Friday, June 25, 2004

வெள்ளை உள்ளம் - பகுதி 1

"உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்", என ஒற்றை வரியில் பக்கத்து வீட்டு சுகன்யா சொல்ல மூர்ச்சையாகாத குறையாய் குமார் விழித்தான். இளம் பெண்ணின் மனதைக் கலைத்து விட்டாய் பாவியெனெ உள்மனம் லேசாய் குத்தியது.

அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. சாமகாலையில் ஒலிக்கும் ஆலய மணி போல அந்த ஒற்றை வரி மட்டும் மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. தேவையின்றி சுகன்யாவை சஞ்சலப்படுத்தி விட்டேனா?

தான் உள்ளே வந்ததைக் கூட கவனியாத குமாரை வியப்புடன் கவிதா ஏறிட்டாள். கவிதா குமாரின் அந்தரங்க உதவியாளர்.

"என்ன குமார். டல்லாயிருக்கீங்க?"

திடுக்கிட்டு நிமிர்ந்த குமார், "சாரி கவிதா. ஏதோ சிந்தனை. இன்றைய ப்ரொக்ராம் எல்லாம் கேன்செல் செய்துடு ப்ளீஸ். எனக்கு மனசு சரியில்லை. வீட்டிற்கு போகிறேன்" என்றான்.கவிதா குழப்பமுடன் தலையாட்டினாள்.

காரில் குமார் வீடு செல்லுமுன் ஆயிரம் சிந்தனைகள் அலை மோதின. சுகன்யாவின் வயது 24 இருக்கலாம். முது நிலை பட்டதாரி. வீட்டிற்கு ஒரே பெண். உள்ளூரிலேயே கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை. மிஞ்சிப் போனால் குமாருடன் இரண்டு வருடப் பழக்கம்.

வழக்கத்திற்கு மாறாய் காலையிலேயே வீடு திரும்பிய மகனை கவலையுடன் நோக்கினாள் காவேரி. "என்னப்பா உடம்புக்கு சுகமில்லையா?"

"ஒண்ணுமில்லையம்மா லேசா தலைவலி. அதான்"

"சூடா காபி ஒண்ணு தரட்டுமா? தலைவலி பறந்துடும் தம்பி"

"சரிம்மா". காப்பி அவசியம் தேவைப்பட்டது.

ஹாலில் சரிந்த குமாருக்கு எதிரே மாலையிடப்பட்ட விமலா போட்டோ, "என்னங்க அவ்வளவுதானா?", என்று சிரிப்பது போல் பட்டது.

No comments: