Friday, June 25, 2004

வெள்ளை உள்ளம் - பகுதி 4

"சுகன்யா, நான் குமார் பேசுறேன்"

"சொல்லுங்க"

"உங்களோடு கொஞ்சம் தனியா பேச வேண்டும்"

"எங்கே சந்திக்கலாம்"

குரலில் சிறு பதட்டம் கூட இல்லை. இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல. "ஹோட்டல் புளூ நைல், அரை மணி நேரத்தில்"

"நோ ப்ராப்ளம்"

உணவுக்கான ஆர்டர் கொடுத்தபின் எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பினான். ஹாய், ஹலோ என்று உதட்டளவில் பேசித்தான் பழக்கம். "காலையில் நீங்க கேட்டதைப் பத்தி..."

"என்ன முடிவு எடுத்தீர்கள்?"

முடிவு கட்டி விடலாமெனப் பார்த்தால், முடிவு எடுக்கச் சொல்கிறாளே? விமலாவின் முகம் மின்னிச் சென்றது. நீண்ட பெருமூச்சுடன்,"முதல்ல நீங்க என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்" விலாவாரியாக சொல்லி முடித்தான்.

உணவு வந்தது. "நீங்க சொல்லியது அனைத்தும் எனக்கு முன்பே தெரியும்"

அம்மா சொல்லியிருப்பாளோ? ஒருவேளை நடப்பதில் அவளுக்கும் பங்குண்டோ?

"தெரிஞ்ச பின்னால் அனுதாபம் வந்திருக்க வேண்டுமே? எனக்கு அடுத்தவங்களோட அனுதாபம் பிடிக்காது. தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று என் கதையை உன்னிடம் சொல்ல வேண்டியதாகிவிட்டது. கண்டிப்பாய் அனுதாபம் தேடியல்ல"

"ப்ச்...அனுதாபம்னா உச் கொட்டிவிட்டு போயிருக்கலாம்தான். குமார்...உறவுகள் மலரவோ, கருகவோ உணர்ச்சிகளும் ஒரு காரணம். அது கோபமோ, சந்தோஷமோ, வருத்தமோ, அனுதாபமோ வாக இருக்கலாம். பேச்சுக்கு சொல்றேன். நீங்க அழகாய் இருக்கீங்க. கை நிறைய சம்பாதிக்கிறீங்க அதனால்தான் காதல் வந்ததுன்னு சொன்னால் நம்புவீர்களா?"

"குழப்புறே சுகன்யா"

"இல்லை. நீங்களே குழப்பிக் கொள்றீங்க. ஆமாம் நீங்க ஏன் மறுமணம் செய்துகொள்ளவில்லை?"

"அதான் சொன்னேனே...விமலாவோட நான் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்"

"என்னோட ஈர்ப்புக்கு இதுவும் காரணம்னு வச்சுக்கங்களேன். விமலா மேல நீங்க இன்னும் வைத்திருக்கும் காதல். தனது உணர்வுகளை மரத்து போகவைத்து, குழந்தை வளர்ப்பின் சங்கடங்களை சமாளித்து...காதல்னா என்ன குமார்? பரஸ்பரம் அன்பு செய்தல், பகிர்தல், விட்டுக் கொடுத்தல்...இன்று உங்களோட சுக துக்கங்களை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது தவறா?"

இவள் ஷணத்தில் முடிவெடுத்தது போல் தோன்றவில்லை. நெற்றி சுருக்கி நிறைய யோசித்தான்.

"அப்படி உங்களுக்கு இதில் விருப்பமில்லையென்றால் பரவாயில்லை. என்ன ஆச்சர்யமாயிருக்கா? காதல் விளக்கத்தின் மூன்றாம் பகுதி பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல்தானே. என்னோட அன்பை மறுதலித்த காதலர்க்காக என் திருமணத்தை விட்டுக் கொடுக்கிறேன். எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை. காதல்ங்ற பயணத்தில் திருமணம் ஒரு ஸ்டேஜ். ஆனா கடைசி ஸ்டேஜ் அல்ல. காதலுக்கு முற்றுப் புள்ளி கிடையாது. " சற்றே ஆசுவாசப் படுத்தியபின் தொடர்ந்தாள். "ஆனா ஒன்று மட்டும் சொல்வேன். நீங்க மனைவி மீதுள்ள காதலால் வாழ்வது மாதிரி நானும் வாழ்வேன் உங்கள் நினைவுகளை சுமந்தபடி. உள்ளத்தில் காதலனை இழந்த விதவையாய்...என்றாவது எனது காதலை நீங்கள் அங்கீகரிப்பதாயிருந்தால் அழைப்பு அனுப்புங்கள். அதுவரை காத்திருப்பேன்...வெள்ளை உள்ளத்துடன்..."

No comments: