Scent of a Woman
உலகிலேயேகொடிய நோய் எதுவென்று கேட்டால் "தனிமை" என்றுதான் சொல்லுவேன், எப்போதோ படித்த சிறுகதையில், மகன் முதுமைப் பருவத்திலிருந்த தந்தைக்கு அனைத்து வசதிகளையும் அவரது அறையிலேயே செய்து கொடுப்பான். ஆனாலும் தந்தை முகத்தில் சந்தோஷமில்லை. காரணம் அந்த அறையே அவருக்கு சிறையானதுதான். ஹாலில் குடும்பத்துடன் தொலைக்காட்சி காண்பதிலுள்ள சுகம் அம்முதியவர்க்கு தனியே, தன்னறையில் கிட்டவில்லை.
26 வருடங்கள் ஆர்மியில் பணியாற்றி, இயல்பு வாழ்க்கையிலும் கஞ்சி போட்ட விறைப்புடன் வாழ்பவர் கர்னல் பிராங்க் (Lt. Col. Frank Slade). உற்றாரும், சுற்றாரும் ஒதுக்கி விட தனது தனிமையும், ஜாக் டேனியல் விஸ்கியுமாக வாழ்கிறார். பணியிலிருக்கும் போது நடந்த கையெறிகுண்டு விபத்தில் கர்னல் பிராங்க்கின் கண் பார்வை சுத்தமாக போய்விடுகிறது.
ஸ்காலர்ஷிப்பையே நம்பி வாழும் சார்லி, Thanksgiving விடுமுறையிலும் பகுதி நேர வேலை செய்து காசு பார்க்க வேண்டிய கட்டாயம். கர்னல் பிராங்க்கை பார்த்துக் கொண்டால் $300 தருகிறேனென, அவரது மகள் கேட்க, சார்லி சம்மதிக்கிறான்.
கர்னல் பிராங்க் ஒரு அருமையான திட்டம் வைத்திருக்கிறார். சார்லியோடு நியூயார்க் செல்வது. பிஸினஸ் வகுப்பு பயணம், உயர் ரக ஓட்டலில் தங்குவது, அருமையான மது, விலை உயர்ந்த மாது, பின்னர்...45மிமீ கைத்துப்பாக்கியால் மூளை சிதறி சாவது.
ஒரு சாதாரணக் கதைக்கு வலுவூட்டுவது கர்னல் பிராங்க்காகக் தோன்றும் அல் பாசீனோ (Al Pacino). ஹ¤ஹா என்று நீட்டி முழக்குவதும், பெண்களின் வாசனாதி திரவியத்தை தூரத்திலேயே முகர்ந்தறிந்து வளைக்கும் லாவகமும், டாங்கோ நடனமாடுவதும், இறுதிக் காட்சியில் சார்லிக்காக பள்ளியில் வாதாடுவதும் என்று பின்னியெடுத்திருக்கிறார்.
அல் பாசீனோவோடு நடிக்க வேண்டுமென்றால் நிறைய தன்னம்பிக்கை வேண்டும். சார்லியாக வரும் கிறிஸ் ஓ'டோனலிடம் (Chris O'Donnel) அது எக்கச்சக்கமாய் இருக்கிறது. நேர்மையான அப்பாவி இளைஞனாய் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
படத்தில் எனக்கு பிடித்த வசனங்களைத் தமிழ்ப்படுத்தி தர இயலாது. ஆனால் வசனங்களில் விரசம் தெரியவில்லை. மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வே தெரிகிறது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது (1992) அல் பாசீனோவுக்கு கிட்டியது மிகவும் பொருத்தமானது.
Saturday, July 24, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment