Saturday, May 22, 2004

சின்ன சிந்தனைகள் தொடரில் சுஜாதா சொன்ன 55 வார்த்தைகளில் 2 சிறுகதைகள்

புகழ்

உலகின் மிகவும் பிரபலமான்வர்க்குண்டான பிரச்சினைகள் எனக்கு அத்துப்படி. தினமும் ஆட்டோகிராப் வாங்க வரும் கூட்டத்திற்கு அளவில்லை. எனக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாதெனலாம். வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். எதற்குமே முகம் சுளிக்காமல் அனைவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கற்றுக்கொடுத்தார்கள்.

இருப்பினும் புகழ்போதை உச்சியிலேறி நான் யார் தெரியுமாவென மமதையுடன் கேட்டதேயில்லை.

அன்றும் வழக்கம்போல பணிமுடிந்து இல்லம் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. டிஸ்னிலேண்ட் உடைமாற்றும் இடத்தில் எனது மிக்கி சீருடை சிரித்துக்கொண்டிருந்தது.


சிரமம்

அம்மா அடிக்கடி சொல்வாள். சின்ன வயதில் நான் செத்து பிழைத்த கதையை.

கக்குவான் இருமல், விதவிதமான காய்ச்சலென்று சொல்லிக்கொண்டே போவாள். பார்க்காத வைத்தியமில்லை. நாட்டு வைத்தியரிலிருந்து ஹோமியோபதி, ஆங்கிலம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நரைபுரை தட்டியபோதும் தன் வேலைகளை தட்டுதடுமாறி தானே செய்வாள். எவ்வளவோ சொல்லியும் கேட்டதேயில்லை. பதிலுக்கு ஏதேனும் செய்ய என் மனம் பரிதவித்ததுண்டு.

நண்பன் தோளை தட்டியதும் திரும்பினேன். "புண்ணியாத்மா... சிரமம் கொடுக்காம போயிட்டா"

சிரமப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் வந்தது.

1 comment:

கார்த்திக் பிரபு said...

nandri vandhiyathevan..thodardhu eluthungal..padikka suvaiyag irukiradhu ungal padivu..indha maadhiri vithiyasamga eluthungal.ungalukkena thani adaiyaalm thedi koolungal..nandri bye.