Thursday, May 27, 2004

மௌனம் கலைத்த நண்பனுக்கு,

முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். இந்தியா வந்தபின் தொலைபேசியில் கூட தொல்லை கொடுக்காதமைக்கு...(ஆமாம் இதை இணையத்தில் பதிவு செய்ய வேண்டுமா... என்ன???)

உனது எதிர்பார்ப்புகளை நான் குறை கூறவில்லை. கூறிய விதம்தான் சிறிது கீறிப் பார்த்தது. ஒரே ஒரு விண்ணப்பம். எழுத்தில் எனக்கு மூத்தவன் நீ. உனது "கலைந்த மௌனம்" பதிவு "ஏன் மௌனம்" பதிவைவிட எங்கேயோ போய்விட்டது. சில சமயம் விலாவாரியாக எழுதினால் சொல்ல வந்த கரு நீர்த்துப்போகும். ஒத்துக்கொள்கிறேன். நீ எடுத்துக்கொண்டது உணர்வுப்பூர்வமானது. வேறு வழியில்லை. விலா-வ(¡)ரியாகத்தான் எழுத வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்து.


எங்கே வாழ்ந்தாலும், மடிந்தாலும் நான் ஒரு இந்தியன். பட்டம் பெற்ற பின்னர் ஏழு வருடங்கள், எனது துடிப்பான பருவத்தை நான் பன்னாட்டு நிறுவனத்தில் கழிக்கவில்லை. கப்பற்படையில் இருந்தேன். அதற்காக மேற்கண்ட கருத்தை நான் கூறவில்லை. ஒவ்வொரு இந்தியன் மனதிலும் "எங்கே வாழ்ந்தாலும், மடிந்தாலும் நான் ஒரு இந்தியன்" பிரதிபலிக்க வேண்டும். இல்லாவிடில் "வாழ்தலின் சாதல் நன்று". நான் விஷமத்தனம் என்று குறிப்பட்டது எனது வேதனையால்தான்.

திரவியமோ, பச்சை அட்டையோ பிரதானமாகப் போனவர் வலையில் வலம் வரமாட்டார். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும் மாட்டார். விதிவிலக்குண்டு. பொழுதுபோக்குத் தமிழ் பேச நான் இந்த ஊடகத்திற்கு வரவில்லை.

நீ குறிப்பிட்ட சாபக்கேடுகள் முற்றிலும் உண்மை. கண்டிப்பாக அது குறித்து எனது எண்ணங்களைப் பதிவு செய்வேன். பதிவு செய்யாமை எனது தவறெனச் சொல். திருத்திக்கொள்கிறேன். அதைவிடுத்து பயமா, விசுவாசமா, பச்சை அட்டையாவெனக் கிண்டாதே. வேதனைப்படுவேன்.

புலம் பெயர்ந்த நாடுகளைப் (குறிப்பாக அமெரிக்கா) பற்றி எழுதினால் பிறர் படிக்கமாட்டார் என்பதை விட, தந்நாட்டைப் பற்றியெழுதுவதில் (முன்னேற வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்ற ஆசையில்/ஆதங்கத்தில்) பலர்க்கு ஆர்வம். அதில் தவறில்லை.

ஒட்டுமொத்தமாகப் புலம் பெயர்ந்தவர்கள் ஊடகம் வாயிலாய்த்தான் இந்தியாவைப் பதிவு செய்கிறாரென முடிவு கட்டாதே. அரசியல்வாதியை கிண்டலடிக்கும் பதிவிலும் (முன்னேற வேண்டும், முன்னேற்ற வேண்டுமெனும்) ஆதங்கம் மேலோடியிருக்கும்.

இந்திய தேசத்திற்கு அமெரிக்க பூனைகளால் ஆபத்தென்றால் மணி கட்ட அழைக்காதே... அது அசிங்கம்...சாவு மணி கட்ட அழை...அது சிங்கம்...

No comments: