Monday, August 02, 2004

மதுரை பாபாராஜ்

இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தியாசமாய் இவர் பூசை, புனஸ்காரமென்று ஊரை அடித்து உலையில் போடுபவரில்லை. தனது தனித்த தமிழ்த் திறமையால், பலரை அடித்துக் கட்டிப்போட்ட புதுக்கவிதை/மரபுக்கவிதை இயற்றும் சாமியார் இவர்.

சமீபத்தில் நண்பன் ராஜ், மதுரை பாபாராஜ் கவிதைகளில் சிலவற்றை அனுப்பியிருந்தான். பாபா தமிழ் இலக்கிய வட்டாரங்களில் மிகவும் பிரபலமான, ஆனால் ஆர்ப்பாட்டமே அறியாத மாமனிதர் இவர். ராஜ்க்கு தாய்மாமன் முறையானதால் எனக்கு இலகுவாக "அங்க்கிள்" ஆகிப் போனவர். அதென்னவோ அச்சிறு வயதில் எதோ ஒரு கோபத்தில் காவல்துறையினரை மட்டுமே "மாமா" என்று விளித்து வந்த காரணமாயிருக்கலாம்.

எட்டாவது படிக்கும் போதென நினைக்கிறேன். மதுரை தமிழ்ச் சங்கத்தில் கவிதை படிக்க வேண்டுமென, தலைப்பை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டான் ராஜ். நானும், ராஜும் கவிதை படிக்கவேண்டுமென்பது பாபா அவர்களின் ஆசை (ஆணை???). திரு பாபா அவர்கள் நான் கவிதை என்று கூறிக் கொண்டதை அப்போது படித்திருப்பாரென்னும் பலமான சந்தேகம் அன்று ஏற்பட்டது.

இருப்பினும் ஏதோ எழுதிச் சென்று சிறப்பாகப் படித்தது (தனி நடிப்பு - Mono Acting எனக்கு கை வந்த கலை) ஞாபகம் இருக்கிறது. கைம்பெண் மறுமணத்தை சிறுவனாய் மேசையைத் தட்டி, "மூடி உடைந்தால் நீவிர் ஜாடியை எறிவீரோ?" என்ற வரியை இரண்டு முறை திருப்பிச் சொல்லி கைத்தட்டலைப் பெற்ற போது நான் எங்கேயோ பறப்பதாய்ப் பட்டது. (இரண்டு முறை திருப்பிச் சொல்லி எனக்கு முன் பாடிய ஒரு புகழ் பெற்ற கவிஞர் கைத்தட்டல் பெற்றதை சிறுவனான நான் காப்பியடித்தேன்). தப்பாக எழுதி மொத்து வாங்கக் கூடாதெனெ கவிதையின் ஆரம்பத்திலேயே "இம்முயற்சி நடக்கத் துடிக்கும் ஒரு தவழும் குழந்தையின் கனவு. தவறி விழுந்தால் எள்ளி நகையாடாதீர். கைக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்", என்று சொல்லி விட்டேன். கைத்தட்டல் பாராட்டா, தூக்கி விடச் செய்த முயற்சியா நானறியேன். இக்கவிதை போல் பின்னர் எழுதிய பல கவிதைகளையும் நான் பத்திரப் படுத்தவில்லை. நேயர்கள் தப்பித்துக் கொண்டீர்கள். இன்றும் நான் எழுதுகிறேனென்றால் பாபா போன்றவர்கள் இன்றியமையா கிரியா ஊக்கிகளாக அமைந்த காரணத்தாலே என்றால் அது மிகையில்லை.

பாபாவின் கவிதைகளை சிறு வயதில் படித்து அர்த்தம் காண முயற்சி செய்திருக்கிறேன். இன்றும் முயற்சி செய்கிறேன். ஒரே ஒரு ஆதங்கம் இன்னும் மனதில் எழும்பி அடங்குகிறது. இம்மாமனிதரின் நிழலில் தமிழ் பயில ஒரு சிறிய சந்தர்ப்பம் கூட அமையவில்லையேயென்று...

மதுரையிலும், சென்னையிலும் இவரைச் சந்தித்தபோது மணித்துளிகளை வீணடித்து விட்டேனோவெனத் தோன்றுகிறது. இன்றும் அவரை நினைத்தால் ஒரு மரியாதை கலந்த பயம்தான் வருகிறது.

பாபாராஜ் அவர்கள் வலைப்பூவிற்கு வரப்போகிறாராம். நண்பன் ராஜ் சொன்னான். ஆஹா...இழந்த மணித்துளிகளை மீண்டும் பெறும் இன்பம் எனக்கு.

இதோ அவரின் சில கவிதைகள் (ராஜ் அனுப்பியது; அனுமதி கேட்கப் பயமானதால் அப்படியே வெளியிடுகிறேன்)

கைக்கிளை
============

திரைகடலோடி
திரவியம் தேடி
திசைக்கு ஒன்றாய்
பிள்ளைகள் விமானம் நோக்கி !கையசைத்து
வழியனுப்பிய
பெற்றோர்கள்
ஏக்கமுடன் காப்பகம் நோக்கி !

பெருந்தன்மை கோழைத்தனமல்ல
================================

பெருந்தன்மை இங்கே பெருங்கடலைப் போல
கரைகாணல் ஏது? கனிவும் - கருணையும்
கூட்டான வீரந்தான் ! கோழைத்தனமல்ல !
போற்றும் உலகம் புகழ்ந்து.

கொள்ளை அழகு
=================

பச்சை வயல்களில் பால்நிற நாரைகள்
இச்சை யுடனே இருந்தன - சட்டென
வெள்ளைச் சிறகை விரித்தன வானிலே!
கொள்ளை அழகெனக் கூறு.

இதுதான் வாழ்க்கையா?
========================

நாளை எனக்கென்ன? நாளை உனக்கென்ன?
கேள்வி துளைத்தெடுத்துக் கேட்கிறது - வாழ்க்கையிங்கு
நூலறுந்த பட்டமா? நூலேணி ஆட்டமா?
கோலத்தின் காட்சியென்ன கூறு.

மாலையாக்கும் அற்புதம்
=========================

சிங்காரப் பத்துவிரல் சேர்த்து நடம்புரிய
வண்ணவண்ணப் பூக்களை வாகாக - கண்கவரும்
மாலையாக்கி நம்மை மலைக்கவைக்கும் அற்புதத்தை
வாழ்க்கையாக்கி வாழ்கின்றார் பார்.

வாருங்கள் பாபா !!! உங்கள் எழுத்தை இணையத்தில் படிக்க ஆர்வமாயுள்ளேன். பின்னூட்டதிலாவது தைரியமாய் வினாவெழுப்பி உங்களிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்ள முயல்வேன்.

நன்றியுடன்,
வந்தியத்தேவன்.

No comments: