Sunday, July 11, 2004

நிழலும் நிதர்சனமும்

சில நல்ல மனிதர்கள் (A Few Good Men)

1992'ல் வெளியான இந்த ஆங்கிலப் படத்தை நேயர்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்கள் எனத் தெரியாது. ராபர்ட் ரைனெர் இயக்கத்தில் டாம் குரூஸ், டெமி மூர் நல்லவர்களாகவும், கீபர் சதர்லேண்ட் மற்றும் ஜேக் நிக்கோல்சன் உச்சபட்ச கெட்டவர்களாகவும் நடித்து பிரமாதப்படுத்திய திரைப்படம் Few Good Men.

fewgoodmen

எனது பதிப்பு திரை விமர்சனம் இல்லை. ஆகவே சுருக்கமாய் முடித்து மேலே செல்வேன். கியூபாவிலுள்ள அதிரடிப்படையின் கமாண்டிங் ஆபீஸர் ஜேக் நிக்கோல்சன். அதிரடிப்படையினர்க்குண்டான கடுமையான கட்டுக்கோப்புக் கொண்டவர். அவரது பிரிவில் ஒரு வீரர் மர்மமமான முறையில் இறக்க, சக வீரர்கள் இருவர் மீது கொலைப்பழி விழ, இராணுவ நீதிமன்றம் (Court Marsall) கூடுகிறது. பழி விழுந்தவர் அப்பாவிகள். உண்மையில் கமாண்டிங் ஆபீஸரின் "Code Red" என்னும் எழுதப்படாத சட்டம் இறந்த வீரர் மேல் வீசப்படுகிறது. Code Red என்பது அதிரடிப்படை வீரர், இயல்பாக செய்யக்கூடிய உடற்கூறு செயல்கள் (Physical activities) செய்ய முடியாவிட்டால் தரப்படும் தண்டனையாகும். சராசரிக்கும் குறைவான திறன் கொண்ட அந்த துர்பாக்கியசாலி உணவு, நீர் மறுக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட, காவலுக்கிகிருந்த அப்பாவி வீரர்கள் அனுதாபப்பட்டு உதவுகின்றனர் (கொஞ்சம் நீர் மற்றும் உணவு தந்து...). இறுதியில் மர்மமான முறையில் Code Red வீரர் இறக்க, பழி காவலாளிகள் மீது விழுகிறது. மயிர்க்கூச்செறியும் வசனங்களுடன் (இராணுவத்தில் இருந்தவர் இன்னும் ரசிக்கலாம்), சிறந்த காட்சியமைப்புடன் நல்லவர், கெட்டவரை (வல்லவராயிருந்தும்) வெற்றி கொள்ளுமாறு படம் முடியும்.

ஒரு சிறிய காட்சி மாற்றம். ரபீந்திர சிங் பதிவில் நான் சொன்னதேதான். கண்களைக் கொஞ்சம் மூடுங்கள்.

எதிரி நாட்டினுள் சண்டைபுரிபவர் நீங்கள். போரின் பரிமாணம் முற்றிலும் மாறுபட்ட தருணம். தற்கொலைப் படை, திடீர் தாக்குதல் (Ambush) நடுவே குடிமக்கள் யார், தீவிரவாதி யார் என அடையாளம் காணும் அவகாசம் மிகக் குறைவு. அதாவது கரணம் தப்பினால் மரணம்.

வெள்ளைக் கொடியாட்டி சரணடையப் போவது போல் இடுப்பில் குண்டு கட்டி கொல்லும் கட்டத்தில், சிறியவர் பெண்கள் கூட தற்கொலைப்பிரிவின் அங்கத்தினராய் இருக்கும் காலத்தில், உங்களை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

எங்கும் கந்தகப் புகை...குண்டுகளின் சப்தம்...இறப்பவரின் ஓலம்...இறந்தவரின் பிண்டங்கள்...மரணத்தின் வாசனை...அட்ரலீன்னின் அதீத சுரப்புகள்...சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்புக் குரல் (போரை எதிர்த்து)...சண்டையிடும் நாட்டின் மக்களும் சலித்துப்போன தருணம்...

நல்லதெனக் கூற கூட ஒன்றுமே இல்லை. ஆனாலும் உங்களை எதுவும் அசைத்து விடாது. முப்படைகளின் தளபதி ஆணை கேட்டு சிலிர்த்த சிங்கங்களாச் சென்றவர் நீங்கள். தளபதி ஒரு அரசியல்வாதி. ஆயினும் மக்களின் பிரதிநிதி. இராணுவத்தில் குடியாட்சிக் கேள்விகள் கேட்க இயலாது. கடமையே கண்ணான வீரரன்றோ நீங்கள்?

உங்களின் உற்ற தோழன் கையிலிருக்கும் ஆயுதங்களும், உயிர் காக்கும் சமாச்சாரங்களுமே...

ஆமாம் என்ன இது? ஒரு உல்லாசப் பயணிபோல் காமிராவும் தெரிகிறதே? அடடே...பரவாயில்லை. இடைப்பட்ட நேரத்தில் முக்கிய தருணங்களை "சிறை" பிடிக்க நினைத்திருப்பீர்கள். தப்பில்லை. ஆனால் சிறையிலேயே சிறை (போட்டோ) பிடிக்க நினைத்தீரோ?

அதுவும் எப்படி? பாலியல் பலாத்காரம், வர்ணனைக்குட்படாத வக்கிர காட்சிகள், மானுடம் அறியாத சித்ரவதை இன்னும் பிற. மனிதனுக்குள் மிருகம் படித்திருக்கிறேன். இருப்பினும் மிருகத்தில் மிருகமாய்...அதுவும் நீங்களா? இதென்ன தேசப்பற்றை 50 ரூபாய் வாசனாதிப் பொருளும், 5 ரூபாய் மல்லிகைப் பூவிலும் காட்டிவிட்டீரே? இத்துனை மலிவாய்?

கணிணியில் கைவிரல் நர்த்தனமிட கண்டபடி உங்களைப் பற்றி எழுதிவிட்டாலும் ஒரு கணம் உங்களோடு ஐக்கியமாகிறேன். "சொல்வதைச் செய்" உங்கள் கொள்கை அல்லவா?

திரைப்படத்தில் ஜேக் நிக்கோல்சன் கூட ஒத்தூதினார். கட்டளையை கடமையாய் நிறைவேற்ற வேண்டுமென்று...மேலும் "வழக்கறிஞராய் (ஏனைய எழுத்தாளர் போல) கேள்வி கேட்பதென்பதெளிது. நீங்கள் நானளிக்கும் சுதந்திரப் போர்வையில் உல்லாசமாய் உறங்குபவர்கள். இப்போர்வையை எப்படி வழங்குகிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள்."

விசிலடிக்கும் வசனங்களில் ஒன்று.

மேலதிகாரி (Superior Officer) சொல்லாமல் ஓரணுவும் அசையாது. உங்களோடு ஒத்துப் போகிறேன். உங்களில் "மனிதப் போர்வையில் மிருகத்தில் மிருகம்" உண்டு. ஆமோதிக்கிறேன். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒன்றா? இடிக்கிறது. இன்று நீங்கள் மட்டும் இராணுவ விசாரணையில்...மேலதிகாரிகளோ?

நீதிக்கு கண்ணுண்டு. பார்வையில்லையோ? எய்தவர் இருக்க அம்பை நோவரோ? தளபதி மற்றும் பல அரசியல்வாதிகள் நீங்கள் தந்த சுதந்திரப் போர்வையில் உல்லாசமாய் இருக்க Few Good Men போலவே இன்று இராணுவ நீதிமன்றத்தில் உங்கள் தோல் உரிக்கப்படுகிறது.

காட்சி மாற்றம். Few Good Men படத்தின் உச்சகாட்சி (கிளைமாக்ஸ்). பழிக்குட்பட்ட வீரர்கள் கொலை மற்றும் கொலைக்கான திட்டமிடல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலையாகின்றனர். ஆனால் இராணுவ விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக "Dismissed with Disgrace" செய்யப்படுகின்றனர்.

மரண தண்டனை எதிர் நோக்கிய பழிதூற்றப்பட்ட வீரர்கள் சந்தோஷக் களியாட்டமாடுவதாய் படம் முடியவில்லை. வீரர்களில் ஒருவன் உரிமைக் கேள்வி கேட்கிறான்.

"Dismissed with Disgrace என்றால் என்ன? மேலதிகாரி சொன்னதைத்தானே செய்தேன்?"
இரண்டாமவன் பதிலளிக்கிறான்,"இறந்தவனின் உரிமையை குறைந்தபட்சம் காப்பாற்ற நாம் போராடியிருக்கவேண்டும்"

இராணுவத்தில் குடியாட்சியா? இராணுவ உடையில் (பதிவு முடியும் வரையில்) இருந்த உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

Few Good Men நிழல். Abu Ghraib scandal நிதர்சனம்.

No comments: