சினிமாவும் கலாச்சாரமும்
மர்டர்
வெகு நாட்களுக்குப் பின் "மர்டர்" என்னும் இந்திப் படம் பார்த்தேன். உடனே கெட்ட பையன் என்று கூறி விடாதீர். மகேஷ் பட்டின் தயாரிப்பில், அனுராக் பாசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் இது. பாங்காக்கில் வாழும் கல்யாணமான இந்தியப் பெண், தனது முன்னாள் காதலனுடன் (சூழ்நிலையால்?) இணைய (புனைய?) பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மொத்தத்தில் "மறுபடியும்" படத்தின் மகடூ முன்னிலை தான் "மர்டர்".
இப்படத்தின் விமர்சனங்கள் ஆஹா...ஓஹோ ரகம். போட்ட காசு வசூலென ரசிகர்கள் புளங்கிதமடைந்தனர். புரட்சிக்கதையெனெ பலரும் புகழாரம் சூட்டினர்.
உண்மையில் "மர்டர்" இதற்கெல்லாம் தகுதியானதுதானா?
ஆராயுமுன் ஒரு கொசுறு செய்தி. ஆட்ரியன் லைன் இயக்கத்தில் வெளியான படம் "அன்பெய்த்புல்" (Unfaithful). ரிச்சர்ட் கேர் மற்றும் டயான் லேன் முன்னணி கதாபாத்திரங்கள். கதாநாயகன் சொந்தமான (குண்டு துளைக்கா) கார் கம்பெனி வைத்து இரவு பகலாய் உழைப்பவர். குடும்பத்தின் மீது தணியாத பாசமுள்ள சராசரி மனிதன். கதாநாயகி தனது கணவன், குழந்தை, அலுவல் பணி என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்க, புயலொன்று (உண்மையான) குறுக்கிடுகிறது. புயலில் கடையில் வாங்கிய பொருட்கள் சாலையில் சிதற, அழகான வாலிபன் குறுக்கிடுகிறான். புயலினால் ஏற்பட்ட முழங்கால் சிராய்ப்பிற்கு மருந்து போடும் சாக்கில் "ரகஸிய ஸ்னேகிதம்" ஆரம்பிக்கிறது. ஆட்ரியன் தனக்கே உரிய பாணியில் ஸ்னேகித்தை "உரித்து" காட்டியிருப்பார் இப்படத்தில்.
இப்போது பளிச்சென்று உங்களுக்கு புரிந்திருக்குமே? மர்டர் என்பது அன்பெய்த்புலின் இந்திய பதிப்பென்று. அங்கே ஆட்ரியன் இங்கே அனுராக். அங்கே டயான். இங்கே மல்லிகா (தமிழில்லை. முழுப் பெயர் மல்லிகா ஷ்ரெவத்).
ஆட்ரியனின் முந்தைய படங்களான பேடல் அட்ராக்ஷன் (Fatal Attaction) மற்றும் இண்டீஸெண்ட் ப்ரொப்போஸல் (Indecent Proposal) மாதிரியல்லாமல் அன்பெய்த்புல் சிறிதாய் வித்தியாசப்பட்ட படம். பேடல் அட்ராக்ஷனில் கதாநாயகன் (மைக்கேல் டக்லஸ்) ஒரு பெண்ணுடன் (கிளென் க்லோஸ்) ஸ்னேகிதம் ஏற்பட இல்லறத்தில் வீசும் புயல் பற்றியது. இண்டீஸெண்ட் ப்ரொப்போஸலில் கதாநாயகி (டெமி மூர்), கதாநாயகன் (வுட்டி ஹேரல்சன்) இருவருக்கும் கனவு இல்லம் கட்ட ஆசை. ஆனால் பணமில்லை. லாஸ் வேகாஸில் சூதாட்டம் ஆடி பணம் சேர்க்கச் செல்லும் போது ஒரு கோடீஸ்வரர் (வில்லன்?) குறுக்கிட்டு, வுட்டியிடம், "ஒரு நாள் உன் மனைவியை கொடு. ஒரு மில்லியன் டாலர் தருகிறேன்" என்று பேரம் பேச, கதை சூடு (வேறு விதமாய்) பிடிக்கிறது. ஆக முதல் கதையில் கணவனும், இரண்டாவது கதையில் கணவன்,மனைவியும் தடுமாற, மிஞ்சியிருப்பது மனைவிதானே...அதுதான் அன்பெய்த்புல். [நான் ஆட்ரியனின் லொலிடா (Lolita) மற்றும் நைன் அண்டு ஹாப் வீக்ஸ் (Nine 1/2 Weeks) பார்க்கவில்லை]
தனது பதினோரு வருட சந்தோஷ வாழ்க்கையை டயான் அன்பெய்த்புல்லில் ஏன் பறி கொடுக்க விரும்பினாள் என்பது கேள்விக்குறி. எனக்கென்னவோ ஆட்ரியனை பாராட்டத் தோன்றுகிறது. பெண்களும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆண்களைப் போல் செயல்படுகிறார்கள் என்ற கருத்தை தைரியமாய் சொன்னமைக்கு.
அன்பெய்த்புல்
அனுராக், ஆட்ரியனைப் போல சூடான காட்சிகள் அமைக்கத் தவறவில்லை. ஒருமுறை இயக்குனர் பாக்கியராஜ் சொன்னார். ஆபாசமென்பது எல்லோர் முன்பு ஆரத் தழுவுவதோ, முத்தமிடுவதோ இல்லை. மூடிய போர்வையில், கட்டிலின் சப்தம் காட்டினால் அதுவே ஆபாசமென்று. ஆங்கிலத்தில் உள்ளங்கை நெல்லிக்கனியான சமாச்சாரத்தை, படு ஆபாசமாய் அனுராக் சித்தரிக்கிறார்.
டயானுக்கு நமது கலாச்சாரப்படி தடம் மாற காரணம் ஏதுமில்லை. ஆனால் அனுராக்கின் இந்தியர் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? நாயகியின் செயலை நியாயப்படுத்த வேண்டுமே? ஆஹா...இருக்கவே இருக்கிறான் கணவன். தன்னுடன் தரமான நேரம் (Quality Time) கழிப்பதில்லை. வேலையிலேயே முழுக் கவனம். தனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. இத்யாதி. இத்யாதி. மாஜி காதலனோ மல்லிகா மீது பைத்தியமாய் அலைபவன். (ஆமாம் காதலில் அனைவரும் அப்படித்தானே இருப்பார்கள்?) காரணங்கள் போதாதா? மல்லிகா டயான் ஆகிறாள். மேலும் நம்மை மல்லிகாவுடன் உடன் பட வைக்க இயக்குநர் வாசு போல குடும்ப சென்டிமெண்ட் வேறு. மல்லிகா தனது அக்கா இறந்தபின் குழந்தையுடனிருந்த கதாநாயகனை மணக்கிறாளாம். தியாகமாம். த்சோ... த்சொ...
இடைவேளையுடன் முடிந்த ஆங்கில கதையை, வணக்கம் வரை வளர்ந்ததற்கு வேண்டுமானால் அனுராக்கை பாராட்டலாம். ஆங்கிலத்தில் அருமையாய் கையாளப்பட்ட கணவன்-கள்ளக் காதலன் சந்திப்பு, விவ(கா)ரம் தெரிந்தவுடன் கணவன் மனைவியைக் கையாளும் அணுகுமுறையில் ஆட்ரியன் உண்மையிலேயே ஜொலிக்கிறார். அனுராக்கோ விரசத்தின் எல்லையைத் தொடுகிறார். மர்டர் நாயகனின் முகத்திலே தன் வீட்டில் மல்லிகா விட்டுச் சென்ற ஜட்டியை வீசுகிறான் மாஜி காதலன். மேலும் மனைவியை நேசிக்கத் தெரியாதவன் என்ற ஏச்சு வேறு. என்னே புரட்சி?
ஆட்ரியனின் நாயகன் கள்ளக் காதலனைக் கொன்றுவிட்டு, போலீஸ் மோப்பம் பிடிக்கு முன்னர் குடும்பத்துடன் மெக்ஸிகோ தப்பிச் செல்வதாய் அன்பெய்த்புல் முடிகிறது. அனுராக்கோ கள்ளக் காதலனை கொலை செய்ததாக பாங்காக் போலீஸ் மல்லிகாவை கைது செய்ய, கணவனோ தான் கொலை செய்ததாக அதே நேரத்தில் சரணடைய இடைவேளை விடுகிறார். அச்சமயம் பார்ப்போரை படம் திடுக்கிடச் செய்வதென்னமோ நிஜம்தான். அதற்குப் பிறகு ஏண்டா பார்த்தோம் என்று பிளேடு போடுவதும் நிஜம்தான். கதை தெரிந்த ரசிகர்கள் எழுந்து சென்று விடுவது உத்தமம். ஏனென்றால் அதிக ஸீன்கள் (?) இல்லை. செத்தவன் பிழைப்பதென்பது இந்திய சினிமாக்களில் செய்யப்பட்ட அறுதப் பழைய புரட்சி. அனுராக் அதையும் விட்டு வைக்கவில்லை. காதலனின் கொலை சஸ்பென்ஸ் உடையும்போது மல்லிகை கதம்பமாய் காதில் மணக்கிறது.
ஆட்ரியன் ஒரு மென்மையான (ஆங்கில அளவுகோலில் !) நீலப் படம் எடுப்பவர். அன்பெய்த்புல்லில் அதை மீண்டும் நிரூபித்தாலும், மற்ற படங்கள் போலில்லாமல் கதையாழத்தில் (ரொம்பத் தேவை?) கோட்டை விட்டார். அனுராக்கோ புரட்சி என்ற பெயரில் கள்ளப்புணர்ச்சியை நியாயப்படுத்த முயன்றுள்ளார். இதைவிட கோலிவுட்டில் வெளியாகும் மலிவான மலையாளப் படங்கள் எவ்வளவோ மேல். புரட்சிக் கருத்துகள் இல்லாததால். அப்படியே இருந்தாலும் யார் கண்டுகொண்டார்கள்?
மொத்தத்தில் மர்டர் ஒரு கலாசாரக் கொலை.
Wednesday, June 30, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment