Tuesday, April 04, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-2

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை இவ்விரு நாடுகளில் (குறிப்பாக இலங்கையில்) நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த காலகட்டங்களைக் கொண்டு ஆராயலாம்.

எனது முதல் பதிவில் கூறியபடி 1974'ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன் பின்னர் அதே ஒப்பந்தத்தில் 5 மற்றும் 6 வது ஷரத்துகளின் மூலம் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவினருகில் மீன் பிடிக்க முழு உரிமை வழங்கப்பட்டது.

1983'ல் இலங்கையில் தொடங்கிய சிவில் யுத்தம் ஒரு முக்கியமான திருப்புமுனை. பா(ல்)க் ஜலசந்தியில் மற்றும் பா(ல்)க் நீரினையில் மீன் பிடிக்கும் இரு நாட்டு மீனவர்களும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக இலங்கை மீனவர்கள் சிங்கள அரசின் பாதுகாப்பு குறித்த ஏகப்பட்ட கட்டுபாடுகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் புலம் பெயர்ந்து தமிழகக் கடற்கரைகளில் (இராமேஸ்வரம், மண்டபம்) தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் 1974 முதல் 1983 வரை இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக, இருவரது கடற்பகுதிகளிலும் மீன் பிடித்துக் கொண்டுதான் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரச்சினையை மேலும் ஆராயுமுன்னர் சில தகவல்கள். கரையிலிருப்பதைப் போல கடலிலும் ஒரு நாட்டிற்குண்டான ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைப் பார்ப்போம்:

Territorial Sea: கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு மிகாமல்
Contiguous Zone: கரையிலிருந்து 24 கடல் மைல்கள் மிகாமல்
exclusive economic zone: கரையிலிருந்து 200 கடல் மைல்கள் மிகாமல்

இந்த எல்லைகளைப் பற்றியும், குறிப்பிட்ட எல்லைகளில் ஒரு நாட்டிற்கு உண்டான உரிமைகளைப் பற்றியும், விதிகள் மீறப்படும் போது எவ்வாறு பிரச்சினை தீர்ப்பது போன்ற விடயங்களை விரிவாக ஐநா சபையின் இணையதளத்தில் படிக்கலாம். குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட வேண்டியது Territorial Sea. கரையிலிருந்து 12 கடல் மைல் (13.8 மைல்/22.22 கிமீ) வரை முழு உரிமை ஒரு நாட்டிற்கு உண்டு. பிரச்சினை என்னவென்றால் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் territorial sea 7 கிமீ (3.8 கடல்மைல்) தூரம்தான். எனவே தத்த்தமது கடலெல்லைகளைத் துல்லியமாக பிரித்துக்கொள்ள இந்தியாவும் இலங்கையும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன.

இந்தியாவின் கடலெல்லைகள் பற்றி விரிவாக அறிய இங்கே சுட்டுங்கள்
இலங்கையின் கடலெல்லைகள் பற்றி விரிவாக அறிய இங்கே சுட்டுங்கள்

தென்னிந்திய மீனவர் குமுகாயங்களின் தலைவரான வி. விவேகாநந்தன் (V.Vivekanandan, South Indian Federation of Fishermen Societies (SIFFS), Trivandrum) இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்திருக்கின்றார். அவர் Release of Innocent Fishermen (ARIF) என்ற அமைப்பின் கன்வீனராகவும் இருக்கின்றார்.

SIFFS என்பது ஒரு அரசு சாராத நிறுவனமாகும் (NGO). மொத்தம் 21 நபர்களை (16 மீனவர்கள் உட்பட) அழைத்துக் கொண்டு இலங்கைக்கு மே' 2004 நல்லெண்ண தூது சென்றார். அவரது பயண அனுபவங்கள் ஏறத்தாழ என்னுடைய கருத்துகளை ஒத்துப்போயின.

1983 இலங்கை சிவில் யுத்தம் ஆரம்பித்த பிறகு இலங்கை மீனவர்கள் ஒருபுறம் இந்திய கடற்கரைகளுக்கு புலம் பெயர, இந்திய மீனவர்கள் இலங்கை கடறெல்லைக்குள் நுழைந்தால் அந்நாட்டின் இராணுவம் சுடுவதும் ஆரம்பமாகியது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ஆழ்கடல் விசைப்படகுகள் (Trawlers) இலங்கை கடற்பகுதியில், இலங்கை மீனவர்களின் போட்டியின்றி மீன் பிடிக்கத் தொடங்கின. ஆழ்கடல் விசைப்படகுகள் பெயருக்கேற்றபடி ஆழமில்லாத (Shallow) கடலில் மீன் பிடிக்க உதவாது. இந்திய கடலெல்லையிலிருந்து இவ்வகை ஆழ்கடல் விசைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டுமென்றால் கரையிலிருந்து குறைந்தபட்சம் 3 கடல் மைல் தூரமாவது செல்லவேண்டும். இது சாதாரண கட்டுமரங்கள், மோட்டார் பொருத்திய படகுகள் கொண்ட மீனவர்கள் பிழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம். இராமேஸ்வரத்திலிருந்து 3 கடல்மைல் கடந்து, ஆழமிகுந்த இடத்தில் மீன் பிடிக்க டிராலர்கள் முயன்றால் அவை இலங்கையின் கடலெல்லைக்குள் தான் செல்ல வேண்டும்.

பிறகென்ன? இலங்கை மீனவர்கள் (1983'ற்கு பிறகு) ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்திய டிராலர்கள் நிறைக்கத் தொடங்கின. தெற்கு இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே நாகப்பட்டினம் வரை 4,000 டிராலர்கள் இக்காலக்கட்டத்தே களமிறங்கின என்று விவேகாநந்தன் தெரிவிக்கின்றார். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து மட்டும் 1000 படகுகள் இலங்கை கடலெல்லைகளை நம்பியே இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

2002'ல் இலங்கை அரசாங்கம் புலிகளோடு செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி இலங்கை மீனவர்களின் வாழ்வில் ஒரு புதிய விடிவெள்ளி தோன்றியது. மெல்ல மெல்ல தமது து(ம)றந்த வாழ்வினை தேடியெடுக்க பெயர்ந்த புலத்தை விட்டு, தாயகம் சென்றடைந்து தமது இயல்பு வாழ்க்கையான மீன்பிடி தொழிலுக்கு சென்றார்கள். இராமேஸ்வரத்திலும், மண்டபத்திலும் புலம் பெயர்ந்த இலங்கை மீனவர்களுக்கு நாம் செய்த நன்றிக்கடனாக கச்சத்தீவினிக்கருகில் மீன் பிடிக்க நம்மை அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற இந்திய டிராலர் மீனவர்கள் நம்பியது நல்லெண்ணப் பிரயாணத்தில் மறைந்து போனது. இந்திய மீனவர்கள் பெசாலையைச் சேர்ந்த இலங்கை மீனவர்களைச் சந்தித்தபோது அவர்கள் கூறியது "இந்திய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செய்வது கடற்கற்பழிப்பு (rape of the sea)". தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதானே.

அரசு சாராத நிறுவனம் SIFFS ஏற்பாடு செய்த நல்லெண்ணப் பயணத்திற்கு, தமிழ்நாட்டு அரசு Tamilnadu Fisheries அப்சர்வர் கூட அனுப்பமுடியவில்லை. ஏனென்றால் யார் போவது, வெளிநாட்டு பயணத்திற்கு வேண்டிய அநுமதி எவ்வாறு பெறுவது என்ற ரெட் டேபிஸம்.

24'ம் தேதி இக்குழு மன்னாரை அடைந்தது. அங்கே குழுமியிருந்து வரவேற்றவர் திரு. விசுவலிங்கம் (மாவட்ட கலெக்டர் அந்தஸ்து), திரு. ரெவரெண்ட். ராயப்பு ஜோசப் (பிஷப், யாழ்ப்பாணம்), தந்தை தேவராஜா, லெப்டினெண்ட் காலுஹெட்டி (இலங்கை கடற்படை) உட்பட்ட பல முக்கிய நபர்கள். லோக்கல் பிபிஸியும் ஆஜர்.

இதிலிருந்தே தெரியவில்லையா? இலங்கை தனது மீனவர் பிரச்சினைக்கு கொடுக்கும் மதிப்பும் இந்தியாவில்/தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளும் கொடுக்கும் மதிப்பும்? விவேகாநந்தன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் இந்தியாவில் இல்லாதபடி "இலங்கையிலுள்ள உள்ளூர் நிறுவனங்கள் மீனவர்களின் பிரச்சினைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தன...; மீனவ சங்கங்களுக்கும் அரசு கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தன...".

இலங்கையில் தற்போது இந்தியாவிலுள்ள அளவு போல அதிக ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில்லை. தனதெல்லை தாண்டி வந்து இந்திய டிராலர்கள் மீன் பிடிக்கும் போது தமது வலைகள் அறுந்து போவதை இலங்கை மீனவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அன்றைக்கு சோறு போட்டதற்காக இன்றைக்கு வயிற்றில் அடிப்பதை அவர்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப்போவதேயில்லை.இது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.

இன்றைய இலங்கை கடற்படை எல்லை கடந்த இந்திய மீனவர்களை சுடுவதை ஒருக்காலும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால் அவர்கள் கைது செய்யட்டும். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கெட்டும்.

ஆனால் எல்லை கடப்பது, அதுவும் மரைன் டெக்னாலஜி சாதனங்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் செய்வது சட்டப்படி குற்றம் என்ற பொதுப்புத்தி நமக்கு வேண்டும்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலிகளின் கடத்தல் தொழிலில் உதவினார்கள் என்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றார்கள் என்பது திரிப்பு என்று கூறுபவர்கள் தங்களின் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளலாம் உண்மை எதுவென்று. இப்பதிவு இந்திய மீனவர்களை எதிர்த்து என்று கூடத் திரிப்பு செய்யப்படலாம் என்பதையும் நான் அறிந்தே இருக்கின்றேன்.

1983'க்கு முன்னால் பெசாலையில் ஒரு நாளில் 20 லாரி லோட் செய்யுமளவிற்கு இருந்த மீன்பிடி இன்று (2004'ல்) 2-3 லாரிகளுக்கே தள்ளாடுகின்றது. ஏன்? அவர்கள் கூறுவது இந்திய டிராலர்கள் செய்யும் "கடற் கற்பழிப்பு". வடமராட்சி மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களோடு நடந்த சண்டையில் மரித்தார். நெகோம்போவில் மீனவர்கள் நல்லெண்ண சந்திப்பில் "இது போன்ற எத்தனையோ விடயங்களை இந்திய மீனவர்கள் (கடலெல்லை கடக்காமல்) கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருந்தால் தடுத்திருக்கலாம்", என்றார்கள்.

இந்திய மீனவர்கள்தான் இன்றைய பிரச்சினைக்குக் காரணமா?

இராமேஸ்வரத்தின் கடற்கரையை டிராலர்கள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அதன் படுகை ஆழமில்லாத கற்படுகை. எனவே இலங்கை எல்லைக்குள்தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அங்கே கிடைக்கும் Tiger Prawns விடுத்து Yellow Fin Tuna பிடிக்கலாமென்றால் அதற்கு இலங்கை மீனவரிடம் போட்டி போட வேண்டும். வருடத்திற்கு சராசரியாக 28 லட்சம் டன் மீன்களை இந்தியா செய்யும் அறுவடையில், டிராலர்கள் மூலம் கிடைப்பது ஏறக்குறைய 50%. இவ்வகை டிராலர்களுக்கு டீஸல் விலை உயர்வு, இறால் விலை வீழ்ச்சி, கடற்கரையிலிருந்து மூன்று கடல்மைல் அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும், பருவ காலக் கட்டளைகள் (இராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜகதாம்பட்டினம், கோட்டைப்பட்டினம் டிராலர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலேயே மீன்பிடிக்க வேண்டும்; 15 ஏப்பிரல் முதல் ஆறு வார காலத்திற்கு டிராலர்கள் தமிழக அரசுக் கட்டளைப்படி மீன் பிடிக்க முடியாது) இவற்றையெல்லாம் தாண்டி வருமானம் பார்த்து வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயம். இராமேஸ்வரம் - நாகப்பட்டிணம் ஏரியாவில் மட்டுமே 1983-2004 வரை சுமார் 4,000 டிராலர்கள் முளைத்து விட்டன. முதலீடு சுமார் 120 கோடி இந்திய மதிப்பில். இதில் பாதி இந்திய மீனவர்கள் கடனாய் வாங்கியது. இலங்கையோடு இந்திய மீனவர் பிரச்சினை தொடர்ந்தால் (இருதரப்பும் சுனாமியால் பாதிக்கப்பட்டது போக) நிலைமை மேலும் கடுமையாக மோசமடையும். இந்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தன்னார்வ நிறுவனமோ, ஏனைய ஸ்தாபனங்களோ ஆய்வறிக்கைகள் மட்டுமே தர முடியும்.

மேலும் பார்ப்போம்.

7 comments:

Vanthiyathevan said...

ரோஸாவசந்த் தனது பதிவினில் தானே விட்ட பின்னூட்டத்தில் ஏதோ நான் மனசங்கடத்தில் இருப்பதாகக் கருதியிருக்கின்றார். காரணம் நான் அப்பதிவில் எனது எதிர்வினையின் சுட்டி கொடுக்காமைதானாம். நான் ஏற்கெனவே அவரது கூற்றுப்படி எனது முந்தைய இடுகையின் சுட்டியை அவரது கூத்து'ப்பதிவிலே இட்டிருக்கின்றேன்.

அதுகுறித்து எனது விளக்கப் பின்னூட்டம் ரோஸாவின் மட்டுறுத்தலுக்குக் காத்திருக்கின்றது.

எனது இந்த இரண்டாம் எதிர்வினையின், இன்னும் வரப்போகும் எதிர்வினைகளை எங்கே சுட்டிகள் கொடுக்க வேண்டும் என்று ரோஸாவைக் கேட்டிருக்கின்றேன்.

அதுவரை இப்பதிவின் சுட்டியை அவரே எனது முந்தைய பதிவைப் போல **மிக எதேச்சையாக ** பார்த்தால்தான் உண்டு.

ROSAVASANTH said...

நேற்று நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டத்தை நான் எழுதி, வேலையை விட்டு செல்லும்வரை,'கூத்து' பதிவில் உங்கள் பின்னூட்டம் வந்ததாக தெரியவில்லை. மின்னஞ்சலிலும் இன்றுதான் பார்த்தேன். அதனால்தான் அப்படி எழுதினேன். மற்றபடி 'எழுதப் போகிறேன்' என்று தகவல் சொல்லியபின், உங்கள் பதிவில் வந்து எட்டி பார்த்து தெரிந்து கொள்வதில் எனக்கு பிரச்சனையில்லை. மற்றபடி இது போன்ற விஷயங்களில் அடுத்தவர் சொல்வதை, அப்படியே ஏற்றுகொள்வதுதான் என் வழக்கம். அதனால் தகவலுக்கு நன்றி.

ROSAVASANTH said...

சென்ற பதிவிற்கான எனது பதிலை இட்டுவிட்டு இப்போதுதான் இதை நிதானமாய் படிக்க முடிந்தது. எனது பதில் கடந்த பதிவிற்கு மட்டுமானது.

உங்களின் இந்த பதிவு விபரபூர்வமாய் பேசுவதையும், பிரச்சனைகள் என்பதாய் பேசும் விஷயங்களையும் நானும் அங்கீகரிக்கிறேன். ஆனாலும் சென்ற பதிவிற்கான எனது பதிலில் மாற்றம் எதுவும் இல்லை.

ROSAVASANTH said...

வந்தியத்தேவனின் முதல் எதிர்வினைக்கு நான் எழுதிய பாதி மறுமொழி,

http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_05.html

Srikanth Meenakshi said...

Vanthiyathevan,

Thank you for a very informative post. My earlier comments (both in your and Rosa's blogs) were the result of an instinctive outrage at the existing situation of Indian fishermen being hounded at sea by a foreign force.

As the anonymous to your first post pointed out, it is easy to feel indignation sitting here in DC, thousands of miles away. The ground realities are always more complex, as your post clarifies.

However, what is not very complex is the inherent injustice in using lethal force to establish economic frontiers, and I still think the fishermen deserve protection in this regard. Over the long-term, as you suggest, it is an issue that needs bilateral resolution.

Thanks,

Srikanth

Badri Seshadri said...

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது, சுடப்படுவது பற்றி:

சில வாரங்களுக்கு முன்னால் இலங்கைக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவுடனான ஒரு கலந்துரையாடலில் பங்கு கொண்டேன். அப்பொழுது இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது - ஏன் இந்திய அரசும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் இலங்கை அரசுடன் இணைந்து இந்தப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்கக்கூடாது?

நிருபமா ராவ், ஏதேனும் கைது நடந்தால் இலங்கைக் கடற்படை உடனடியாக இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அளித்துவிடுவதாகவும், உடனேயே இந்தியத் தூதரகமும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளை எடுப்பதாகவும் சொன்னார். அதே சமயம் இலங்கைக் கடற்படை நிறுத்தச் சொல்லி நிறுத்தாமல் போன படகுகள்மீதுதாம் துப்பாக்கித் தாக்குதல் நடக்கிறது என்றும் அதற்கான காரணம் இலங்கைப் படைகளுக்கு இந்தப் படகுகள் தமிழக மீனவர்களுடையதா அல்லது விடுதலைப் புலிகளின் கடத்தல் படகுகளா/ஆயுதப் படகுகளா என்பது தெரியவில்லை என்பதும்தான் என்றும் சொன்னார்.

I am only a messenger.

Anonymous said...

தமிழ்குஷ்பூவில சேர்த்துக் கொள்வதற்கு குறைந்து இத்தனை இடுகைகளாவது இருக்கணும், அடர்த்தி, இருக்கணும் என்று ஏகப்பட்ட விதிகள் இருக்கு, ஆனாலும் திடீர் திடீர் என்று இந்த வம்பன், பறவை எல்லாம், ஒரே ஒரு இடுகைகளோடு ஜாயின் ஆயிடறாங்கோ. சில குறிபிட்ட ஆளுங்களை மட்டும் திட்டறாங்கோ. இந்த அதிசயம் எப்படி நடக்குதுங்க . இவங்கெல்லாம் அவங்களேதானா ?