Tuesday, August 31, 2004

ரிப்பளிக்கன் கன்வென்ஷன்

நியூயார்க்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்து விட்டது. அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெயினும், முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானியும் முதல் நாளின் முக்கியப் பேச்சாளர்கள். ஜான் மெக்கெயினும்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும் நல்ல நண்பர்கள். கெர்ரியின் வியட்நாம் போரில் பெற்ற மெடல்களைக் பற்றிய கீழ்த்தரமான தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டித்து புஷ்ஷிடம் பேசியவர் மெக்கெயின். மேலும் ரிப்பளிக்கன் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு புஷ்ஷோடு உரசியவர் மெக்கெயின். கெர்ரியைப் போலவே வியட்நாம் யுத்ததில் பங்கு கொண்டு பிணைக்கைதியாய் பலநாட்கள் சித்திரவதை அனுபவித்தவர். அவரது கருத்துகளை மதிக்கும் அமெரிக்கர்கள் பலர்.

உன்னைப் பிடி என்னைப்பிடி'யென்று இருக்கும் தேர்தல் கணக்குகளைக் கண்டு புஷ் பதற ஆரம்பித்துவிட்டார். எப்பாடுபட்டாவது நடுத்தர மிதவாத மற்றும் முடிவு எடுக்காத மக்களின் ஓட்டைப் பெற மெக்கெயின் மற்றும் ஜூலியானியைப் பயன்படுத்த முடிவு செய்து களம் காணவும் வைத்து விட்டனர்.

முதலில் பேசிய மெக்கெயின் புஷ் புகழ் பாடினாலும் அடக்கியே வாசித்தார். எதிரி டெமாக்ரட்டுகளில்லை, தீவிரவாதிகளென்றார். புஷ்தான் நம்மை வழி நடத்தக்கூடியவரென்றார்.

ஆனால் ஜூலியானியோ சும்மா 'குளிர/உறைய' வைத்துவிட்டார் புஷ் புகழ் மழையில். இத் தேர்தலில் புஷ் ஜெயித்தால் 2008'ல் போட்டியிடமுடியாது. அப்போது ஜூலியானிதான் ரிப்பளிக்கன் தேர்வாக
அமையலாம். புஷ் தோற்றுவிட்டால் டெக்ஸாஸ் என்ணைக் கிணறுகளைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விடலாம். அப்புறமென்ன ஜூலியானி காட்டில் மழைதான்.

அதே போன்று கெர்ரியை, பில் கிளிண்டன் பின்புலத்தில் குழிபறிப்பாரென ஆருடம் சொல்கிறார்கள். கெர்ரி ஜெயித்தால் 2008'ல் மீண்டும் போட்டியிடுவார். தனது மனைவியை (ஹில்லாரியை) அப்போது
போட்டியிட வைக்கலாமென்று கிளிண்டனது அபிப்பிராயம். தலை சுற்றுகிறதா?

NBC சேனலுக்களித்த பேட்டியில் 'தீவிரவாதிகளுக்கெதிரான போரில் வெற்றி கிட்டுமா?" என்ற கேள்விக்கு 'கிட்டாது' என்று புஷ் உளற பற்றிக் கொண்டது. இன்று அதைத் திருத்திக் கொண்டார். அதே
போல் மற்றொரு பேட்டியில் 'ஈராக்கில் யுத்ததை தவறாக கணித்து விட்டோம்' என்றார்.

கெர்ரியும் சோடை போகவில்லை. அவரது ஈராக் யுத்தம் பற்றிய கொள்கை பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுகிறது.

ஆக இத்தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், திணரும் வர்த்தகம், திரியும் மனித உறவுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே நிற்பது தீவிரவாத ஒழிப்பு முத்திரையுடன் நடக்கும்
'ஈராக் யுத்தம்' என்ற கூத்து மட்டும்தான்.

No comments: