Tuesday, July 27, 2004

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

பில்லியன் மக்களின் கனவு நாயகன். உலகில் மற்ற எந்த ஜாம்பவானாலும் நினைத்துப் பார்க்க முடியாத பேரையும், புகழையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்றவர். தனது "கனத்தை" ஆட்டக் களத்தில் மட்டுமே காட்டும் அதிசய மனிதர். இவரைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
Sachinchild 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத கிரிக்கெட் அணியின் பாரம் தூக்கியாய், அனைவரையும் அனுசரித்து அணிக்காக ஆடுபவராய் இருப்பவர் மீது காழ்ப்புணர்வின் காரணமாய் விமர்சன அம்புகள் விழுந்த வண்ணம் இருக்கும்.

கடைசியாக விழுந்த கணை: ஆட்டத்தில் அழகுணர்ச்சி இல்லையாம். ஆமாம்...அழகு என்பது பார்ப்பவர் கண்ணோட்டத்தில் அல்லவே இருக்கிறது. காமாலைக் கண்கள் காண்பதெல்லாம் மஞ்சள் தானே?

பத்ரி தமிழோவியத்தில் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அவரும் டெண்டுல்கரின் ஆட்டத்தில் அழகு குறைந்ததாகவே கருதுகிறார். எனக்கு அக்கருத்தில் முழு உடன்பாடு இல்லை.

ஆரம்ப காலத்தில் அதிரடியாக ஓட்டங்கள் குவித்த போது, பொறுப்பின்றி ஆடி விக்கெட்டைத் தானம் செய்கிறார் என்றார்கள். கடைசிவரை நின்று ஆடினால் அவரால் இந்தியாவிற்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத் தர முடியுமென ஆருடம் கூறினார்கள். இன்று நளினத்தைக் கூட்டி, வேகம் குறைத்து விவேகத்துடன் ஆடும் போது அழகு போய்விட்டதாய் புலம்புகிறார்கள். பழமரம் கல்லடி படத்தானே செய்யும்?   
tendulkarloftaus
கிரிக்கெட் விளையாட்டின் பலமும், பலவீனமும் என்ன தெரியுமா? தாம்பூலக் கடையிலிருந்து, டாஸ்மாக் பார் வரை அக்குவேறு ஆணிவேறாக அனைவராலும் அலசப்படுவதுதான். தென்னை மட்டையில், கோல்ப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் ஆடத் தொடங்கிய நான் இன்று விமர்சனக் கட்டுரை எழுதவில்லையா?

பொங்கி வரும் புது வெள்ளமாய், விதிகளின்றி எழுதப்பட்ட புதுக்கவிதையாயிருந்த டெண்டுல்கர், இன்று அகண்ட நதியாய், விதிகளோடு எழுதப்படும் வெண்பாவாய் விளங்குகிறார். வெள்ளத்தை ரசித்தவர்கள் ஆழ்ந்த நதியின் அழகை ஏன் இனம் காண முடியவில்லை? புதுக்கவிதைக்கு ஆதரவு தர வெண்பாவை ஏன் வெறுக்க வேண்டும்?

டெண்டில்யா ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். கடவுளில்லை. அவர் தனது பலவீனங்களை அடையாளம் கண்டு உடனே அரண் அமைப்பதில் கில்லாடி. வயதாகும் போது கணிக்கும் திறன் (Timing), அணுகுமுறை (Approach) போன்றவற்றை சற்றே திருத்தி அமைத்தார். மேலும் அதிரடியாக ஆடுவதற்கு ஜெராக்ஸ் டெண்டுல்கராய் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக்கும், மத்திய வரிசையில் இளம் யுவராஜ் சிங் மற்றும் முகமது கேய்ப்'ம் இருக்கும் போது டெண்டுல்கர் நிதானமாய் ஆடுவதுதான் நல்லது. இரட்டைக் குழல் துப்பாக்கியாய் கடந்த பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை மோதல் போல தேவைப்பட்டால் மட்டும் வெடிக்கலாம்.

நடந்து முடிந்த பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளரான ஓமர் குல் சொன்னது, "சச்சினுக்கு Incoming Seaming Delivery'யை ஆட தொடக்கத்தில் தயங்குவார். இது ஒரு பலவீனம்". இதே பழைய டெண்டுல்கராக இருந்தால் Leg Glance/ Nice Flick / Short Arm Pull / Lofted Staraight Drive ஏன் Inside Out கூட ஆடத் தயங்கியிருக்க மாட்டார். தற்காப்பு முறையில் (அதே பந்தை) தடுப்பாட்டத்தையே சிறிது முரட்டுத்தனம் கலந்து ஆடி, ஒரு ரன் எடுக்க முயல்வது தவறா?   
sachin pull
பிஷன்சிங் பேடி தன்னிடம் கூறியதாக நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, "சச்சினை "Caught & Bowled" முறையில் அவுட் ஆக்க வேண்டும்" என்றார். எப்படி பந்தி வீசி என்று தெரிவிக்கவில்லை. ஆனால் இது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். C&B முறையில் இதுவரை மொத்தம் 45 முறை அவுட்டாகி உள்ளார். (போல்டு: 47, காட்ச் 148, 24 LBW, 8 Stumped, 25Runout : மொத்தம் 297 அவுட்)

மொத்தத்தில் டெண்டுல்கரின் பலவீனங்களைப் பட்டியலிட்டால்:
1. கால்களின் கிரமமாக சேர்த்தல் (Leg Co-ordination) புத்தக விதிப்படி தற்போது இல்லை. அதனால் பேட்டிற்கும், பேடிற்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் "Sharp off-cutter" போன்று விரைவான உள்நோக்கித் திரும்பும் பந்துகளை வீசினால் கிளீன் போல்ட் மற்றும் "Played On"ஆகும் வாய்ப்பு அதிகம்.

2. தடுத்தாடும் போது அடிக்கைக்கு அதிக அழுத்தம் கொடுத்து மட்டையை பிட்ச் நோக்கிச் சிறிதாய் தாழ வைத்து விளையாடாமல், சற்றே மேல் நோக்கி ஆடுவது. இதனால் மெதுவாக வரும் பந்துகளை (ஸ்பின்னானலும், வேகப்பந்து வீச்சாளர்கள் தந்திரமாய் வீசும் ஸ்லோ பந்தானாலும்), சிறிதே நேரம் பிசகினாலும் பந்து கெந்தப்பட்டு (Ballooning) "V" பகுதியில் கேட்ச் ஆகும் வாய்ப்பு அதிகம். முதன் முதலில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் (முக்கியமாக De Villiers, Petrus S) திறமையாக இப்பலவீனத்தை பயன்படுத்தினார்கள்.

3. கூட ஆடுபவர் "strike rotation" செய்யாவிட்டால், பொறுமை இழப்பது.

4. அனைத்து மட்டையாளர்களுக்கும் இருப்பதை போலவே தொடக்க ஓவர்களில் ஆப் ஸ்டம்ப்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை ஸ்லிப்கள் தாண்டி "ஒத்தியாட" முனைவது. இது ஒரு நாள் போட்டியால் விளைந்த சாபக்கேடு. ராகுல் திரவிடையும் இது விட்டு வைக்கவில்லை.

அவர் குவித்த ஓட்டங்களும், சராசரி ஓட்டங்களும், ஓட்ட வேகமும் அவர் தனது தவறுகளை உணர்ந்து, ஆடும் போக்கை திருத்தி அமைத்துக் கொண்டதாகவே படுகிறது. அவரது கூற்றுப்படி தினமும் புதிதாக ஒன்றை அறிந்து, தன்னை மெருகேற்றிக் கொள்வது தெளிவாகப் புரியும்.
புள்ளி விவரம் வேண்டுவோர்க்கு, கடந்த 5 வருடக் கணிதம் பார்ப்போமா?

மட்டை பிடித்தல்
வருடம்  M  Inns  NO  50s  100s  HS  Runs  Avg     Ca  
2000          34  34     0      6         3     146  1328 39.06  11  
2001           17  16     3      3         4      146  904  69.54   3  
2002          20  19     5      3         2      113  741   52.93   4  
2003          21  21     1       8         3      152  1141 57.05   4  
2004          17  17     1       4         1       141  656  41.00   4  

பந்து வீசுதல்

வருடம்  O   M  R      W  4w  Best  Avg     S/R     E/R
2000        170   2  835  20  1    4/56  41.75  51.00  4.91
2001         43    1  230   5    0    3/35  46.00 51.60  5.35
2002         66.5 0  363  7    0    2/41  51.86  57.29  5.43
2003         39    0  202  3    0    2/28  67.33  78.00  5.18
2004         60    1  352  13   0    3/21  27.08  27.69  5.87

7/6/75'ல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சுனில் கவாஸ்கர் 174 பந்துகளைச் சந்தித்து 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 31/10/87'ல் புருடன்ஷியல் கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 88 பந்துகளில் தனது ஒரே சதத்தை (103 ஆட்டம் இழக்காமல்) அடிக்கவில்லையா? அன்று ஈவான் சாட்பீல்டிற்கு தூக்கமே வந்திருக்காது. ஏனென்றால் எதிரே ஆடும் அதிரடி சிரீகாந்த்திற்கு முன் அரை சதம் அடித்தார் கவாஸ்கர். இன்று நளினத்தின் பெயரில் அவ்வளவு மெதுவாகவா டெண்டுல்கர் விளையாடுகிறார்? என்ன ரன் குவிக்கும் வேகம் 100'க்கு மேலிருந்து 80'பதுகளுக்கு இறங்கி வந்து விட்டது.   

அழகு போய்விட்டது (நளினம் கூடினாலும்), பெராரி கார் (ஒழுங்காக வருமான வரி கட்டினாலும்), அதிகம் பேச ஆரம்பித்து விட்டார் (பேசாவிடில் மண்டைக்கனம் என்பார்கள்), ஆட்டத்தின் மீது நாட்டம் குறைந்து விட்டது (50 முறை ஆட்ட நாயகனாகி சாதனை புரிந்தாலும்) இன்னும் பல புரட்டு பேசுவார்கள். அதையெல்லாம் பொய்யாக்கி தனக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயத்தில் க(வ)னம் செலுத்துவார் டெண்டுல்கர். அது தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடுவது. 

எனக்கிருக்கும் ஒரே ஒரு ஆதங்கம். அணித்தலைவராய் இரண்டு முறை வந்தாலும் சோபிக்க முடியவில்லையே என்று. இது செய்வினையா, செய்யா வினையா, ஊழ் வினையா, ஊழல் வினையா?



No comments: