இருட்டு ரோஜாக்கள்
ஒருசாண் வயிற்றுக்கும்
ஒட்டுத் துணிக்கும்
சந்தையில் விற்பனை
சதைப் பிண்டங்கள்
சிபியின் தசையையும்
சிலாகித்து சமைத்து
சாப்பிடப் பார்க்கும்
சாக்கடைச் சமுதாயம்
பகலிலே பாராமுகம்
இரவிலே இளிக்கும்
வக்கிரச் சமூகத்தின்
வற்றாத வடிகால்கள்
மண்ணுலக உயிர்களின்
தாகப்பசி தீர்ப்பதால்
நீரின் மானம்
நீர்த்துப் போவதில்லை
எத்தனையோ ஈரல்களில்
சுருங்கி விரிவதால்
காற்று என்றுமே
கற்பு இழப்பதில்லை
வையத்து நெளிகளில்
விழுந்து எழுவதால்
சூரியன் எப்போதும்
சோரம் போனதில்லை
மானம் என்பது
மனதில் உள்ளது
இருளிலும் இவர்கள்
கற்பு ரோஜாக்கள்
Monday, June 07, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment