செப்டம்பர் 26, 2005: 1994'ல் அவர் இதே கருத்தைக் கூறியதுடன் 2004'ல் பிரதமருக்கு கடிதமும் எழுதியிருக்கின்றதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கின்றது. எனது பதிவுகளைப் படித்து விட்டு, உடனே அம்மாவிற்கு தேர்தல் பேச்சை நான் தயார் செய்து தருகின்றேன் (lease in perpetuity என்பதை நிரந்தரக் குத்தகை என்று தமிழ்ப்படுத்தியதை மட்டும் வைத்து) என்ற அளவிற்கு முகமூடி எழுதியிருக்க வேண்டாம் :-)

ஜூலை 25, 2003 பிஸினெஸ்லைன் இணையதளம்: பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதிய செல்வி ஜெயலலிதா கச்சத்தீவு பிரச்சினை குறித்து விரிவாக எழுதி அதற்குத் தீர்வாக நிரந்தரக் குத்தகையை சொல்லியிருக்கின்றார். குத்தகை முறை மூலம் இலங்கை கச்சத்தீவின் மீதான இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டாமென்றும், கருத்துக் கூறியிருக்கின்றார். இராமநாதபுரம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் வாழ் மீனவர்களின் பிரச்சினைகளை இம்முறை மூலம் அகற்ற முடியுமென்றும் விளக்கியிருக்கின்றார். மேலும் இலங்கை கடலெல்லையில் இலங்கை கடற்கரையிலிருந்து 5 கடல்மைல்கள் தூரம்வரை உரிமம் பெற்ற இந்திய மீனவர்களை மீன் பிடிக்க இலங்கை அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த ஏற்பாட்டிற்கு இலங்கை நடைமுறைப்படுத்த ஒத்துக் கொண்டால் விரிவான செயல்முறைகளை இரு நாடுகளும் கலந்து பேசி ஏற்படுத்தலாம். இதன்மூலம் மீன் பிடிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, இந்த புதிய ஏற்பாடு தீய காரணங்களுக்ககாக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியுமென்று கூறுகின்றார். மத்திய வேளாண்துறை அமைச்சரான திரு ராஜ்நாத் சிங்கிற்கு வேறொரு தனிக்கடிதமெழுதிய செல்வி. ஜெயலலிதா தமிழக மீனவர்களின் கடற்பாதுகாப்புக்காக 5.65 கோடி ரூபாய் உதவித் தொகையையும் நடுவண் அரசிடமிருந்து கோரியிருந்தார்.

கிளைச் செய்தியாக இந்தியா-இலங்கைக்கு நடுவே பாலமமைப்பதை பாதுகாப்புக்கு பங்கமென்று தீவிரமாக பிரதமருக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில் எழுதியிருக்கின்றார் என்று அறிகின்றேன்.

மார்ச் 10, 2003: கச்சத்தீவினில் இந்திய மீனவர்களின் உரிமையை மீண்டும் பெறவேண்டும் என்று அவர் கூறியதாக இந்து இணையதளம் தெரிவிக்கின்றது.

அதே வருட இறுதிக்குள் இலங்கை மீனவர்கள் 32 இந்திய மீனவர்களைக் கடத்தினார்கள். இதில் புலிகள் ஈடுபட்டு இந்திய மீனவர்கள் சுமுகமாக விடுதலை அடைய உதவினார்களென்று அறிகின்றேன். மேலும் இலங்கை கடற்படை 63 இந்திய மீனவர்களைக் கடத்த மீண்டும் பிரதமர் வாஞஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கின்றார். அப்போது ஜூலை 23, 1974'லேயே லோக்சபாவில் வாஜ்பாய் கச்சத்தீவை தாரை வார்த்ததிற்கு எதிர்த்துப் பேசியதையும் கவனமாகச் சுட்டியிருக்கின்றார்.

செப்டம்பர்/அக்டோபர் 93 ,மற்றும் பிப்ரவரி 94'ல் அன்றைய பிரதமரான நரசிம்மராவுக்கு தொடர் கடிதங்கள் எழுதி தனது மீனவர் பிரச்சினை குறித்தான பதிவுகளை ஆழமாக வைத்திருக்கின்றார் செல்வி ஜெயலலிதா. " அப்பாவி மீனவர் மீதான கொடூரமான தாக்குதல்கள்" என்று இலங்கை கடற்படையின் தாக்குதல்களை விவரித்தார். இந்தியா பதிலடி நடவடிக்கை நோட்டீசு கொழும்பிற்கு அனுப்பவேண்டுமென்று பகிரங்க அறிவிப்பும் செய்யவும் அவர் தயங்கவில்லை. கூடுதல் தகவலாக 1983-மார்ச் 2003 வரை 112 இந்திய மீனவர்கள் இறப்பு, 897 பேர் காயம் மற்றும் 250 படகுகள் (டிராலர்கள் குறித்த தகவலில்லை) இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களையும் தெரிவித்தார்.

கவனம்: என்னார் (aka ரெத்தினவேலு) கச்சத்தீவு பற்றி மேலும் சில விவரங்களை எழுதியுள்ளார். இப்பிரச்சினையை அறிந்து கொள்ள மேலும் உதவுமென்று நம்புகின்றேன். அவரது பதிவிலிருந்து "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜனசங்க தலைவர் வாஜ்பாய் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்."

நாமக்கல் ராஜா என்ற வலைப்பதிவர் மீனவர் பிரச்சினையை ஏற்கெனவே எழுதியதையும் நினைவு கூர்கின்றேன். அதற்கு ஈழநாதன் அளித்த பின்னூட்டம்: "நன்றி நீங்களாவது ஒருவரி பதிந்தீர்களே.தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைக்குள் வந்தார்கள் கடற்படை கைது செய்தது அதனால் எமக்குத் தானே இலாபம் என்று மகிழ முடியவில்லை.கடல்வளத்தை நம்பி இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் கேள்விப்படும் போது கவலையாக இருக்கிறது.இப்போது ஒருவார காலத்தில் சரியான தீர்வு எட்டப்படாவிட்டால் இலங்கைக்கு பஞ்சம் பிழக்கவென தஞ்சம் புகப் போகிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.வேதனையாக இருக்கிறது.

இருக்கிற மீன்வளமும் சேது சமுத்திரத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆனால் கட்சித்தலைவர்களோ நான் தான் செய்தேன் நான் தான் செய்தேன் எனப் போட்டி போடுகிறார்கள் மீனவர்களை மட்டும் பிரச்சனைக்குள் மாட்டிவிடாமல் மற்றவர்களும் ஒன்று சேர்ந்தால் நியாயமான தீர்வு கிடைக்கும்"

செல்வி. ஜெயலாலிதாவின் குரல்களைப் பதிந்தது போல பிற தலைவர்களான கலைஞர், வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் என்ன கருத்துகளைக் கூறியிருக்கின்றாரென்று பிறகு பார்க்கலாம். ஆக அரசியல்வாதிகள் "அறிக்கைகள்", "கடிதங்கள்", "குரல்கள்" கொடுத்து வந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது. வெறும் கேள்வியின் நாயகனாய் வலைப்பதிவில் வெட்டி வேலை செய்பவர், பிரச்சினையின் கிளை வேர்களைப் பற்றவாவது முயற்சிகள் செய்திருக்கலாமென்ற ஆதங்கத்தை இங்கே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிரச்சினைகள் தாண்டி தீர்வுகளை நோக்கி ஏன் இவ்வகை (அரசியல்வாதிகள்/அதிகார வர்க்கம்) முயற்சிகள் பயணிக்கவில்லை? இக்கேள்வி கொஞ்சம் நியாயமானது. தொடர்ந்து விடை தேடுவோம்.

Monday, April 10, 2006

விவாதக் கூ(கு)த்துகள் - 3

பின்னூட்டம் நீண்டுபோனதால் பதிவாகவேப் போடவேண்டிய அவசியமாகின்றது.

தங்கமணி ரோஸாவின் பதிவில் பின்னூட்டம் விட்டு தனது ஆதரவை அளித்துள்ளார். முழுதாக இங்கே:

**வேலையின் காரணமாக பல நாட்களாக இணையத்தின் பக்கம் வரவில்லையாதலால் உங்களின் இந்தப் பதிவை நான் இப்போதுதான் வாசித்தேன். இது போன்ற ஆதங்கத்தை, கேள்வியை, வருத்தத்தை நானும் பலமுறை எழுப்பியே வந்துள்ளேன்.

இந்திய அரசு இந்தப்பிரச்சனையை கையாளும் முறை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. உங்களது இந்தப்பதிவு அப்படியான கேள்விகளை உரக்க எழுப்பியது குறித்து என் நன்றி.

(இந்தப்பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு பதிலாக அந்தப்பதிவில் எழுதிவிட்டேன். அதனால் இங்கு மறுபடியும்..)

By Thangamani, at 4/09/2006 6:11 AM **

எது போன்ற ஆதங்கத்தை, கேள்வியை, வருத்தத்தை தங்கமணி எழுதினாரென்று படித்தறிய ஆவலாயுள்ளேன். இது ஒரு பகிடியில்லாத விண்ணப்பம். எனக்குத் தெரிந்த வரையில் புலிகள், தமிழ் தேசிய விஷயங்களிலும் ரோஸாவின் நிலைப்பாடுகளும், தங்கமணியின் நிலைப்பாடுகளும் வெவ்வேறு. இங்கே ரோஸா பேசுவது இந்தியா, அதன் இறையாண்மை, இந்திய குடிமகன்களான மீனவர் பிரச்சினை என்று. நிலைப்பாடுகளில் முற்றிலும் வேறுபடும் தங்கமணி அலாஸ்காவிலிருந்து இந்திய இறையாண்மை குறித்து ஆதங்கம்/வருத்தம்/கேள்வியை முன்வைக்கின்றாரா? ஏனெனில் அவர் இந்தியாவில் இருக்கும்போதே, இந்திய தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத "கலகக்காரர்" என்றல்லவா நான் நினைத்திருந்தேன். உடனே சுட்டி கேட்காதீர்கள். நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடித்துப் பிடித்து ஏற வேண்டிய தள்ளு முள்ளு கூட்டம் இருந்தால் தான் பேருந்தில் இடம் பிடிக்க "துண்டு" போடவேண்டும். இந்தப் பேருந்திற்கு அடிபிடி'க் கூட்டமில்லை என்றுதான் ரோஸாவும், நானும் வருத்தப்படுகின்றோம். அதனால் சும்மாச்சுக்கும் "துண்டு" போடாமால், உருப்படியாக கருத்து கூறவேண்டுமென்று தங்கமணிக்கு நான் விண்ணப்பம் செய்து கொள்கின்றேன்.

அடுத்ததாக முத்து ( தமிழினி) ரோஸாவின் பின்னூட்டத்தில் கூறியது:

***தமிழ், தமிழர் என்றெல்லாம் பேசுவது ஆபாசம் என்ற கட்டமைப்பை இதுவரை கொண்டு வந்து நிரவிய மக்களைத்தான் இதற்கு குற்றம் சாட்ட வேண்டும்.

இலங்கை தமிழனோ, இந்திய தமிழனோ மீன் பிடிக்க போன இடத்தில் குருவியை போல் சுட்டு தள்ளப்படும்போது அவர்கள் இலங்கை கடற்பகுதியை தாண்டி போனதினால் சுடப்பட்டார்கள் என்றும் அவர்கள் பெட்ரோல் கடத்தினார்கள் என்றும் கூசாமல எழுதுபவர்களை என்ன சொல்லுவீர்கள்?

இலங்கையில் உள்ள தமிழர்கள் உண்மையில தமிழர்களே இல்லை என்று சில பத்திரிக்கைகளில் எழுதினார்கள்..

இங்கு தமிழ் மீனவர்களை பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள் என்றால் சாரி..தமிழனுக்கு சுரணை கெட்டு ரொம்ப நாள் ஆகிறது.அதையும் கிண்டல் செய்து சிரிக்க ஆரம்பித்து பலநாள் ஆகிறது.

By முத்து ( தமிழினி), at 4/03/2006 3:31 PM

இலங்கை,பங்களாதேஷ், பர்மா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள் முதற்கொண்டு இந்திய நாட்டை கிள்ளுகீரையாக எண்ணாத ஏதாவது ஒரு நாடு நம் அருகில் உள்ளதா? சொல்லுங்கள் பார்ப்போம்.

By முத்து ( தமிழினி), at 4/03/2006 3:32 PM ***

1. தமிழ், தமிழர் என்றெல்லாம் பேசுவது ஆபாசம் என்ற கட்டமைப்பைக் கொண்டு வந்தது யார்? அவர்களுக்கும் ரோஸா பேசும் இறையாண்மை, இந்திய மீனவர் பிரச்சினை இதற்கெல்லாம் என்ன தொடர்பு?
2. எனது பதிவுகளை அனைத்தும் படித்திருப்பீர்கள் என்ற குறந்தபட்ச நம்பிக்கையுடன் கேட்கின்றேன். "கூசாமல்" எங்காவது நான் போகின்ற போக்கில், ஆதாமில்லாத குற்றச்சாட்டுகள், எத்தரப்பின் மீதாவது வைத்துள்ளேனா?
3. இலங்கையில் உள்ள தமிழர்கள் உண்மையில் தமிழர்களே இல்லை என்று சில பத்திரிக்கைகளில் எழுதினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதற்கும் இங்கே நடக்கும் விவாதத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
4. தமிழனுக்கு சுரணை கெட்டு நாளாகின்றது என்று கூறுகின்றீர்கள். அப்படியென்றால் உங்களுக்கு சுரணை இன்னும் இருக்கின்றதென்று பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்கின்றேன். சுரணை உடைய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? உங்களிடம் அதிகாரமிருந்தால் இப்பிரச்ச்சினைக்கு தீர்வென்னவென்று சொல்லுங்கள்.
5. இந்திய நாட்டை கிள்ளுக்கீரையாய் அனைத்து நாடுகளும் நினைக்கின்றன. நல்ல ஆராய்ச்சி. கவலைப்படாதீங்க முத்து. தமிழ்நாட்டைப் பிரித்து, உங்களை அதிபராக்கி விடுவோம். சுரணையுள்ள நீங்கள் தமிழக இராணுவத்தை (அ·தாவது தற்போதைய போலீஸைக் கொண்டு) ஒரு விரல் சொடுக்கில் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடலாம்.

விஷயத்தின் வீரியம் அறியாமல், பிரச்சினையின் பூர்வீகம் தெரியாமல் உங்களைப் போன்றோர் "தமிழ்", "தமிழன்", "தமிழ்த்தேசியம்" என்று எதற்கெடுத்தாலும் குதிக்கும்போது எல்லா நேரமும் அமைதியாய் இருக்க முடியவில்லை. உங்களைப் போல சுரணையின் அளவு இல்லாவிடினும் பாழாய்ப்போன பழைய வழக்கங்கள், இப்படி ஏதாவது மீண்டும் எழுத வைத்து விடுகின்றன.

6. சூடாகவும் எழுதுவீர்களா (மண்டுகம் இன்னபிற) என்று கேட்டுள்ளீர்கள். அடைமொழிகளிலோ, வெற்றுச் சவடால்களிலோ உங்கள் ஆசான் ரோஸாவைப் போல எனக்கு நம்பிக்கையில்லை. அவரே தனது அடுத்தடுத்த பதிவுகளில் அதைக் குறைத்துக் கொண்டதையும் இங்கு நினைவு கூர்தல்முக்கியம். இருப்பினும் கார்த்திக்கின் உளறல் எல்லை கடந்து போய்விட்டது. அதனால் அத்தகைய கடுமையான விளிப்பு அவசியமாகிவிட்டது.

7. உங்களது எனது பதிவில் வந்த பின்னூட்டத்தின் இறுதியில் கேட்ட கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் கூறிவிட்டேன். வேண்டுமென்றால் கேள்விகளை வேறுவிதமாகத் தெளிவாகக் கேட்டால் கண்டிப்பாய் பதில் தர முயலுகின்றேன்.

8. ஆமாம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நாம் பார்த்திருக்கின்றோம்.

Sunday, April 09, 2006

விவாதக் கூ(கு)த்துகள் - 2

கண்டிப்பாக இது குறித்த இரண்டாவது பதிவெழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கடந்த பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும் பொறுத்தருள்க. நேரம் கிடைக்கும் போது சரி செய்ய உத்தேசம்.

என்னுடைய பதிவுகளை ஆழ்ந்து வாசிக்கும் நண்பர் திரு. வெங்கட்டிற்கு நன்றி கூறி மேற்செல்லுகின்றேன். வாய்ஸ் ஆன் விங்ஸ் தரமான கேள்வியை முன் வைத்துள்ளார். எனது முன்னாள் பணியை நான் குறிப்பிட நேர்ந்ததற்கு காரணம் நம்பகத்தன்மையை கொடுக்க வேண்டுவதற்கே அல்லாமல், ரோஸா கூறுவது பொய்; நான் சொல்வதே மெய் என்று கட்டம் கட்டுவதற்கல்ல.

வாய்ஸ் ஆன் விங்ஸ் எண்ணத்தைப் போலவே, ரோஸாவின் பார்வையும் (இந்திய மீனவரைக் காப்பாற்ற வேண்டும்) என்பது எனக்கு ஏற்புடையதே. அதற்காகவே எனது நீண்ட பதிவுகள். ஆனால் ரோஸாவின் தொடரும் நோக்கு (இந்திய படைகள் குறித்து) என்னுள் எழுப்பும் கேள்விகளே உவப்பானதாக இல்லை. இந்திய இறையாண்மை பற்றி அவரது பதிவுகளில் வந்து விழுந்த தமிழ் தேசியவாதிய பின்னூட்டங்கள், அதற்கு ரோஸா தந்த அங்கீகாரம் (எ.கா. நியோ சொன்ன வடக்கத்திய பார்ப்பனீய அரசாங்க சதி) இன்ன பிற காரணிகளால் எனது விளக்கத்தை இன்னமும் முன் வைக்க வேண்டியிருக்கின்றது.

வாய்ஸிற்கு பதில் தருமுன் இன்னொரு கேள்வி வாசகருக்கு. தமிழ்நாடு என்ற தனிநாடு இப்போது இருப்பதாய் வைத்துக் கொள்வோம். அதை ஒரு திராவிடத் தலைவர் (வேறு ஒருவரை உதாரணத்திற்கு சொல்லுமளவிற்கேனும் முடியவில்லை) ஆண்டு வருகின்றார். அஃதாவது இன்றைய முதலமைச்சர் = தமிழ் நாட்டின் அதிபர். அப்போது இலங்கை, தமிழ்நாட்டின் இறையாண்மையை மீறி, தனது கடற்படையை ஏவி, இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த அப்பாவி தமிழக மீனவர்களை சுட்டு, தமிழக கடற்கரை வரை வருகின்றது. அப்போது இந்த தமிழகத் திராவிடத் தலைவர் என்ன அய்யா செய்வார்? தனது போலீஸை, பழங்காலத் துப்பாக்கிகளுடன், படகுகளில் ஏற்றி இலங்கை கடற்படையை பதிலுக்கு சுடச் சொல்வாரா? தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் (ஈழ மீனவர்கள்) தாக்கினால் இதே உத்தரவு என்னவாகும்? இன்று தமிழ் தேசியம் பேசும் நசிவு சக்திகள் அப்போது என்ன சொல்லும்? "தமிழன தமிழன் தாக்குகிறாண்டா தம்பிப் பயலே" என்று பாட்டு படிக்குமா?

வாய்ஸ் ஆன் விங்ஸின் கேள்வி:

** The question is why is the Indian defence setup turning a blind eye, when its own citizens are at peril in the hands of an alien force that doesn't hesitate to violate its sovereignity, to carry out its misdeeds? What amazes me more is why do you take pains to come to its defense (looks like you have written some 5 odd posts after doing a lot of research), and justify this inaction. I'm clueless about both these questions. **
அவரது பாதி-பதிலாக அவரே குறிப்பிட்டது:
** can only partially answer the first question - the Indian administration's general apathy towards the welfare and safety of its poor citizens. I dont suspect any Tamil - anti-Tamil sentiments though, like Roza. I think it's just plain apathy of the Indian administration, that is to blame. Even fishermen near Indo-Pak border face such difficulties. They get arrested, not sure if they get killed. In case of our fishermen though, even their life is in constant danger. **

மேலும் எனது பழைய பணி குறித்து அறிந்த பின்னர் கூறியது:

**The failure of the Indian Navy to protect the lives of our fishermen is a glaring lapse, that cannot be defended by any amount of browbeating. If a pleasure boat full of rich / upper middle class travellers was similarly caught and its inmates shot at, all hell would have broken loose and heads would have rolled. The Indian ruling establishment would willingly trade dreaded terrorists in exchange for a (hijacked) flight full of rich / upper middle class passengers. But it is under no such compulsion to defend the lives of the poor. There lies the bitter truth.**

இந்தியப் படைகள் எது செய்தாலும் அதற்கு முப்படை தளபதியின் உத்தரவு வேண்டுமென்று பலமுறை குறிப்பிட்டு இருந்தேன். சற்றே விளக்கமாகப் பார்ப்போம். இந்தியக் கடலெல்லைகளைப் பாதுகாக்க இந்திய கடற்படை மற்றும் கடற்பாதுகாப்புப் படைகள் இணைந்து, இயைந்து செயல்படுகின்றன என்று பார்த்தோம். ரோந்து செல்லும் இந்தியக் கலங்களுக்கு "Mission" என்று "Guidelines" கொடுக்கப்படும். நிலைமைக்கு தக்கவாறு அவை வேறுபடும். எனவே அடையாளம் தெரியாத கலம் இந்திய கடலெல்லைக்குள் புகுந்தால் உடனே என்ன செய்ய வேண்டுமென்று இந்திய கடற்படை/கடற் பாதுகாப்புப் படை கமாண்டர் (பொறுப்பில் இருப்பவர்; ரேங்க் குறித்து கூறவில்லை) முப்படைத் தளபதிக்கு தொலைபேசப் போவதில்லை. என்ன செய்ய வேண்டுமென்று இந்திய கடற்படை/கடற் பாதுகாப்புப் படை கமாண்டர்களுக்கு guidelines உதவி செய்யும்.

இலங்கை கடற்படையின் guidelines எளிதானதாகத் தோன்றுகின்றது. கடலெல்லை மீறிய கலங்களை சுடு. இலங்கைக்கான அரசியல் காரணிகள் வேறு. ஆனால் இது ஐநா விதிகளை மீறுவதாகும் என்பதை ஏற்கெனவே பலமுறை தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.

ஆனால் நமது guidelines என்ன? இதை எழுதுவது யார்? அதிகார வர்க்கமா? அதை கையிலெடுக்கும் அரசியல்வாதி வர்க்கமா? சிந்தியுங்கள். நமது படைகள் கருவிகளே. இவற்றின் கருத்தாக்கள் யார்?

நீங்கள் சுதந்திரம் என்னும் போர்வையை சுகமாகப் போர்த்திக் கொண்டு தூங்குவதற்கு காரணம், உங்களின் படைகள் தரும் பாதுகாப்பு என்னும் கதகதப்பு. இதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடலெல்லையைக் கடந்தவுடன், இந்திய படையால் கைது செய்யப்படுகின்றார்கள். காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட Guidelines. இலங்கை அரசாங்கம் விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்கும்படி இந்திய தூதருக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தகவல் நடுவண் அரசை வந்தடைய உடனே இந்தியப் படைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. அவர்களும் இலங்கை மீனவர்களை விடுவிக்கின்றார்கள். ஆனால் இதே பாணி கடலெல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் விஷயத்தில் நடக்கின்றதா?

கருத்தாவை விட்டு விட்டு கருவியை ஏன் நொந்து கொள்ள வேண்டும்?

கேபிள் டிவி பிரச்சினையில் கவர்னரைச் சந்திக்கின்றார் கலைஞர் கருணாநிதி. டான்ஸி வழக்கில் போட்ட கையெழுத்தே தனதில்லை என்று கூறிவிட்டார் செல்வி ஜெயலலிதா. பொடாவில் உள்ளே போன வைகோ இன்று அம்மாவுடன் அரசியல் சமரசம். தமிழால் ஒன்றிணைந்த Strange Bed Fellows திருமா மற்றும் ராமதாஸ் இன்று வெவ்வேறு அணிகளில்.

குஷ்பூ, சுஹாசினிக்காக துடைப்பம் தூக்கிய கும்பல் இந்திய ஏழை மீனவனுக்காக எதைச் செய்தது?

வடக்கு வாழ்கின்றது; தெற்கு தேய்கின்றது என்று பேத்திய கும்பல் எங்கே இன்று? நடுவண் அரசில் இன்று தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மிஸ்டர் முகர்ஜியைக் கூப்பிட்டு மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க எவ்வளவு காலமாகும்? ஐய்யா வலைப்பதிவர்களே இதை விட்டு விட்டு படைகளைக் குற்றம் சாட்டுகின்றீர்களே? என்ன நியாயம்?

மாலத்தீவினை இலங்கைத் தீவிரவாதிகள் கைப்பற்றிய போது அதை விடுவித்தது இந்தியப் படை. அமைதி காக்கப் போ என்று பணிக்கப்பட்டபோது இலங்கைக்குச் சென்றது இந்தியப்படை. அங்கேயிருந்து துரத்தப்பட்டபோது இந்தியா வந்தால் வரவேற்க ப்ரோடோகால் படி தமிழக முதல்வர் கூட சென்னைக் கரைக்கு வரவில்லை. எல்லாவித அலைக்கழிப்புகளுக்கும் காரணமென்னவென்றால் பாழாய்ப் போன அரசியல்.

அதைவிட இந்தியப் படைகளிடம் உள்ள ஜனநாயகக் கட்டுக்கோப்பின்படி சொல்வதைச் செய்யும் ஒழுங்கு.

கஜானா காலியென்று புலம்பியபடி இலவசத் திட்டங்களை தேர்தல் நேரத்தில் வாரி வழங்கும் அம்மா, ஜெயித்து வந்தால் ஏழைகளுக்கு கலர் டிவி கொடுக்க விரும்பும் கலைஞர், சமரசமே வாழ்க்கை என்றாகிப்போன வைகோ/திருமா, தார் பூசித் தமிழ்ச் சேவை செய்யும் மருத்துவர் அய்யா ராமதாஸ் இவர்கள்தான் இந்தியத் தமிழர்களின் நலனைத் தீர்மானிக்கின்றவர்கள். மீனவர்களின் நலன்களை இவர்களிடம் போய் கேளுங்கள். அதை விட்டு விட்டு படைகளின் தராதரத்தைக் கேள்வி கேட்காதீர்கள்.

கொஞ்சம் உருப்படியாக இருப்பதையும் கெடுத்து விட வேண்டாம்.

Saturday, April 08, 2006

விவாதக் கூ(கு)த்துகள்

உருப்படியாக ஏதாவது எழுதலாமென்று பார்த்தால் "மறுபடியும்" பாணியில் சிலருக்காவது பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது. ஏனென்று கேட்டீர்களானால் இது விவாதமாம். இதில் ஜெயிப்பதற்காகவாவது நான் பதில் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

முதலில் தொண்டரடிப்பொடியிலிருந்து ஆரம்பிக்கின்றேன். http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html#114441917406986733 கண்ணிருந்தும் குருடரான கார்த்திக்ரமாஸ் கேட்கின்றார்:

** இந்திய_தமிழக_மீனவர்களை காக்கும் பொறுப்பு யாருடையது? [இனி உங்களையும் "இந்தியத்_திமிழக_மீனவ்ர்கள்" என்றே குறிப்பிட வேண்டுகிறேன்] கேள்வி இவ்வளவுதான். சிறந்த விடையை கீழே வந்தியத்தேவன் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். நியாயமாக , யதார்த்தமாக சிந்திப்பவர்கள் மற்றதை தெரிந்தெடுக்கலாம்.

1) இந்திய அரசினுடையது
2) இலங்கை அரசினுடையது
3) இலங்கை மீனவர்களுடையது
4) புலிகளுடையது :-)
5) யாருடையதுமில்லை

வந்தியத்தேவன் நீட்டிமுழக்கி எழுதிய இரண்டு தாக்கல் பதிவுகளிலுமாகட்டும், மூன்று தகவல் பதிவுகளிலும் ஆகட்டும். மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எங்காவது உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும். **

பிரச்சினை மற்றும் தீர்வுகளை மூன்று பதிவுகளாய் தெளிவாக எழுதியும் இந்த மண்டூகத்திற்கு புரியவில்லையாம். பாவம். புரியாத இப்பிள்ளைக்கு யாராவது பதிலை எடுத்து ஊட்டி விடவும். பல்லிருந்தால் பாவம் ஊட்டி விடும் உங்கள் விரல்களை கடித்து விடப்போகின்றார்.

மண்டூகத்தின் இரண்டாவது பிதற்றல்:

**கடற்படையும்,கோஸ்ட் கார்டும் சேர்ந்துபணியாற்றவேண்டும் அப்படியே பணீயாற்றினாலும், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எதும் செய்யமுடியாது. என்ன பித்தலாட்டமான வாதம்? **

(ரோஸாவசந்த் போல ஆத்திரத்தை அடக்க முடியவில்லை) மனநிலை பிறழ்ந்தவரோடு கூட பேசிப் புரியவைத்து விடலாம். இந்த தொண்டரடிப்பொடியை எவ்வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை. இந்திய முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி ஒன்றுமே நடவாது (பாதுகாப்பு படைகள் குறித்து) என்பதை இந்த மரமண்டைக்கு எவ்வாறு புரிய வைப்பது?

மண்டூகத்தின் மூன்றாவது பிதற்றல்:

**இது எப்படி இருக்கிறது என்றால், நடந்த 300 படகுஇகளின் விரட்ட்லையும் , பல சந்தர்பங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளியும் கணக்கில் கொண்டு பார்த்தால், போலீஸ் குடியிருபில் புகுந்து ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யும்ப்போதோ அல்லது ஒரு நபரை கொலை செய்யும்போதோ , தமிழக அரசின் உத்தரவு அல்லது ஐ.கின் உத்தரவு இல்லாமல் "எதுவம் செய்ய முடியாது" என்று சொல்வது போல் உள்ளது.**

(இப்போது இந்த மண்டூகத்தை என்னவென்று விளிக்க அடைமொழிகள் அளிக்குமாறு ரோஸாவிடம் விண்ணப்பிக்க வேண்டியதுதான்!). போலீஸ் எவ்வாறு செயல்படுமென்று ஆழ்ந்து ஆராய்ந்திருக்கின்றீர்கள் மிஸ்டர் ரமாஸ். அதை கடற்படை மற்றும் கடற்பாதுகாப்புப் படைகளோடு ஒப்புமை வேறு படுத்திப்பார்க்கின்றீர்கள். சபாஷ். அருமையான விவாதம். போலீஸ் குடியிருப்பை விடுங்கள். (இந்த ஹைபோதெடிகல் எடுத்துக்காட்டிற்கு மன்னிக்கவும்...) உங்கள் மனைவியை ஒருவர் வன்புணர்ந்ததாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் (இந்தியாவில் இருப்பதான கற்பனையுடன்) சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் கொதித்துப் போய் போலீஸ் ஸ்டேஷன் ஓடுகின்றீர்கள். அங்கே பொறுப்பில் இருப்பவர் என்ன கூறுவார்? "ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுங்க ஸார். நடவடிக்கை எடுக்கிறோம்". இதாவது புரிகின்றதா?

மண்டூகத்தின் நான்காவது பிதற்றல்:

** ஐந்து பதிவுகளில் எங்காவது சுடுவதை கண்டித்திருக்கிறாரா வந்தியத்தேவன்? **

ஓ! இந்த மண்டூகத்திற்கு தமிழ் வாசிக்கவே வராது போலிருக்கின்றது. எத்தனை இடங்களில் இதைப் பற்றி விவரமாக எழுதியிருக்கின்றேன் என்று எனக்கும், படித்த நடுநிலை வாசகர்க்களுக்கும் தெரியும். அதனால் கார்த்திக்ரமாஸ் என்ற மண்டூகத்திற்கு இனிமேல் இவ்விஷயத்தில் என்னிடமிருந்து பதில் கிடையாது.

அடுத்ததாக ஆசான் ரோஸாவசந்தைப் பார்ப்போம். http://rozavasanth.blogspot.com/2006/04/2_07.html வழக்கமான அடைமொழிகள் இல்லாத ரோஸாவின் பதிவு, அவர் இன்னமும் கொஞ்சமாவது, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சராசரி மனநலத்திலாவது இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்துவதாவே இருக்கின்றது. மேலும் ஆத்திரத்தை அடக்கவேண்டுமென்ற பொதுப்புத்தியும் கொஞ்சம் தற்சமயம் வந்திருப்பதாவே தெரிகின்றது. எனவே இவரோடு, இச்சமயத்தில் பேசலாமென்றும் எனக்குத் தோன்றுகின்றது. நெற்வயல் புகுந்த மதயானையாய், வழக்கம் போல் விஸ்தீரமாய் அதகளம் செய்யாமல் எனக்குத் தெரிந்த வரையில் முதல் முறையாய் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து ரோஸா பேசுவதும் வரவேற்கக் கூடியதே. அதற்கான பாராட்டுகளையும் நான் அவருக்கு தெரியப்படுத்துவதில் தயக்கமேதுமில்லை எனக்கு.

எனது பதிவுகளில் நான் ரோஸா ஒரு புலி ஆதரவாளர் என்று எங்காவது கூறி இருக்கின்றேனா? தமிழ் தேசியம் பேசும் வாதிகள் என்ற எனது முதல் பதிவில் கூறியிருப்பதை வைத்து அது ரோஸாவை நோக்கிக் கூறியது என்று அவர் அர்த்தப்படுத்திக் கொண்டால் (சம்பந்ததப்பட்ட பதிவில் தனக்கு வந்த பின்னூட்டுகளைப் படித்துப் பார்த்தபின்) யாரென்ன செய்ய முடியும்? எப்படியோ வலைப்பதிவு வாசகர்களுக்கு தான் ஒரு புலி எதிர்ப்பாளன், தமிழ் தேசியம் எதிர்ப்பாளன் என்று ரோஸாவசந்த் "தெளிவாக" அறிவித்து விட்டார். அதற்காகவாவது எனது பதிவுகளுக்கு ரோஸாவும், படிக்கும் நீங்களும் நன்றி கூறலாம். முடையேதுமில்லை.

சிரிப்பினை அடக்கிக் கொண்டு ரோஸாவின் இச்செய்தியினைப் படிக்கவும்:

** டெகான் க்ரோனிகிள் இணையதளத்திற்கு ஒருமுறை கூட போயிராத நான், செய்திக்கான ஒரு சுட்டியை அளிக்கவே இந்து இணையதளத்தில் தேடினேன். **

படித்த செய்தி டெக்கான் க்ரோனிகிள் செய்தித்தாளில். ஆனால் அவர்களது இணையதளம் நீங்கள் சென்றதில்லை. அதனால் இந்து இணையதளத்தில் "சுட்டி கொடுப்பதற்காக கண்களில் பிநாயில் ஊற்றித்" தேடினீர்கள். ஆமாம் டெக்கான் க்ரோனிகிள் இணையதளம் செல்ல என்ன சென்னையிலிருந்து பல்லவன் பஸ் பிடிக்க வேண்டுமா? "பஸ் நம்பர் தெரியாது; பஸ் ஸ்டாண்ட் தெரியாது; ரூட் தெரியாது;" ஆஹா என்ன சொல்ல வருகின்றீர்கள் ரோஸா? இந்து இணையதளத்தில் தேடுமதே நேரம்தானே டெக்கான் க்ரோனிக்கிள் இணையதளம் செல்வதற்கும்?

இன்னும் என்னவெல்லாம் சால்ஜாப்பு ஜல்லி அடிக்கப் போகின்றீர்கள்? உங்களது பிரச்சினை என்ன தெரியுமா? அனைத்திற்கும் "ஆதாரம்" கேட்டுத் தொங்குவது. எங்காவது, எதற்காகவாவது நான் உங்களை ஆதாரத்தை கொடுங்கள் என்று எனது பதிவுகளில் கேட்டிருக்கின்றேனா? அதுதான் எனது விவாதத்தின் பலம். உங்களது பலவீனம்.

மேலும் விரிவாக எழுதப்போகின்றேன் என்று கூறிய பின்னாலும் டிராலர் கணக்குக்கு கூட என்னிடம் ஆதாரம் கேட்ட உங்களது என்குறித்த முதல் பதிவு புன்முறுவலை வரவைத்தது. என்னைப் பொறுத்த வரையில் ரோஸா போன்ற சக வலைப்பதிவர் எழுதும் போது, அதுவும் ரோஸா போன்ற ஆதாரம் கேட்கும் ஆறுமுகங்கள் எழுதும்போது, செய்தியை அப்படியே உள்வாங்கி, பிரச்சினையை முழுதாகப் பார்த்து, முடிந்தால் கருத்து தெரிவிப்பதே எனது பாணி.

**இன்னமும் கூட என்னால் டெகான் க்ரோனிகிள் இணையதளத்தில் செய்தியின் சுட்டியை தரமுடியாததால், **

எனக்கு விருப்பமிருந்தால் வெறுமனே உங்களைப்போல் இதை வைத்தே தொங்கமுடியும். ஆனால் உங்களால் சுட்டி கூட கொடுக்க முடியாது. இருப்பினும் உங்களோடு விவாதம் செய்யும் அடுத்தவர் மட்டும் ஆதாரம் காட்ட வேண்டும். பரவாயில்லை. நான் வெற்று ஆதாரம் கேட்டு தொங்குபவனில்லை. எனக்கு நீங்கள் டெக்கான் க்ரோனிக்கிளில் படித்தேன் என்ற செய்தி ஒன்றே போதும். உங்கள் செய்தியை அப்படியே எடுத்துக் கொண்டேன்.

**Sri Lankan Navy men started chasing nearly 300 boats carrying fishermen from Rameswaram who are trying to cast their nets in Lankan waters near Katchadeevu. The fishermen were chased Sri Lankan Navy men through Indian waters up to the Danushkodi coast. **

உங்கள் பதிவை நான் சரியாகப் படிக்கவில்லையா? ரோஸா மூளை மழுங்கிவிடாமல் (ஸாரி இதைவிட நல்ல வார்த்தை தேடியும் கிடைக்கவில்லை) தமிழ்ப்படுத்தினாரா? கச்சத்தீவினில், இலங்கை கடலெல்லையில் வலை வீசினர் என்று டெக்கான் க்ரோனிக்கிள் தெளிவாகத் தெரிவிக்கின்றது. இதை ரோஸா தெளிவாகத் தெரிந்து கொள்ளாவிடினும் (வசதியாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக "சொல்லப்படும்" என்று திரித்துக் கொண்டார்) எனது அனுமானத்தில் (சுட்டிகள் ரோஸா கொடுக்காவிட்டாலும்) பிரச்சினையின் ஆழம் தெரிந்த நான், ஆதாரங்களுடன், விரிவாக எழுதினேன். இது படித்த வாசகர்களுக்கு (பிரச்சினையின் பால் அரசியல் போன்ற என்னவொரு கருத்துக் கண்ணாடிகள் அணிந்த, அணியாத) தெரியும்.

ரோஸாவிற்கு இலங்கை கடலெல்லையில் மீன் பிடித்தார்கள் என்பதை "சொல்லப்படும்" என்று திரிக்க முடியும். ஆனால் அதே டெக்கான் க்ரோனிக்கிள் கூறிய இந்திய கடலெல்லையான தனுஷ்கோடி வரை இலங்கை கடற்படை ஊடுருவியது என்பதை எடுத்துக் கொண்டு "சலம்பல்" செய்ய முடியும். நிகழ்வுக்கு சுட்டியும் கொடுக்க இயலாது. How Convinient? எந்த அடிப்படையில் இந்த வாள்வீச்சு? கடலெல்லைகள், அடிப்படை பிரச்சினை குறித்த புரிதல், தீர்வுகள் குறித்த தெளிவு, இது போன்ற காரணிகளின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் எழுதுவதுதான் ரோஸாவின் பாங்கு என்பது அவரது பதிவுகளிலிருந்து புலனாவது வெள்ளிடை மலை.

இலங்கை அதிகார வர்க்கம் முதல் இந்தியாவில் SB சவான் முதற்கொண்டு, IK குஜரால் வரை 1974-76 ஒப்பந்த ஷரத்துகளுக்கு (கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாமென்ற) எதிராகவே இருந்து வந்தனர். எனது தொடரை படித்தவர் இதை அறிவர். எனவே இலங்கை கடற்படை சுட்டதை நான் எங்குமே நியாயப்படுத்தவில்லை (கார்த்திக் மண்டூகத்திற்கு மட்டுமே புரியவில்லை). ஐ.நா. விதிகளைக் கூட நான் சுட்டியிருந்தேன். என்னிடம் ஏகப்பட்ட "ஆதாரங்கள்" இருந்தும் படிக்கும் வாசகர்களை அலைக்கழிக்க விரும்பாமல் சாரத்தைச் சொல்லிச் செல்வது என் வழக்கம். ஆனால் ரோஸா தான் சொல்வதிற்கு அடிப்படை ஆதாரம் கூடக் கொடுக்க முடியாமல் அடுத்தவரை ஆதாரம் கொடுக்கச் சொல்வது இணையத்தில் இது முதல் முறையல்ல.

**கச்சத்தீவு அருகில் (இலங்கை கடற்பரப்பில்) மீன் பிடிக்கவும், வலைகளை கச்சத்தீவில் காயப்போடவும் அதே 1974 ஒப்பந்தப் படி தமிழகத்து மீனவர்களுக்கு முழு உரிமை இருப்பதை வந்தியத்தேவனும் அறிந்து வைத்திருக்கிறார். தனது 5 பதிவுகளில் இரண்டு இடங்களில் இதை குறிப்பிடுகிறார்.**

ரோஸா இத்தகவல் எப்போது உமக்குத் தெரியும்? எனது பதிவுகளைப் படித்த பின்னர் தானே? இல்லை கடற்படை என்ன புடுங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்வி கேட்ட போதே நீங்கள் அறிந்ததா?

நான் கூறுகின்றேன். உங்களுக்கு உண்மையான பிரச்சினை குறித்த அக்கறை சிறிதுமில்லை. உமக்கு தேவைப்பட்டது ஒரு செய்தித்தாளின், உமக்கு தேவைப்பட்ட ஓர் சிறு அறிவிப்பு.

அறிவுஜீவியாய் கொதித்தெழுமுன் அடிப்படை அறிவோடு, வழக்கமாக சண்டியர் பாணி சண்டை விடுத்து கொஞ்சமாவது இப்பிரச்சினை குறித்து சிந்தித்திருக்கலாம்.

நீங்கள் பிரச்சினையாய் கருதுவதை விடுத்து வெட்டியாய் தொங்குகையில், நடைமுறைத் தீர்வுகளோடு வந்தியத்தேவன் உங்களை அணுகுகின்றான். இது நீங்கள் அறிந்திராத பாணி. வாதத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதில் எனது அக்கறையில்லை. காத்திரமான பிரச்சினையை, நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வுகளுடன் அணுக வேண்டுமென்பதே எனது பார்வை.

சரி வெறுத்துப் போய் இவ்விவாதத்திற்குள் ரோஸா போல் நுழைகின்றேன். ரோஸா கூறியது:

**இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து- இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது?**

இதற்கு ஆதாரமென்ன? எவ்வளவு முறை இது நிகழ்ந்தது? ரோஸா ஆதாரங்கள் தரவேண்டும்.

**இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்?**

நல்ல கேள்வி ரோஸா. ஆமாம் ஏன் இலங்கைத் தமிழ் (ஈழ) வலைப்பதிவர்கள் கூட (இலங்கை மீனவர்கள் பிரச்சினை உட்பட) உமக்கோ, எமக்கோ அணுவளவு கருத்துக்கூட தெரிவிக்கவில்லை. ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. உங்களது இந்த ஆதங்கத்தில் ஒத்துப்போவதில் எனக்குப் பிரச்சினையில்லை.

**இந்தியாவுடன் எந்தவிதத்திலும் வலிமையில் ஒப்பிடமுடியாத ஒரு அந்நிய நாட்டுபடை, உறுப்பை நுழைப்பதை பற்றி இந்தியா ஏன் மௌனமாய் இருக்கிறது?' என்ற கேள்வியை மட்டும் கேட்டிருந்தேன். சம்பவம் நடந்து இந்த ஒரு வாரத்தில் என்ன கண்டனம், நடவடிக்கை நடந்திருக்கிறது? அது குறித்து ,மேற்படி செய்திகளே இல்லை.**

இலங்கையில் மீனவர் பிரச்சினை குறித்த அடிப்படைப் புரிதல் கூட இந்திய மீனவர்கள் பற்றி நம்மிடையே கிடையாதென்ற வருத்தத்தை எனது பதிவுகளில் நான் கோடிட்டுக் காட்டியிருக்கின்றேன். இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து செயல்களையும் உங்களைப் போலவே நானும் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆமாம். கேனத்தனமாய் நான் பதில் கூறினேன் என்றீர்களே, அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? எது கேனத்தனம்? இலங்கை எல்லையில் மீன் பிடித்ததை "சொல்லப்படும்" என்று திரித்து விட்டு, இந்திய எல்லைக்கு வந்து இலங்கை கடற்படை வந்து சுட்டது என்பதை மட்டும் (எந்தவித ஆதாரமின்றி) பிடித்துக் கொண்டு தொங்குவதை எவ்வாறு விளிப்பது? உங்களைப் போல வாதம் செய்வதில் எனக்கு பேரலுப்பு உண்டாகின்றது.

** திறந்த மனதுடன் வாசிக்கும் வாசகர், அவர் பதிவில் தேடி, நான் சொல்வது போல பிரச்சனை திசை திருப்பப் பட்டுள்ளதா இல்லையா என்று பரிசீலித்து கொள்ளாலாம். **

ரோஸா நீங்கள் பிரச்சினை குறித்து அதிகம் அக்கறை காட்டியது போல் தெரியவில்லை. எனது நோக்கம் பிரச்சினையை ஒருமுகமாகப் பார்க்காமல் ஹோலிஸ்டிக் அப்ரோச்' ஆக, விலாவரியாக விளக்க வேண்டும் என்று பிரச்சினை குறித்த அக்கறையோடு பதிவுகள் செய்தேன். வெற்று சவடாலகளை புறந்தள்ளி பிரச்சினையின் வேர்களை ஆராய்ந்து, எனக்கு உண்மையெனப் பட்டதை தயங்காமல், ஆதாரங்களுடன் தீர்வுகளையும் முன்வைத்தேன்.

**ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் வசிக்கும், கண்தெரியாத மீனவர் அருள் சேசுராஜ் பல இடங்களில் 'சிங்கள கடற்படையின் எந்த நேரத்திலும் தாக்கலாம்' என்ற ஆபத்தை பற்றியே பிரதானமாய் பேசுகிறார். **

எனது பதிவுகளை மீள்வாசிப்பு செய்யச் சொன்னேன். கடலெல்லைகள் குறித்து நான் கொடுத்த சுட்டிகளைச் சொடுக்கிப் படித்தீரா ரோஸா? தெரியவில்லை. இந்தியா -இலங்கை கடலெல்லைகள் சர்வதேச ஒப்பந்தங்களைத் தாண்டியது. இரு நாடுகளும் (அமெரிக்கா ஒத்துக் கொள்ளாவிட்டாலும்) தமது கடலெல்லைகளைத் தாமாகவே மறுபரிசீலனை செய்து வரைந்து கொண்டன. இராமேஸ்வரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள பகுதி. வெறும் 7 கிமீ தாண்டினால் இலங்கை கடலெல்லையில் பிரவேசிக்க முடியும். இத்தகவலை நினைவிலிருந்து எழுதுகின்றேன். ஆக அருள் சேசுராஜ் (சாதாரண படகென்றாலும்) எங்கே மீன்பிடித்தார்? இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையில் ஊடுறுவும் சுமார் 1000 டிராலர்களை அந்நாட்டு கடற்படை விரட்டும் போது கிராஸ்பயரில் (crossfire) மாட்டினாரா? சத்தியமாகக் கேட்கின்றேன். இந்த கேள்விகள் உங்கள் மனதில் எழவே இல்லையா?

**அநியாயமானதாக இருந்தாலும், நிருபமா ராவ் சொன்னதாக பத்ரி எழுதிய பதில் கொஞ்சமாவது நான் பேசிய பிரச்சனையுடன் தொடர்புள்ளது. பத்ரி தான் ஒரு மெஸெஞ்சர் மட்டும்தான் என்று சொல்லி அந்த கருத்துடன் தனக்கு சம்பந்தமில்லை என்கிறார். ஆனால் வந்தியதேவன் அதை வசமாக பற்றிக்கொண்டார். **

ரோஸா கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். பத்ரி சொன்னதை நான் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியமேயில்லை. தமிழக அரசின் முடிவுகள் பற்றிய பதிவைப் படியுங்கள். கோஸ்ட்கார்டு ரெகுலேஷன்ஸ் படி படகுகளை ப்ளோரசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டுமென்று விளக்கியிருந்தேன். அருள் சேசுராஜ் செய்திருந்தாரா? அடையாள அட்டை வைத்திருந்தாரா? இந்திய எல்லைக்குள்தான் மீன் பிடித்தாரா?

இக்கேள்விகளைக் கூட பிரச்சினை குறித்த அடிப்படை அக்கறையின்றி நான் கேட்பதாகத் திரிக்கக்கூடும். ஒரு கட்டுமரத்தில் மீன் பிடித்த கண்ணிழந்த மீனவரை சிலோன்காரன் சுட்டுட்டான். ஆனால் வந்தியத்தேவன் சொகுசாக கேள்விகள் கேட்கின்றான். இந்திய கடற்படை எந்த **ரை புடுங்கிக்கொண்டு இருக்கின்றது?

சரி உங்கள் வாதப்படி பிரச்சினை இப்படிப் பார்ப்போம். நாங்கள் (இந்திய மீனவர்கள்) இலங்கை கடலெல்லையில் மீன் பிடிப்போம். இந்திய/தமிழக அரசு கூறியதுபடி அடையாள அட்டைகளோ, ப்ளோரோசெண்ட் பெயிண்ட்டோ அடிக்க மாட்டோம். அடையாளத்திற்காக கூட இந்திய தேசியக் கொடியை படகில் ஏற்ற மாட்டோம். டிராலர்களால் கடற்கொள்ளை இலங்கை எல்லைகளில் செய்வோம். ஆனால் பதிலுக்கு இலங்கை கடற்படையோ, இலங்கை மீனவர்களோ ஒன்றுமே செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் இந்திய கடற்படை/இந்திய கடற்பாதுகாப்புப் படைகளை வைத்து இலங்கையை காயடிக்க வேண்டும். என்ன சரிதானா ரோஸா?

ரோஸாவிற்கு கடைசியாக:

1. இந்த விவாததிதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து எனக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை.
2. உங்களது பாராட்டையோ, அங்கீகாரத்தையோ வேறு எதையுமே எதிர்பார்த்து இத்தொடர் கட்டமைக்கப்படவில்லை. எனக்கு அதற்கான அத்தியாவசியமும் இல்லை.
3. தீர்வுகளையும் முன் வைத்தது கூட அறிந்தும் அறியாமலும் நீங்கள் நான் மீண்டும் எழுத வந்த காரணம் குறித்தே உங்களுக்கு முதன்மையான கேள்வியென்றால், உங்களோடு விவாதம் செய்வ(த)தற்காக நான் வெட்கித் தலை குனிகின்றேன்.
4. இப்பிரச்சினையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சக-வலைப்பதிவர்களின் (இலங்கை/இந்தியா) "Ignorance is bliss" என்ற அடைப்படியில் மௌனம் காப்பது உங்களைப் போலவே எனக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
5. கடற்படைக்கு ஸ்ரீகாந்த் மின்னஞ்சல் அனுப்பியது ஒரு முதல் படி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மீன் வளத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் செய்திருந்தால் சரியான முயற்சி.
6. இவற்றைச் செய்து வலைப்பதிவர்கள் சார்பாக விண்ணப்பம் தமிழிணைய குமுகாயமாக அனுப்பும் நோக்கில் நான் முயற்சிகள் எடுக்கின்றேன்.
7. பிரச்சினைகளைப் பற்றி ஓரளவு தெரிந்த நான் திறந்த மனதுடன் சொல்கின்றேன். இந்திய கடற்படையில் லெப்டினெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான் வெற்று சவடால்களைத் தாண்டி, காத்திரமான பிரச்சினைக்கு அனைத்து வலைப்பதிவர்கள் சார்பாக இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து மேற்சொன்ன முயற்சியைச் செய்ய விழைகின்றேன்.

ஆதரவு உண்டா உங்களிடமிருந்து?

Thursday, April 06, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

விட்ட குறை தொட்ட குறையாக இத்தொடரை நான் முடிக்க விரும்பவில்லை.

இணைய அரசியல், தர்க்கம், விவாதம் போன்றவற்றில் ஆர்வமில்லாதவர்களும் இப்பதிவினைப் படியுங்கள்.

செய்தித்தாளில் ஒரு துர்சம்பவம் பற்றி செய்தி வருகின்றது. குறைந்தபட்ச மனநலம் கொண்ட யாருமே அச்சம்பவம் குறித்து தமக்குள்ளேயே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான உண்மைக் காரணங்களை அறிய முற்படுவது இயற்கை. ஆனால் நடந்தது என்ன?

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுடப்பட்டார்கள் என்று டெக்கான் க்ரோனிக்கிளில் செய்தியை வாசிக்கின்றார் ரோஸா. அவர் உடனடியாக செய்த அடுத்த காரியம் என்ன தெரியுமா? ஹிந்து பேப்பரைப் பினாயில் ஊற்றிக் கொண்டு இதே செய்தி வந்திருக்கின்றதா என்று பார்த்ததுதான். ரோஸாவின் நோக்கமென்னவோ? இதனால் சுடப்பட்ட மீனவர்களுக்கு ஏதேனும் நன்மை விளையப்போகின்றதா? இந்து ராமின் செயல்பாடுகளின் உள்நோக்கத்தைத்தான் ஏற்கெனவே உங்களைப் போன்றவர்கள் இணையத்தில் "வெளிச்சம்" போட்டுக் காட்டிவிட்டார்களே? இன்னும் மிச்சம் மீதி உள்ளதா?

பிறகு ஒரு கோர்வையில்லாத பதிவு. அதில் வழக்கம் போல் சலம்பல் சொற்றொடர்கள். பிரச்சினை குறித்து உண்மையான அக்கறை உள்ளவருக்கு சாதாரண படகிற்கும், டிராலருக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடற்பாதுகாப்பு படை (Indian Navy & Indian Cost Guard) மற்றுமிவை இரண்டிற்குமுண்டான வேறுபாடுகளைக் கூட ரோஸா அறியவில்லை. தமிழக தேர்தல் பற்றி கருத்து கூறும்படி ரோஸாவை ஒருவர் கேட்டிருக்கின்றார். அவசரத்தில் ரோஸா "பாராளுமன்ற தேர்த்லைப்" பற்றி எழுதிவிடப் போகின்றார். யாரேனும் கேள்வி கேட்டால் "தேர்தலைப்" பற்றி தான் பேப்பரில் படித்த அடிப்படையில் எழுதினேன் என்று சால்ஜாப்பு சொல்லி விட்டால் சந்தோஷம்.

இந்த லட்சணத்தில் நான் எழுதியது ஏன் (என் முதல் பதிவைக் குறித்து) என்று அனைவருக்கும் தெரியும் என்ற கயமைத்தனமான திரிப்பு வேறு. எழுத நேரமில்லை என்று புலம்பி விட்டு 1800 வார்த்தைகளில் எனக்கு அர்ச்சனை செய்யும் நேரத்தில் உருப்படியாக எதையாவது பிரச்சினை குறித்து படித்து விட்டு வந்திருக்கலாமே? இவ்வளவு ஏன்? கூகிள் தேடுபொறியையாவது உபயோகித்திருக்கலாமே?

பணிப்பளு அனைவருக்கும் உண்டு. விரும்பியோ, விரும்பாமலோ உங்களுக்கு அறிவுஜீவி பட்டம் சூட்டி உங்களது வாசகர் வட்டம் ஆர்ப்பரிக்கின்றது. அவர்களுக்காகவாவது பிரச்சினை பற்றி நேர்மையாகத் தெரிந்துகொண்டு, தெளிவாகப் பேசியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் உங்களது வாசக வட்டம் காணாமல் போய்விடுமே. அவர்கள் விரும்புவது உங்களது இந்த வெற்று சவடால்கள் தானே. பதிவுகளில் உங்களை இணைய சண்டியராய் உருவகம் செய்து கொண்டு காட்டமாய்க் கேட்டேன், தடித்த உடை, உறுப்பு நுழைத்தல், புடுங்குதல், குறியறுத்தல் என்று நீங்கள் எகிறிக் குதிக்க, பாருங்கள் உங்கள் விசிலடிச்சான்குஞ்சுகள் "ஆடுறா ராமா ஆடுறா ராமா" என்று கைதட்டி களிப்படைகின்றன!

டின் பிகா-பங்களாதேஷ் விவகாரத்தை நான் முதல் பதிவில் கோடு காட்டிய பின்னராவது அது குறித்து படித்திருக்கலாம். அதை விட்டு விட்டு பின்னால் சால்ஜாப்பு நான் சொல்லப்போகின்றேன் என்று ஜோஸ்யம் கூறுகின்றார்.

வாசிப்பைக் கடத்தியவர், திரிப்பு செய்பவர், கேனத்தனமாய் கேள்வி கேட்பவர், முட்டாள் போல் பேசுபவர், அறிவு நேர்மை இல்லாதவர், ஆதாரமின்றி பேசுபவர், தர்க்க யோக்கியதை இல்லாதவர், அயோக்கியத்தனம் கொண்டவர், ஹிப்போகிரட், நார்மலில்லாத ஆசாமி, உளறுபவர் எல்லாவற்றிற்கும் மேலாக தர்க்க சுயமைதுனம் செய்பவர் என்று நீங்கள் எனக்குக் கொடுத்த அத்தனை அடைமொழிகளையும், அந்த அடைமொழிகளுக்கு முழுதும் பொருத்தமானவர் தாங்களே என்பதால் மனமுவந்து திருப்பித் தருகின்றேன். அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ளவும்.

பதிலுக்கு நான் நன்றியைக் கூட எதிர்பார்க்கவில்லை.

இணையத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வளர வேண்டுமென்ற அடங்காத ஆவல் எனக்குண்டு. அது சாத்தியப்படும் என்ற அசையாத நம்பிக்கையும் எனக்குண்டு. தர்க்கம் என்பது எழுதியவரைத் தாக்குவதோடு இருந்து விடக்கூடாது. அது கருத்து ரீதியானதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்ட தொடரே இது. ஒரு நிகழ்வைக் குறித்த கருத்துகளை பல்வேறு கோணங்களிலிருந்து, பலரால் ஆராயப்பட்டால், உருப்படியான முடிவுகளுக்கு நாம் வர முடியும். அதற்காகவாவது விவாதங்கள், அதுவும் இணையத்தில் தொடரப்பட வேண்டும்.

தொடருமா?

Wednesday, April 05, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:

பதிவு 1
பதிவு 2
பதிவு 3

இலங்கை-இந்திய மீனவர்களின் உண்மையான பிணக்குகளின் பல்வேறு கூறுகளை மேற்சொன்ன பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். இப்பதிவில் சில நடைமுறைத் தீர்வுகளைப் பார்ப்போம்.

இலங்கை மீனவர்கள் ஒருபோதும் இந்திய டிராலர்களை எல்லை மீற அனுமதிக்கப்போவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட காலவரைக்குள் டிராலர்களை விட்டு விட்டு பிழைக்க வேறாதாவது வழி தேடவேண்டும். இந்திய டிராலர்கள் மற்றும் இலங்கை அடையும் பாதிப்பின் புள்ளிவிபரங்கள் (நன்றி: விவேகானந்தன்):

மாவட்டம் (டிராலர் மையம்): ராமநாதபுரம் (இராமேஸ்வரம், மண்டபம்)
டிராலர் எண்ணிக்கை: 1,700
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 900
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: தலை மன்னார் மற்றும் டெ(ல்)ப்ட் தீவு (Delft Island)
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மிக அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): புதுக்கோட்டை (கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம்)
டிராலர் எண்ணிக்கை: 1000
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 1000
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: டெ(ல்)ப்ட் தீவு (Delft island) முதல் யாழ்ப்பாண குடாவுக்குள்
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): நாகப்பட்டினம் (கோடிக்கரை மற்றும் வடக்கு வாங்காள விரிகுடா)
டிராலர் எண்ணிக்கை: 1300
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 600
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: பாக் நீரினையும், அப்பாலும்; யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மீடியம் அல்லது குறைவு (அவ்வப்போது ஊடுருவுவதால்)

ஆக மொத்தம் 4,000 இந்திய டிராலர்களில் சுமார் 2,500 இலங்கை கடலெல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதாக திரு. விவேகானந்தன் தெரிவிக்கின்றார். இந்த 2,500 டிராலர்களை எவ்வாறு கைவிடுவது? அரசாங்கமே முன்வந்து இந்த டிராலர்களை நியாய விலையில் வாங்க வேண்டும். மீன் வளத்துறை மூலம், தேவைப்பட்டால் உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தைச் சீராக செயல்படுத்த முடியும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் புனர் வாழ்வுத் திட்டங்களையும் தீட்ட வேண்டும்.

இறால் பண்ணைகள் அமைத்துத் தருவது, ஏரி/குளங்களில் மீன்வளத்தைப் பெருக்குவது போன்று எத்தனையோ, நடைமுறையில் இருக்கும் தொழில்களில் இம்மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, மறுவாழ்வு தர முடியும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மீனவ சமுதாயத்தைக் கருணையோடு இந்திய அரசாங்கம் மீண்டும் அணைத்துக் கொள்ளும் தருணமிது.

இத்திட்டங்களை செயல்முறைப்படுத்த குறித்த காலவரையை நிர்ணயிக்க வேண்டும். பின்னர் இச்செயல்திட்டம் குறித்து இலங்கை அரசு மற்றும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தினால், திட்டம் முடியும்வரை எல்லை கடக்கும் டிராலர்கள் மீது அவர்களுக்கும் பார்வைகள் புதிதுபடும்.

இந்திய டிராலர்கள் தெரிந்தே எல்லை கடந்தால் தயங்காது கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும். திட்டம் முடியும் வரை எந்த வித புது டிராலர்களுக்கும் லைசன்ஸ் கொடுக்கப்படக் கூடாது.

தமிழக அரசு மீனவர் பாதுகாப்புக்காக 2004'ல் பல முடிவுகள் எடுத்தது. 1. மீனவருக்கு அடையாள அட்டைகளை வழங்கி மீன் பிடிக்கும் போது கட்டாயம் அவற்றை வைத்திருக்க வேண்டும் 2. படகின் சொந்தக்காரர்கள் தமது படகுகளுக்கு இந்திய கடற்பாதுகாப்புப் படையின் விதிகளுக்குட்பட்டு ப்ளோரோசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டும். 3. தவறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் முதல் லைசென்ஸ் ரத்து போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் 4. இந்திய கடற் பாதுகாப்புப்படையின் நிர்வாகத்தில் 5 ரோந்துப் படகுகள் பாதுகாப்புப் பணியில் இயங்கும்... போன்றவையே அவை.

இம்முடிவுகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இந்திய மீன்வளத்துறை உடனடியாக இம்முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.

இலங்கை கடற்படை சுடுவதற்கான காரணமாய் நிருபமா கூறியதை பின்னூட்டத்தில் அறியத் தந்த பத்ரிக்கு நன்றி. 1997'லேயே Intelligence and Counter Piracy Operations Centre இலங்கை கடற்பரப்பை மிகவும் அபாயகரமானது என்று சர்ட்டிபிகேட் தந்திருக்கின்றது. அமெரிக்க நிறுவனமான Centre for Strategic and International Studies, இலங்கையின் கடற்படையைச் சேர்ந்த கலங்களில் 30 - 50% கடற்புலிகள் அழித்து விட்டிருக்கலாம் என்று யூகிக்கின்றது. இந்திய மீனவர்கள் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவினர்/உதவுகின்றனர் என்று நம்பும் இலங்கை கடற்படை, எல்லை கடந்து அடையாளம் காண இயலாத மீன் பிடிப்படகுகளை சுடுவதற்கான காரணங்களை நீங்களே கற்பிதம் செய்து கொள்ள முடியும்.

இருப்பினும் Art 73 of the UN Law of the Sea'படி இலங்கை கடற்படை, எல்லை கடப்பவர்களை சுடுதல் சட்ட மீறுதலாகும். தேவைப்பட்டால், சுடுதல் தொடருமானால், இந்திய அரசு இலங்கைக்கு கடுமையான கண்டனங்களை முன்வைப்பதுடன், ஐநா'விற்கே கூட புகார் செய்யலாம். பதிலுக்கு இந்திய கடற்பாதுகாப்பு படையை விட்டு இலங்கை மீனவர்களை (எல்லை கடந்தவர்களை) சுடச் சொல்லுவது ஜனநாயக மரபுகளுக்கே இழுக்கு.

இந்நிலையில் இப்பிரச்சினையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு கையாண்டன?

ஆகஸ்ட் 15 1991: கச்சத்தீவினை மீட்பேன் - செல்வி ஜெயலலிதா சூளுரை.

ஏப்ரல் 29, 2000: இலங்கை இந்திய நல்லுறவுகளுக்காக தமிழக மீனவர்களை (நாகப்பட்டிணம் அருகில் அக்காரப்பட்டைச் சேர்ந்த குமார், முனுசாமி மற்றும் ஐய்யப்பன் ஏப்பிரல் 29 காலை பத்து மணி அளவில் கோடிக்கரையில் தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டனர்) இலங்கை ராணுவம் கொல்லுவதை அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் இலங்கை கடற்படை இத்தகைய அநியாயத்தைச் செய்ய முடியாதவாறு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலைஞர் கருணாநிதி.

வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்ற தலைவர்களும் சுள்ளென்று இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு எதிரான கருத்துகளைப் பதிய தவறவில்லை. மத்தியில் காங்கிரஸோ, பிஜேபியோ இருந்தாலும், தமிழக அரசியல் (திராவிடத்) தலைவர்கள், மீனவர்கள் குறித்தான கருத்துகளைத் தீவிரமாக வெறுமனே பேசியும், எழுதியும் மட்டுமே வந்திருக்கின்றார்கள். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு நிலையான முடிவெடுத்து அதைச் செயல்படுத்த மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது வருத்தம் தரும் விடயம். (இராமகி'யின் பின்னூட்டம் நினைவிற்கு வருகின்றது)

பேராசிரியர் சூர்ய நாராயணன் என்பவர் இன்னொரு தீர்வை முன்வைக்கின்றார் (Conflict Over Fisheries In the Palk Bay Region (Lancer, New Delhi, 2005) Prof V Suryanarayan). அதாவது இழந்த கச்சத்தீவை மீண்டும் எழுதிக் கொடுக்க இலங்கை ஒப்பாது. அதனால் கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு (lease in perpetuity) இந்தியா இலங்கையிடமிருந்து பெறவேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்ததால் தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டது என்ற கடுமையான விமர்சனத்தை வைக்கும் அவர், நிரந்தர குத்தகைதான் தகுந்த தீர்வு என்று சொல்கின்றார். இந்தியா பங்களாதேஷிற்கு இவ்வாறுதான் டின் பிகாவை குத்தகைக்கு விட்டது என்பதையும் சுட்டிக் காண்பிக்கின்றார்.

கச்சத்தீவினை குத்தகைக்கு எடுத்த பின்னர் இந்தியாவும், இலங்கையும் ஒரு கூட்டு கடற்தளத்தை அமைத்து கடற்புலிகள், ஆய்தம்/போதை மருந்து கடத்துபவர்கள் போன்றோரிடமிருந்து இருநாடுகளையும் காக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்.ஆனால் இலங்கை அவ்வாறு செய்ய முன்வருமா?

ஆனால் புல் கூட முளைக்காத நிலமாக கச்சத்தீவு இருந்தாலும் பல்வேறு அரசியல் காரணிகளால் இலங்கையால் நமக்கு குத்தகைக்குத் தரமுடியாது. இந்தியா டின் பிகாவைக் கொடுத்தபோது பங்களாதேஷ் (இந்திய நண்பரான) முஜிபுர் ரஹ்மான் வசமிருந்தது. இன்றைய சூழலில் இந்தியா-இலங்கை உறவு அவ்வாறு சுமுகமானதாகக் கருத முடியாது. சேது சமுத்திர திட்டம் குறித்து இலங்கைக்கு இந்தியாவின் மீது நல்ல விமர்சனம் கிடையாது என்பது கொசுறுச் செய்தி. தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகளாவது சூர்யநாராயணனின் தீர்விற்கு ஆதரவு அளிப்பார்களா? சந்தேகம்தான். போலி அரசியல் வெளிப்பாடுகள் கட்டுடையும் தருணமிது.

26 செப்டம்பர் 05'ல் லங்காநியூஸ்பேப்பரில் சூர்யநாராயணன் தீர்வு பற்றி செய்தி வெளியானதும் இலங்கை வாழ் மக்கள் (தமிழர் உட்பட) "இலங்கை தனது இறையாண்மையை இந்தியாவிற்கு விற்கக்கூடாது" என்ற கருத்தையே பிரதிபலித்தனர்.

எனக்கென்னவோ தோன்றுவது இதுதான். நாளையே இலங்கையில் சிவில் யுத்தம் மீண்டும் வெடிக்கலாம். இலங்கை மீனவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு புலம் பெயரலாம். அப்போது முன்னே நடந்தது போல் அவர்களும், இவர்களும் இணைந்து ஒரே இடத்தில் (இந்திய/இலங்கை எல்லைகள் உட்பட) மீன் பிடிக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் பலவருடங்களாக மீன் பிடித்தொழிலில் நம்மை விட அதிகம் நசிந்த காரணத்தாலும், உள்ளூரில் (இலங்கையில்) டிராலர்களை அனுமதிக்காததாலும், சுனாமியில் நம்மை விட அதிகம் அடி வாங்கியதாலும், நமது பொருளாதாரம் டிராலர் விடுத்த மாற்று வழிகளை இலங்கையை விட எளிதாக செயல்முறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகத்தின் மீதுள்ள பற்றாலும், இந்திய மீனவ சகோதரர்கள் இப்பிரச்சினைக்கு உண்மையிலேயே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினால் கொஞ்சம் இலங்கை மீனவர்களுக்காக விட்டுக் கொடுத்துதான் போகவேண்டும்.

இது இன்றைய சுகங்கள் எனக்குத் தந்த சொகுசில் தட்டச்சு செய்யப்பட்ட பதிவல்ல. சிறிதே கடல் அனுபவம் எனக்குத் தந்த பாடங்களின் பதிவு! வாசகர்களின் பொறுமைக்கும், ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி !!!

தொடர்வேன்...

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:
பதிவு 1

பதிவு 2

கடலைப்பற்றி அறிந்தவர்கள், வியக்கும் முக்கியமான விடயம் "அதன் பிரும்மாண்டம்". அலைகளின் சலனமில்லாத ஆழ்கடலின் பிரும்மாண்டத்தில் ஆஜானுபாகுவான விமானந்தாங்கிக் கப்பல் கூட கொசுவாகத் தெரியும். கடல்நீரில் தோன்றி மறையும் வீக்கங்கள் (Swellings) அந்த பிரும்மாண்டத்தை இன்னும் பெரிதுபடுத்திக் காட்டும். மீனவர்கள் கடலை வெறும் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக படைக்கப்பட்டதாய் நினைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடல் ஒரு தாய், கடவுள், மாதா என்று பலவகைகளில் உருவகப்படுத்தி மகிழ்வார்கள். நாள் முழுதும் அலைந்து நினைத்த அளவு மீன் கிட்டாவிட்டாலும் கடலைச் சபிக்க மாட்டார்கள். தனது கடலெல்லைக்குள் மற்றவர் நுழைவதை "வன்புணர்வு" என்று இலங்கை மீனவர்கள் கருதுவது அதீதமான உணர்வு வெளிப்பாடல்ல. இதே காரணத்தால்தான் இந்தியாவிற்குள்ளும் மீனவ குப்பங்களிடையே சண்டை மூள்கின்றது. எனவே இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை "மேலாண்மை" திறத்துடன் மட்டும் அணுக முடியாது. உணர்வுப்பூர்வமாகவும் அணுக வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒரு உடனடி தீர்வு கிடையவே கிடையாது.

இதனை நன்கு புரிந்து கொண்ட SIFFS தனது முதலாவது நல்லெண்ணப் பயணமாக இந்திய மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றது. மீனவர்களும் மனம் விட்டு தமது பிரச்சினைகளை அலசினார்கள். பொதுவாக இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்களின் எல்லை கடந்து மீன் பிடிக்கும் பிரச்சினையில் வெளிப்படுத்திய உணர்ச்சிக் குமுறலைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். "கடற் கொள்ளை", "கடற் கற்பழிப்பு" போன்ற சொற் பிரயோகங்களைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.

இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாகக் கூறியது இதுதான் "இன்னும் 3 மாதத்திற்குள் எந்த இந்திய டிராலர்களும் இலங்கை கடற்பிரதேசத்திற்கு வரக்கூடாது". இது குறித்து இலங்கை சென்ற இந்திய மீனவர்களால் (சக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல்) மட்டும் உடனடியாக ஒத்துக் கொள்ளவும் முடியாது.

மேலும் இந்திய டிராலர்களால் இன்னொரு அபாயமும் உண்டு. அது இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து விடுவது. வாரத்திற்கு மூன்று நாள் இராமேஸ்வரத்திலிருந்து எப்படியும் இலங்கை கடற்பரப்பில் வரும் டிராலர்களால் பலமுறை இலங்கை மீனவர்களின் வலைகள் அறுந்து போனது இன்னொரு பிரச்சினையாக எழுப்பப்பட்டது. பெசாலைக்கு அருகிலுள்ள வங்காளபாடு கிராமத்தில் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய படகையும் நமது மீனவர்கள் பார்த்தார்கள். தமிழக அரசின் உத்தரவான ஆறு வாரங்கள் டிராலர்கள் மீன் பிடிக்கக்கூடாது என்பதைக் கூட இலங்கை மீனவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. பலர் டிராலர்களுக்குப் பயந்து கடல் பக்கமே போகாமல் கூட இருப்பதாய் குமுறியிருக்கின்றார்கள். இந்த நல்லெண்ணப் பயணத்திற்கு யோசனை தெரிவித்த திரு. அடைக்கலநாதன் MP'யையும் நமது மீனவர்கள் சந்தித்தார்கள். இமாதிரி முன்னோடி முயற்சிகளை நமது அரசியல்வாதிகள் செய்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.

மேலும் டிராலர்கள் பயன்படுத்தும் வலைகளான pair trawl, “mixture” net, “chank” net and “roller” net போன்றவை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், இலங்கை மீனவர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிரச்சினைக்குரிய அவ்வகை வலைகளை தாங்களாவே பயன்படுத்துவதில்லை என்ற முடிவை இராமேஸ்வரம் மீனவர்கள் கூறினார்கள்.

டிராலர்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே. இருப்பினும் அவற்றை இயக்குபவர்கள் பெரும்பாலும் குத்தகைக்கு எடுத்த, அல்லது வேலைக்கமர்த்தப்பட்ட ஏழை மீனவர்களே. இவர்கள் மீது இலங்கைப் பரப்பில் சென்று மீன் பிடிக்க வேண்டிய பணி கட்டாயமாக்கப்படுகின்றது. இருதலைக் கொள்ளியெறும்பு நிலைதான் இவ்வகை மீனவர்களுக்கு. இதனால் நாகப்பட்டினத்தில் 50 டிராலர்களை விற்று விட்டதாகவும் செய்தியுண்டு. நாகூர் மீனவர்களோ டிராலர் பிஸினஸே வேண்டாமென்று Yellow Fin Tuna பிடிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கின்றார்கள்.

இந்திய அரசாங்கம் முன் வந்து இவ்வகை டிராலர்களை நியாயமான விலைக்கு வாங்கினால் விற்பதற்கு பலரும் தயராக இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. குறைந்தபட்சம் வாங்கிய கடனை அடைத்தாலே போதுமென்று பலரும் நினைக்கின்றார்கள்.இராமேஸ்வரத்தில் டிராலர்கள் எண்ணிக்கை 500 ஆக உயந்தபோதே பல சங்கங்கள் மூலம் கடும் எதிர்ப்பை சில மீனவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் போய்விட இன்றைக்கு எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. டிராலர்கள் புள்ளி விவரம் வரும்பதிவில்.

இலங்கை மீனவர் பிரச்சினையின் தீர்வுகளாக முன்வைப்பது:

1. இராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கரையிலிருந்து மூன்று கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
2. நாகப்பட்டினம் மீனவர்கள் 7 கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
3. ஏற்கெனவே கூறியபடி நான்கு வகை டிராலர் வலைகளை யாருமே பயன்படுத்தக் கூடாது
4. கடலெல்லையைக் கடக்கும் படகுகளை மீண்டும் மீன் பிடிக்காதபடி இந்தியாவே தண்டிக்க வேண்டும்
5. வட-இலங்கை மீனவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் புழங்கும் கடலெல்லை ஏனைய மீனவர்களை விட வெகு குறைவு. எனவே அப்பகுதியில் இந்திய படகுகளின் ஊடுருவல் கூடவே கூடாது
6. இலங்கை அரசின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வடமராட்சி மீனவர்கள் குறைவான பகுதியில் மீன் பிடிப்பதால், இந்திய டிராலர்கள் நுழையக் கூடாது
7. மூன்று மாத கால அவகாசத்தில் அனைத்து இந்திய டிராலர்களும் இலங்கையில் கடலெல்லைக்குள் எங்குமே நுழையக் கூடாது. சுருங்கக் கூறின் அனைத்து இந்திய டிராலர்களையும் முடக்கவேண்டும்

பின்னர் நடந்த குழு கலந்துரையாடலில் இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்கள்:

1. இலங்கையில் டிராலர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதால் (செய்தியை உறுதி செய்ய முடியவில்லை), இந்திய மீனவர்களும் வருங்காலத்தில் டிராலர்களை கைவிட வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிவாகவில்லை. (மூன்று மாதம் பின்னர் மீண்டும் கால வரையறைப் பற்றி பேசவேண்டுமென்று எடுத்த முடிவு என்னாகியது என்றும் தெரியவில்லை)
2. பா(ல்)க் வளைகுடாவிலிருந்து 3 கடல் மைல் தொலைவு, யாழ்ப்பாணம்/வடமராட்சியிலிருந்து 7 கடல் மைல்கள் தொலைவு விதியை இந்திய மீனவர்கள் ஏற்றுக் கொண்டனர்
3. நான்கு வகை டிராலர் வலைகளும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய மீனவர்கள் உறுதி மொழி கொடுத்தார்கள்.
4. விதிகளை மீறும் படகுகள் மீது இந்தியா/மீனவ சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இலங்கை மீனவர்கள் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடாது
5. இரு நாடுகளிலும் சிறைப்பட்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை பெற இருதரப்பும் மும்முரமாக ஈடுபடும்

நல்லுறவு பயணத்தின் தொடர்ச்சியாய் இலங்கை மீனவர்கள் இந்தியா வந்தார்களா என்று தெரியவில்லை.

பிரச்சினைக்கு மேலும் சில தீர்வுகள் உண்டா? தொடர்ந்து அலசுவோம்.

Tuesday, April 04, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-2

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை இவ்விரு நாடுகளில் (குறிப்பாக இலங்கையில்) நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த காலகட்டங்களைக் கொண்டு ஆராயலாம்.

எனது முதல் பதிவில் கூறியபடி 1974'ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன் பின்னர் அதே ஒப்பந்தத்தில் 5 மற்றும் 6 வது ஷரத்துகளின் மூலம் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவினருகில் மீன் பிடிக்க முழு உரிமை வழங்கப்பட்டது.

1983'ல் இலங்கையில் தொடங்கிய சிவில் யுத்தம் ஒரு முக்கியமான திருப்புமுனை. பா(ல்)க் ஜலசந்தியில் மற்றும் பா(ல்)க் நீரினையில் மீன் பிடிக்கும் இரு நாட்டு மீனவர்களும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக இலங்கை மீனவர்கள் சிங்கள அரசின் பாதுகாப்பு குறித்த ஏகப்பட்ட கட்டுபாடுகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் புலம் பெயர்ந்து தமிழகக் கடற்கரைகளில் (இராமேஸ்வரம், மண்டபம்) தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் 1974 முதல் 1983 வரை இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக, இருவரது கடற்பகுதிகளிலும் மீன் பிடித்துக் கொண்டுதான் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரச்சினையை மேலும் ஆராயுமுன்னர் சில தகவல்கள். கரையிலிருப்பதைப் போல கடலிலும் ஒரு நாட்டிற்குண்டான ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைப் பார்ப்போம்:

Territorial Sea: கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு மிகாமல்
Contiguous Zone: கரையிலிருந்து 24 கடல் மைல்கள் மிகாமல்
exclusive economic zone: கரையிலிருந்து 200 கடல் மைல்கள் மிகாமல்

இந்த எல்லைகளைப் பற்றியும், குறிப்பிட்ட எல்லைகளில் ஒரு நாட்டிற்கு உண்டான உரிமைகளைப் பற்றியும், விதிகள் மீறப்படும் போது எவ்வாறு பிரச்சினை தீர்ப்பது போன்ற விடயங்களை விரிவாக ஐநா சபையின் இணையதளத்தில் படிக்கலாம். குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட வேண்டியது Territorial Sea. கரையிலிருந்து 12 கடல் மைல் (13.8 மைல்/22.22 கிமீ) வரை முழு உரிமை ஒரு நாட்டிற்கு உண்டு. பிரச்சினை என்னவென்றால் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் territorial sea 7 கிமீ (3.8 கடல்மைல்) தூரம்தான். எனவே தத்த்தமது கடலெல்லைகளைத் துல்லியமாக பிரித்துக்கொள்ள இந்தியாவும் இலங்கையும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன.

இந்தியாவின் கடலெல்லைகள் பற்றி விரிவாக அறிய இங்கே சுட்டுங்கள்
இலங்கையின் கடலெல்லைகள் பற்றி விரிவாக அறிய இங்கே சுட்டுங்கள்

தென்னிந்திய மீனவர் குமுகாயங்களின் தலைவரான வி. விவேகாநந்தன் (V.Vivekanandan, South Indian Federation of Fishermen Societies (SIFFS), Trivandrum) இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்திருக்கின்றார். அவர் Release of Innocent Fishermen (ARIF) என்ற அமைப்பின் கன்வீனராகவும் இருக்கின்றார்.

SIFFS என்பது ஒரு அரசு சாராத நிறுவனமாகும் (NGO). மொத்தம் 21 நபர்களை (16 மீனவர்கள் உட்பட) அழைத்துக் கொண்டு இலங்கைக்கு மே' 2004 நல்லெண்ண தூது சென்றார். அவரது பயண அனுபவங்கள் ஏறத்தாழ என்னுடைய கருத்துகளை ஒத்துப்போயின.

1983 இலங்கை சிவில் யுத்தம் ஆரம்பித்த பிறகு இலங்கை மீனவர்கள் ஒருபுறம் இந்திய கடற்கரைகளுக்கு புலம் பெயர, இந்திய மீனவர்கள் இலங்கை கடறெல்லைக்குள் நுழைந்தால் அந்நாட்டின் இராணுவம் சுடுவதும் ஆரம்பமாகியது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ஆழ்கடல் விசைப்படகுகள் (Trawlers) இலங்கை கடற்பகுதியில், இலங்கை மீனவர்களின் போட்டியின்றி மீன் பிடிக்கத் தொடங்கின. ஆழ்கடல் விசைப்படகுகள் பெயருக்கேற்றபடி ஆழமில்லாத (Shallow) கடலில் மீன் பிடிக்க உதவாது. இந்திய கடலெல்லையிலிருந்து இவ்வகை ஆழ்கடல் விசைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டுமென்றால் கரையிலிருந்து குறைந்தபட்சம் 3 கடல் மைல் தூரமாவது செல்லவேண்டும். இது சாதாரண கட்டுமரங்கள், மோட்டார் பொருத்திய படகுகள் கொண்ட மீனவர்கள் பிழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம். இராமேஸ்வரத்திலிருந்து 3 கடல்மைல் கடந்து, ஆழமிகுந்த இடத்தில் மீன் பிடிக்க டிராலர்கள் முயன்றால் அவை இலங்கையின் கடலெல்லைக்குள் தான் செல்ல வேண்டும்.

பிறகென்ன? இலங்கை மீனவர்கள் (1983'ற்கு பிறகு) ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்திய டிராலர்கள் நிறைக்கத் தொடங்கின. தெற்கு இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே நாகப்பட்டினம் வரை 4,000 டிராலர்கள் இக்காலக்கட்டத்தே களமிறங்கின என்று விவேகாநந்தன் தெரிவிக்கின்றார். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து மட்டும் 1000 படகுகள் இலங்கை கடலெல்லைகளை நம்பியே இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

2002'ல் இலங்கை அரசாங்கம் புலிகளோடு செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி இலங்கை மீனவர்களின் வாழ்வில் ஒரு புதிய விடிவெள்ளி தோன்றியது. மெல்ல மெல்ல தமது து(ம)றந்த வாழ்வினை தேடியெடுக்க பெயர்ந்த புலத்தை விட்டு, தாயகம் சென்றடைந்து தமது இயல்பு வாழ்க்கையான மீன்பிடி தொழிலுக்கு சென்றார்கள். இராமேஸ்வரத்திலும், மண்டபத்திலும் புலம் பெயர்ந்த இலங்கை மீனவர்களுக்கு நாம் செய்த நன்றிக்கடனாக கச்சத்தீவினிக்கருகில் மீன் பிடிக்க நம்மை அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற இந்திய டிராலர் மீனவர்கள் நம்பியது நல்லெண்ணப் பிரயாணத்தில் மறைந்து போனது. இந்திய மீனவர்கள் பெசாலையைச் சேர்ந்த இலங்கை மீனவர்களைச் சந்தித்தபோது அவர்கள் கூறியது "இந்திய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செய்வது கடற்கற்பழிப்பு (rape of the sea)". தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதானே.

அரசு சாராத நிறுவனம் SIFFS ஏற்பாடு செய்த நல்லெண்ணப் பயணத்திற்கு, தமிழ்நாட்டு அரசு Tamilnadu Fisheries அப்சர்வர் கூட அனுப்பமுடியவில்லை. ஏனென்றால் யார் போவது, வெளிநாட்டு பயணத்திற்கு வேண்டிய அநுமதி எவ்வாறு பெறுவது என்ற ரெட் டேபிஸம்.

24'ம் தேதி இக்குழு மன்னாரை அடைந்தது. அங்கே குழுமியிருந்து வரவேற்றவர் திரு. விசுவலிங்கம் (மாவட்ட கலெக்டர் அந்தஸ்து), திரு. ரெவரெண்ட். ராயப்பு ஜோசப் (பிஷப், யாழ்ப்பாணம்), தந்தை தேவராஜா, லெப்டினெண்ட் காலுஹெட்டி (இலங்கை கடற்படை) உட்பட்ட பல முக்கிய நபர்கள். லோக்கல் பிபிஸியும் ஆஜர்.

இதிலிருந்தே தெரியவில்லையா? இலங்கை தனது மீனவர் பிரச்சினைக்கு கொடுக்கும் மதிப்பும் இந்தியாவில்/தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளும் கொடுக்கும் மதிப்பும்? விவேகாநந்தன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் இந்தியாவில் இல்லாதபடி "இலங்கையிலுள்ள உள்ளூர் நிறுவனங்கள் மீனவர்களின் பிரச்சினைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தன...; மீனவ சங்கங்களுக்கும் அரசு கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தன...".

இலங்கையில் தற்போது இந்தியாவிலுள்ள அளவு போல அதிக ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில்லை. தனதெல்லை தாண்டி வந்து இந்திய டிராலர்கள் மீன் பிடிக்கும் போது தமது வலைகள் அறுந்து போவதை இலங்கை மீனவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அன்றைக்கு சோறு போட்டதற்காக இன்றைக்கு வயிற்றில் அடிப்பதை அவர்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப்போவதேயில்லை.இது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.

இன்றைய இலங்கை கடற்படை எல்லை கடந்த இந்திய மீனவர்களை சுடுவதை ஒருக்காலும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால் அவர்கள் கைது செய்யட்டும். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கெட்டும்.

ஆனால் எல்லை கடப்பது, அதுவும் மரைன் டெக்னாலஜி சாதனங்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் செய்வது சட்டப்படி குற்றம் என்ற பொதுப்புத்தி நமக்கு வேண்டும்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலிகளின் கடத்தல் தொழிலில் உதவினார்கள் என்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றார்கள் என்பது திரிப்பு என்று கூறுபவர்கள் தங்களின் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளலாம் உண்மை எதுவென்று. இப்பதிவு இந்திய மீனவர்களை எதிர்த்து என்று கூடத் திரிப்பு செய்யப்படலாம் என்பதையும் நான் அறிந்தே இருக்கின்றேன்.

1983'க்கு முன்னால் பெசாலையில் ஒரு நாளில் 20 லாரி லோட் செய்யுமளவிற்கு இருந்த மீன்பிடி இன்று (2004'ல்) 2-3 லாரிகளுக்கே தள்ளாடுகின்றது. ஏன்? அவர்கள் கூறுவது இந்திய டிராலர்கள் செய்யும் "கடற் கற்பழிப்பு". வடமராட்சி மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களோடு நடந்த சண்டையில் மரித்தார். நெகோம்போவில் மீனவர்கள் நல்லெண்ண சந்திப்பில் "இது போன்ற எத்தனையோ விடயங்களை இந்திய மீனவர்கள் (கடலெல்லை கடக்காமல்) கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருந்தால் தடுத்திருக்கலாம்", என்றார்கள்.

இந்திய மீனவர்கள்தான் இன்றைய பிரச்சினைக்குக் காரணமா?

இராமேஸ்வரத்தின் கடற்கரையை டிராலர்கள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அதன் படுகை ஆழமில்லாத கற்படுகை. எனவே இலங்கை எல்லைக்குள்தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அங்கே கிடைக்கும் Tiger Prawns விடுத்து Yellow Fin Tuna பிடிக்கலாமென்றால் அதற்கு இலங்கை மீனவரிடம் போட்டி போட வேண்டும். வருடத்திற்கு சராசரியாக 28 லட்சம் டன் மீன்களை இந்தியா செய்யும் அறுவடையில், டிராலர்கள் மூலம் கிடைப்பது ஏறக்குறைய 50%. இவ்வகை டிராலர்களுக்கு டீஸல் விலை உயர்வு, இறால் விலை வீழ்ச்சி, கடற்கரையிலிருந்து மூன்று கடல்மைல் அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும், பருவ காலக் கட்டளைகள் (இராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜகதாம்பட்டினம், கோட்டைப்பட்டினம் டிராலர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலேயே மீன்பிடிக்க வேண்டும்; 15 ஏப்பிரல் முதல் ஆறு வார காலத்திற்கு டிராலர்கள் தமிழக அரசுக் கட்டளைப்படி மீன் பிடிக்க முடியாது) இவற்றையெல்லாம் தாண்டி வருமானம் பார்த்து வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயம். இராமேஸ்வரம் - நாகப்பட்டிணம் ஏரியாவில் மட்டுமே 1983-2004 வரை சுமார் 4,000 டிராலர்கள் முளைத்து விட்டன. முதலீடு சுமார் 120 கோடி இந்திய மதிப்பில். இதில் பாதி இந்திய மீனவர்கள் கடனாய் வாங்கியது. இலங்கையோடு இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ந்தால் (இருதரப்பும் சுனாமியால் பாதிக்கப்பட்டது போக) நிலைமை மேலும் கடுமையாக மோசமடையும். இந்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தன்னார்வ நிறுவனமோ, ஏனைய ஸ்தாபனங்களோ ஆய்வறிக்கைகள் மட்டுமே தர முடியும்.

மேலும் பார்ப்போம்.

Monday, April 03, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-1

ஹைபர்னேஷன் எனப்படும் "நீண்ட தூக்கம்" கலைந்தது ஒரு விதத்தில் நல்லதுதான். ரோஸாவசந்த்தின் இன்னும் எத்தனை காலம்தான் என்ற பதிவினைப் படிக்க நேர்ந்தது. முற்றிலும் மாறுபட்ட, இணையத்தில் வேறு யாரும் இதுவரை பயன்படுத்தாத பிற்போக்கு வார்த்தைகளான இந்தியா, அதன் இறையாண்மை, இந்திய கடற்படையின் நோக்கம் என்றெல்லாம் கனத்த விஷயங்களைக் கதைத்திருக்கின்றார்.

சில நேரங்களில் "இப்படியும்" சில மனிதர்கள்....என்று அலுப்போடு இப்பதிவினை நான் ஒதுக்கிவிடத் தயாராயில்லை. எனது இந்தப் பதிவு வெறும் ரோஸாவசந்திற்கு எதிரான பதில் வினை என்று மட்டுமே என்னை சுருக்கிக் கொள்ள விழையாமல், இந்திய-இலங்கை மீனவர்களின் இன்றைய உண்மையான பிரச்சினை என்ன? அதற்கு மாற்று என்ன என்று வரும் பதிவுகளில் விவரமாக அலச உத்தேசித்துள்ளேன்.

அரசியல் முடிவுகள் அனைத்துமே பிற்காலத்தில் நன்மை பயக்குமென்று கூறிவிட முடியாது. அதுவும் இந்தியா போன்ற வலுவான ஜனநாயக நாட்டில் முடிவுகளின் பலன்களை "அரசியல்வாதிகளின் நோக்கங்கள்" மட்டுமே தீர்மானிப்பதில்லை.

11, டிசம்பர் 1971: கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷ் ஆக்கியதன் பலனை இன்னமும் பாகிஸ்தானின் காஷ்மீர் ஊடுருவல் மூலம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். சரி இந்தியாவால் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷாவது நம்மோடு நட்பு பாராட்டுகின்றதா என்றால் அதுவும் இல்லை. பங்களாதேஷ் தேசியவாதிகளின் கட்சியின் (Bangaladesh Nationalist Party) தலைவரான பேகம் காலீதா ஜியா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகளை "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று புகழாரம் சூட்டியவர். பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கூட இந்திய இறையாண்மைக்கு காஷ்மீரில் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை அவ்வாறே விளிப்பார். இதைத்தான் தலைவலி போய் திருகு வலி தேடிக் கொள்வதென்பார்கள். இருப்பினும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இருந்தவரை பங்களாதேஷோடு இருதரப்பு உறவுகள் நன்றாகத்தான் இருந்தன. அப்படியிருப்பினும் டின் பிகாவை (Tin Bigha) இந்தியா பங்களாதேஷிற்கு குத்தகைத் தாரை வார்த்தது. இதன் குறித்த இப்பிரச்சினையின் ஒப்பீடு வரும் பதிவுகளில் விளக்கமாக ஆராயப்படும்.

28 ஜூன் 1974: கச்சத்தீவை இந்திரா இலங்கைக்குத் தாரை வார்த்து கொடுத்தார். இந்திராவின் கூற்றுப்படி கச்சத்தீவு ஒரு "யுத்த தந்திரப்படி முக்கியமில்லாத வெறும் பாறை". ஆனால் அப்பாறையைச் சுற்றி Tiger Prawns எனப்படும் இறால் மீன்கள் அதிகம். இராமேஸ்வரம் மற்றும் இதர கரைகளிலிருந்து தமிழக மீனவர்களை இப்பாறை தொடர்ந்து ஈர்த்தது. 1974'ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் தலைமுறை வழக்கப்படி (traditional rights) மீன் பிடிக்கும் உரிமையையும், புனித அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதியும் பெற்றார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் 5'வது ஷரத்து சொல்கின்றது "இந்திய மீனவர்களும், பக்தர்களும் கச்சத்தீவிற்கு தாராளமாக விரும்பும் போது செல்ல இதன்மூலம் வழிவகை செய்யப்படுகின்றது. இதற்காக இலங்கையிலிருந்து பயண ஆவணங்களோ விசாவோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

6'வது ஷரத்து: இந்தியா மற்றும் இலங்கையின் கலங்கள் தலைமுறைகளாக இருந்து வரும் வழக்கப்படி இருவருக்கும் சொந்தமான கடற்பரப்பில் தொடர்ந்து இயங்கி வரும்.

கச்சத்தீவினை தானம் கொடுத்தவுடன் இந்தியாவிற்கு இலங்கையின் அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட விதயங்களிலேயே (தற்காலிகமாகவே) இருந்தது வந்தது. இன்றைய தமிழக/இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இந்திராவின் கச்சத்தீவு முடிவே தொடக்கமென்றாலும், 1974 ஒப்பந்தம்தான் தெளிவாக இருக்கின்றதே? அதன் ஷரத்துகளை தீவிரமாக செயல்படுத்துவதின் மூலம் பிரச்சினைக்கே முற்றுப் புள்ளி வைக்கலாமே?

கச்சத்தீவு பிரச்சினையில் மேற்கூறிய டின் பிகா சம்பவத்தை இக்கணத்தில் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது, எனது அடுத்த பதிவுகளில் இது குறித்து விரிவாக எழுத எண்ணங் கொண்டுள்ளேன்.

ரோஸா கூறுவது போல இது வெறும் என்பது ஒரு இலங்கை ராணுவம் மட்டுமே இந்திய மீனவர்களைக் தாக்குகின்றது பக்க கதை. 1983'லிருந்து 2002 வரை மொத்தம் 112 இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஹிந்துவின் இணையதளம் (Frontline) கூறுகின்றது. ஹிந்து பத்திரிக்கையை பினாயில் ஊற்றி தேடிப்படிக்கும் ரோஸாவசந்திற்கான செய்தி இது.

3 & 5 மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?

கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை தன் "உறுப்பை" நுழைத்தாலும், ரோஸாவசந்த் கூறுவது போல "தன்னிச்சையாய்" குறியை அறுக்க முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான "உத்தரவின்றி" இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகளா என்று ரோஸா கேட்பது நல்ல நகைச்சுவை. அங்கதம்/நகைச்சுவை' பிரிவில் அவர் தனது பதிவை தேன்கூடில் பதிவு செய்து கொள்ளலாம்.

//இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்?//

ஐய்யா ரோஸா! GPS (Global Positioning Syatem) இல்லாமலேயே ஆதிக்காலத்திலிருந்து கடற்வலம் வந்தவன் தமிழன். "அறியாமல்" அடுத்தவரின் கடலெல்லைக்குள் நுழைந்த சாதாரணப் படகுகள் என்று சால்ஜாப்பு வேண்டாம். நுழைந்தது சாதாரணப் படகுகள் கிடையாது. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்.

//புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே!//

ஓ... இதுதான் உங்களின் தார்மீகப் பிரச்சினையா? நானென்னவோ உங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு விளக்கம் அளிப்பதாய் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பிரச்சினை ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும், தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது.

//தமிழகத்து கடற்கரையில் நிலைகொண்டிருக்கும் கடற்படையின் ஏதோ ஒரு அட்மிரலோ, கமாண்டரோ, ஒரு வடக்கத்தியான், 'நாங்கள் எதற்காக அவர்களை மனிதாபிமான அடிபடையில் அனுமதிக்க வேண்டும்?' என்று டீவியில் தர்க்கபூர்வமாய் கேட்க, இங்கே ஆட்சியில் இருந்த திமுக அரசு தன் மாபெரும் துரோகத்தை மௌனத்தின் மூலம் நிகழ்திக் காட்டியது. //

அருமையான தர்க்கம் ரோஸா. இந்திய இராணுவப் படைகளில் கூட வடக்கு, தெற்கு கலாச்சாரமா? நன்றாக அந்த வடக்கத்தியானை உற்றுப் பார்த்தீர்களா? அவன்(ர்) கைபர் போலன் கணவாயைக் கடந்து வந்தவனாக இருப்பானே(ரே)? முடிந்தால் அந்த வடக்கத்தியான் பார்க்க பார்ப்பனனாய் இருந்தான் என்று சொன்னீர்களானால் உங்கள் பதிவு இன்னும் வர்ணாசிரமக் களை கட்டும்.

இந்தியப் படைகளில் இதனாலேயே சாதி/இன/மத/மொழி அடிப்படையில் ரிஸர்வேஷன் வேண்டும் என்று நீங்கள் கூக்குரலிட்டால் நீங்கள்தான் அல்டிமேட் அறிவுஜீவி.

//இந்திய அரசை இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிர்பந்திக்க, எந்த வடிவத்திலாவது போராட்டம் நடந்திருக்கிறதா? சம்பந்த பட்ட மீனவர்கள், மற்றும் சில தமிழ் தேசியவாதிகளை தவிர மற்றவர்கள் ஏன் சக இந்தியர்கள் கொல்லப் பட்டதை பற்றி வாய் திறக்கவில்லை?//

அடடே ரோஸா "சக இந்தியர்கள்" பற்றி பேசுகின்றார். வரவேற்கக் கூடிய விடயம். தேர்தல் நேரத்து அரசியல் கட்சிகளின் அறிக்கை போன்று அவரது சமீபத்திய பதிவு இருக்கக்கூடாதென்று நம்புகின்றேன். தமிழ் தேசியம் பேசும் வாதிகள் இந்தியா, இறையாண்மை என்று பேசும் போது அதன் அதிர்வெண் பற்றி சந்தேகமெழுவது இயற்கையே. இருப்பினும் காத்திரமான பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்பது ரோஸாவின் உண்மையான விழைவென்றால் அதற்கான முழு ஆதரவு என்னிடமிருந்து அவருக்குண்டு. அதைவிடுத்து "பீயள்ளும் நிலைமையை அழிக்க பீ பேலுபவர்களை ஒழிக்க வேண்டும்" என்ற தங்கமணியின் ரீதியான தர்க்கத்தை ரோஸாவும் சுவீகரித்திருந்தால் மன்னிக்கவும். எனக்கு தர்க்கம் புரிய வேறு தலைப்புகளுண்டு.

ரோஸாவின் பதிவில் பின்னூட்டமிட்ட இரா.கி. //இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை.// என்று தெரிவிக்கின்றார். இதற்கும் எனக்கு எதிவினைக் கருத்துகள் உண்டு. அவற்றைப் பதிவிட எல்லாம் வல்ல ஏதோ ஒருவன் எனக்கு அருள் பாலிப்பானாக! இருப்பினும் அவரது கருத்தாக தனது பின்னூட்டத்தில் //என் கோவமெல்லாம் நடுவண் அரசின் அரசியலாரிடமோ, அதிகார வருக்கத்திடமோ கிடையாது; நமக்கென்று வாய்த்திருக்கிறார்களே ஒரு சில தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தான். உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம் பேசி என்ன பலன்?// என்று குறிப்பிட்டதற்கு நான் முற்றிலும் உடன்படுகின்றேன். ரோஸா இதற்கு உடன்படவில்லை என்பதால் அல்ல இம்முடிவு.