Wednesday, April 05, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:

பதிவு 1
பதிவு 2
பதிவு 3

இலங்கை-இந்திய மீனவர்களின் உண்மையான பிணக்குகளின் பல்வேறு கூறுகளை மேற்சொன்ன பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். இப்பதிவில் சில நடைமுறைத் தீர்வுகளைப் பார்ப்போம்.

இலங்கை மீனவர்கள் ஒருபோதும் இந்திய டிராலர்களை எல்லை மீற அனுமதிக்கப்போவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட காலவரைக்குள் டிராலர்களை விட்டு விட்டு பிழைக்க வேறாதாவது வழி தேடவேண்டும். இந்திய டிராலர்கள் மற்றும் இலங்கை அடையும் பாதிப்பின் புள்ளிவிபரங்கள் (நன்றி: விவேகானந்தன்):

மாவட்டம் (டிராலர் மையம்): ராமநாதபுரம் (இராமேஸ்வரம், மண்டபம்)
டிராலர் எண்ணிக்கை: 1,700
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 900
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: தலை மன்னார் மற்றும் டெ(ல்)ப்ட் தீவு (Delft Island)
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மிக அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): புதுக்கோட்டை (கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம்)
டிராலர் எண்ணிக்கை: 1000
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 1000
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: டெ(ல்)ப்ட் தீவு (Delft island) முதல் யாழ்ப்பாண குடாவுக்குள்
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: அதிகம்

மாவட்டம் (டிராலர் மையம்): நாகப்பட்டினம் (கோடிக்கரை மற்றும் வடக்கு வாங்காள விரிகுடா)
டிராலர் எண்ணிக்கை: 1300
இலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 600
இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: பாக் நீரினையும், அப்பாலும்; யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி
இலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மீடியம் அல்லது குறைவு (அவ்வப்போது ஊடுருவுவதால்)

ஆக மொத்தம் 4,000 இந்திய டிராலர்களில் சுமார் 2,500 இலங்கை கடலெல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதாக திரு. விவேகானந்தன் தெரிவிக்கின்றார். இந்த 2,500 டிராலர்களை எவ்வாறு கைவிடுவது? அரசாங்கமே முன்வந்து இந்த டிராலர்களை நியாய விலையில் வாங்க வேண்டும். மீன் வளத்துறை மூலம், தேவைப்பட்டால் உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தைச் சீராக செயல்படுத்த முடியும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் புனர் வாழ்வுத் திட்டங்களையும் தீட்ட வேண்டும்.

இறால் பண்ணைகள் அமைத்துத் தருவது, ஏரி/குளங்களில் மீன்வளத்தைப் பெருக்குவது போன்று எத்தனையோ, நடைமுறையில் இருக்கும் தொழில்களில் இம்மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, மறுவாழ்வு தர முடியும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மீனவ சமுதாயத்தைக் கருணையோடு இந்திய அரசாங்கம் மீண்டும் அணைத்துக் கொள்ளும் தருணமிது.

இத்திட்டங்களை செயல்முறைப்படுத்த குறித்த காலவரையை நிர்ணயிக்க வேண்டும். பின்னர் இச்செயல்திட்டம் குறித்து இலங்கை அரசு மற்றும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தினால், திட்டம் முடியும்வரை எல்லை கடக்கும் டிராலர்கள் மீது அவர்களுக்கும் பார்வைகள் புதிதுபடும்.

இந்திய டிராலர்கள் தெரிந்தே எல்லை கடந்தால் தயங்காது கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும். திட்டம் முடியும் வரை எந்த வித புது டிராலர்களுக்கும் லைசன்ஸ் கொடுக்கப்படக் கூடாது.

தமிழக அரசு மீனவர் பாதுகாப்புக்காக 2004'ல் பல முடிவுகள் எடுத்தது. 1. மீனவருக்கு அடையாள அட்டைகளை வழங்கி மீன் பிடிக்கும் போது கட்டாயம் அவற்றை வைத்திருக்க வேண்டும் 2. படகின் சொந்தக்காரர்கள் தமது படகுகளுக்கு இந்திய கடற்பாதுகாப்புப் படையின் விதிகளுக்குட்பட்டு ப்ளோரோசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டும். 3. தவறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் முதல் லைசென்ஸ் ரத்து போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் 4. இந்திய கடற் பாதுகாப்புப்படையின் நிர்வாகத்தில் 5 ரோந்துப் படகுகள் பாதுகாப்புப் பணியில் இயங்கும்... போன்றவையே அவை.

இம்முடிவுகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இந்திய மீன்வளத்துறை உடனடியாக இம்முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.

இலங்கை கடற்படை சுடுவதற்கான காரணமாய் நிருபமா கூறியதை பின்னூட்டத்தில் அறியத் தந்த பத்ரிக்கு நன்றி. 1997'லேயே Intelligence and Counter Piracy Operations Centre இலங்கை கடற்பரப்பை மிகவும் அபாயகரமானது என்று சர்ட்டிபிகேட் தந்திருக்கின்றது. அமெரிக்க நிறுவனமான Centre for Strategic and International Studies, இலங்கையின் கடற்படையைச் சேர்ந்த கலங்களில் 30 - 50% கடற்புலிகள் அழித்து விட்டிருக்கலாம் என்று யூகிக்கின்றது. இந்திய மீனவர்கள் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவினர்/உதவுகின்றனர் என்று நம்பும் இலங்கை கடற்படை, எல்லை கடந்து அடையாளம் காண இயலாத மீன் பிடிப்படகுகளை சுடுவதற்கான காரணங்களை நீங்களே கற்பிதம் செய்து கொள்ள முடியும்.

இருப்பினும் Art 73 of the UN Law of the Sea'படி இலங்கை கடற்படை, எல்லை கடப்பவர்களை சுடுதல் சட்ட மீறுதலாகும். தேவைப்பட்டால், சுடுதல் தொடருமானால், இந்திய அரசு இலங்கைக்கு கடுமையான கண்டனங்களை முன்வைப்பதுடன், ஐநா'விற்கே கூட புகார் செய்யலாம். பதிலுக்கு இந்திய கடற்பாதுகாப்பு படையை விட்டு இலங்கை மீனவர்களை (எல்லை கடந்தவர்களை) சுடச் சொல்லுவது ஜனநாயக மரபுகளுக்கே இழுக்கு.

இந்நிலையில் இப்பிரச்சினையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு கையாண்டன?

ஆகஸ்ட் 15 1991: கச்சத்தீவினை மீட்பேன் - செல்வி ஜெயலலிதா சூளுரை.

ஏப்ரல் 29, 2000: இலங்கை இந்திய நல்லுறவுகளுக்காக தமிழக மீனவர்களை (நாகப்பட்டிணம் அருகில் அக்காரப்பட்டைச் சேர்ந்த குமார், முனுசாமி மற்றும் ஐய்யப்பன் ஏப்பிரல் 29 காலை பத்து மணி அளவில் கோடிக்கரையில் தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டனர்) இலங்கை ராணுவம் கொல்லுவதை அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் இலங்கை கடற்படை இத்தகைய அநியாயத்தைச் செய்ய முடியாதவாறு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலைஞர் கருணாநிதி.

வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்ற தலைவர்களும் சுள்ளென்று இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு எதிரான கருத்துகளைப் பதிய தவறவில்லை. மத்தியில் காங்கிரஸோ, பிஜேபியோ இருந்தாலும், தமிழக அரசியல் (திராவிடத்) தலைவர்கள், மீனவர்கள் குறித்தான கருத்துகளைத் தீவிரமாக வெறுமனே பேசியும், எழுதியும் மட்டுமே வந்திருக்கின்றார்கள். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு நிலையான முடிவெடுத்து அதைச் செயல்படுத்த மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது வருத்தம் தரும் விடயம். (இராமகி'யின் பின்னூட்டம் நினைவிற்கு வருகின்றது)

பேராசிரியர் சூர்ய நாராயணன் என்பவர் இன்னொரு தீர்வை முன்வைக்கின்றார் (Conflict Over Fisheries In the Palk Bay Region (Lancer, New Delhi, 2005) Prof V Suryanarayan). அதாவது இழந்த கச்சத்தீவை மீண்டும் எழுதிக் கொடுக்க இலங்கை ஒப்பாது. அதனால் கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு (lease in perpetuity) இந்தியா இலங்கையிடமிருந்து பெறவேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்ததால் தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டது என்ற கடுமையான விமர்சனத்தை வைக்கும் அவர், நிரந்தர குத்தகைதான் தகுந்த தீர்வு என்று சொல்கின்றார். இந்தியா பங்களாதேஷிற்கு இவ்வாறுதான் டின் பிகாவை குத்தகைக்கு விட்டது என்பதையும் சுட்டிக் காண்பிக்கின்றார்.

கச்சத்தீவினை குத்தகைக்கு எடுத்த பின்னர் இந்தியாவும், இலங்கையும் ஒரு கூட்டு கடற்தளத்தை அமைத்து கடற்புலிகள், ஆய்தம்/போதை மருந்து கடத்துபவர்கள் போன்றோரிடமிருந்து இருநாடுகளையும் காக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்.ஆனால் இலங்கை அவ்வாறு செய்ய முன்வருமா?

ஆனால் புல் கூட முளைக்காத நிலமாக கச்சத்தீவு இருந்தாலும் பல்வேறு அரசியல் காரணிகளால் இலங்கையால் நமக்கு குத்தகைக்குத் தரமுடியாது. இந்தியா டின் பிகாவைக் கொடுத்தபோது பங்களாதேஷ் (இந்திய நண்பரான) முஜிபுர் ரஹ்மான் வசமிருந்தது. இன்றைய சூழலில் இந்தியா-இலங்கை உறவு அவ்வாறு சுமுகமானதாகக் கருத முடியாது. சேது சமுத்திர திட்டம் குறித்து இலங்கைக்கு இந்தியாவின் மீது நல்ல விமர்சனம் கிடையாது என்பது கொசுறுச் செய்தி. தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகளாவது சூர்யநாராயணனின் தீர்விற்கு ஆதரவு அளிப்பார்களா? சந்தேகம்தான். போலி அரசியல் வெளிப்பாடுகள் கட்டுடையும் தருணமிது.

26 செப்டம்பர் 05'ல் லங்காநியூஸ்பேப்பரில் சூர்யநாராயணன் தீர்வு பற்றி செய்தி வெளியானதும் இலங்கை வாழ் மக்கள் (தமிழர் உட்பட) "இலங்கை தனது இறையாண்மையை இந்தியாவிற்கு விற்கக்கூடாது" என்ற கருத்தையே பிரதிபலித்தனர்.

எனக்கென்னவோ தோன்றுவது இதுதான். நாளையே இலங்கையில் சிவில் யுத்தம் மீண்டும் வெடிக்கலாம். இலங்கை மீனவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு புலம் பெயரலாம். அப்போது முன்னே நடந்தது போல் அவர்களும், இவர்களும் இணைந்து ஒரே இடத்தில் (இந்திய/இலங்கை எல்லைகள் உட்பட) மீன் பிடிக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் பலவருடங்களாக மீன் பிடித்தொழிலில் நம்மை விட அதிகம் நசிந்த காரணத்தாலும், உள்ளூரில் (இலங்கையில்) டிராலர்களை அனுமதிக்காததாலும், சுனாமியில் நம்மை விட அதிகம் அடி வாங்கியதாலும், நமது பொருளாதாரம் டிராலர் விடுத்த மாற்று வழிகளை இலங்கையை விட எளிதாக செயல்முறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகத்தின் மீதுள்ள பற்றாலும், இந்திய மீனவ சகோதரர்கள் இப்பிரச்சினைக்கு உண்மையிலேயே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினால் கொஞ்சம் இலங்கை மீனவர்களுக்காக விட்டுக் கொடுத்துதான் போகவேண்டும்.

இது இன்றைய சுகங்கள் எனக்குத் தந்த சொகுசில் தட்டச்சு செய்யப்பட்ட பதிவல்ல. சிறிதே கடல் அனுபவம் எனக்குத் தந்த பாடங்களின் பதிவு! வாசகர்களின் பொறுமைக்கும், ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி !!!

தொடர்வேன்...

No comments: