Thursday, April 13, 2006

கச்சத்தீவு: ஜெயலலிதாவின் பங்கு: 2

கச்சத்தீவு - டாக்டர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு - 2

எனது முதல் இடுகையை ப்ளாக்கர் சாப்பிட்டு விட்டதெனெவும், அதற்கு நீளமான தலைப்பே காரணமென்றும் ரோஸாவசந்த் அவர்கள் எனது முந்தைய இடுகையின் பின்னூட்டத்தில் தெரித்திருந்தார். நன்றி ரோஸா.

இலங்கை கடலெல்லையில் மீன் கொள்ளையை தடுக்கவும், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையோ, இலங்கை மீனவர்களோ தாக்குவதிலிருந்து தடுக்கும் முயற்சியாக டிராலர்களை அந்தந்த அரசாங்கங்களே நியாய விலையில் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று ஏற்கெனவே பார்த்திருந்தோம். அவாறு செய்வதன் மூலம் பாக் குடா மற்றும் நீரிணை பகுதிகளில் இன்று நிலவும் இருதரப்பு இறுக்கம் குறையும் என்று Coastal Resources Management நிறுவனத்தின் தலைவரான டாக்டர் B சுப்பிரமணியம் தெரிவிக்கின்றார் (6 அக்டோபர் 2004, ஹிந்துஸ்தான் டைம்ஸ்).

இவர் மன்னார் மற்றும் யாழ் மீனவர்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசியவர். Exclusive Economic Zone (EEZ) குறித்து ஏற்கெனவே தகவல் தந்திருந்தேன். இப்பகுதியில் ஆழ்கடல் மீன் பிடித்தலை இந்திய மீனவர்கள் மேற்கொள்ளச் செய்யவேண்டும்.

மேற்கூறிய இரண்டு காரியங்களைச் செய்தாலே இன்றிருக்கும் பிரச்சினையில் 50 - 70% குறைந்து விடுமென்று அவர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

பாம்பனில் Release of Innocent Fishermen (ARIF) என்ற பொதுநல தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஊவணி பெர்னாண்டோ அருளானந்தம் இலங்கை கடற்படையால் 1983'லிருந்து 2004 வரை 116 இந்திய மீனவர்கள் உயிரிழந்தும், 242 பேர் காயமடைந்தும் போனார்கள் என்று தெரிவிக்கின்றார். மேலும் இந்திய மீனவர்களின் டிராலர் தவிர்த்து சிறு படகுகள் (அ·தாவது வலையை வீசிவிட்டு மீன் விழக் காத்திருக்கும் முறையில் செயல்படும்) இலங்கை கடலெல்லைக்குள் நுழைவதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கவில்லை யென்றும் கூறுகின்றார்.

இந்திய மீனவர்களின் டிராலர்களை அரசாசாங்கமே வாங்கிக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்க்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கி, மாற்றுத் தொழிலுக்கோ/புனர் வாழ்வுக்கோ வழிகாட்ட வேண்டுமென்ற மூன்று அம்ச கோரிக்கைகளை தமிழக அரசிற்கு இவர்கள் வைத்துள்ளனர். முதல்வரான செல்வி ஜெயலலிதாவும் அவர்களின் தீர்வுகளை முழுமனதோடு பாராட்டியதாகவும் தெரிவிக்கின்றார். மேற்கொண்டு அரசு நடவடிக்களுக்காக காத்திருக்கின்றோம் என்றும் சொல்கின்றார்.

இது முடிந்து ஏறத்தாழ 21 மாதங்கள் உருண்டோடி விட்டன. அரசு நடவடிக்கை எடுத்ததா? அதிகார வர்க்கம் வழமையான மெத்தனத்துடன் மேலெடுத்துச் செல்லவில்லையா? தன்னார்வன நிறுவனங்கள் சோர்ந்து போய்விட்டனவா?

தேர்தல் வந்தாலும், மீனவர்கள் இறந்தாலுமே, கச்சத்தீவு பிரச்சினை அதுவும் "வெறுமனே" பேச்சளவில்/எழுத்தளவில் மட்டும் இருக்கின்றதோ?

தொடரலாம்.

2 comments:

Vanthiyathevan said...

test.

I heard complaints that my comment box is not working. Just a test.

Vanthiyathevan said...

வாசகர்களுக்கு,

பதிவின் ஆரம்பத்தில் கூறியது போல தலைப்பு நீளமானதால் ப்ளாக்கர் பிரச்சினை இப்பதிவிற்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேன்கூட்டிலிருந்து நீங்கள் ப்ளாக்கர் புறக்கணித்த இப்பதிவின் அசலைப் பார்க்க முடியும். ஆனால் பின்னூட்டம் விட முடியாது. இது ஒன்றும் மீனவர் பிரச்சினை போலப் பெரிதானதில்லை. இப்பதிவை, பின்னூட்டங்களை நீங்கள் பார்க்க முடிந்தால் நீங்கள் தேன்கூட்டிலிருந்து வரவில்லை என்று அர்த்தம்.

விஷயத்தை எனக்கு முந்தைய பதிவில் பின்னூட்டாமாய் தெரியப்படுத்திய ரோஸாவிற்கு மீண்டும் நன்றி.

எதனால் இப்பிரச்சினை (தேன்கூடு எனது பழைய பதிவிற்கு எடுத்துச் செல்கின்றது; ஆனால் ப்ளாக்கரில் அப்பதிவேயில்லை) என்று விஷயம் அறிந்தவர் எனக்குத் தெரியத்தந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.