Tuesday, June 01, 2004

நட்பு

நம்பிக்கைதான்
நட்புத்தேரின்
கடையாணி
அச்சாணியே
ஆட்டங்கண்டால்
தேரெப்படி
சீராய்ச் சேரும்?

நட்பு ஒன்றும்
நடைபாதைக் கடையல்ல
நண்பனே
கொடுக்கல்
வாங்கலிற்கு...

உங்கள்
விமர்சன உளிகள்
விளையாடிய போதுதான்
ஜீவசிற்பமானேன் என
நானித்தபோது
நீ மட்டும்
காயம்பட்டதாய்
கலங்குவானேன்?

உணர்ச்சிகளுக்கு
உடுப்பணிவிக்க
எனக்குத் தெரியாது
சிரிப்பு வந்தால் சிரித்து
சீற்றம் வந்தால் சீறி
சூழ்நிலைக்கு நான்
சோரம் போபவன்

நட்புச் செடியின்
நலங்கெட
வேரில் நானே
வெந்நீர் ஊற்றி
விளையாடுவேனா?

இதழிலே இனிப்பும்
நெஞ்சிலே வஞ்சமும்
வைக்கும்
கொடியவனானேனா?

நான்
வெடித்தால்
ப(ம)றந்து விடும்
வெண்பஞ்சுக் காய்

உண்ர்வுகளால் நாம்
ஒன்றுபடாத போது
திருத்தங்களா நம்முள்
திருப்புமுனையாகப் போகிறது???

நட்பில்
அனுசரணையே அலங்காரம்
அடங்கிப் போதல்
அழகன்று

பிடித்தவற்றையே
பேசுவதற்குப்
பெயரா நட்பு?
பிடிக்காதவற்றையும்
பெயர்ப்பதே நட்பு

பிடிக்காதவற்றை
நாமினி
பேசவேப் போகாததால்
போலி நட்புப்
போர்வயை உதறி
பழகுவோம்...
நண்பர்களாக அல்ல
நல்லவர்களாக !!!

No comments: