Tuesday, August 10, 2004

பெண்ணுக்கு மரியாதை

அனைத்து நாட்டுப் படைகளிலும் பயிற்சியின் போது பெண்களுக்கு தரப்படவேண்டிய மரியாதை பிரதானமாக இருக்கும். எனது பயிற்சி அனுபவம் இதோ. கப்பலின் நுழைவாயிலில் (Gangway) அடியெடுத்து வைக்கும்போது ஆபீஸர்களுக்கு சல்யூட் வரவேற்பு தரப்படும். அதே மரியாதை கப்பலுக்கு வருகை தரும் பெண்களுக்கும் உண்டு. வயது வித்தியாசம் பாராமல் அடுத்தவரின் துணைவியாரை "மேடம்" என்றே விளிக்க வேண்டும். எவ்விடத்திலும் பெண்கள் வருகை தந்தால் கமாண்டிங் ஆபீஸரிலிருந்து, கடை நிலை ஊழியன் வரை எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். அவர்கள் அமர்ந்த பிறகே, அவர்கள் அமர வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் முடிந்தால், உண்ணும் போது கூட முதலில் குழந்தைகள், பெண்கள் பிறகே ஆண்கள் சாப்பிடுவார்கள். அனைத்திற்கும் மேலாக கப்பலையே "She" என்றுதான் விளிப்பார்கள். இது எவ்வளவு பேருக்குத் தெரியுமென நானறியேன். இது வெறும் இந்திய மகளிருக்குத்தானோ என்ற வெட்டிக் கேள்விகட்கு இங்கே விடையில்லை.

மற்றபடி "சேலை உருவுவதற்கு" பிரத்யேக பயிற்சி தரப்படுவதில்லை. ஒருவேளை அது களப் பயிற்சி (on the job training) எனக் கருதி விட்டு விட்டார்களோ என்னமோ?

இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களை விசாரிக்க வேண்டுமென்னும் கேள்வி மிக நியாயமானது. அப்படியாவது எங்கள் அரசாங்கத்திற்கு IPKF பற்றி ஞாபகப்படுத்தலாம். வியட்நாம் போரை எதிர்த்த அமெரிக்க மக்கள் கூட அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் வருடா வருடம் அப்போரில் உயிர் நீத்த இராணுவ மக்களுக்கு "Memorial" சென்று அஞ்சலி செய்கிறார்கள். அமைதிப்படை வீரர்களை இந்தியாவில் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கம் கூட புறக்கணித்து விட்டதென்பதே உண்மை.

இப்போது அட்டூழிய விசாரணக்கு வருவோம். வலைபதிவார்கள் குரலாய் அனைவரும் இந்திய அரசாங்கத்துக்கு மனுப் போடுவோம். என் பெயரும் அதில் கட்டாயமாய் இருக்கும்.

இல்லாவிடில் பூந்தமல்லியில் இன்னொரு சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய்வோம். ஏனென்றால் தீர்ப்புகளைத்தான் நாம் வழக்கம் போல் சுகமாக மறந்து விடுவோமே?

சுந்தரவடிவேல் "சேலை உருவிகள்" என்றார். நான் அனைவரும் அப்படியல்ல என்றேன். வன்முறையில் உயிர் நீத்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இறந்துபட்ட இராணுவத்தினருக்கும் (சேலை உருவாத) அநுதாபம் செய்யுங்கள் என்றேன். எனக்கு கிடைத்த பட்டங்கள் "நகைச்சுவையாளன்", "ஓப்பன் மைண்ட் இல்லாதவன்", "கண்மூடிய தேசப்பற்று உள்ளவன்", இன்னும் பல. ஏசுவோர் தாராளமாக ஏசிக்கொள்ளுங்கள்.

அமைதிப்படையை அம்மணப்படுத்தும் படை என்று சித்தரித்துக் காட்டும் விஷமத்தனமான பதிவு மதிக்கு "யதார்த்தமாய்" தோன்றுகிறது. ஓப்பன் மைண்ட் என்பது எதிர் வினையில் உள்ள தார்மீக நியாயங்களையும் ஏற்றுக் கொள்வதுதானே? இராணுவம் பற்றிய பதிவில் காந்தீயம், வெள்ளையுடை தேவதைகள், என்ற பின்னூட்டங்களால் நீர்த்துப் போகின்றது. திரும்பவும் சொல்கிறேன். வன்புணர்ச்சிக்குட்பட்ட சகோதரிகளுக்காக நான் விடுவது முதலைக் கண்ணீர் இல்லை. இவ்வழிச் செயல்களில் ஈடுபட்டவரை வன்மையாக கண்டிப்பது வெளிவேடமில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அமைதிப்படையை "ஆக்கிரமிப்புப் படை", "சேலை/குடல் உருவிகள்", (இன்னும் பல ஏசல்களுக்கு ஆயிரமாயிரம் வலைத்தளங்கள் உண்டு) என்று சொன்னால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை ஏன் ரமணீதரன், மதி, வதனா, மெய்யப்பன், தங்கமணி போன்றவர்கள் எதிர்க்க வேண்டும்?

புலிகளை ஆதரிக்காததாய் சொல்பவர்கள் அவர்களது "வீர தீர பராக்கிரமங்களை" சொல்லும் இணையத்தளங்களுக்கு மட்டும் சுட்டிகள் கொடுப்பார்களாம். அடடே...ஒரு "நாங்கள் புலி எதிர்ப்பாளர்கள்" என்று "Disclaimer" போட்டு விடலாமே?

ஈராக் யுத்தத்தின் போது புஷ் சொன்னார்"Either you are with us. or else supporting the terrorist". அதேபோல் "நீங்கள் ஒன்று என் பக்கம். இல்லாவிட்டால் சேலை உருவிகள் பக்கம்" என்பது என்ன நியாயம்? இதைச் சொன்னால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடுகின்றேனாம்?

அப்புறம் எம்ஜியார் துப்பாக்கி கொடுத்தார். அதனால் நாங்கள் (அட புலிகள்'ங்க) சும்மா சுட்டுப் பார்த்தோம். குறுக்கே அமைதிப்படை வந்தது. ஒரு 1,200 பேர் செத்துப் போயிட்டாங்க அப்படின்னு கதை விடாதீங்க. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும் பாடம் படிக்காத அப்பாவி இந்தியத் தமிழர்கள் நாங்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக அமர்ந்து நியாயம் கேட்டு நாம் தொடர்ந்து போராடுவோம். என்னாங்கய்யா ஆச்சு இணையத்துக்கு? ஜால்ராவுக்கு பழக்கமான செவிகளுக்கு எதிர்வினைகள் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்.

என்ன கப்பற் படையிலிருந்த ஏழு வருடத்தில் ஒருமுறை கூட சேலை உருவ எனக்கு வாய்ப்பு கிட்டாத கோபம். அதைத்தான் வலைப்பதிவில் தீர்த்துக்கொல்கிறேன். அப்படின்னும் சொல்லுங்களேன். கூடிய சீக்கிரம் இணைய துச்சாதனன் என்ற பட்டமும் கொடுங்களேன்.

காத்திருக்கின்றேன்.

No comments: