Sunday, August 22, 2004

கோடை விடுமுறை

பொழுது விடிந்த
சேதி சொன்ன
சேவல் விருந்து
நுங்கு பெயர்த்து
கவட்டைக் குச்சியில்
காலம் பெயரும்

கோடையின் வாடையில்
வானம் பார்த்து
வாடியது பூமி
மட்டுமல்ல
வயலின் ஏரும்
தறியின் தாரும்

எல்லையோரக்
காளியாட்டத்தின்
களைப்பினூடே
ஊர்க்குட்டை குழப்பி
மீன் பிடிக்கும்

பூவரச இலையில்
பூரண கொழுக்கட்டை
பழுத்த பலாசுளைகள்
தேனோடு திகட்டும்

பனையோலை
தார்க்குச்சியில்
விசிறியாய்
நிலமளக்கும்

பால் ஐஸோ
பதினைந்து காசு
சேமியா ஐஸோ
சீதாலஷ்மி பாக்டரி
பணம் பார்க்கும்

மாத விடுமுறையில்
சூரிய வெப்பத்தை
சுத்தமாய் ருசிபார்த்து
கரிய சரீரமும்
கிராம சாரீரமும்
என் பிள்ளைக்கு
என்று கிட்டுமோ???

No comments: