டாலர் தேசம் - விமர்சனம் பகுதி 2
முதல் ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை சுமார் 5,50,000. கூட்டு நாடுகளின் பங்களிப்பு சுமார் 1,60,000. பல உலக நாடுகளின் அங்கீகாரத்துடன் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட போரிது.
இப்போரில் குவைத்திலிருந்து ஈராக்கியரை அப்புறப்படுத்துவதே முதல் நோக்கமாயிருந்தது. ஈராக்கியர் இந்த யுத்ததிலும் வீரமாகப் போரிடவில்லை என்பதே என் கணிப்பு. குவைத்திலிருந்து பாலைவனத்தில் புறமுதுகாட்டி ஓடிய ஈராக்கிய படையினரை துவம்சம் செய்துவிட்டது அமெரிக்காவும் கூட்டுப் படைகளும். ஈராக்கின் சேதாரக் கணக்கு வேண்டுமா? சுமார் 1,00,000 பேர் மரணம்; 3,00,000 காயம்; 1,50,000 பேர் படையை விட்டு ஓட்டம்; 60,000 பேர் சிறைபிடிப்பு. இழந்த ராணுவ தளவாடங்களோ கணக்கிலடங்காதது.
இரண்டாம் ஈராக் யுத்தமோ சதாம் உசேன் மண்ணில் பிரதானமாய் நடந்தது. பிரான்ஸ¤ம், ஜெர்மனியும் இந்தப் போரை வன்மையாய் கண்டித்ததுடன், தனது படைகளையோ, இராணுவ தளவாடங்களையோ அனுப்ப மறுத்து விட்டது. முந்தைய போரில் 18,000 படையினரையும், 60 போர் விமானங்களும் இன்னும் பல கப்பல்கள், டாங்குகளுடன் பிரான்ஸ் களம் புகுந்தது. ஜெர்மனி தன் பங்குக்கு 200 ஆர்மி வீரர்கள், 500 நேவி வீரார்கள், பல போர்விமானங்களுடன் குஸ்தி போட்டது.
மொத்தம் 49 நாடுகள் இரண்டாம் போரை ஆதரிப்பதாய் புஷ் பீற்றிக்கொண்டாலும், நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் சிரிப்புதான் பீறிடும். மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, சாலமன் தீவுகள், டோங்கா இவையெல்லாம் அந்த ஆதரிப்பு லிஸ்டில் அடங்கும்.
இம்முறை அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை சுமார் 3,00,000. இங்கிலாந்து 26,000 பேரையும், ஆஸ்திரேலியா 2,000 பேரையும், கனடா 25 பேரையும், போலந்து 200 பேரையும் அனுப்பி வைத்தது. ஆக படையினர் எண்ணிக்கை மற்றும் படைகலன்கள் கணக்கை ஏறிட்டுப் பார்த்தால் முதல் போரைவிட இரண்டாம் போர் சரி பாதி அல்லது அதற்கும் குறைவெனலாம். எனவே வெறும் எண்ணிக்கையினால் ஈராக் வீரர்கள் பயந்தனர் என்று சொல்ல முடியாது.
முதல் போரில் நேர்ந்த உயிர்ப்பலியாலேற்பட்ட கிலி, சதாம் தலைமறைவு, கடந்த 10 வருடங்களில் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றம் (தகவல் தொடர்பு, ஏவுகணை இன்னும் பல) இவைதான் ஈராக் எளிதாய் வீழ்ந்ததற்கு காரணமெனலாம்.
இவ்விரண்டு போரிலும் ஈராக் ரொம்ப சுலமாகப் அமெரிக்காவால் புரட்டியடிக்கப்பட்டது. கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவைப் புரட்டியது போல. என்ன ஒரு முக்கிய வித்தியாசம் முதல் போரில் சதாம் ஸ்கட் ஏவுகணைகள் வீசினார். இம்முறை செய்யவில்லை. ஒருவேளை உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா தாக்குதல் தொடுக்காது என்ற அல்ப ஆசை வந்ததால் ஸ்கட்டை தயார் செய்து வைக்கவில்லையோ என்னமோ?
Tuesday, July 06, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment