வீதிவரை உறவு...
சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளையின் தாய்மாமன் கல்யாணத்திற்கு வரவில்லை. என்னடா விஷயமென்றால் உப்புப் பெறாத சமாச்சாரம். பத்திரிக்கை முதலில் வைக்கவில்லையாம். சொந்த ஊரில் பத்திரிக்கை வைக்க மாப்பிள்ளையின் பெற்றோர் சென்ற போது, தாய் மாமன் வீட்டிற்குத்தான் முதலில் சென்றனர். ஆனால் தாய் மாமன் ஊரில் இல்லை. தான் வீட்டில் இருக்கமாட்டேன் என்ற விஷயத்தை போனில் வேறு கூறியிருக்கிறார். ஆனாலும் முதல் பத்திரிக்கை மாமனுக்குத்தான் என்று அவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். மாப்பிள்ளையின் அத்தையும், பையனும் வீட்டில் இருந்தனர். தாய் மாமன் மாலையில் வந்துவிடுவார் என்று அத்தை கூற, சரி அதற்குள் ஊரில் பத்திரிக்கை வைத்து முடித்துவிடலாமென்று முடிவு செய்து அதன்படியே செய்தும்விட்டனர். மாலை வரை மாமன் வரவில்லை. வேறு வழியின்றி பையன் கையில் முறைப்படி பத்திரிக்கை வைத்துத் திரும்பினர். அதுதான் குற்றமாம்...
நமக்குத்தான் ஆயிரம் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உண்டே. கல்யாணம் என்றாலும் கருமாதி என்றாலும் தாய்மாமன் முன்னாடி நிற்க வேண்டும். எனது தந்தைக்கு 5 மூத்த சகோதரிகள். எனவே "தாய்மாமனின் கடமைகள்" பற்றி புத்தகமே என்னால் போடமுடியும்.
இன்னொரு தாய்மாமன் ஏன் வரவில்லை என்ற காரணம் கூட சொல்லவில்லை. கல்யாணத்திற்கு முதல் நாள் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் இரண்டு தாய் மாமன்களும் மிஸ்ஸிங். மற்ற உறவினர்க்கோ அல்வா சாப்பிட்ட மாதிரி சந்தோஷம். நாளைக்கு நம்மில் ஒருவரைத்தான் மேடைக்கு அழைக்க வேண்டும். அப்போது குத்திக் காமிக்கலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது.
மாப்பிள்ளையின் தாயாருக்கு முன்னமே மூக்கு வியர்த்து விட்ட காரணத்தால், தனது மூத்த மகனிடம் "Stand-By" சொல்லியிருந்தார். கல்யாணத்தின் போது மூத்த மகனே தாய்மாமன் ஸ்தானத்தில் அனைத்து சடங்குகளையும் செய்ய, உறவினர்க்கு ஏமாற்றம்.
இது மட்டுமா? மண்டபத்தில் வரவேற்புக்கு நிற்க உறவினர் யாரும் முன்வரவில்லை. பந்தியில் விசாரிக்க ஆளில்லை. பெண்ணின் தாலியை அட்ஜஸ்ட் செய்து தர ஆளில்லை. மிகவும் வற்புறுத்திய பின் மாப்பிள்ளை-பெண்ணிற்கு திருநீறு பூச வந்தனர் சொந்தக்கார பெருசுகள். பெரிய தாய்மாமன் தனது சகோதரி மூலம் (மாப்பிள்ளையின் அம்மா இரண்டாவது சகோதரி) பணமும், தங்க காசும் கொடுத்திருந்தார். மற்ற நேரங்களில் கட்சி/ நீதி பேசும் அந்தச் சகோதரியும் நாறட்டும் என்ற நல்ல உள்ளத்துடன் மொய்யெழுதிச் சென்றார். இதை விடக் கொடுமை என்னவென்றால், இதே சகோதரி "அண்ணன்/மாமன்" ஏன் வரவில்லை என்று மாப்பிள்ளைக் குடும்பத்தையே கேட்டதுதான்.
மாப்பிள்ளையின் அத்தை ஒருவர் ஆடிய ஆட்டம் இன்னும் கொடுமை. இவர்தான் பெண் பார்த்தலிருந்து அனைத்தையும் அருகிலிருந்து செய்தவர். பெண்வீட்டார் இந்த அத்தைக்கு நெருங்கிய சொந்தம். அத்தை தனது பெண்ணை அங்கேதான் கொடுத்து இருந்தார். பெண்வீட்டாரிடம் நல்ல பேர் வாங்க இவர் போட்ட நாடகம் கொடுமையிலும் கொடுமை...
இதுபோல் இன்னும் பல சம்பவங்கள்.
ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சொந்தக் கிராமத்திலிருந்து வந்த மக்கள். வாஞ்சையுடன் பேசியதென்ன, பழைய விஷயங்களைப் பகிர்ந்ததென்ன...அவர்களால்தான் கல்யாண வீடே களை கட்டியது. இவர்களுக்காகவே தனியாக பஸ் அனுப்பினார்கள் மாப்பிள்ளையின் பெற்றோர். ஏனென்றால் அவர்களில் பலர் ஏழ்மையானவர்கள். ஆனால் அன்பிலும், பண்பிலும் மிகவும் வசதியானவர்கள். அதே போல் மாப்பிள்ளையின் தந்தையின் நண்பர்கள். இவர்கள் ஓடியாடி வேலை செய்யாவிடில் பெரிய பிரச்சினையே வந்திருக்கும்.
அப்போதுதான் தோன்றியது. லட்சங்கள் செலவு செய்து, தேவையின்றி சொந்தங்களை அழைத்து திருமணம் செய்வதைவிட கோயிலில் சிம்பிளாகத் திருமணம் செய்யலாம். பின்னர் வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கிராமத்தில் நடத்தலாம். தெருவுக்கே ஒரு நாள் விருந்திட்ட நிம்மதி கிட்டும். கிராமம் வரை போகமுடியாதவர்கள் ஒரு அனாதை ஆசிரமத்திற்கு ஒரு நாள் உணவிடலாம். புண்ணியம் கிட்டும்.
கல்யாணம் முடிந்து வெளியே வந்தேன். பந்தி இலைக்காக தெரு நாய்கள் அடித்துக் கொண்டிருந்தன. அனைத்து நாய்களுக்கும் உணவிருந்தும் தனது குரைத்து சண்டைபோடும் குணத்தை மாற்றிக்கொள்ள மனமில்லை. மாப்பிள்ளையின் அண்ணனான நான் வெறுப்புடன் அவற்றை திட்டினேன்..."ச்சீய் சொந்தக்காரனுங்களா !!!".
Friday, June 04, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment