Sunday, April 09, 2006

விவாதக் கூ(கு)த்துகள் - 2

கண்டிப்பாக இது குறித்த இரண்டாவது பதிவெழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கடந்த பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும் பொறுத்தருள்க. நேரம் கிடைக்கும் போது சரி செய்ய உத்தேசம்.

என்னுடைய பதிவுகளை ஆழ்ந்து வாசிக்கும் நண்பர் திரு. வெங்கட்டிற்கு நன்றி கூறி மேற்செல்லுகின்றேன். வாய்ஸ் ஆன் விங்ஸ் தரமான கேள்வியை முன் வைத்துள்ளார். எனது முன்னாள் பணியை நான் குறிப்பிட நேர்ந்ததற்கு காரணம் நம்பகத்தன்மையை கொடுக்க வேண்டுவதற்கே அல்லாமல், ரோஸா கூறுவது பொய்; நான் சொல்வதே மெய் என்று கட்டம் கட்டுவதற்கல்ல.

வாய்ஸ் ஆன் விங்ஸ் எண்ணத்தைப் போலவே, ரோஸாவின் பார்வையும் (இந்திய மீனவரைக் காப்பாற்ற வேண்டும்) என்பது எனக்கு ஏற்புடையதே. அதற்காகவே எனது நீண்ட பதிவுகள். ஆனால் ரோஸாவின் தொடரும் நோக்கு (இந்திய படைகள் குறித்து) என்னுள் எழுப்பும் கேள்விகளே உவப்பானதாக இல்லை. இந்திய இறையாண்மை பற்றி அவரது பதிவுகளில் வந்து விழுந்த தமிழ் தேசியவாதிய பின்னூட்டங்கள், அதற்கு ரோஸா தந்த அங்கீகாரம் (எ.கா. நியோ சொன்ன வடக்கத்திய பார்ப்பனீய அரசாங்க சதி) இன்ன பிற காரணிகளால் எனது விளக்கத்தை இன்னமும் முன் வைக்க வேண்டியிருக்கின்றது.

வாய்ஸிற்கு பதில் தருமுன் இன்னொரு கேள்வி வாசகருக்கு. தமிழ்நாடு என்ற தனிநாடு இப்போது இருப்பதாய் வைத்துக் கொள்வோம். அதை ஒரு திராவிடத் தலைவர் (வேறு ஒருவரை உதாரணத்திற்கு சொல்லுமளவிற்கேனும் முடியவில்லை) ஆண்டு வருகின்றார். அஃதாவது இன்றைய முதலமைச்சர் = தமிழ் நாட்டின் அதிபர். அப்போது இலங்கை, தமிழ்நாட்டின் இறையாண்மையை மீறி, தனது கடற்படையை ஏவி, இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த அப்பாவி தமிழக மீனவர்களை சுட்டு, தமிழக கடற்கரை வரை வருகின்றது. அப்போது இந்த தமிழகத் திராவிடத் தலைவர் என்ன அய்யா செய்வார்? தனது போலீஸை, பழங்காலத் துப்பாக்கிகளுடன், படகுகளில் ஏற்றி இலங்கை கடற்படையை பதிலுக்கு சுடச் சொல்வாரா? தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் (ஈழ மீனவர்கள்) தாக்கினால் இதே உத்தரவு என்னவாகும்? இன்று தமிழ் தேசியம் பேசும் நசிவு சக்திகள் அப்போது என்ன சொல்லும்? "தமிழன தமிழன் தாக்குகிறாண்டா தம்பிப் பயலே" என்று பாட்டு படிக்குமா?

வாய்ஸ் ஆன் விங்ஸின் கேள்வி:

** The question is why is the Indian defence setup turning a blind eye, when its own citizens are at peril in the hands of an alien force that doesn't hesitate to violate its sovereignity, to carry out its misdeeds? What amazes me more is why do you take pains to come to its defense (looks like you have written some 5 odd posts after doing a lot of research), and justify this inaction. I'm clueless about both these questions. **
அவரது பாதி-பதிலாக அவரே குறிப்பிட்டது:
** can only partially answer the first question - the Indian administration's general apathy towards the welfare and safety of its poor citizens. I dont suspect any Tamil - anti-Tamil sentiments though, like Roza. I think it's just plain apathy of the Indian administration, that is to blame. Even fishermen near Indo-Pak border face such difficulties. They get arrested, not sure if they get killed. In case of our fishermen though, even their life is in constant danger. **

மேலும் எனது பழைய பணி குறித்து அறிந்த பின்னர் கூறியது:

**The failure of the Indian Navy to protect the lives of our fishermen is a glaring lapse, that cannot be defended by any amount of browbeating. If a pleasure boat full of rich / upper middle class travellers was similarly caught and its inmates shot at, all hell would have broken loose and heads would have rolled. The Indian ruling establishment would willingly trade dreaded terrorists in exchange for a (hijacked) flight full of rich / upper middle class passengers. But it is under no such compulsion to defend the lives of the poor. There lies the bitter truth.**

இந்தியப் படைகள் எது செய்தாலும் அதற்கு முப்படை தளபதியின் உத்தரவு வேண்டுமென்று பலமுறை குறிப்பிட்டு இருந்தேன். சற்றே விளக்கமாகப் பார்ப்போம். இந்தியக் கடலெல்லைகளைப் பாதுகாக்க இந்திய கடற்படை மற்றும் கடற்பாதுகாப்புப் படைகள் இணைந்து, இயைந்து செயல்படுகின்றன என்று பார்த்தோம். ரோந்து செல்லும் இந்தியக் கலங்களுக்கு "Mission" என்று "Guidelines" கொடுக்கப்படும். நிலைமைக்கு தக்கவாறு அவை வேறுபடும். எனவே அடையாளம் தெரியாத கலம் இந்திய கடலெல்லைக்குள் புகுந்தால் உடனே என்ன செய்ய வேண்டுமென்று இந்திய கடற்படை/கடற் பாதுகாப்புப் படை கமாண்டர் (பொறுப்பில் இருப்பவர்; ரேங்க் குறித்து கூறவில்லை) முப்படைத் தளபதிக்கு தொலைபேசப் போவதில்லை. என்ன செய்ய வேண்டுமென்று இந்திய கடற்படை/கடற் பாதுகாப்புப் படை கமாண்டர்களுக்கு guidelines உதவி செய்யும்.

இலங்கை கடற்படையின் guidelines எளிதானதாகத் தோன்றுகின்றது. கடலெல்லை மீறிய கலங்களை சுடு. இலங்கைக்கான அரசியல் காரணிகள் வேறு. ஆனால் இது ஐநா விதிகளை மீறுவதாகும் என்பதை ஏற்கெனவே பலமுறை தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.

ஆனால் நமது guidelines என்ன? இதை எழுதுவது யார்? அதிகார வர்க்கமா? அதை கையிலெடுக்கும் அரசியல்வாதி வர்க்கமா? சிந்தியுங்கள். நமது படைகள் கருவிகளே. இவற்றின் கருத்தாக்கள் யார்?

நீங்கள் சுதந்திரம் என்னும் போர்வையை சுகமாகப் போர்த்திக் கொண்டு தூங்குவதற்கு காரணம், உங்களின் படைகள் தரும் பாதுகாப்பு என்னும் கதகதப்பு. இதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடலெல்லையைக் கடந்தவுடன், இந்திய படையால் கைது செய்யப்படுகின்றார்கள். காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட Guidelines. இலங்கை அரசாங்கம் விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்கும்படி இந்திய தூதருக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தகவல் நடுவண் அரசை வந்தடைய உடனே இந்தியப் படைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. அவர்களும் இலங்கை மீனவர்களை விடுவிக்கின்றார்கள். ஆனால் இதே பாணி கடலெல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் விஷயத்தில் நடக்கின்றதா?

கருத்தாவை விட்டு விட்டு கருவியை ஏன் நொந்து கொள்ள வேண்டும்?

கேபிள் டிவி பிரச்சினையில் கவர்னரைச் சந்திக்கின்றார் கலைஞர் கருணாநிதி. டான்ஸி வழக்கில் போட்ட கையெழுத்தே தனதில்லை என்று கூறிவிட்டார் செல்வி ஜெயலலிதா. பொடாவில் உள்ளே போன வைகோ இன்று அம்மாவுடன் அரசியல் சமரசம். தமிழால் ஒன்றிணைந்த Strange Bed Fellows திருமா மற்றும் ராமதாஸ் இன்று வெவ்வேறு அணிகளில்.

குஷ்பூ, சுஹாசினிக்காக துடைப்பம் தூக்கிய கும்பல் இந்திய ஏழை மீனவனுக்காக எதைச் செய்தது?

வடக்கு வாழ்கின்றது; தெற்கு தேய்கின்றது என்று பேத்திய கும்பல் எங்கே இன்று? நடுவண் அரசில் இன்று தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மிஸ்டர் முகர்ஜியைக் கூப்பிட்டு மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க எவ்வளவு காலமாகும்? ஐய்யா வலைப்பதிவர்களே இதை விட்டு விட்டு படைகளைக் குற்றம் சாட்டுகின்றீர்களே? என்ன நியாயம்?

மாலத்தீவினை இலங்கைத் தீவிரவாதிகள் கைப்பற்றிய போது அதை விடுவித்தது இந்தியப் படை. அமைதி காக்கப் போ என்று பணிக்கப்பட்டபோது இலங்கைக்குச் சென்றது இந்தியப்படை. அங்கேயிருந்து துரத்தப்பட்டபோது இந்தியா வந்தால் வரவேற்க ப்ரோடோகால் படி தமிழக முதல்வர் கூட சென்னைக் கரைக்கு வரவில்லை. எல்லாவித அலைக்கழிப்புகளுக்கும் காரணமென்னவென்றால் பாழாய்ப் போன அரசியல்.

அதைவிட இந்தியப் படைகளிடம் உள்ள ஜனநாயகக் கட்டுக்கோப்பின்படி சொல்வதைச் செய்யும் ஒழுங்கு.

கஜானா காலியென்று புலம்பியபடி இலவசத் திட்டங்களை தேர்தல் நேரத்தில் வாரி வழங்கும் அம்மா, ஜெயித்து வந்தால் ஏழைகளுக்கு கலர் டிவி கொடுக்க விரும்பும் கலைஞர், சமரசமே வாழ்க்கை என்றாகிப்போன வைகோ/திருமா, தார் பூசித் தமிழ்ச் சேவை செய்யும் மருத்துவர் அய்யா ராமதாஸ் இவர்கள்தான் இந்தியத் தமிழர்களின் நலனைத் தீர்மானிக்கின்றவர்கள். மீனவர்களின் நலன்களை இவர்களிடம் போய் கேளுங்கள். அதை விட்டு விட்டு படைகளின் தராதரத்தைக் கேள்வி கேட்காதீர்கள்.

கொஞ்சம் உருப்படியாக இருப்பதையும் கெடுத்து விட வேண்டாம்.

6 comments:

Voice on Wings said...

என் பின்னூட்டத்திற்கு பதிலளித்து தனிப்பதிவு இட்டதற்கு நன்றி. ஆனால் அதில் என் கேள்விக்கு விடையிருப்பதாகத் தெரியவில்லை.

இந்திய எல்லைக்குள் புகுந்து இந்தியக் குடிமகன்களைக் கொன்று குவிக்கும் இலங்கை கடற்படைக்கெதிராக நம் கடற்படை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? நீங்கள் கூறும் guidelines / உதவிக்குறிப்புகளின் படி பார்த்தாலும், குறைந்தது அத்தகைய சக்திகளைத் தடுத்து, ் கைது செய்து, அவர்களால்் ஏற்படும்் அழிவுகளிலிருந்தாவது நம் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டுமல்லவா? அவ்வாறு செய்யக்கூடாது என்று கடற்படைக்கு உத்தரவு / guidelines வழங்கப் பட்டிருக்கிறதா? இருக்காதென்றே நம்புகிறேன்.

சுதந்திரம் தரும் கதகதப்புக்காக நம் படையினரை மதிக்கிறேன் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இருந்தாலும் எந்த ஒரு துறையும் தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதிக் கொள்ள முடியாதல்லவா? எங்கு அதன் செயல்பாட்டில் ஐயமேற்படுகிறதோ, அதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டே ஆகும், அது தெஹல்காவில் வெளி வந்த ஊழல் குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி, அல்லது பழுதடைந்த MiG வகை விமானங்களை மாற்றாமல் வைத்திருக்கும் குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி, அல்லது இலங்கையில் அமைதிப் படை செய்ததாகக் கூறப்படும் அத்துமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி. இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன் என்று உலகெங்கிலும் இதே நியாயம்தான்.

இலங்கை கடற்படையின் guidelines பற்றி கூறியிருக்கிறீர்கள். அது ஐ.நா. விதிகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய - இலங்கை 1974 ஒப்பந்தத்திற்கும் எதிரானதாக அல்லவா இருக்கிறது? அந்த ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவுக்கு அருகாமையில் நம் மீனவர்களுக்கு மீன்பிடிப்பு உரிமை இருப்பதாக அல்லவா இருக்கிறது? அவ்வாறு இருக்கையில், நம் மீனவர்கள் செய்வது எப்படி கடற்கொள்ளையாகும்? அவர்களை கைது செய்வதற்கே போதிய காரணங்கள் இல்லாத நிலையில், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஒரு மிகப்பெரிய அத்துமீறல்தானே? இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒப்பந்தத்திற்கும், நம் கடற்படையிடமுள்ள guidelinesசுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை என்கிறீர்களா? அல்லது கச்சத்தீவில் நமக்கு மீன்பிடிப்பு உரிமை இருப்பதாக ஒரு கண்துடைப்பு ஒப்பந்தத்தை வெளியிட்டு விட்டு, நடைமுறை பயன்பாட்டிற்காக வேறு ரகசிய ஒப்பந்தங்கள் ஏதேனும் செய்துகொள்ளப் பட்டுள்ளனவா?

திராவிடத் தலைவர்களின் யோக்கியதை அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால், அவர்களை மட்டுமே காரணகர்த்தாக்களாக நீங்கள் சித்தரிப்பது சற்று அதீதமாகப் படுகிறது. ஒரு நாற்பது எம்.பி.க்களை வைத்துக் கொண்டு கொடுக்கும் அழுத்தத்தால், களத்தில் எவ்வளவு தூரம் மாறுதல்களைக் கொண்டு வர முடியும் என்று சந்தேகமாகத்தான் உள்ளது. கடற்படையின் செயல்பாட்டில்தான் மாற்றம் தேவை,் அதை கட்டுப்படுத்தும் தற்காப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் உதவியுடன்.

Vanthiyathevan said...

** இந்திய எல்லைக்குள் புகுந்து இந்தியக் குடிமகன்களைக் கொன்று குவிக்கும் இலங்கை கடற்படைக்கெதிராக நம் கடற்படை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? நீங்கள் கூறும் guidelines / உதவிக்குறிப்புகளின் படி பார்த்தாலும், குறைந்தது அத்தகைய சக்திகளைத் தடுத்து, ் கைது செய்து, அவர்களால்் ஏற்படும்் அழிவுகளிலிருந்தாவது நம் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டுமல்லவா? **

விவாதத்தை விதண்டாவாதமாக எடுத்துச் செல்லாத வாய்ஸ் ஆன் விங்கிற்கு எனது நன்றி. நமது இந்தியக் குடிமகன்கள் என்ன செய்தார்கள் என்பது எனது முதலாவது கேள்வி. இந்திய இறையாண்மையில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ள நானே இலங்கை மீனவர்களுக்காக இந்திய குடிமகன்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று பிரச்சினையை முழுதுமாக உணர்ந்து எழுதியது (பலருக்கு அதிர்ச்சியூட்டவேண்டுமென்று சொல்லப்பட்டதல்ல). கடலெல்லை தாண்டியவரை இந்திய கடற்படை/கடற்பாதுகாப்பு படைகள் கைது செய்து பின்னர் விடுவித்ததும் (இலங்கையரசின் உடனடி தலையீட்டால்) தூதுவர் நிருபமாவின் பேட்டியிலிருந்து அறியலாம். எனவே இந்திய கடற்படை/கடற்பாதுகாப்பு படைகளின் எல்லைமீறல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் "Guidelines" மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இப்பிரச்சினை வேறு.

1. நமது மீனவர்கள் செய்தது சரியா?
2. புலிகளின் படகென்றால் விரட்டிப் பிடிக்கும் இந்தியப்படை இந்திய மீனவர்களைக் காக்கத் தவறுகின்றதென்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. கடலெல்லைகளை சமரசம் செய்து கொள்ள படைகள் ஒன்றும் மதிமுக, விசி, பாமக, திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளல்ல. அது நடுவண் அரசின் கட்டளைகளை சிரமேற்கொண்டு, செயல்படும் ஒரு சிறந்த கருவி.

** சுதந்திரம் தரும் கதகதப்புக்காக நம் படையினரை மதிக்கிறேன் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். **

இதில் உங்களின் கருத்து என்னோடு ஒத்துப்போகுமென்று எனக்குத் தெரிந்தாலும் பிறருக்கே அது செய்தி.

** எந்த ஒரு துறையும் தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதிக் கொள்ள முடியாதல்லவா? எங்கு அதன் செயல்பாட்டில் ஐயமேற்படுகிறதோ, அதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டே ஆகும், அது தெஹல்காவில் வெளி வந்த ஊழல் குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி, அல்லது பழுதடைந்த MiG வகை விமானங்களை மாற்றாமல் வைத்திருக்கும் குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி, அல்லது இலங்கையில் அமைதிப் படை செய்ததாகக் கூறப்படும் அத்துமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி. இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன் என்று உலகெங்கிலும் இதே நியாயம்தான்.**

உங்களோடு வரிக்கு வரி உடன்படுகின்றேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கமேதுவில்லை. நீங்கள் விமர்சிப்பதில் தவறேதுமில்லை. இது குறித்தே நான் எனது அடுத்த கட்டுரைத் தொடரை எழுதவேண்டுமென்ற முயற்சியில் இருக்கின்றேன். விமர்சனம் என்பது ஜனநாயக கட்டமைப்பில் இன்றியமையாதது. அதன் அடிப்படையிலேயே அவுட்லுக்கால் விமர்சனம் செய்யப்பட்ட DRDO குறித்து எனது விவரமான பதிலைக் கூறியுள்ளேன். தெஹல்கா பிரச்சினை வேறு. மிக் விமான பிரச்சினை வேறு. இருப்பினும் பிரச்சினை என்ற அடிப்படையில் எனது விமர்சனங்கள் கட்டாயம் வரும். இதிலிருந்து நான் விடுவிக்கப்பட்டால்! (ஒரு கட்டத்திற்கு மேல் இப்பிரச்சினையைப் பற்றிக் கொண்டு நான் தொங்கப்போவதில்லை என்பதையும் இங்கே நான் தெரிவித்து விடுகின்றேன்)

**இலங்கை கடற்படையின் guidelines பற்றி கூறியிருக்கிறீர்கள். அது ஐ.நா. விதிகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய - இலங்கை 1974 ஒப்பந்தத்திற்கும் எதிரானதாக அல்லவா இருக்கிறது? அந்த ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவுக்கு அருகாமையில் நம் மீனவர்களுக்கு மீன்பிடிப்பு உரிமை இருப்பதாக அல்லவா இருக்கிறது? அவ்வாறு இருக்கையில், நம் மீனவர்கள் செய்வது எப்படி கடற்கொள்ளையாகும்? **

தயவு செய்து எனது பதிவுகளை மீண்டும் படித்துப் பாருங்கள். 1974/1976 ஒப்பந்தங்களை இலங்கை மட்டுமல்ல இந்திய அரசும் செயல்படுத்தவில்லை என்றுதானே சொல்லியிருக்கின்றேன். SB சவான் முதற்கொண்டு IK குஜரால் வரை என்று நானே கூறியிருக்கின்றேன். பாழும் அரசியலைக் கேட்க வேண்டிய கேள்விகளை ஏன் படைகளிடம் கேட்கின்றீர்கள் என்பதுதான் என் வாதம்.

** இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒப்பந்தத்திற்கும், நம் கடற்படையிடமுள்ள guidelinesசுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை என்கிறீர்களா? அல்லது கச்சத்தீவில் நமக்கு மீன்பிடிப்பு உரிமை இருப்பதாக ஒரு கண்துடைப்பு ஒப்பந்தத்தை வெளியிட்டு விட்டு, நடைமுறை பயன்பாட்டிற்காக வேறு ரகசிய ஒப்பந்தங்கள் ஏதேனும் செய்துகொள்ளப் பட்டுள்ளனவா? **

இரு நாட்டு ஒப்பந்தத்தை மறுதலித்து சவான் அவர்கள் நாடாளுமன்றத்திலேயே பேசியிருக்கின்றார். நாமே மதிக்காதபோது இலங்கை எவ்வாறு மதிக்கும். இதற்கு தீர்வு தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் ஒன்று கூடி நடுவண் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

** திராவிடத் தலைவர்களின் யோக்கியதை அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால், அவர்களை மட்டுமே காரணகர்த்தாக்களாக நீங்கள் சித்தரிப்பது சற்று அதீதமாகப் படுகிறது. ஒரு நாற்பது எம்.பி.க்களை வைத்துக் கொண்டு கொடுக்கும் அழுத்தத்தால், களத்தில் எவ்வளவு தூரம் மாறுதல்களைக் கொண்டு வர முடியும் என்று சந்தேகமாகத்தான் உள்ளது. **

என்ன சொல்ல வரீங்க? நினைச்சா பில்கேட்ஸை வரவழைத்து புஸ்தகம் கொடுக்க முடியும். ஆனா மீனவர் பிரச்சினை குறித்து பேச இயலாது. IPKF இலங்கையிலிருந்து துரத்தப்பட்டபோது கடைசிக் கலத்தை ப்ரோட்டோகால் படிகூட வரவேற்க முதல்வராய் செல்ல முடியாது. ஆனால் கேபிள் ஆயுதத்தை அம்மா எடுத்தால் கவர்னரைச் சந்திக்க செல்ல முடியும். கொஞ்சமாவது இது குறித்தும் யோசியுங்களேன்.

கச்சத்தீவை மீட்பேன் என்று செல்வி ஜெயலலிதா கூக்குரலிட்டார். இப்போது அது அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலிருக்கின்றதா என்பதே சந்தேகம்.

இந்திய மீனவர் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் இடியென எடுத்துரைத்தவர் அந்நாள் திமுகவின் MP வை.கோபால்சாமி. இந்திய இறையாண்மைக்கு எதிராக கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்று புலிகளோடு பேசி "புரட்சி" செய்தவர் அவர். ஆனால் இன்று அவர் எந்த கூடாரத்தில்? போயஸ் தோட்டத்து பங்களாவின் மேல் புலிகளின் ஏவு விமானம் பறக்கின்றதென்று குற்றச்சாட்டு வைத்த அம்மாவின் அரவணைப்பில்.

திருமா பாவம். அவருக்கு தலித்துகளை முன்னேற்றுவதிலேயே 24X7 காலம் கழிக்கின்றார். அப்பப்பா என்னே ஒரு தீவிரம்? அதுவும் அவரால்தான் தனித்தமிழே வாழ்கின்றது. கற்பு குறித்து இவரது கருத்தாடல்கள் பல்டி குறித்து விரிவாகப் பேச ஆசைதான். கார்த்திக்நமாஸ் என்ற மண்டூகம் இவர்தான் மீனவர் பிரச்சினைக்கு முற்றூப் புள்ளி வைக்கப்போகின்றாரென்று நாறவாய் மலர்ந்தருளியிருக்கின்றது. பாவம் அவர் குஷ்பூ, சுஹாசினி விட்டு வரவேண்டும்.

அடுத்ததாக மருத்துவர் ஐய்யா! என்ன கூற வேண்டும் இவர் பற்றி. ஒரு நாள் உடன் பிறவா சகோதரி. மறுநாள் கலைஞரென்னும் காவலன். காரணம் கேட்டால் "Survival of the Fittest" என்று குழலி போன்றோர் சால்ஜாப்பு ஜல்லியடிப்பார். எங்கேயாவது இந்தத் திராவிடத் தலைவர்கள் மீனவர்களின் உண்மையான நலம் விரும்பி செயல்பட்டிருக்கின்றார்களா? நீங்களே சொல்லுங்கள். இப்பிரச்சினைக்கு கடற்படை/கடற்பாதுகாப்பு படைகள்தான் காரணமென்று நீங்கள் இன்னமும் நம்புவீர்களானால் அதன் காரணிகளை அடுக்குங்கள்.

இதுதான் ஆரோக்கியமான விவாதமென்று நான் ஒப்புக் கொள்கின்றேன்.

உங்களின் கருத்துகளை தயங்காமல் பதியுங்கள்.

Voice on Wings said...

வந்தியத்தேவன், நம் இந்தியக் குடிமகன்கள் செய்தது தவறென்றே வைத்துக் கொள்வோம். (though it is not, as per the official accord between the two countries) அதற்கு துப்பாக்கிச் சூடுதான் விடையா என்பது முதல் கேள்வி (கிடையாதென்று நீங்கள் கூறிவிட்டீர்கள், இருந்தும் அதையெதிர்த்து அரசு / கடற்படை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்பதற்குத் தெளிவான விவரங்களில்லை). இரண்டாவது கேள்வி, அத்தகைய மீனவர்களைத் துரத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள்ளேயே வந்து அவர்களை தண்டிக்கும் அளவிற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி / வசதி செய்து தரவேண்டுமென்பதுதான் இந்திய கடற்படைக்கு தரப்பட்ட guidelinesஆ, என்பது. மூன்றாவது, இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் எந்தவிதமான எதிர்ப்புமின்றி நுழையலாமென்று இருக்கும்போது, அது 'தவறிழைக்காத' (அதாவது, இந்திய எல்லைக்குள்ளேயே மீன் பிடிக்கும்) மீனவர்களையும் தாக்கி, அத்துமீறும் சூழலிலும் அது குறித்து கண்டுகொள்ளாமலிருப்பதுதான் இந்திய கடற்படைக்கு அளிக்கப்பட்ட guidelineஆ என்பதே. இந்தக் கேள்விகளால் நான் கேட்க முயற்சிப்பது, இந்திய கடற்படை, இந்திய மீனவர்களின் உயிருக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து அசட்டையாக இருந்து வருவது ஏன், என்பதையே.

சவான், குஜ்ரால் போன்ற உயிரிழந்த, பதவியிழந்த அரசியல்வாதிகளை விடுங்கள். இன்றைய தினத்தில் கடற்படையின் நிலைப்பாடு என்ன? கச்சத்தீவுக்குச் சென்று மீன் பிடிப்பது தவறா, சரியானதுதானா? தவறென்றால், எல்லையைக் கடந்து மீன் பிடிப்பவர்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதமில்லை என்று எப்போதாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறதா? மற்றும், அது தவறென்று முடிவு செய்யுமுன், தமிழகத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்டவர்கள் (அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்கள்) கலந்தாலோசிக்கப்பட்டனரா?

நாடெங்கிலும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் நம் பாதுகாப்பு நிறுவனங்கள் விழிப்புணர்வு கொண்டு, அத்தகைய பல நிகழ்வுகளைப் பற்றி நடக்கும் முன்பே அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்து, குற்றவாளிகளைக் கைது செய்து வருகின்றன. இவற்றால், நாட்டின் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படுகிறது. இவற்றைச் செய்வதற்கு எந்த அரசியல்வாதியின் தலையீடோ, அழுத்தமோ தேவைப்படுவதில்லை. நாட்டு மக்களின் உயிரைக் காப்பது பாதுகாப்பு நிறுவனங்களின் கடமை என்ற புரிதலின் படியே இது மேற்கொள்ளப்படுகிறது. இவற்றால், நமக்கு எதிர்பாராத, எளிதில் புலப்படாத, தீவிரவாதச் செயல்களிலிருந்து கூட பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், நம் மீனவர்களின் விஷயத்திலோ, அவர்கள் உயிருக்கு எங்கிருந்து ஆபத்து என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருந்தும், அதையெதிர்த்து ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியமாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களது பாதுகாப்பு பற்றிய விவாதத்தில் சம்மந்தமில்லாமல் திராவிடத் தலைவர்களின் போதாமையிலிருந்து முரண்பாடுகள் வரை பட்டியலிடப்படுகிறது. தலைவர்கள் குரலெழுப்பாதது மன்னிக்க முடியாததே. ஆனால் அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்பதற்காக தன் கடமையை ஆற்றாமல் அசட்டையாக இருக்கும் ஒரு பாதுகாப்பு நிறுவனம்? யாருடையது இங்கே பெரிய குற்றம்?

Vanthiyathevan said...

வாய்ஸ் ஆன் விங்ஸ்,

உங்களது கேள்வியில் தொக்கியுள்ள ஆதங்கம் முழுமையாகப் புரிந்ததாகவேக் கொள்கின்றேன். கார்த்திக் என்ற மண்டுகத்தைக் கேட்ட கேள்வியை முன்வைக்கின்றேன். போலீஸ் கூட சிறிய கம்ளெயிண்ட் இல்லாமல் நடவடிக்கை எடுக்காது.

படைகள் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீகள்? நான் இந்தியப் படைகளின் ஸ்போக்ஸ்மேன் இல்லை. அவர்களது guidelines குறித்து நான் தெரிவிப்பது எனது அநுமானங்களின் அடிப்படையில்.

கச்சத்தீவை தாரை வார்த்தது (தமிழகத்தை கலந்து கொள்ளாது)அரசியல். 1974/76 ஒப்பந்த ஷரத்துகளை ஒத்துக் கொள்ளாதது (இந்தியா உட்பட்ட) அரசியல்.

சொல்வதைச் செய்யும் படைகளைக் குற்றம் சாட்டுவது எவ்வகையில் நியாயம்?

**இருந்தும் அதையெதிர்த்து அரசு / கடற்படை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்பதற்குத் தெளிவான விவரங்களில்லை**

கடற்படை அரசின் கீழ் இயங்குகின்றது என்பதை எத்தனை முறை கூற முடியும்? கேள்விகளை அரசினைக் கேளுங்கள். படைகள் இதற்கு பொறுப்பல்ல.

சின்ன டைவர்ஷன். Flag March என்றால் தெரியுமா? உள்ளூர் காவல் பொய்க்கும்போது இந்திய இராணுவத்தை அழைத்து அமைதி காணச் சொல்லும்போது அவர்களின் அணிவகுப்பையே Flag March என்பார்கள். அப்படிச் செய்யும்போது அவர்கள் உள்ளூர் போலீஸ் போலச் செயல்பட மாட்டார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்மிமேனாக இருந்தாலும் அவர் தனக்கிடப்பட்ட கட்டளையை முன்னிருந்துதான் செயல்படுத்துவார். இந்திய படையில் தமிழ்நாடு, கர்னாடகா என்ற எல்லை வித்தியாசங்கள் கிடையாது. அய்யா வாய்ஸ் நடவடிக்கைகளைத் தன்னிச்சிச்சையாக இந்திய படைகள் எடுக்க முடியாது. இன்னமும் புரியவில்லையா?

** சவான், குஜ்ரால் போன்ற உயிரிழந்த, பதவியிழந்த அரசியல்வாதிகளை விடுங்கள். இன்றைய தினத்தில் கடற்படையின் நிலைப்பாடு என்ன? **

கடற்படைக்கென நிலைப்பாடுகளே இல்லை. என்னங்க நானென்ன செவிடன் காதில் சங்கூதுகின்றேனா? அட்மிரல் விஷ்ணு பகவத்தை ஒரு சிக்னல் (இராணுவ அஞ்சல்) மூலம் கழற்றி விட்டாலும் நாங்கள் இந்திய இறையாண்மைக்காக கேள்வி கேட்காமல் பணியாற்றுவோம். இராணுவத்திற்கென யூனியனா உள்ளது? அவர்களுக்கு இந்தியாவின் இறையாண்மையை தரப்படும் கட்டளைகளைக் கொண்டு காக்க வேண்டும் என்பதே தலையாய கடமை. தமிழ்மணம் போன்ற வலைத்திரட்டிகளுக்கு உள்ளது போல் "Term & Conditions" என்ற நிலைப்பாடுகள் படைகளுக்குக் கிடையாது. எவ்வளவு முறை இதையே திருப்பித் திருப்பிக் கூறுவது?

** இரண்டாவது கேள்வி, அத்தகைய மீனவர்களைத் துரத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள்ளேயே வந்து அவர்களை தண்டிக்கும் அளவிற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி / வசதி செய்து தரவேண்டுமென்பதுதான் இந்திய கடற்படைக்கு தரப்பட்ட guidelinesஆ, என்பது.**

என்ன பேச்சு இது? உனது கடலெல்லைக்குள் யாராவது நுழைந்தாலும் கண்டு கொள்ளாதே என்று இந்தியா ஒருபோதும் "Guidelines" தராது. ஆனால் இலங்கையையைப் போல் "கண்டால் சுடு" என்றும் சொல்லாது. உங்கள் கேள்விகளின் அடிப்படை நோக்கமெனக்குப் புரியவில்லை.

தமிழ்தேசிய வாதிகள் போல் வடக்கிந்திய பார்ப்பனீய அரசின் சதி என்று நீங்கள் நிறுவ விழையவில்லை என்பதையும் அறிந்தே இருக்கின்றேன்.

** இவற்றால், நாட்டின் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படுகிறது. இவற்றைச் செய்வதற்கு எந்த அரசியல்வாதியின் தலையீடோ, அழுத்தமோ தேவைப்படுவதில்லை. நாட்டு மக்களின் உயிரைக் காப்பது பாதுகாப்பு நிறுவனங்களின் கடமை என்ற புரிதலின் படியே இது மேற்கொள்ளப்படுகிறது. இவற்றால், நமக்கு எதிர்பாராத, எளிதில் புலப்படாத, தீவிரவாதச் செயல்களிலிருந்து கூட பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், நம் மீனவர்களின் விஷயத்திலோ, அவர்கள் உயிருக்கு எங்கிருந்து ஆபத்து என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருந்தும், அதையெதிர்த்து ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியமாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களது பாதுகாப்பு பற்றிய விவாதத்தில் சம்மந்தமில்லாமல் திராவிடத் தலைவர்களின் போதாமையிலிருந்து முரண்பாடுகள் வரை பட்டியலிடப்படுகிறது. தலைவர்கள் குரலெழுப்பாதது மன்னிக்க முடியாததே. ஆனால் அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்பதற்காக தன் கடமையை ஆற்றாமல் அசட்டையாக இருக்கும் ஒரு பாதுகாப்பு நிறுவனம்? யாருடையது இங்கே பெரிய குற்றம்? **

உங்களுக்கு உவப்பாய் ஒன்று சொல்கின்றேன். இந்தியாவில் இராணுவ ஆட்சி மலரவேண்டும். அதுதான் தீர்வென்று ரோஸா போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தீர்வு என்னால் வைக்க முடியும். இமாதிரி கேள்விகள் எழுப்புமுன் கொஞ்சம் யோசியுங்கள். ஏம்ப்பா சண்டை வர வாய்ப்பில்லாதப்ப வீண் இராணுவச் செலவுகள் எதற்கு என்று பாமரர்கள் கேள்வி கேட்பதற்கும், படித்த வலைப்பதிவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வித்தியாசங்கள் தேவையென்றே ரோஸாவிடம் வாதம் நான் செய்கின்றேன். இந்திய இராணுவத்திற்கென்ற நிலைப்பாடு ஒன்று உண்டென்றால் அது நம்மை பாகிஸ்தான் ஆக்கிவிடும். வாய்ஸ் புரிகின்றதா?

**இவற்றால், நாட்டின் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படுகிறது. இவற்றைச் செய்வதற்கு எந்த அரசியல்வாதியின் தலையீடோ, அழுத்தமோ தேவைப்படுவதில்லை. நாட்டு மக்களின் உயிரைக் காப்பது பாதுகாப்பு நிறுவனங்களின் கடமை **

இராணுவம் குறித்து இவ்வாறான கருத்து புதிதல்ல. உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக படைகள், அதிகாரவர்க்கம், அரசியல் வியாதிகள் என்று விலாவாரியாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும். Generic Statement விட எனக்கும் தெரியும்.

**தலைவர்கள் குரலெழுப்பாதது மன்னிக்க முடியாததே. ஆனால் அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்பதற்காக தன் கடமையை ஆற்றாமல் அசட்டையாக இருக்கும் ஒரு பாதுகாப்பு நிறுவனம்? யாருடையது இங்கே பெரிய குற்றம்? **

"கடமையை ஆற்றாமல் அசட்டையாய்" என்ற குற்றச்சாட்டை வைக்குமுன் யோசியுங்கள். அரசியல் காரணிகளாய் நான் கூறியதெல்லாவற்றையும் அசட்டை செய்து விட்டு கேள்விகள் கேட்கின்றீர்கள். கொஞ்சம் Too Much'ஆ இல்ல?

Voice on Wings said...

நீங்கள் கூறிய அனைத்துமே புரிகிறது (படைகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது, படைகளுக்கென்று நிலைப்பாடு கிடையாது etc.). நான் நிலைப்பாடு என்று குறிப்பிட்டது நீங்கள் படைகளுக்குக் கொடுக்கப்பட்ட guidelines என்கிறீர்களே, அதைப்பற்றியே. அதன்படி, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உள்ளதா, மற்றும் இந்திய எல்லைக்குள்ளேயே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று உள்ளதா என்பதையே. நடைமுறையில் பார்த்தால் இத்தகைய கட்டாயங்கள் எதுவும் அதற்கு இருப்பது போல் தெரியவில்லை என்பதனாலேயே இதைக் கேட்டேன். நீங்கள் நமது படைகளின் spokesperson அல்ல என்பதைத் தெளிவுப் படுத்தியதற்கு நன்றி. நானும் அத்தகைய புரிதலில்தான் உங்களிடம் வாதம் செய்து வந்தேன். இதற்கு மேல் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லையென்பதால், இதுவரை நீங்கள் அளித்த விளக்கங்களுக்கு நன்றி :)

முத்து(தமிழினி) said...

பல பதிவுகளை பின்தொடர்ந்து இங்கு வந்துள்ளேன்.(சென்னையில் புத்தக கண்காட்சியில் பார்த்தவரா நீங்கள்)

சூடாகவும் எழுதுவீர்களா (மண்டுகம் இன்னபிற)

சில தகவல்கள் வேண்டி மட்டும்


1.நாமும் மதிக்கவில்லை.அவர்களும் மதிக்கவில்லை அந்த ஒப்பந்தத்தை என்றால் இப்போது நாம் ஏன் கச்சதீவில் மீன் பிடிக்க போகக்கூடாது?
நம் கடற்படை மட்டும் ஏன் அந்த ஒப்பந்தத்தை மதிக்கவேண்டும்?கடற்படை மட்டும்தான் காரணம் என்றில்லை.ஆனால் கடற்படையும் ஒரு காரணம் என்று சொல்லலாமா? ஏனென்றால் காலாவதியான ஒப்பந்தம்..