Monday, July 05, 2004

டாலர் தேசம் - விமர்சனம் பகுதி 1

எழுத்தாளர் திரு பா. ராகவன் அவர்கள் டாலர் தேசம் என்ற மெகா தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வந்தார். அமெரிக்க சரித்திரத்தை மிகவும் சுவாரஸிமாய் எழுதி வந்ததை யாரும் மறுக்க முடியாது. கீழ்க்கண்ட விமர்சனம் அவரது ஈராக் யுத்தம் பற்றி மட்டுமே.

அத்தியாயம் - 113'ல் ஈராக் ஏன் யுத்தத்தில் சீக்கிரமாய்த் தோற்றுப் போனது பற்றி சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.முதலாவது மற்றும் இரண்டாவது ஈராக் யுத்தங்களை ஆர்வத்துடன் கூர்ந்து நோக்கியவன் என்ற முறையிலும், 7 வருடங்கள் கப்பல் படையில் பணியாற்றிய அனுபவத்துடனும் என் கருத்துக்களை இங்கே பதிகிறேன்.

ஈராக் யுத்தத்தில் ஏன் தோற்றது என்பதற்கான இரண்டாவது காரணமாய் அமெரிக்க கூட்டுப் ராணுவப் படையில் இம்முறை அமெரிக்காவும், பிரிட்டனும் மட்டுமில்லை. இன்னும் ஏராளமான தேசங்கள் இணைந்து கொண்டிருந்தன. ஆனானப்பட்ட ஜப்பானே ஒரு படையை அனுப்பத் தயார் என்று அறிவித்ததை அவர்கள் (ஈராக் ராணுவத்தினர்) எதிர்பார்க்கவில்லை...என்று போகிறது தொடர். இது என்னைப் பொறுத்தவரை திரு. பாராவின் சொந்தக் கருத்தாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தவிர நடைமுறை கணிதம் வேறு விதமாய் இருக்கிறது.

முதலாவது ஈராக் யுத்தத்தில், அமெரிக்காவைச் சேர்த்து மொத்தம் 34 நாடுகள் பங்கு கொண்டன. இவற்றுள் தனது படைகளை அனுப்பிய நாடுகள் 26. ஜப்பான் மருத்துவக் குழு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அறிக்கைப்படி முதலாம் "பிரவர்த்தனம் பாலைவனப் புயல்" (Operation Desert Storm), செலவு சுமார் US $61 பில்லியன். ஜப்பான் சுமார் US $16 பில்லியனை அமெரிக்காவுக்கு கொடுத்தது. இதை காசோலை சாதுர்யம்/ காசோலை ராஜ தந்திரம் (checkbook diplomacy) என்று உலக நாடுகள் ஏளனமாய் வர்ணித்தன.

அரசியல் சாசனப்படி (Pacifist Constitution), இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பன்னாட்டு வேறுபாடுகளைக் களைய, வேற்று நாடுகளுக்கு தனது படைகளை ஜப்பான் அனுப்ப முடியாது. இருப்பினும் 11 செப்டம்பர் அமெரிக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஜப்பானின் பிரதம மந்திரி ஜுனிஷிரோ கொஜுமி (Junichiro Koizumi) ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அதன் பின்னர் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக நடத்தும் யுத்தத்தில் ஜப்பான் பங்கு கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு மாறுதல் நிகழ்ந்தது.

ஆரம்பம் முதலே இரண்டாவது ஈராக் யுத்தத்தில் ஜப்பானின் நிலைப்பாடு குழப்பமாகவே இருந்து வந்தது. 80% ஜப்பானிய மக்கள் யுத்ததில் தங்கள் நாடு பங்கு கொள்வதை விரும்பவில்லை. ஆனால் அண்டை நாடான வட கொரியா ஜப்பானுக்கு எதிராக காட்டமான கருத்துகளை அள்ளி வீசிய போது, கொஜுமி வேறு வழியின்றி அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். நாளை வட கொரியா, ஜப்பானைத் தாக்கினால் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவி வேண்டுமே? சட்ட திருத்தமும் கை கொடுக்க கொஜுமி இந்த அரசியல் சூதாட்டத்தை அரங்கேற்றினார். அப்படியும் போர்முனைக்கு அனுப்பப்பட்ட ஜப்பானிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 1000 தான் இருக்கும்.

தொடருவேன்.

No comments: