Wednesday, August 18, 2004

தொட்டிலும் கட்டிலும்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சில திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் மனதைத் தைத்தது "About Schmidt". ஜேக் நிக்கல்சன் நடித்து 2002'ல் வெளியான உணர்ச்சிச் சித்திரம். ரிட்டையரான ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் வைஸ் பிரசிடென்டின் வாழ்க்கையை அலசுவதே இத் திரைப்படம். சரியாக 120 நிமிடங்களில் திரைக்கதையை சொல்லிய பாங்கு அசத்த வைக்கிறது. நீளம் கருதி இவர்கள் வெட்டிய காட்சிகள் கூட ரசிக்கத்தக்கவவை (DVD புண்ணியம்).

23m வாரன் ஷ்மிட் உள்ளுக்குள் சோகம் புதைத்து, வெளியுலகிற்கு சாதாரணனாய் நாடகம் போட்டு வாழ்பவர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதெனத் தெரியாத போது, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் மூலம் தான்ஜானியாவில் ஒரு சிறுவனை (நுடுகு) தத்தெடுக்கின்றார். ஆறு வயது நுடுகுவுக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை (பல சமயங்களில் பொய்யாக எழுதி) பகிர்ந்து கொள்வது, "வாய்ஸ் ஓவர்" என்ற கைவிடப் பட்ட உத்தியென்றாலும் பார்க்க சுவாரஸியமாயிருக்கிறது.

பின்னர், சில தினங்களிலேயே தனது மனைவியைப் பறி கொடுக்கிறார். இழந்த பின்னர் மனைவியை நினைத்து மருகும்போது, பல வருடங்களுக்கு முன்னர் தனது உயிர் நண்பனுடனான அவளது "உறவு" பத்திரப்படுத்தப்பட்ட சில கடிதங்களில் தெரிய வருகிறது. வெறுத்துப் போய் 'வாழ்க்கையைத் தேடி' தனது பயணத்தை RUV'ல் (நகரும் வீடு?) தொடங்குகிறார். சொந்த மகளே 'இப்போது வர வேண்டாம்' எனச் சொல்லுவதும், 'எப்போதுமில்லாத அக்கறை இப்ப எங்கேர்ந்து வந்தது' என்று கல்யாணத்தை நிறுத்தென தந்தை சொல்லும்போது மகள் பதில் தருவுதுமென சூடான நிதர்சனக் காட்சிகள் பல உண்டு. சில நேரங்களில் கதை ஆமை போல் தவழும்போது கைகொடுப்பது மிக நேர்த்தியான வசனங்களே.

'நான் வாழ்ந்து யாருக்கென்ன பயன்? நான் ஒரு தோல்வியுற்றவன்', என்று கிளைமாக்ஸில் தத்துவம் பேசும் போது நுடுகுவின் முதல் பதில் கடிதமொன்று தான்ஜானியாவிலிருந்து வருகிறது. அதில் ஒரு ஓவியம் இணைக்கப்படிருக்கிறது. ஒரு நெடிய உருவத்தின் கைகளை ஒரு சிறிய உருவம் பிடித்திருப்பது போல. ஷ்மிட்டின் கண்களில் வழியும் கண்ணீர் 'தான் ஏன் இன்னும் வாழவேண்டும், தான் இதுவரை சாதித்ததென்ன' எனபவற்றை சொல்லாமல் சொல்லும். டைரக்டர் அலெக்ஸாண்டர் பேயின் பெரைச் சொல்லாவிடில் மோட்சமில்லை எனக்கு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் "முதியோர் இல்லங்கள்" அதிகமாவதாச் செவிவழியறிந்தேன். அமெரிக்காவில் சமீபத்தில் வீடற்றவர்க்கு ஆதரவளிக்கும் அரசாங்க இயக்கத்திற்கு எதேச்சையாக செல்ல நேரிட்டது. சோஷியல் செக்யூரிடி நம்பருடன் இங்கே பதிவு செய்து கொண்டால் குடும்பத்திற்கு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நமது தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட முதியோருக்கென நலத்திட்டங்கள் உள்ளனவா? தெரியவில்லை. 'தொட்டில் குழந்தைகள்' திட்டமறிவேன். மெல்ல 'கட்டில் முதியோர்' திட்டமும் வந்துவிடுமோ? கவலையாயிருக்கின்றது.

No comments: