மௌனம் க(கொ/தொ)லைக்கிறேன்
இனிய நண்பன் ராஜ்குமாருக்கு,
நான்காண்டுகளாக அமெரிக்காவில் வாழும் ஞானம் எழுதிக் கொண்டது.
உன் மன வானில் மௌனம் கலைத்த மடல் கண்டேன்.
வேலை செய்யும் நாட்டிற்கு விசுவாசம்/பயம் மற்றும் இந்திய நாட்டுப் பற்று, இரண்டையும் அமெரிக்கஅரசியல் அலசப்படாமைக்கு காரணங்களோ என வினா எழுப்பி உள்ளாய்.
எனது குறுகிய வலை அனுபவத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை அங்கீகரித்து எந்தப் பதிவையும் நான் படிக்கவில்லை. அப்படி ஏதேனும் நீ பார்த்திருந்தால் பார்வைக்கு அனுப்பு...
அமெரிக்கா யுத்தம் அறிவித்த சில நாட்களில், நமது அண்டை நாட்டின் கூலிப்படையினர் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர். பின்னர் நடந்ததை உலகம் அறியும். எனது வெள்ளை அதிகாரி ஒரு விருந்தில், அமெரிக்க யுத்தம் பற்றி இந்தியக் கருத்துக் கேட்டார். ஐம்பது ஆண்டுகளாய் பாகிஸ்தானின் தீவிரவாதத்தால் அவதிப்பட்டு, இன்று பாராளுமன்றம் வரை பாதகர் வந்துவிட்டாலும், அமைதி காக்க வேண்டும் என்று அமெரிக்கா சொல்கிறது. அதேதான் எம் பதிலும் உமக்கு என்றேன். இதை வலைப்பதிவு செய்யாமைக்கு, வேலை செய்யும் நாட்டிற்கு விசுவாசம்/பயம் (VP) முத்திரையா?
நான் அயல் நாட்டில் வேலை செய்துவரும் வலைஞர்களின் பிரதிநிதியாகப் பேசவில்லை. எனக்கு கிடைக்கும் அரிதான தருணங்களில் எனது நாட்டு நடப்புகளை படித்து, ஆக்கப்பூர்வ கருத்துகளோ, ஆற்றாமையோ வலை மூலம் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. "என் நாடு, என் மக்கள்" என இருந்தால் அதற்கும் VP முத்திரையா? கோ.சி. மணியின் லீலைகளை வலைப்பதிவு செய்யும் நண்பன் சுந்தர், அமெரிக்காவின் க்ளிண்டனைப் பற்றி எழுதாமைக்கு பயமோ, விசுவாசமோ, பச்சை அட்டையையோ காரணமாய்க் காட்ட மாட்டேன். இதே சுந்தரின் ஆப்கானிய யுத்தம் பற்றி "தினம் ஒரு கவிதை" பதிவை நீ படிக்கவில்லை போலிருக்கிறது.
வரலாறு அறியாதவரா நாம்? உலகில் தீவிரவாதம் வளர நீரூற்றி, இன்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் துடிக்கிறது அமெரிக்கா. மனித உரிமைகளை நேற்று இன்றா மீறுகின்றது? வியட்நாமின் "நேபாம் குண்டுகள்", ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, கியூபா தலையீடு, பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு அனுமதி, பாகிஸ்தானுக்கு பண முடிப்பு, ஈரானில் உன்னாட்டுக் குழப்பம், ஈராக் யுத்தம் என்று எழுதிக் கொண்டே போகலாம். இவ்வளவு ஏன்? டாலர் தேசம் தொடர் படிக்கும் உனக்கு, "அடிமைக் கலாச்சாரம், அமெரிக்கா கலாச்சாரம்" என்று சொல்லித் தெரிவதில்லை.
அமெரிக்காவில் கருத்து/எழுத்து சுதந்திரம், வர்த்தகக் கொள்கைகள், மனித உரிமை மீறல்கள், எதேச்சதிகாரப் போக்கு பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அமெரிக்காவின் தேர்தலைப் பற்றியும் எழுதக் கேள். அது நியாயம். அதென்ன "தைரியமாய்" எழுதுங்கள் என்ற கோரிக்கை? பச்சை அட்டைக்கும் அமெரிக்க பூனைக்கு மணி கட்டுவதற்கும் என்ன சம்பந்தம்? "நீங்கள் யார் பக்கம்" என்ற விஷமத்தனமான கேள்வி எதற்கு?
நீங்கள் இந்தியா பக்கம் என்றால், அயல் நாட்டில் (குறிப்பாக அமெரிக்காவில்) ஏன் பணி புரிய வேண்டும் என்று "மாலன்" தனமான கேள்விகள் எழலாம். வேறு யாரேனும் விடையளிக்க விரும்புகிறீர்களா?
தேசப்பற்று என்பது பொதுவுடைமை. ஏதோ இந்தியாவில் வாழும் இந்தியர்க்கு மட்டும் தனியுடைமை அல்ல. இது எனது தாழ்மையான கருத்து.
Saturday, May 22, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment