Wednesday, June 30, 2004

சினிமாவும் கலாச்சாரமும்

poli
மர்டர்
வெகு நாட்களுக்குப் பின் "மர்டர்" என்னும் இந்திப் படம் பார்த்தேன். உடனே கெட்ட பையன் என்று கூறி விடாதீர். மகேஷ் பட்டின் தயாரிப்பில், அனுராக் பாசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் இது. பாங்காக்கில் வாழும் கல்யாணமான இந்தியப் பெண், தனது முன்னாள் காதலனுடன் (சூழ்நிலையால்?) இணைய (புனைய?) பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மொத்தத்தில் "மறுபடியும்" படத்தின் மகடூ முன்னிலை தான் "மர்டர்".

இப்படத்தின் விமர்சனங்கள் ஆஹா...ஓஹோ ரகம். போட்ட காசு வசூலென ரசிகர்கள் புளங்கிதமடைந்தனர். புரட்சிக்கதையெனெ பலரும் புகழாரம் சூட்டினர்.

உண்மையில் "மர்டர்" இதற்கெல்லாம் தகுதியானதுதானா?

ஆராயுமுன் ஒரு கொசுறு செய்தி. ஆட்ரியன் லைன் இயக்கத்தில் வெளியான படம் "அன்பெய்த்புல்" (Unfaithful). ரிச்சர்ட் கேர் மற்றும் டயான் லேன் முன்னணி கதாபாத்திரங்கள். கதாநாயகன் சொந்தமான (குண்டு துளைக்கா) கார் கம்பெனி வைத்து இரவு பகலாய் உழைப்பவர். குடும்பத்தின் மீது தணியாத பாசமுள்ள சராசரி மனிதன். கதாநாயகி தனது கணவன், குழந்தை, அலுவல் பணி என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்க, புயலொன்று (உண்மையான) குறுக்கிடுகிறது. புயலில் கடையில் வாங்கிய பொருட்கள் சாலையில் சிதற, அழகான வாலிபன் குறுக்கிடுகிறான். புயலினால் ஏற்பட்ட முழங்கால் சிராய்ப்பிற்கு மருந்து போடும் சாக்கில் "ரகஸிய ஸ்னேகிதம்" ஆரம்பிக்கிறது. ஆட்ரியன் தனக்கே உரிய பாணியில் ஸ்னேகித்தை "உரித்து" காட்டியிருப்பார் இப்படத்தில்.

இப்போது பளிச்சென்று உங்களுக்கு புரிந்திருக்குமே? மர்டர் என்பது அன்பெய்த்புலின் இந்திய பதிப்பென்று. அங்கே ஆட்ரியன் இங்கே அனுராக். அங்கே டயான். இங்கே மல்லிகா (தமிழில்லை. முழுப் பெயர் மல்லிகா ஷ்ரெவத்).

ஆட்ரியனின் முந்தைய படங்களான பேடல் அட்ராக்ஷன் (Fatal Attaction) மற்றும் இண்டீஸெண்ட் ப்ரொப்போஸல் (Indecent Proposal) மாதிரியல்லாமல் அன்பெய்த்புல் சிறிதாய் வித்தியாசப்பட்ட படம். பேடல் அட்ராக்ஷனில் கதாநாயகன் (மைக்கேல் டக்லஸ்) ஒரு பெண்ணுடன் (கிளென் க்லோஸ்) ஸ்னேகிதம் ஏற்பட இல்லறத்தில் வீசும் புயல் பற்றியது. இண்டீஸெண்ட் ப்ரொப்போஸலில் கதாநாயகி (டெமி மூர்), கதாநாயகன் (வுட்டி ஹேரல்சன்) இருவருக்கும் கனவு இல்லம் கட்ட ஆசை. ஆனால் பணமில்லை. லாஸ் வேகாஸில் சூதாட்டம் ஆடி பணம் சேர்க்கச் செல்லும் போது ஒரு கோடீஸ்வரர் (வில்லன்?) குறுக்கிட்டு, வுட்டியிடம், "ஒரு நாள் உன் மனைவியை கொடு. ஒரு மில்லியன் டாலர் தருகிறேன்" என்று பேரம் பேச, கதை சூடு (வேறு விதமாய்) பிடிக்கிறது. ஆக முதல் கதையில் கணவனும், இரண்டாவது கதையில் கணவன்,மனைவியும் தடுமாற, மிஞ்சியிருப்பது மனைவிதானே...அதுதான் அன்பெய்த்புல். [நான் ஆட்ரியனின் லொலிடா (Lolita) மற்றும் நைன் அண்டு ஹாப் வீக்ஸ் (Nine 1/2 Weeks) பார்க்கவில்லை]

தனது பதினோரு வருட சந்தோஷ வாழ்க்கையை டயான் அன்பெய்த்புல்லில் ஏன் பறி கொடுக்க விரும்பினாள் என்பது கேள்விக்குறி. எனக்கென்னவோ ஆட்ரியனை பாராட்டத் தோன்றுகிறது. பெண்களும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆண்களைப் போல் செயல்படுகிறார்கள் என்ற கருத்தை தைரியமாய் சொன்னமைக்கு.

asal
அன்பெய்த்புல்
அனுராக், ஆட்ரியனைப் போல சூடான காட்சிகள் அமைக்கத் தவறவில்லை. ஒருமுறை இயக்குனர் பாக்கியராஜ் சொன்னார். ஆபாசமென்பது எல்லோர் முன்பு ஆரத் தழுவுவதோ, முத்தமிடுவதோ இல்லை. மூடிய போர்வையில், கட்டிலின் சப்தம் காட்டினால் அதுவே ஆபாசமென்று. ஆங்கிலத்தில் உள்ளங்கை நெல்லிக்கனியான சமாச்சாரத்தை, படு ஆபாசமாய் அனுராக் சித்தரிக்கிறார்.

டயானுக்கு நமது கலாச்சாரப்படி தடம் மாற காரணம் ஏதுமில்லை. ஆனால் அனுராக்கின் இந்தியர் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? நாயகியின் செயலை நியாயப்படுத்த வேண்டுமே? ஆஹா...இருக்கவே இருக்கிறான் கணவன். தன்னுடன் தரமான நேரம் (Quality Time) கழிப்பதில்லை. வேலையிலேயே முழுக் கவனம். தனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. இத்யாதி. இத்யாதி. மாஜி காதலனோ மல்லிகா மீது பைத்தியமாய் அலைபவன். (ஆமாம் காதலில் அனைவரும் அப்படித்தானே இருப்பார்கள்?) காரணங்கள் போதாதா? மல்லிகா டயான் ஆகிறாள். மேலும் நம்மை மல்லிகாவுடன் உடன் பட வைக்க இயக்குநர் வாசு போல குடும்ப சென்டிமெண்ட் வேறு. மல்லிகா தனது அக்கா இறந்தபின் குழந்தையுடனிருந்த கதாநாயகனை மணக்கிறாளாம். தியாகமாம். த்சோ... த்சொ...

இடைவேளையுடன் முடிந்த ஆங்கில கதையை, வணக்கம் வரை வளர்ந்ததற்கு வேண்டுமானால் அனுராக்கை பாராட்டலாம். ஆங்கிலத்தில் அருமையாய் கையாளப்பட்ட கணவன்-கள்ளக் காதலன் சந்திப்பு, விவ(கா)ரம் தெரிந்தவுடன் கணவன் மனைவியைக் கையாளும் அணுகுமுறையில் ஆட்ரியன் உண்மையிலேயே ஜொலிக்கிறார். அனுராக்கோ விரசத்தின் எல்லையைத் தொடுகிறார். மர்டர் நாயகனின் முகத்திலே தன் வீட்டில் மல்லிகா விட்டுச் சென்ற ஜட்டியை வீசுகிறான் மாஜி காதலன். மேலும் மனைவியை நேசிக்கத் தெரியாதவன் என்ற ஏச்சு வேறு. என்னே புரட்சி?

ஆட்ரியனின் நாயகன் கள்ளக் காதலனைக் கொன்றுவிட்டு, போலீஸ் மோப்பம் பிடிக்கு முன்னர் குடும்பத்துடன் மெக்ஸிகோ தப்பிச் செல்வதாய் அன்பெய்த்புல் முடிகிறது. அனுராக்கோ கள்ளக் காதலனை கொலை செய்ததாக பாங்காக் போலீஸ் மல்லிகாவை கைது செய்ய, கணவனோ தான் கொலை செய்ததாக அதே நேரத்தில் சரணடைய இடைவேளை விடுகிறார். அச்சமயம் பார்ப்போரை படம் திடுக்கிடச் செய்வதென்னமோ நிஜம்தான். அதற்குப் பிறகு ஏண்டா பார்த்தோம் என்று பிளேடு போடுவதும் நிஜம்தான். கதை தெரிந்த ரசிகர்கள் எழுந்து சென்று விடுவது உத்தமம். ஏனென்றால் அதிக ஸீன்கள் (?) இல்லை. செத்தவன் பிழைப்பதென்பது இந்திய சினிமாக்களில் செய்யப்பட்ட அறுதப் பழைய புரட்சி. அனுராக் அதையும் விட்டு வைக்கவில்லை. காதலனின் கொலை சஸ்பென்ஸ் உடையும்போது மல்லிகை கதம்பமாய் காதில் மணக்கிறது.

ஆட்ரியன் ஒரு மென்மையான (ஆங்கில அளவுகோலில் !) நீலப் படம் எடுப்பவர். அன்பெய்த்புல்லில் அதை மீண்டும் நிரூபித்தாலும், மற்ற படங்கள் போலில்லாமல் கதையாழத்தில் (ரொம்பத் தேவை?) கோட்டை விட்டார். அனுராக்கோ புரட்சி என்ற பெயரில் கள்ளப்புணர்ச்சியை நியாயப்படுத்த முயன்றுள்ளார். இதைவிட கோலிவுட்டில் வெளியாகும் மலிவான மலையாளப் படங்கள் எவ்வளவோ மேல். புரட்சிக் கருத்துகள் இல்லாததால். அப்படியே இருந்தாலும் யார் கண்டுகொண்டார்கள்?

மொத்தத்தில் மர்டர் ஒரு கலாசாரக் கொலை.

Friday, June 25, 2004

தேடல்

முகம் தெரியாத
உன்
முகவரியை
எத்தனை நாள்
தேடுவது?

தொலைத்தவரும்
கிடைக்கப் பெறாதவரும்
தேடுகின்றனர்
நானோ என்னையே
தொலைக்க
உன்னைத் தேடுகின்றேன்

இது
வாழ்க்கையைத் தோற்ற
ஞானியின் தேடலா?
வார்த்தையைத் தொலைத்த
கவிஞனின் தேடலா?
இல்லை
தொட்டில் குழந்தை
தொட்டிச் செடியின்
சுதந்திரத் தேடலா?

தெரியவில்லை
இருப்பினும்
தேடுகிறேன்

உனது தேடலில்
ஒவ்வொரு நாளும்
ஒளியாண்டாய் நகர
நாட்காட்டிதான் பாவம்
நாளும் இளைக்கிறது

இந்த மூச்சுக்காற்று
உடலைத் தொலைக்குமுன்
முகம் காட்டிவிடு
இதயத்தின்
இறுதித்துடிப்பாவது
உன் பெயராய்
இருக்கட்டும்
வெள்ளை உள்ளம் - பகுதி 4

"சுகன்யா, நான் குமார் பேசுறேன்"

"சொல்லுங்க"

"உங்களோடு கொஞ்சம் தனியா பேச வேண்டும்"

"எங்கே சந்திக்கலாம்"

குரலில் சிறு பதட்டம் கூட இல்லை. இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல. "ஹோட்டல் புளூ நைல், அரை மணி நேரத்தில்"

"நோ ப்ராப்ளம்"

உணவுக்கான ஆர்டர் கொடுத்தபின் எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பினான். ஹாய், ஹலோ என்று உதட்டளவில் பேசித்தான் பழக்கம். "காலையில் நீங்க கேட்டதைப் பத்தி..."

"என்ன முடிவு எடுத்தீர்கள்?"

முடிவு கட்டி விடலாமெனப் பார்த்தால், முடிவு எடுக்கச் சொல்கிறாளே? விமலாவின் முகம் மின்னிச் சென்றது. நீண்ட பெருமூச்சுடன்,"முதல்ல நீங்க என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்" விலாவாரியாக சொல்லி முடித்தான்.

உணவு வந்தது. "நீங்க சொல்லியது அனைத்தும் எனக்கு முன்பே தெரியும்"

அம்மா சொல்லியிருப்பாளோ? ஒருவேளை நடப்பதில் அவளுக்கும் பங்குண்டோ?

"தெரிஞ்ச பின்னால் அனுதாபம் வந்திருக்க வேண்டுமே? எனக்கு அடுத்தவங்களோட அனுதாபம் பிடிக்காது. தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று என் கதையை உன்னிடம் சொல்ல வேண்டியதாகிவிட்டது. கண்டிப்பாய் அனுதாபம் தேடியல்ல"

"ப்ச்...அனுதாபம்னா உச் கொட்டிவிட்டு போயிருக்கலாம்தான். குமார்...உறவுகள் மலரவோ, கருகவோ உணர்ச்சிகளும் ஒரு காரணம். அது கோபமோ, சந்தோஷமோ, வருத்தமோ, அனுதாபமோ வாக இருக்கலாம். பேச்சுக்கு சொல்றேன். நீங்க அழகாய் இருக்கீங்க. கை நிறைய சம்பாதிக்கிறீங்க அதனால்தான் காதல் வந்ததுன்னு சொன்னால் நம்புவீர்களா?"

"குழப்புறே சுகன்யா"

"இல்லை. நீங்களே குழப்பிக் கொள்றீங்க. ஆமாம் நீங்க ஏன் மறுமணம் செய்துகொள்ளவில்லை?"

"அதான் சொன்னேனே...விமலாவோட நான் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்"

"என்னோட ஈர்ப்புக்கு இதுவும் காரணம்னு வச்சுக்கங்களேன். விமலா மேல நீங்க இன்னும் வைத்திருக்கும் காதல். தனது உணர்வுகளை மரத்து போகவைத்து, குழந்தை வளர்ப்பின் சங்கடங்களை சமாளித்து...காதல்னா என்ன குமார்? பரஸ்பரம் அன்பு செய்தல், பகிர்தல், விட்டுக் கொடுத்தல்...இன்று உங்களோட சுக துக்கங்களை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது தவறா?"

இவள் ஷணத்தில் முடிவெடுத்தது போல் தோன்றவில்லை. நெற்றி சுருக்கி நிறைய யோசித்தான்.

"அப்படி உங்களுக்கு இதில் விருப்பமில்லையென்றால் பரவாயில்லை. என்ன ஆச்சர்யமாயிருக்கா? காதல் விளக்கத்தின் மூன்றாம் பகுதி பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல்தானே. என்னோட அன்பை மறுதலித்த காதலர்க்காக என் திருமணத்தை விட்டுக் கொடுக்கிறேன். எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை. காதல்ங்ற பயணத்தில் திருமணம் ஒரு ஸ்டேஜ். ஆனா கடைசி ஸ்டேஜ் அல்ல. காதலுக்கு முற்றுப் புள்ளி கிடையாது. " சற்றே ஆசுவாசப் படுத்தியபின் தொடர்ந்தாள். "ஆனா ஒன்று மட்டும் சொல்வேன். நீங்க மனைவி மீதுள்ள காதலால் வாழ்வது மாதிரி நானும் வாழ்வேன் உங்கள் நினைவுகளை சுமந்தபடி. உள்ளத்தில் காதலனை இழந்த விதவையாய்...என்றாவது எனது காதலை நீங்கள் அங்கீகரிப்பதாயிருந்தால் அழைப்பு அனுப்புங்கள். அதுவரை காத்திருப்பேன்...வெள்ளை உள்ளத்துடன்..."
வெள்ளை உள்ளம் - பகுதி 3

அம்மாவின் அண்டை வீட்டு சிநேகிதம் விபரீதமாகிவிட்டதோ?

"நேத்து சாயங்காலம் திடீர்னு விக்னேஷ் நிறுத்தாம அழுதப்போ சுகன்யாதான் ஆட்டோவப் புடிச்சு, ஆஸ்பத்திரி கூட்டிப் போய், டாக்டரிடம் பேசி...ஐயோ சாமி...எனக்கு கை காலு ஓடல தம்பி...அவதான்...கடவுளா வந்தாப்பா", என்று அம்மா சொன்ன போது இயல்பான மனிதத்தன்மைக்கு மனமாற வாழ்த்தினேன்.

ஒரு வேளை இது பச்சாதாபமோ? எண்ணங்கள் அலை மோதியது. விக்னேஷின் அழுகுரல் குமாரை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. சமைலறையிலிருந்து ஓடிவந்த அம்மா பிரிஜ்ஜிலிருந்து பால் புட்டியெடுத்து வீதியில் போகும் வாகனங்களைக் காட்டியபடி புகட்ட குமார் புதைந்திருந்த நினைவுகளிலிருந்து மீண்டான்.

கொஞ்ச நேரத்தில் விக்னேஷ் உறங்கிப் போனான். திடீரென்று குமாருக்கு அந்த ஐடியா முளைத்தது. நாம் ஏன் சுகன்யாவுடன் பேசிப்பார்க்க கூடாது? காலையில் காரை ஸ்டார்ட் செய்யும் போது சுகன்யாவின் ஒற்றை வரி கேட்டவுடன் பேசியிருக்க வேண்டும். மனதுக்குள்ளே திட்டிக் கொண்டான்.

"அம்மா நான் மறுபடி ஆபீஸ் போறேன். லஞ்ச் அங்கேயே பாத்துக்கறேன்"

"தலைவலி எப்படி இருக்குப்பா?"

"சரியாயிடுச்சிம்மா...போயிட்டு வரேன் "

ஆபீஸில் நுழைந்த குமாரை வினோதமாய் ஏறிட்டாள் கவிதா. கவனியாமல் தனது அறையில் நுழைந்தான் குமார். டெலிபொன் டைரெக்டரியில் துழாவி சுகன்யாவின் ஆபீஸை டயல் செய்ய முதல் முறையிலேயே தொடர்பு கிட்டியது.


"சுகன்யாவோட பேசணும்"

இரண்டு நிமிட இசைக்குப்பின் சுகன்யா ஹலோ சொன்னாள்.
வெள்ளை உள்ளம் - பகுதி 2

அம்மா கொடுத்த காபியைப் பருகியபடி தனது முன்னாள் மனைவியின் போட்டோவை ஏறிட்டான் குமார். நினைவுகள் பின்னோக்கி ஓடின. விமலா...விமலா...விமலா...உள்ளம் விக்கித்தது.

அப்பப்பா...நெஞ்சமெலாம் நீக்கமற வியாபித்த விமலா. எங்கும் விமலா. எதிலும் விமலா. என்ன மாயம் செய்தாயடி? கல்யாணமான முதல் வருடம் ஓடியதே தெரியவில்லை. விக்னேஷ் என்ற புது வசந்தம் சேர்ந்தது. எங்கள் சந்தோஷம் கடவுளுக்கும் பொறுக்க முடியவில்லை போலிருக்கிறது.

வழக்கம் போல் ப்ரியமானவளிடம் விடை பெற்று அலுவலகம் சென்று அரைமணி நேரம் கூட ஆகவில்லை. இடியாய் வந்தது செய்தி. பக்கத்துத் தெருவிலிருந்த மார்கெட்டில் காய்கறி வாங்கி வரும் வழியில் தண்ணீர் லாரியொன்று எமனாய் மாறி தவிக்கவிட்ட செய்தி.

ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். இதைப் பொய்க்கணக்காக்கிய விமலாவை போஸ்ட்மார்ட்டம் முடித்து பொட்டலமாய் பார்த்தபோது அதிர்ச்சியில் அழக்கூட தோன்றவில்லை. விமலாவின் முகம் அப்போதும் சிரிப்பது போல்தான் தோன்றியது.

அம்மா சொன்னாள்,"வாய் விட்டு அழுதுடு தம்பி".

விமலாவின் காலைப் பார்த்தேன். ஒரு கொலுசு காணவில்லை. காது வலித்தது. என் தேவதையைப் பறித்த காலன் என்னும் கடவுளைச் சபித்தேன். முழுதாய் மூன்று வருடம் கூட முடியவில்லை. வசித்த இல்லம் விமலாவை மறுபடி மறுபடி ஞாபகப்படுத்த வீடே கசந்தது. இதுதான் விதியா?

சென்னையிலிருந்து பெங்களூர் குடி பெயர்ந்தான். அலுவலகம், வீடு, அம்மா, விக்னேஷ் என்று தனது உலகத்தை சுருக்கிக் கொண்டான்.

"தம்பி ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

இப்படி பலமுறை சொன்ன அம்மாவை அக்னிப்பார்வையால் அமைதிப்படுத்தினான். ஹீம்...விமலா இடத்தில் இன்னொருத்தியா? சே...நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆனால் இன்று???
வெள்ளை உள்ளம் - பகுதி 1

"உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்", என ஒற்றை வரியில் பக்கத்து வீட்டு சுகன்யா சொல்ல மூர்ச்சையாகாத குறையாய் குமார் விழித்தான். இளம் பெண்ணின் மனதைக் கலைத்து விட்டாய் பாவியெனெ உள்மனம் லேசாய் குத்தியது.

அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. சாமகாலையில் ஒலிக்கும் ஆலய மணி போல அந்த ஒற்றை வரி மட்டும் மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. தேவையின்றி சுகன்யாவை சஞ்சலப்படுத்தி விட்டேனா?

தான் உள்ளே வந்ததைக் கூட கவனியாத குமாரை வியப்புடன் கவிதா ஏறிட்டாள். கவிதா குமாரின் அந்தரங்க உதவியாளர்.

"என்ன குமார். டல்லாயிருக்கீங்க?"

திடுக்கிட்டு நிமிர்ந்த குமார், "சாரி கவிதா. ஏதோ சிந்தனை. இன்றைய ப்ரொக்ராம் எல்லாம் கேன்செல் செய்துடு ப்ளீஸ். எனக்கு மனசு சரியில்லை. வீட்டிற்கு போகிறேன்" என்றான்.கவிதா குழப்பமுடன் தலையாட்டினாள்.

காரில் குமார் வீடு செல்லுமுன் ஆயிரம் சிந்தனைகள் அலை மோதின. சுகன்யாவின் வயது 24 இருக்கலாம். முது நிலை பட்டதாரி. வீட்டிற்கு ஒரே பெண். உள்ளூரிலேயே கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை. மிஞ்சிப் போனால் குமாருடன் இரண்டு வருடப் பழக்கம்.

வழக்கத்திற்கு மாறாய் காலையிலேயே வீடு திரும்பிய மகனை கவலையுடன் நோக்கினாள் காவேரி. "என்னப்பா உடம்புக்கு சுகமில்லையா?"

"ஒண்ணுமில்லையம்மா லேசா தலைவலி. அதான்"

"சூடா காபி ஒண்ணு தரட்டுமா? தலைவலி பறந்துடும் தம்பி"

"சரிம்மா". காப்பி அவசியம் தேவைப்பட்டது.

ஹாலில் சரிந்த குமாருக்கு எதிரே மாலையிடப்பட்ட விமலா போட்டோ, "என்னங்க அவ்வளவுதானா?", என்று சிரிப்பது போல் பட்டது.

Thursday, June 24, 2004

கானல் கனவு

இருட்டறையில்
அகல்விளக்கு
இருளைக்
கொன்றதாய்
இறுமாப்பு

அமைதியாய்
அதனடியே
ஆடியது
நிழல்
சந்தேகம்

ஆமாம்
இதயத்தை
இறுக்கமாகத்தானே
வைத்தேன்
விருட்சமாய்
உன்
நினைவுகள்
வெடித்த
இதயப் பாறை
ஒரு வழியாக நானும் இணையத்தில் புது வீடு கட்டிவிட்டேன். எனது சரித்திரப் பதிவுகளுக்கு நிறைய படங்கள் தேவைப்படுகிறது. படங்கள் bandwidth காரணமாக நேயர்கள் பார்க்க முடியவில்லை. பிரச்சினைகள் தவிர்க்க புது மனை புகுந்துவிட்டேன். வந்தியத்தேவன் தொடர்ந்து இதே சுட்டியிலும் வலம் வருவான்.

நேரம் கிட்டினால் புது இல்லத்தை எட்டிப் பாருங்களேன்.
அன்புடன்,
வந்தியத்தேவன்.
06/24/2004.
அமாவாசை

கடன் வாங்கியே
காலம் தள்ளும்
சுந்தர நிலவின்
சுயரூபம் தெரிந்தது

சூரிய அழகிருந்தும்
கடன் தரமறுக்கும்
கருமி நட்சத்திரங்கள்
கண் சிமிட்டின

காணாமல் போன
காதல் நிலவினை
கண்டுபிடிக்கும் நோக்குடன்
வெண்மேகக் கூட்டங்கள்

அடடே...
அமாவாசை
அழகுதான் என்
காதலியைப் போலவே

Friday, June 18, 2004

நீ இறந்தால் தீபாவளி

ரா --- ரபீந்திர சிங்


இவன் 20 வருடங்களாக இந்தியாவின் உளவு நிறுவனமான ரா'வில் (Research Analysis Wing) பணியாற்றி, இந்தியாவையே உளவு பார்த்த டபுள் ஏஜெண்ட். அமரிக்க உளவு நிறுவனமான CIA'வின் கையாளாய் இருந்து வருபவன். ஜூனியர் விகடனிலும், ஹிந்துவிலும் இவனைப் பற்றி பத்தி பத்தியாகப் பதிக்கிறார்கள்.

நினைக்கவே நெஞ்சம் கூசுகிறது. ரா'வில் இணைச் செயளாளர் அந்தஸ்து வரை வளர்ந்த இவன் ஒரு முன்னாள் இராணுவ வீரன். மேஜராய் இருந்த போது புளூ ஸ்டார் ஆபரேஷனில் கலந்து கொண்டவன். கப்பற்படையில் லெப்டினென்ட்டாய் பணியாற்றிய நான் இதைப் படித்த போது குன்றி போய்விட்டேன். எப்படி இவனால் இத்தகைய பாதகச் செயல் செய்ய முடிகிறது?

தேசப் பற்று என்பது தாய் பக்தியைப் போன்றது. தாயைக் கூட்டிக் கொடுக்கும் செய்கையைச் செய்த இவனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

பாகிஸ்தானோடு போர் புரியும் போது எண்ணற்ற முஸ்லிம் வீரர்கள் இந்தியாவிற்காக போரிட்டு மாண்டனர். அப்போது மதம் நாட்டுப் பற்றுக்குக் குறுக்கே வரவில்லை. இந்திய அமைதிப்படையில் பல தமிழ் வீரர்கள் தங்கள் கடமையை செய்தார்கள். வம்சாவழி தேசப்பற்றுக்குக் குறுக்கே வரவில்லை. நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்பவர் மத்தியில் இப்படியும் சில மிருகங்கள்.

செய் அல்லது செத்து மடி, The more you sweat in peace the less you bleed in war போன்ற பல்வேறு பொன்மொழிகளை நான் இராணுவத்தில் தான் கற்றுக் கொண்டேன். உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் விமான தளத்தைக் கொண்டிருக்கும் லே (Leh) ஆகட்டும். விஷ், விஷ் என்று எப்போதும் புல்லட்டுகள் பறக்கும் காஷ்மீர் எல்லையாகட்டும். முப்படைகள், எல்லையோர காவல் படை, இன்னும் கணக்கில்லா "Support Groups" இவற்றிலிருந்து பலர் தமது கடமையை செம்மையாகச் செய்வதால்தான் நாம் ஒழுங்காக உண்டு உறங்க முடிகிறது. இலஞ்சம்/கையூட்டு என்று காசுக்கு சோரம் போபவரே...யோசித்துப் பாருங்கள்...காஷ்மீரில் ஒரே ஒரு இராணுவ வீரன் கையேந்தினால் என்ன நடக்குமென்று...

ரபீந்திர சிங் அமெரிக்காவிற்கு பறந்து விட்டான். நேபாள எல்லையில் அவனுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டு ராஜ மரியாதையுடன் பயணம் (இதிலெல்லாம் அமெரிக்கா விசா கோட்டா பார்ப்பதில்லை). அவரது பெண் அமெரிக்காவிலேயே படித்து, கல்யாணம் செய்து செட்டில் ஆகி விட்டாராம்.

ஐயா! அம்ரிஸ்தாரின் ரகுநாதத் தொண்டைமானே...உமது மனைவி மற்றும் மகளை அமெரிக்காவிற்காக கூட்டிக் கொடுத்து விடாதீர்கள். அமெரிக்கா பற்றித் தெரிய வேண்டுமென்றால் மாதத்திற்கு $400,000 (ஈராக் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்புக்காக) கொடுத்து உங்களை மாதிரியே இருந்த ஈராக் டபுள் ஏஜெண்ட் "அகமது சலாபி" கதை கேளுங்கள். சலாபி ஈரானுக்காக உளவு பார்த்ததாகச் சொல்லி CIA பெரிய ரெய்டு நடத்தியது. நேற்று வரை "ராஜா" மாதிரி இருந்த சலாபி இப்போது "குற்றவாளி". பல வருடங்களாக (உங்களைப் போல) பணியாற்றியதற்கான பரிசு சலாபிக்கு விரைவில் கிட்டி விடும். அது அதிகாரப்பூர்வமாகவா (பல வருடம் ஜெயில் அல்லது மரண தண்டனை) இல்லை அதிகாரப்பூர்வமற்றோ...(அடையாளங் காணப்படாத நபர்களால் சுடப்பட்டு இறந்தார்).

எப்படியோ நீ வதம் செய்யப்படும் நாள் எனக்கு இன்னுமொரு தீபாவளி...

Sunday, June 13, 2004

அழுகை

பிறந்த போது
தெரிந்த பாஷை

துன்பத்தின்
வெளிப்பாடா
அழுகை?
அதீத இன்பத்திலும்
கண்ணீர்

அழுகை
நாதமா?
நாராசமா?

சுகத்தின் சுவடுகளை
கண்ணீர் கலைக்குமா?

ஆண்களுக்கு அழுகை
அவலமா?
பெண்களுக்கு அழுகை
கவசமா?

அழுகை
அவசியமா?
அனாவசியமா?

எனக்கொரு
இலட்சியமுண்டு
சிதை செல்லுமுன்
நிம்மதியாய் ஓர்முறை
சிரித்து விட வேண்டும்
நான் யார்

நல்ல கேள்வி
விந்து தந்த
தந்தையைக் கேட்டேன்
விடை கிட்டவில்லை

விளைத்து களை(ளி)த்த
தாயைக் கேட்டேன்
விடை விளையவில்லை

வந்தார் சென்றார்
உற்றார் உறவினர்
நண்பர் நல்லவர்
நவிலவில்லை

படைத்த பாவி
விடை கொடுக்கவில்லை
விடை கிட்டியவன் சொன்னதோ
புரியவில்லை

வந்ததும் தெரியாமல்
வாழ்வதும் புரியாமல்
நாளும் யோசிக்கின்றேன்
நான் யார்?
நன்றி

இனியவளே

இருந்தேன்
முன்பொரு காலத்தில்
சோலை வனமாய்

பசுமைப் போர்வை
புள்ளினங்களின் கானம்
மும்மாரி மழை
வாய்க்கால் வரப்பு
இன்னும் பல

காலம் கடந்தது

ஆசை மரங்களை
அறுத்தார்கள்
கிருமி நாசினியால்
விடமிட்டார்கள்
உரமிட்டு உயிர்
பறித்தார்கள்
செயற்கை மழை வேண்டி
மேகம் கலைத்தார்கள்

வாடினேன்
வதங்கினேன்
தேம்பினேன்
திணறினேன்

பசுமை பறந்தது
புள்ளினம் மறந்தது
மாரி ஓய்ந்தது
வாய்க்கால் காய்ந்தது

இன்று நான்
மேய்ந்த நிலமல்ல
காய்ந்த புலம்
நந்த வனமல்ல
வெந்த மனம்

திசை மாறிய மேகமே
நான் உன் நிலமல்ல
பாதை தவறிய பறவையே
நான் உன் பலமல்ல
விசை மாறிய கலமே
நான் உன் காற்றல்ல

இருப்பினும் நன்றி
இந்த
கடைசி நிமிடங்களில் என்னை
கடந்து போனதற்கு
வாழ்க்கை

பால்ய பருவத்தில்
கட்டிய மணல் வீடு கரைந்த போது
பள்ளிப் பருவத்தில்
புத்தகம் நடுவே புதைந்த போது
கல்லூரிப் பருவத்தில்
காதலெனும் கானலில் கலந்த போது
அலுவல் பருவத்தே
கணிணி எண்களால் களைப்படைந்த போது
திருமணப் பருவத்தே
திருமதியின் திருவிளையாடலில் திகைத்த போது
நரைமுடி பருவத்தே
பிள்ளைப் பாசத்தால் மூப்படைந்த போது
சாகாட்டுப் பருவத்தே
வசித்த மண்ணை சுவாசித்த போது
யோசித்தேன்

ஏக்கத்தில் பாதி
தூக்கத்தில் மீதி

ஆமாம்
என் வாழ்க்கையை
யார் வாழ்ந்தது?

Wednesday, June 09, 2004

நன்மைகள்

இன்று எனக்கு
வித்தியாசமான விடியல்
அழுது வடியாமல்

திவ்ய சுகந்தம்
ஏற்றிய விளக்கு
புதிய ஆடை
மலர் மாலை

உச்சியிலமர்ந்தும்
உயிரெடுக்காத மனைவி
அருகே அமர்ந்தும்
அறுக்காத அலுவல் நண்பர்கள்
புறங்கூறா உறவினர் கூட

இவையனைத்தும் புதியது
முன்பின் அறியாதது
இத்தனை நன்மைகள்
இருப்பதை அறிந்திருந்தால்
எப்போதோ நான்
இறந்திருப்பேனே

வந்தியத்தேவன்

Tuesday, June 08, 2004

வலி

இந்த வலி
எனக்கு மட்டும்
பட்டறிந்த பத்தாம்பசலியாக
பட்டறிந்த காரணத்தால்
இந்த வலி
எனக்கு மட்டும்

பேனாவின் உரசல்
பேப்பருக்கு வலி
தபால் தலைகளுக்கு
முத்திரை வலி
எனக்கோ
நித்திரை வலி

காலில் வலி
ஓய்வில் ஓயலாம்
கண்ணின் வலி
இமைகளில் இறங்கலாம்
இது இதயவலி
இறக்கி வைக்க
என்ன வழி?

வலிகள் பல
வடிவங்களில்
விடியல் மட்டும்
வெகு தூரத்தில்

இந்த வலி
எனக்கு மட்டும்
பகிர முடியாத
பாரம்
வலி தாங்கிக்காகவே
வடிக்கப்பட்ட பாரம்

ஓ...
இதுவொரு
பிரசவ வலியோ?
இந்த வலியென்
இறப்புக்கணக்கெழுதாதோ?

கோடை இடியில்
வானம் பிளப்பதில்லை
சூரியக் காய்ச்சலில்
பூமி எரிவதில்லை
வலியேவுன் வெப்பமுன்
நானும் கரையேன்

இந்த வலி
எனக்கு மட்டும்
இன்னுமொரு அவதாரத்திற்கு

வந்தியத்தேவன் (23/04/93 2310 Hrs.)

Monday, June 07, 2004

பஸ்ஸ்டாப் பார்வைகள்

காலைகள் மாலைகள்
காளைகள் ஊர்வலம்
பாவைகள் வரவு
பார்வைகள் கனிவு

ஒத்திகைகள் எத்தனையோ
அரிதாய் அரங்கேற்றங்களும்
காதல்வித்துகள் விளைய
மனங்கள் புதைக்கப்படுகின்றன

எத்தனையோ பூக்கள்
அத்தனை வண்டுகள்
பூங்கா அதிபர்களோ
மடியில் நெருப்புடன்

பறக்கும் ஊர்திகள்
பல்லிலுக்கும் பல்புகள்
எராளமாய் சாட்சிகள்
எதிர்கால ஏக்கத்திற்கும்

தோல்வியோ வெற்றியோ
வருங்கால வரப்பிரசாதமாய்
பஸ்ஸ்டாப் பார்வைகள்
பரிமாற்றம் நடக்கின்றது
இருட்டு ரோஜாக்கள்

ஒருசாண் வயிற்றுக்கும்
ஒட்டுத் துணிக்கும்
சந்தையில் விற்பனை
சதைப் பிண்டங்கள்

சிபியின் தசையையும்
சிலாகித்து சமைத்து
சாப்பிடப் பார்க்கும்
சாக்கடைச் சமுதாயம்

பகலிலே பாராமுகம்
இரவிலே இளிக்கும்
வக்கிரச் சமூகத்தின்
வற்றாத வடிகால்கள்

மண்ணுலக உயிர்களின்
தாகப்பசி தீர்ப்பதால்
நீரின் மானம்
நீர்த்துப் போவதில்லை

எத்தனையோ ஈரல்களில்
சுருங்கி விரிவதால்
காற்று என்றுமே
கற்பு இழப்பதில்லை

வையத்து நெளிகளில்
விழுந்து எழுவதால்
சூரியன் எப்போதும்
சோரம் போனதில்லை

மானம் என்பது
மனதில் உள்ளது
இருளிலும் இவர்கள்
கற்பு ரோஜாக்கள்

Saturday, June 05, 2004

அநாமிகாவின் கருத்துக்கு அடிவணங்கி...

கப்பல் என்றாலே மூழ்கினால் தான் அதற்கு பெரிய பெயரா?
Titanic-ல் இருந்து கேள்விப்பட்ட கப்பல் கதையெல்லாம் மூழ்கித்தான் இருக்கு.

"மூழ்காத ஷிப்பே Friendship தான்" படி மூழ்காத கப்பல் கதை இருக்கா?
"Anamikaa" Meyyappan

இதோ பதித்திருக்கின்றேன். ஒரு மூழ்காத ஷிப் பற்றி அதுவும் Friendship'பான ஷிப்.

ஒரே ஒரு விண்ணப்பம். படித்த பின் தவறாது உங்களின் கருத்தையும் சொல்லவும்.

Friday, June 04, 2004

வீதிவரை உறவு...

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளையின் தாய்மாமன் கல்யாணத்திற்கு வரவில்லை. என்னடா விஷயமென்றால் உப்புப் பெறாத சமாச்சாரம். பத்திரிக்கை முதலில் வைக்கவில்லையாம். சொந்த ஊரில் பத்திரிக்கை வைக்க மாப்பிள்ளையின் பெற்றோர் சென்ற போது, தாய் மாமன் வீட்டிற்குத்தான் முதலில் சென்றனர். ஆனால் தாய் மாமன் ஊரில் இல்லை. தான் வீட்டில் இருக்கமாட்டேன் என்ற விஷயத்தை போனில் வேறு கூறியிருக்கிறார். ஆனாலும் முதல் பத்திரிக்கை மாமனுக்குத்தான் என்று அவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். மாப்பிள்ளையின் அத்தையும், பையனும் வீட்டில் இருந்தனர். தாய் மாமன் மாலையில் வந்துவிடுவார் என்று அத்தை கூற, சரி அதற்குள் ஊரில் பத்திரிக்கை வைத்து முடித்துவிடலாமென்று முடிவு செய்து அதன்படியே செய்தும்விட்டனர். மாலை வரை மாமன் வரவில்லை. வேறு வழியின்றி பையன் கையில் முறைப்படி பத்திரிக்கை வைத்துத் திரும்பினர். அதுதான் குற்றமாம்...

நமக்குத்தான் ஆயிரம் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உண்டே. கல்யாணம் என்றாலும் கருமாதி என்றாலும் தாய்மாமன் முன்னாடி நிற்க வேண்டும். எனது தந்தைக்கு 5 மூத்த சகோதரிகள். எனவே "தாய்மாமனின் கடமைகள்" பற்றி புத்தகமே என்னால் போடமுடியும்.

இன்னொரு தாய்மாமன் ஏன் வரவில்லை என்ற காரணம் கூட சொல்லவில்லை. கல்யாணத்திற்கு முதல் நாள் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் இரண்டு தாய் மாமன்களும் மிஸ்ஸிங். மற்ற உறவினர்க்கோ அல்வா சாப்பிட்ட மாதிரி சந்தோஷம். நாளைக்கு நம்மில் ஒருவரைத்தான் மேடைக்கு அழைக்க வேண்டும். அப்போது குத்திக் காமிக்கலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது.

மாப்பிள்ளையின் தாயாருக்கு முன்னமே மூக்கு வியர்த்து விட்ட காரணத்தால், தனது மூத்த மகனிடம் "Stand-By" சொல்லியிருந்தார். கல்யாணத்தின் போது மூத்த மகனே தாய்மாமன் ஸ்தானத்தில் அனைத்து சடங்குகளையும் செய்ய, உறவினர்க்கு ஏமாற்றம்.

இது மட்டுமா? மண்டபத்தில் வரவேற்புக்கு நிற்க உறவினர் யாரும் முன்வரவில்லை. பந்தியில் விசாரிக்க ஆளில்லை. பெண்ணின் தாலியை அட்ஜஸ்ட் செய்து தர ஆளில்லை. மிகவும் வற்புறுத்திய பின் மாப்பிள்ளை-பெண்ணிற்கு திருநீறு பூச வந்தனர் சொந்தக்கார பெருசுகள். பெரிய தாய்மாமன் தனது சகோதரி மூலம் (மாப்பிள்ளையின் அம்மா இரண்டாவது சகோதரி) பணமும், தங்க காசும் கொடுத்திருந்தார். மற்ற நேரங்களில் கட்சி/ நீதி பேசும் அந்தச் சகோதரியும் நாறட்டும் என்ற நல்ல உள்ளத்துடன் மொய்யெழுதிச் சென்றார். இதை விடக் கொடுமை என்னவென்றால், இதே சகோதரி "அண்ணன்/மாமன்" ஏன் வரவில்லை என்று மாப்பிள்ளைக் குடும்பத்தையே கேட்டதுதான்.

மாப்பிள்ளையின் அத்தை ஒருவர் ஆடிய ஆட்டம் இன்னும் கொடுமை. இவர்தான் பெண் பார்த்தலிருந்து அனைத்தையும் அருகிலிருந்து செய்தவர். பெண்வீட்டார் இந்த அத்தைக்கு நெருங்கிய சொந்தம். அத்தை தனது பெண்ணை அங்கேதான் கொடுத்து இருந்தார். பெண்வீட்டாரிடம் நல்ல பேர் வாங்க இவர் போட்ட நாடகம் கொடுமையிலும் கொடுமை...
இதுபோல் இன்னும் பல சம்பவங்கள்.

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சொந்தக் கிராமத்திலிருந்து வந்த மக்கள். வாஞ்சையுடன் பேசியதென்ன, பழைய விஷயங்களைப் பகிர்ந்ததென்ன...அவர்களால்தான் கல்யாண வீடே களை கட்டியது. இவர்களுக்காகவே தனியாக பஸ் அனுப்பினார்கள் மாப்பிள்ளையின் பெற்றோர். ஏனென்றால் அவர்களில் பலர் ஏழ்மையானவர்கள். ஆனால் அன்பிலும், பண்பிலும் மிகவும் வசதியானவர்கள். அதே போல் மாப்பிள்ளையின் தந்தையின் நண்பர்கள். இவர்கள் ஓடியாடி வேலை செய்யாவிடில் பெரிய பிரச்சினையே வந்திருக்கும்.

அப்போதுதான் தோன்றியது. லட்சங்கள் செலவு செய்து, தேவையின்றி சொந்தங்களை அழைத்து திருமணம் செய்வதைவிட கோயிலில் சிம்பிளாகத் திருமணம் செய்யலாம். பின்னர் வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கிராமத்தில் நடத்தலாம். தெருவுக்கே ஒரு நாள் விருந்திட்ட நிம்மதி கிட்டும். கிராமம் வரை போகமுடியாதவர்கள் ஒரு அனாதை ஆசிரமத்திற்கு ஒரு நாள் உணவிடலாம். புண்ணியம் கிட்டும்.

கல்யாணம் முடிந்து வெளியே வந்தேன். பந்தி இலைக்காக தெரு நாய்கள் அடித்துக் கொண்டிருந்தன. அனைத்து நாய்களுக்கும் உணவிருந்தும் தனது குரைத்து சண்டைபோடும் குணத்தை மாற்றிக்கொள்ள மனமில்லை. மாப்பிள்ளையின் அண்ணனான நான் வெறுப்புடன் அவற்றை திட்டினேன்..."ச்சீய் சொந்தக்காரனுங்களா !!!".

Tuesday, June 01, 2004

நட்பு

நம்பிக்கைதான்
நட்புத்தேரின்
கடையாணி
அச்சாணியே
ஆட்டங்கண்டால்
தேரெப்படி
சீராய்ச் சேரும்?

நட்பு ஒன்றும்
நடைபாதைக் கடையல்ல
நண்பனே
கொடுக்கல்
வாங்கலிற்கு...

உங்கள்
விமர்சன உளிகள்
விளையாடிய போதுதான்
ஜீவசிற்பமானேன் என
நானித்தபோது
நீ மட்டும்
காயம்பட்டதாய்
கலங்குவானேன்?

உணர்ச்சிகளுக்கு
உடுப்பணிவிக்க
எனக்குத் தெரியாது
சிரிப்பு வந்தால் சிரித்து
சீற்றம் வந்தால் சீறி
சூழ்நிலைக்கு நான்
சோரம் போபவன்

நட்புச் செடியின்
நலங்கெட
வேரில் நானே
வெந்நீர் ஊற்றி
விளையாடுவேனா?

இதழிலே இனிப்பும்
நெஞ்சிலே வஞ்சமும்
வைக்கும்
கொடியவனானேனா?

நான்
வெடித்தால்
ப(ம)றந்து விடும்
வெண்பஞ்சுக் காய்

உண்ர்வுகளால் நாம்
ஒன்றுபடாத போது
திருத்தங்களா நம்முள்
திருப்புமுனையாகப் போகிறது???

நட்பில்
அனுசரணையே அலங்காரம்
அடங்கிப் போதல்
அழகன்று

பிடித்தவற்றையே
பேசுவதற்குப்
பெயரா நட்பு?
பிடிக்காதவற்றையும்
பெயர்ப்பதே நட்பு

பிடிக்காதவற்றை
நாமினி
பேசவேப் போகாததால்
போலி நட்புப்
போர்வயை உதறி
பழகுவோம்...
நண்பர்களாக அல்ல
நல்லவர்களாக !!!