Friday, June 25, 2004

வெள்ளை உள்ளம் - பகுதி 2

அம்மா கொடுத்த காபியைப் பருகியபடி தனது முன்னாள் மனைவியின் போட்டோவை ஏறிட்டான் குமார். நினைவுகள் பின்னோக்கி ஓடின. விமலா...விமலா...விமலா...உள்ளம் விக்கித்தது.

அப்பப்பா...நெஞ்சமெலாம் நீக்கமற வியாபித்த விமலா. எங்கும் விமலா. எதிலும் விமலா. என்ன மாயம் செய்தாயடி? கல்யாணமான முதல் வருடம் ஓடியதே தெரியவில்லை. விக்னேஷ் என்ற புது வசந்தம் சேர்ந்தது. எங்கள் சந்தோஷம் கடவுளுக்கும் பொறுக்க முடியவில்லை போலிருக்கிறது.

வழக்கம் போல் ப்ரியமானவளிடம் விடை பெற்று அலுவலகம் சென்று அரைமணி நேரம் கூட ஆகவில்லை. இடியாய் வந்தது செய்தி. பக்கத்துத் தெருவிலிருந்த மார்கெட்டில் காய்கறி வாங்கி வரும் வழியில் தண்ணீர் லாரியொன்று எமனாய் மாறி தவிக்கவிட்ட செய்தி.

ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். இதைப் பொய்க்கணக்காக்கிய விமலாவை போஸ்ட்மார்ட்டம் முடித்து பொட்டலமாய் பார்த்தபோது அதிர்ச்சியில் அழக்கூட தோன்றவில்லை. விமலாவின் முகம் அப்போதும் சிரிப்பது போல்தான் தோன்றியது.

அம்மா சொன்னாள்,"வாய் விட்டு அழுதுடு தம்பி".

விமலாவின் காலைப் பார்த்தேன். ஒரு கொலுசு காணவில்லை. காது வலித்தது. என் தேவதையைப் பறித்த காலன் என்னும் கடவுளைச் சபித்தேன். முழுதாய் மூன்று வருடம் கூட முடியவில்லை. வசித்த இல்லம் விமலாவை மறுபடி மறுபடி ஞாபகப்படுத்த வீடே கசந்தது. இதுதான் விதியா?

சென்னையிலிருந்து பெங்களூர் குடி பெயர்ந்தான். அலுவலகம், வீடு, அம்மா, விக்னேஷ் என்று தனது உலகத்தை சுருக்கிக் கொண்டான்.

"தம்பி ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

இப்படி பலமுறை சொன்ன அம்மாவை அக்னிப்பார்வையால் அமைதிப்படுத்தினான். ஹீம்...விமலா இடத்தில் இன்னொருத்தியா? சே...நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆனால் இன்று???

No comments: