Monday, September 13, 2004

செல்லுலாய்டு கனவுகள்

உண்மையை மிஞ்சிய பிரமை
உற்சாகத்திற்கும் குறையேதுமில்லை
வானமும் தொட்டுவிடும் தூரம்தான்
பாடலாசிரியன் வரிகளிலாவது

இயல்பே திரிபாக பிம்பம் உருவாக்கி
நிதர்சனத்தை நிழல் வெற்றி காணும்
கிராமக் காட்சி முடிந்ததும் வெளிநாட்டில் டூயட்
தயாரிப்பாளனின் சுருக்குப்பை எதிர்பார்ப்பில் விரியும்

ஆழம் பற்றி அதீத கவலையில்லை
சட்டிகாலியானதால் அகப்பைக்கும் அவஸ்தையில்லை
கருவே இல்லாததால் கலைப்பதில் கடினமில்லை
எழுதச் சொன்னால் கதை விடும் ஆசிரியர்கள்

கடைசியாய் வருதல் கழிசடை களைதல்
ஏகலைவன் வில்லும் எவனது சொல்லும்
என்முன் என்றும் ஜெயிக்காது
குத்தும் வசன கர்த்தாவின் வரிகள்

விரலசைவில் உலகம் வைத்திருப்பினும்
புகழெனக்கு அதீத போதையூட்டுவதில்லை
ஆகாயத்தில் பறந்து அந்தர் பல்டியடிக்கும்
அசல் நாயகனுக்கு நகல் நடிகன்தானே நான்

No comments: